Wednesday, October 17, 2018

நடந்து தீராத கால்கள்

 இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஒரு மாலையில் முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில மாநாட்டின் துவக்க விழாவினை காண்பதற்காகச் சென்றிருந்தேன். விழாவிற்கு தோழர் எஸ். ஏ. பெருமாள் வந்திருந்தார்.  எனது பள்ளி நாட்கள் துவங்கி இன்று வரை என் மீது அதிக அக்கறை கொண்டவர்களில் அவர் முக்கியமானவர்.



புகழ் பெற்ற உலக இலக்கியப் புத்தகங்களை தந்து  என்னைப் படிக்க வைத்து, என் சிறுகதைகள் வெளியான நாட்களில் அதைப் பற்றி விவாதித்து எப்போதும் என் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். அவரைச் சந்தித்துவிட்டு விழா துவங்குவதற்கு முன்பாக மாநாட்டு பந்தலில் அமைக்கபட்டிருந்த புத்தகக் கடைகளில் ஏதாவது பழைய ரஷ்யநாவல்கள் கண்ணில்படுகிறதா என்று தேடிக் கொண்டிருந்தேன்.



அருகில் வந்து நின்றபடியே என்னையே பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். ஐம்பது வயதைத் தாண்டிய தோற்றம். முகமெல்லாம் புன்னகை. ஏதோ பேச விரும்புகிறார் என்பது அவரது முகபாவத்தில் தெளிவாகத் தெரிந்தது. நானே பரிச்சயம் செய்து கொண்டேன்.


மிகுந்த உரிமையுடன்  என் வலதுகையைப் பிடித்து கொண்டு ஊர் சுற்றுகிறவர்களுக்கு ஒரு மரியாதை ஏற்படுத்தி கொடுத்தது நீங்கள் தான் என்று சொன்னார். அப்படியெல்லாம் இல்லை. ஊர் சுற்றி யாருக்காகவும் பயணம் செல்வதில்லை. அது ஒரு சுதந்திரம். விடுபடல் என்றேன்.


அவர் அதை ஆமோதிப்பது போல சிரித்தபடியே  தன்னுடைய பெயர் கவிஞர் அனலேந்தி , நீங்க படிச்சிருப்பீங்க. ஏதோ கொஞ்சம் கவிதைகள் எழுதியிருக்கேன்.  நானும் கொஞ்சம் ஊர் சுற்றிவந்தவன் என்று அறிமுகமானார்.


ஊர்சுற்றுகின்றவன் என்ற ஒரு சொல் இருவரையும் மணிக்கணக்கில் பேச வைத்தது.  அருகில் இருந்தவர்களை மறந்து நாங்கள் ஏதேதோ ஊர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.  புத்தக கடையில் இருந்த வேறு ஒரு நண்பர் இடையிடையே அவரிடம் ஏதோ கேள்விகேட்டுக் கொண்டிருந்தார். அனலேந்தியின் கவனம் அதில் குவியவேயில்லை. தனது பயணத்தின் நினைவுகளை என்னிடம் பகிர்ந்து கொள்வதிலே ஆர்வமாக இருந்தார்.


நாங்கள் நின்றிருந்த இடம் சூழல் யாவும் மறந்து போனது. இருவரும் ஏதோ நெடுநாள் பரிச்சயம் கொண்டவர்கள் போல நெருக்கமாகி பேசிக் கொண்டிருந்தோம்.


அப்படி எங்களைப் பேச வைத்தது அவரது பயணம். அனலேந்தி நான்கு வருடங்கள் நடந்தே இந்தியா முழுவதும் சுற்றி வந்திருக்கிறார். அதுவும் 2002ல் இருந்து 2006 வரை யான இந்த காலகட்டத்தில்.


எனக்கே நம்ப முடியாமல் இருந்தது. பின்பு அவர் சொல்லச் சொல்ல அதில் ஒரு துளி பொய்யில்லை என்று உணர முடிந்தது. பத்திரிக்கைகளில் செய்தியாளராக , பிழைதிருத்துபவராக பல வருசம் சென்னையில் வேலை செய்த அனலேந்திக்கு நடைமுறை வாழ்க்கையின் சிக்கல்களும் எரிச்சல்களும் கொஞ்சம் கொஞ்சமாக வெறுமையை ஏற்படுத்த துவங்கியது.


