Wednesday, September 21, 2016

முக்கியமான இணைய தமிழ் பத்திரிக்கைகள்

இணையத்தில் நிறைய தமிழ் பத்திரிக்கைகள் படிக்க கிடைக்கின்றன, இது போல பலர் தொகுத்து கொடுத்திருந்தாலும் ஏறக்குறைய தமிழின் அனைத்து பத்திரிக்கைகளின் இணைய பக்கங்களை தொகுத்து கொடுக்க வேண்டும் என்ற ஆசையின் விளைவே இந்த முயற்சி. விடுபட்ட முக்கிய பத்திரிக்கைகளை தெரியப்படுத்தினால் இணைத்து கொள்ள வசதியாக இருக்கும். பத்திரிக்கைகளின் வலைத்தளம் செல்ல அந்த பெயரின் மேல் click செய்யுங்கள்

பிரபல நாளிதழ்கள் 


பிரபல வார/மாத  இதழ்கள் 


இணைய இதழ்கள் 



Saturday, September 17, 2016

நகைக்கடைக்காரர்களின் தங்க நகை சேமிப்பு திட்டம் நமக்கு லாபமா?


நீங்கள் எந்த ஒரு நகைக்கடைக்கு போய் ஏதாவது ஒரு நகையோ, நாணயமோ, அல்லது பழைய நகையை சரி செய்யவோ போனாலும் அந்த நகைக்கடை ஊழியர் உங்களிடம் கண்டிப்பாக நகை சேமிக்கும் திட்டம் பற்றி விளக்கி அதில் இணையுமாறு கேட்டு கொள்வார். அனேகமாக பெரும்பாலான மக்கள் மாதம் மாதம் பணம் செலுத்தி வரவும் கூடும்.

 இந்த நகைத்திட்டம் லாபம் கொடுக்கிறதா?  இது உண்மையில் நமக்கானது தானா? இதைப் பற்றி மத்திய அரசு என்ன கூறுகிறது?
  மத்திய அரசு கடும் விதிகளை இதற்காக விதித்துள்ளது, காரணம் இதில் பொது மக்கள் அதிகமாக ஏமாற்ற படும் வாய்ப்பு இருக்கிறது என்பதாலும், ஏமாற்ற பட்டு விட்டார்கள் என்பதாலும்.

முதலில் இதை பொதுமக்களுக்கான திட்டம் என்பதையே மறுக்கிறது, இதை நகைக்கடைகாரர்களின் முதலீடாகவே பார்க்கும் அரசு, "கணக்கு வழக்கில்லாமல் மக்களை இதில் சேர்க்க கூடாது, கடையின் முதலீட்டில் அல்லது மொத்த சொத்தில் குறிப்பிட்ட சதவீதமே வாடிக்கையாளர்களை சேர்க்கலாம், அதுவும் குறிப்பிட்ட மாதங்கள் மட்டுமே"  என்கிறது.

 என்னதான் நம்மிடம் ஆசை வார்த்தை காட்டினாலும், இது முழுக்க கடைக்காரர்களின் நலனுக்கான முதலீட்டு திட்டமே, அரசு இந்த கெடுபிடிகளை விதித்ததன் காரணம், பல கோடி லட்சம் பணம் இதில் புரள்கிறது, அதாவது பல கோடி சேர்ந்த பிறகு விலை குறைவாக மொத்தமாக நகை வாங்கி விற்பனை செய்வதே இதன் மூலம். இதில் ஏமாற்று அதிகமாகி புகார் வருகிறது, எல்லோரும் ஏமாற்ற வாய்ப்பில்லை எனினும், தங்க நகை மேல் இருக்கும் மோகம் காரணமாக மக்களிடம் இதில் நாற்பது சதவிகிதம் அளவுக்கு திருட்டு நடக்கிறது.

 இதில் தங்க நாணயமோ, அல்லது கட்டிகளோ வாங்க இயலாது, எக்காரணம்  கொண்டும் பணம் திருப்பி தரப்பட மாட்டது, கட்ட தவறும் போது அதற்க்கு உண்டான நகையை சலுகைகளுடன் பெற இயலாது. அந்நாளைய ரூபாயில் நகை கிடைக்கும், நகையாக மட்டுமே வாங்க இயலும் என்பது இவர்கள்  சொல்லும் விதிமுறைகள்.

யோசித்து பாருங்கள், நாம் எப்போதாவது செய்கூலி சேதாரம் என கணக்கிட படும் தொகையில் திருப்தியாக நகை வாங்கி இருக்கிறோமா? பவுன் சுமாராக  21000 எனில் அதை ஏதேதோ கணக்கிட்டு 30000 வரை நம் தலையில் கட்டுகிறார்கள் தானே?  நம் பணத்தை பெரும் முதலீடாக்கி, அதில் நகை வாங்கி, நம்மிடம் சில நூறு இருநூறு கவர்ச்சி பொருட்களை தருவதாக ஆசை காட்டி, செய்கூலியிலோ சேதாரத்திலோ கொஞ்சம் தள்ளுபடி தந்து அவர்கள் நகையையும் விற்பனை செய்து இன்னொரு புதிய விற்பனை கட்டிடம் திறந்து விடுகிறார்கள். அவர்கள் உயர்வதற்க்கு தானே நம் பணம்?

