Thursday, July 25, 2019

தம்பிக்கலை அய்யன் கோவில் - புதிய எக்ஸைல்

820 பக்க புதிய எஸ்சைல் படித்து கொண்டிருக்கிறேன், எனக்கு சொந்த ஊரே ஈரோடு மாவட்டம் தான், கோவை வாழ்விடம். எனக்கு நன்கு தெரிந்த பலமுறை போன தம்பிக்கலை அய்யன் கோவில் பற்றி சாரு எழுதியது வியப்பை ஏற்படுத்தியது.
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்த ஊரில் ஒரு பெரும் பணக்காரர் இருந்தாராம், இவரிடம் நூற்றுக்கணக்கான பசுக்கள் இருந்ததாம், அவற்றை இவரது தம்பி கவனித்து வந்தானாம். ஒருநாள் ஒரு பசுவின் மடியில் ஒரு நாக பாம்பு பால் குடித்து கொண்டு இருக்கும் அதிசய காட்சியை கண்டானாம்.
இதை அண்ணனிடம் சொல்ல, அவரோ என்னடா கதை விடுகிறாய் என ஓங்கி அடித்தாராம், அடுத்தநாள் பண்ணைக்கு கூட்டிப்போய் அதை நேரடியாகவே அண்ணனுக்கு காட்ட, அந்த காட்சியை கண்ட பணக்காரர், வீட்டுக்கு திரும்பி வராமல் அங்கேயே அமர்ந்து சித்தராகி விட்டாராம். அதன் பின் எல்லா விஷத்தையும் முறியடிக்கும் தம்பண கலை கைவர பெற்றதால், அவர் தம்பண கலை அய்யன் என அழைக்கப்பட்டாராம்.
இவரின் விஷ முறிவு க் கலை இந்தியா முழுவதும் பரவி இருந்ததாகவும், பல மன்னர்கள் இவரிடம் மருத்துவம் பெற்று போனதாகவும் கதைகள் உலவுகின்றன. இவரது பெயர் தம்பண கலை அய்யன்தான் மருவி தம்பிக் கலை அய்யன் என மாறியதாம்.
இவர் சமாதி அடைந்த போது இவருக்கென உருவாக்கப்பட்ட கோவிலே தம்பிக் கலை அய்யன் கோவிலாம்.
வெறும் அம்பது வீடுகள் கொண்ட இந்த ஊரில் (தங்கமேடு) இங்கு கார்த்திகை தீபத்தின் போது, இந்த மாவட்டத்தில் உள்ள எல்லா மக்களும் வந்து லட்சம் தீபங்கள் ஏற்றப்படுவது வழக்கமாம்.
நமக்கு பக்கத்தில் உள்ள கோவிலுக்கு பின்னால் உள்ள, தெரியாத செய்திகள் மிகுந்த சுவாரஸ்யமானவை.

Tuesday, July 23, 2019

என் குரு

மலையாள சார்லி பார்த்திருக்கீங்களா? அதுல வர துல்கரை விட சிறந்த மனிதர் ஒருவர் நிஜத்திலேயே இருக்கார். பேரு விஜயகுமார். ஆனா மனுசன் இந்த உலகத்துல கால் பதிக்காக இடமே இல்ல, இப்போகூட ஆஸ்திரேலியாவில் கங்காரு கறியோ, அமெரிக்காவில் கேப்பஸினா காபியோ, இந்தியாவின் ஏதாவது அடர்ந்த வனம் நடுவில கேம்ப் போட்டோ இருக்க கூடும்.
என்ன வயசுதான் 70 இருக்கும்,

காதலோ, காமமோ, கடவுளோ, புத்தகமோ, அறிவியலோ எதை பத்தி வேணாலும் ரெண்டு மணி நேரம் போரடிக்காம மனுஷன் பேசுவார். கொஞ்சம் கூட தற்பெருமையோ, அனத்தாலோ இருக்காது (40 வயசுக்கு மேல ஆகிட்டவே சில பேரோட, முக்கியமா சொந்தக்காரனுக  இம்சை தாங்காது, அதும் அட்வைஸ் பண்ணும்போது  ஓங்கி அறையலாம்னு தோணும்) clear cut pathன்னு சொல்வாங்களே அப்படி இருக்கும்,

நல்ல வசதியான குடும்பத்துல பிறந்தவர், இப்போ கூட ஒரு கம்பெனி நடத்துறார் ஆயிரம் பேர்க்கு பக்கமா வேலை செய்யறாங்க, போலீஸ்ல இருந்து, இங்க பெரிய ஆளுகன்னு சொல்ற எல்லார் கூடவும் நெருங்கிய நட்புண்டு. சுயநலத்துக்கு அவங்களை எப்பவும் உபயோக படுத்த கூடாதுங்கிறதுல தெளிவா இருப்பார். எளிமையான மனிதரும் கூட.  கார் ரேசர், 35 வயசுல ஒரு விபத்துல முதுகெலும்பில நல்ல அடி, ரெண்டு வருஷம் படுக்கையிலேயே கிடந்திருக்கார்.