தனிமையாக வசிப்பவர் என்பதால் எதற்காக இப்படி வேலை செய்கிறோம். என்ன பிரயோஜனம் என்று யோசிக்க ஆரம்பித்து, இதிலிருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு ஒரு நாள் பேசாமல் எங்காவது போய்விடலாம். இனிமே சென்னைக்கு திரும்பவே வேண்டாம் என்று தன் அறையிலிருந்து கிளம்பியிருக்கிறார்


அப்படிக் கிளம்பும் போது இந்தியா முழுவதும் சுற்றியலைந்து வரலாம் என்றொரு எண்ணம் மனதில்  உருவாகியிருக்கிறது. நடந்தே இந்தியாவை சுற்றலாம் .கிடைத்த இடத்தில் தங்கிக் கொண்டு கிடைத்த உணவை சாப்பிட்டுக் கொண்டு முடிந்தவரை போய்வரலாம் என்று நடக்கத் துவங்கினார்.


நான்கு ஆண்டுகள் ஒய்வில்லாமல் நடந்து இமயமலையின் அடிவாரம் வரை சென்று திரும்பியிருக்கிறார். பயணம் அவருக்குக் கற்று தந்த முதல்பாடம் மௌனமாக இருப்பது என்பதே. நாம் கேட்காமல் எதையும் அவர் சொல்வதேயில்லை.


எந்தச் சாலைகள் வழியாக நடக்கத் துவங்கினீர்கள் என்று கேட்டேன். பெரும்பாலும் பிரதான வழிகளை விட்டு கிராம சாலைகள், மலைப்பாதைகள், ஒற்றையடி பாதைகள் வழியாகவே நடந்தேன்.  ஒவ்வொரு ஊருக்கும் இடையில் இத்தனை பாதைகள் இருக்கின்றதா என்று வியப்பாக இருந்தது. ஒவ்வொரு பாதையும் மனிதர்கள் உண்டாக்கிய சாதனை என்றும் தோன்றியது. எத்தனை விதமான மரங்கள். எத்தனை விதமான நீர்நிலைகள், குன்றுகள், வளைந்து வளைந்து செல்கிறது பாதை. ஒவ்வொரு நாளும் பகல்முழுவதும் நடந்து கொண்டேயிருப்பேன்.


வழியில் எங்காவது மனிதர்களைக் கண்டால் என்னை அறிமுகப்படுத்தி கொண்டு நான் நடத்து திரிகின்றவன். ஏதாவது உணவு தரமுடியுமா என்று கேட்பேன். மறுக்காமல் உணவு தருவார்கள். மாலையானதும் ஏதாவது ஒரு இடத்தில் தங்கி  கொண்டு விடுவேன்.


அப்படி ஒரு முறை மத்தியபிரதேசத்தில் நடந்து போய்க் கொண்டிருந்த போது மலைபாதை ஒன்றினை கடப்பதற்குள் இரவாகி விட்டது. அங்கேயே தங்கிவிடலாம் என்று ஒரு மரத்தடியில் படுத்து கொண்டேன். இரவாகியதும் அந்த பாதையில் என்னை தவிர  வேறு மனித நடமாட்டமேயில்லை. இருட்டு அப்பிக் கொண்டிருந்தது.


அப்போது பைக்கில்  வந்த ஒரு முரட்டு மனிதன் என்னை அடையாளம் கண்டு கொண்டு பைக்கை நிறுத்தி யார் நீ என்று கேட்டான். நான் பதில் சொன்னதும் அவன் என்னுடன் வருகிறாயா என்று கேட்டான். வேண்டாம் என்று மறுத்தாலும் விடவில்லை. வழியின்றி அவனோடு சென்றேன். மலைபாதையின் சரிவில் பைக் இருட்டிற்குள்ளாகவே பயணம் செய்து அவன் வீட்டை அடைந்தது.


அந்த மனிதனின் வயதான தந்தை என்னை வரவேற்றார். என்னைப் பற்றி அவன் சொன்னதும் என் காலில் விழுந்து ஆசி தருமாறு கேட்டார் அந்த வயதானவர். எனக்கு வியப்பாக இருந்தது. அவர் உங்களை போல தன்னலம் இல்லாமல் நடந்து செல்கின்றவர்கள் புண்ணியவான்கள். அவர்கள் ஆசி கிடைப்பது அரிது என்று சொல்லி என்னை அங்கே தங்க வைத்தார். மறுநாள் விடிகாலையில் அங்கிருந்து மறுபடியும் நடக்கத் துவங்கினேன். இப்படியாக நீண்டது எனது பயணம்.


என்னுடைய நான்கு ஆண்டுகால பயணத்தில் தமிழகத்தில் மட்டும் தான் வழிப்பயணிகளை ஏமாற்றுவதும் மோசமாக நடந்து கொள்வதும் அதிகமாக உள்ளது. வடமாநிலங்களில் இன்றும் பயணம் செய்கிறவன் மதிக்கபடுகிறான். உண்மையான காரணத்தை சொன்னால் உணவு தருகிறார்கள். அன்பு காட்டுகிறார்கள். ஏமாற்றினால் உடனே அடிஉதை கிடைக்கிறது. வட இந்திய கிராமங்கள் இன்னமும் நேசமும் அன்பும் நிரம்பியே இருக்கின்றன. நடந்து செல்லும் போது தான் இந்தியா எவ்வளவு பெரியது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.


ஆனால் மொழி அறிவு முக்கியம். என் பயணத்தில் ஹிந்தி தெரிந்திருப்பது ஒன்று தான் என்னிடமிருந்த ஒரே துணை. அது இல்லாமல் போயிருந்தால் அவதிப்பட்டிருப்பேன். அதுவும் நன்றாக ஹிந்தி பேசத் தெரியும் என்பதால் அவர்கள் என்னை வேற்று மனிதனை போல ஒரு போதும் நடத்தவேயில்லை.


சில இடங்களில் என்னைத் தங்க வைத்து சாப்பாடு போட்டு கிளம்பும் போது செலவிற்கு பணமும் தருவார்கள். நான் ஒரு போதும் பணத்தை பெற்றுக் கொண்டதேயில்லை. கையில் ஒரு ரூபாய் கூட பணம் கிடையாது. தோளில் ஒரு பை. காலில் உள்ள வலு உள்ள அளவு நடை. அப்படித் தான் என் பயணம் நீண்டது.


இந்தியாவின் அத்தனை முக்கிய கலைகோவில்களைகளையும் கண்டேன். மலைகள், பள்ளதாக்குகள், ஏரிகள், நகரங்கள், கோட்டைகள் என்று கால்கள் வலி கொள்ளும் அளவு நடந்தேன். ஆனால் எனக்குள் இருந்த தேடல் குறையவேயில்லை.


பார்க்க பார்க்க வியப்பு அதிகமாகிக் கொண்டே வந்தது. வட இந்தியாவில் பயணம் செய்யும் சில இடங்களில் குருத்துவராவில் தந்த உணவை சாப்பிட்டிருக்கிறேன். மதுரா, காசி, ரிஷிகேஷ், ஹரிதுவார் போன்ற இடங்களில் சாப்பாடு போடுவதற்காக ஆட்களைத் தேடுவார்கள். சாப்பாடும் போட்டு தட்சணையும் தருவார்கள். இதை நம்பி வாழக்கூடிய பெரிய கூட்டமே வட இந்தியாவில் உள்ளது. அப்படி ஒரு கூட்டத்தில் சில வாரம் இருந்தேன். அவர்கள் ஒரு இடம் மற்றொரு இடம் போய் தானம் வாங்கியே வாழ்க்கை நடத்துகிறார்கள்.


நடக்க நடக்க மெல்ல எனக்கிருந்த அடையாளம் அழியத் துவங்கியது. என்னுடைய பேச்சில் இருந்த கோபம், ரௌத்திரம், தான் என்ற அகங்காரம் யாவும் என்னை விட்டுப் போக துவங்கியது. ஒரு இறகு காற்றில் கொண்டு செல்லப்படுவதை போலத் தான் நடந்து கொண்டிருந்தேன்.


இருப்பிடத்தில் கற்றுக் கொள்ள தவறிய பல விஷயங்களை பயணம் எளிதாக கற்றுத் தந்துவிடுகிறது. மனிதர்கள் மீது பெரிய நம்பிக்கையும் இயற்கையின் மீது அளவில்லாத வியப்பும் அதிகமானது. சில இடங்களில் நோய் பாதித்து படுத்துக் கிடந்தேன். சில இடங்களில் குளிர் என் உடலை வாட்டியது. ஆனால் ஒரு போதும் ஊர் திரும்ப வேண்டும் என்று தோன்றவேயில்லை.


நான் எங்கோ காணாமல்  போய்விட்டேன் என்று நண்பர்கள் நம்ப துவங்கியிருந்தார்கள். அப்படியே இருக்கட்டுமே என்று எனக்கும் தோன்றியது. என்னுடைய அடையாளம் தெரியாத அளவிற்கு தாடி வளர்ந்து விட்டிருந்தது. மெலிந்து என் தோற்றமே மாறியிருந்தது.


திடீரென ஒரு நாள் திரும்பிப் போகலாம் என்று தோன்றியது. அது ஏன் என்று இன்றும் புரியவில்லை. கிளம்பியது போலவே எந்த பரபரப்பும் இன்றி திரும்பி வரும் பயணமும் நடந்தது. நடந்து நடந்து ஆந்திராவின் அருகில் வந்த போது தமிழும் நம்முடைய உணவும் ஆட்களையும் பார்த்த போது  காரணமற்ற உவகை ஏற்பட்டது.