 இப்போ கூட அதோட பாதிப்பு இருக்கு, நல்லா நிமிர்ந்து நடக்க முடியாது, அதை பற்றில்லாம் கவலையே படலை மனுஷன், தேடல் தான் வாழ்க்கைன்னு சொல்வார். "அப்படி என்ன தேடி கண்டுபிடிச்சீங்க?"ன்னு ஒரு தடவை கேட்டேன், "அன்பு அது மட்டும்தான் வாழ்க்கை"ன்னார். சின்ன குழந்தைகள்கிட்ட கூட ஆலோசனை கேட்பார், இவருடைய பையனும், பொண்ணும்  கல்யாணமாகி ஆஸ்திரேலியா, கலிபோர்னியாவில இருக்காங்க.  நல்லா ரசனையா வாழுறது எப்படின்னு ரெண்டு நாள் கூட சுத்தினாவே தெரிஞ்சிக்கலாம்னு. ஒரு நல்ல மலை பிரதேசத்துல கடும் குளிர்ல மூணு பெக் உள்ள போன பின்னாடி, சில பழைய பாடல்கள் பாடினார். குரல் அவ்ளோ அழகு . வாழ்க்கைக்குமான மொத்த பரிசு அது.

எவ்ளோ வயசானாலும், காலத்தால பழிவாங்க முடியாத குழந்தையா வாழுற சில பேர் இருக்காங்க அதில நம்மாளு முதல் இடத்துல இருப்பார். "காஷ்மீர் டு கன்னியாகுமரி" ட்ரிப் ஒண்ணு நாம ரெண்டு பேரும் போலாம் ன்னு சொல்லிருக்கார். நடக்கும். எனக்கு அவர்கிட்டயோ அவருக்கு என்கிட்டயோ எந்த எதிர்பார்ப்பும் இல்ல, வரவும் வராது.

இதே மாதிரிதான் தியாகு, என்னை சின்ன வயசில இருந்து பாதை மாறாம பார்த்துக்கிட்டார்னு சொல்லலாம், இந்த புத்தகங்கள் மேல காதல் வர காரணமே அவர்தான்... ராஜ பரம்பரை, இப்போ சொத்து எல்லாம் போய்டுச்சு, அதுக்காகவெல்லாம் அவர் கவலை படமாட்டார்னு தெரியும், கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு முதல்லயே முடிவெடுத்து அதிலேயே உறுதியா இருக்கார்.  ஒண்ணா சரக்கடிப்போம், பயங்கர சண்டைல்லாம் வந்திருக்கு, ரெண்டு நாளைக்கு மேல அது நீடிச்சதில்ல. இப்போ கூட ஏதாவது பிரச்சனைன்னா, சந்தோஷம்னா  அவருக்கு தான் முதல் போன் பண்றேன். ஊருக்கு போறப்ப பத்து புத்தகமாவது வாங்கிட்டு போய் கொடுக்கிறேன். இப்ப அநேகமா அவரை சுத்தியும் குறைஞ்சது பத்து பசங்களாவது இருப்பாங்க, இல்லைன்னா  ஏதாவது ஒரு புத்தகம் படிச்சிட்டு தோட்டத்துல ஆடு மேச்சிட்டு இருப்பார்.

எனக்கு குரு, வழிகாட்டி எல்லாம் இந்த மாதிரி பிரியமா வாழ்க்கையை வாழ தெரிஞ்ச  மனுசங்கதான்.

Thursday, July 11, 2019

சிவலிங்கம் மற்றும் கருணாகரன்

கோவையில் நான் குடியிருக்கும் ஏரியாவில் டீ குடிப்பதற்கு பதில் விஷத்தை குடித்து விடலாம், நல்ல பசியாக இருக்கிறதென்று ஒரு கடையில் டீயும் வடையும் வாங்கிவிட்டு என்ன செய்வதென்று முழித்து கொண்டிருந்த நேரத்தில், சிவலிங்கம் நினைவுக்கு வந்தார், டீ எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர்தான் உதாரணம், சுடச் சுட வடை போடுகையில் கையில் காசிருக்கிறதோ இல்லையோ வாங்கி விடுவோம், பணம் கொடுத்தாலும் கடன் சொன்னாலும் ஒரே ரியாக்ஷன் தான் கொடுப்பார், பழைய பாக்கியென எங்களிடம் ஒரு நாளும் கேட்டதே இல்லை. சுப்பு மாம்ஸிடம் சதா கோபித்து கொண்டு "இனிமேல் இங்க டீ குடிக்கவே கூடாதுடா" என கட்டளையிட்டு விட்டான், கருணாகர அண்ணனும் ஆபத் பாண்டவன், கடைசியாக நான் பார்த்தபோது அவர் ஒரு பெரிய பொட்டணத்தில் வடை கட்டி கொடுத்தார், காசு கொடுக்க போனதற்கு கோபித்து கொண்டார், அதில் அன்பும் சுவையும் நிறைய இருந்தது. நான் கடந்து வந்த பாதைகள் பிரியங்களால் நிறைந்திருந்தன