சென்னை திரும்பிய பிறகும் நண்பர்கள் எவரையும் சந்திக்கவில்லை. சில வாரங்கள் தனிமையில் இருந்தேன். பிறகு நண்பர்களைத் தேடி சென்று சந்தித்த போது அவர்களால் நம்ப முடியவில்லை. நான் எதற்காக பயணம் சென்றேன் என்று இன்றும் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்


நிச்சயம் இது ஒரு துறவியின் பயணம் அல்ல. மாறாக நடந்து செல்ல ஆசைப்பட்ட ஒரு கிராமத்து மனிதனின் பயணமே. இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன். ஒரு மாலை தினசரியில் பிழை திருத்துபவராக வேலை செய்கிறேன். தனியான ஒரு அறை. மனதில் கடந்தகால நினைவுகள் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.


உங்களது தேசாந்திரி மற்றும் பல பயண அனுபவங்களைப் படிக்கும் போது என் பயணத்தில் கண்ட பல நிகழ்வுகளை அப்படியே மிக உண்மையாக நீங்கள்பதிவு செய்திருப்பதை கண்டு சந்தோஷமாக இருந்தது. ஆனால் உங்களை தேடி வந்து சந்திக்க கூச்சமாக இருந்தது. இன்றைக்கு உங்களை சந்தித்துவிட்டேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்


நடந்தே இந்தியா முழுவதையும் சுற்றி வந்த ஒரு மனிதன் என் முன்னால் நிற்கிறார். நான் அப்படி பயணம் செய்திருக்கவில்லையே என்று மனதில் தீராத ஆதங்கம் உருவானது. அவர் கைகளை இறுக்கபிடித்தபடியே இதை எல்லாம் நீங்கள் எழுதலாமே என்று சொன்னேன். எழுத வேண்டும். நிறைய மனதில் இருக்கிறது என்று சொல்லியபடியே இன்னொரு முறை நாம் சந்தித்து பேசலாம் என்றார்.


நிகழ்ச்சி துவங்கவே அவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டேன். மனது நிலை கொள்ளவில்லை. இது தான் இந்தியா மனதின் இயல்பு என்று தோன்றியது.


எல்லா காலத்திலும் காரணமில்லாத பயணத்தை மேற்கொள்கின்ற மனிதன் இருந்து கொண்டேயிருக்கிறான். அவன் துறவியல்ல. அவன் சுற்றுலாபயணியோ. சாகச பயணியோ கிடையாது . அவன் படைப்பாளியும் அல்ல. மாறாக அவன் ஒரு எளிய மனிதன். தன்மீது குடும்பமும், சமூகமும் உருவாக்கி வைத்த பிம்பங்களை அடையாளங்களைக் கடந்து போக விரும்புகிறான். அவனிடம் உள்ள ஒரே சக்தி அவனது அக நம்பிக்கை. அது அவனைக் கொண்டுசெல்கிறது.


காத காத தூரத்திற்கு அப்பால் இருந்து வரும் பறவைகளை போல அவன் நிலவெளிகளை கடந்து போகிறான்.  எங்கோ தங்கி எதையோ கண்டு தன்உடல் முழுவதும் புழுதிபடிய நிசப்தத்தை மனதில் நிரப்பி கொண்டு திரும்பி வருகிறான் அல்லது விலகி போய்விடுகிறான்.


இன்னொரு உண்மை திரும்ப திரும்ப நினைவூட்டபடுகிறது. எல்லா பயணமும் ஏதோ ஒரு நாள் வீடு திரும்புதலுக்கானதே.


அன்றைய கூட்டம் முடிந்து வெளியே வந்த போது மீண்டும் அனலேந்தியை சந்தித்தேன். அவர் என் அருகில் வந்து இன்னும் சில வருசங்கள் கழித்து மறுபடியும் நடந்து போனாலும் போய்விடுவேன், ஏனோ மனதில் அப்படி தோன்றிக் கொண்டேயிருக்கிறது. என்றபடியே ஒருவேளை திரும்பி வராமலும் இருந்துவிடுவேன் என்று விடை பெற்று போனார்.


காரணம் சொல்ல முடியாத மனதுக்கம் ஏற்பட்டது.  பயணி நடப்பதை நிறுத்திவிட்டாலும் அவன் மனதில் அரூபமான இரண்டு கால்கள் நடந்து கொண்டேயிருக்கும் போலும்.  உலகம் பெரியது. அதன் விந்தைகள் அளப்பரியது. அவை யாவும் விடவும் விந்தையும் அரியதும் இது போன்ற மனிதர்களே.

பெரு நன்றி எஸ் ரா விற்கும் கவிஞர் திரு அனலேந்தி அவர்களுக்கும்...
மலைகள் சப்தமிடுவதில்லை என்பதன் ஒரு பகுதி

No comments:

Post a Comment