நகை பெரும் முதலீட்டு பொருள் தான் அதை நீங்கள் தங்க காசாகவோ, கட்டியாகவோ வாங்கும் வரை, இதை நீங்கள் எப்படிப்பட்ட நகை வாங்கினாலும் கடைக்காரர்களுக்கு இலாபமே. அதுவுமில்லாமல் உங்களுக்கு பிடிக்காத டிசைன் இருந்தால் வேறு கடைகளுக்கு செல்ல வாய்ப்பு இல்லை, அதில் ஏதோ ஒன்றை தான் வாங்க வேண்டும். ஆர்டர் எனில் ஒரு மாதம் இரண்டு மாதம் இழுத்தடிக்க வாய்ப்பு உண்டு.

நகைக்கடை ஊழியர்கள் சம்பளம், acயும், கட்டிட வாடகையும், அல்லது சொந்த கட்டடங்களுக்கு emiயும், பராமரிப்பு செலவுகளும், அதையும் தாண்டி இலாபமும் தானே முதல் இலாக்காக எல்லா தனியார்  நிறுவனத்திருக்கும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தானே அவர்கள் தொடர்ந்து நடத்த இயலும், இன்நிறுவனங்கள் நமக்கு தங்களது சொந்த காசை செலவிடும் என்று எதிர்பார்ப்பது நியாயமா? தவிர அவர்கள் ஒன்றும் சமூக சேவை செய்ய வரவில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.  

நடுத்தர வர்க்க சகோதரிகள் கவனிக்க வேண்டியவைகள்

தங்கத்தின் விலையை கடந்த காலத்தின் ஏற்ற இறக்கங்களை வைத்து உற்று நோக்கினால் கணிக்க முடியும்.

ஆசை வார்த்தைகளை நம்பி இதில் முதலீடு செய்யாதீர்கள்.

நியாயமான வட்டி விகிதத்தை வங்கிகள் உங்களுக்கு தருகின்றன, அதில் முதலீடு செய்து விட்டோ, மாதம் மாதம் சேமிப்பு திட்டங்களிலோ பணம் சேர்த்து, தங்கம் விலை குறைகையில் வாங்கி கொள்ளுங்கள்.

அல்லது பணம் இருக்கும் போது ஒன்றிரண்டு  தங்க காசாக வாங்கி சேர்ப்பது முழு புத்திசாலித்தனம்.

இம்முதலீட்டு திட்டங்களில் சேர்பவர்கள் இதிலுள்ள அரசின் கட்டுப்பாடுகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.          

 உடனடியாக இணையுமாறு வற்புறுத்தி, கவர்ச்சிகர பரிசு கொடுக்கும்    நிறுவனங்களை புறக்கணியுங்கள்.

நமக்கான லாபம் என்ன எனபதை திட்ட வட்டமாக அறிந்து கொள்ளுங்கள்,
முக்கியமாக பக்கத்துக்கு வீட்டுக்காரர் முதலீடு செய்கிறார் என நீங்களும் விழாதீர்கள்.  
தங்கத்தை முதலீடு செய்யும் பொருளாக பாருங்கள், வெற்று ஆசைகளும்,  ஏமாற்றமும் இருக்காதது.

பிரபுவோ, சத்யராஜோ ஏன் அமிதாப் பச்சனோ அந்தந்த கடைகளில் நகை வாங்கி விட்டு சந்தோசமாக பேட்டி கொடுக்கவில்லை என்பதையும், அவர்கள் காசு வாங்கி நடிக்கும் வெறும் நடிகர்கள் என்பதையும் நினைவில் வையுங்கள், ஒரு நாளில் நூறு முறை ஒளிபரப்பாகும் அவ்விளம்பரங்களின் தொகையை உங்களிடம் இருந்து தான் ஏதாவது ஒரு வழியில் பெற முடியும் என்றாவது தெரிந்து கொள்ளுங்கள்.


Friday, September 16, 2016

காவிரி ஆறும்,அதை கொலை செய்த நாமும்

இந்த புகைப்படம் காவிரி டெல்டாவின் மையப்பகுதி பிரதான சாலையில் எடுக்கப்பட்டது.  தஞ்சையை தாண்டிய பின் இந்த காவிரி புதர்மண்டி, சாக்கடை கலந்து, கழிவுநீர் வர, வெங்காயத்தாமரை சூழ, பாலிதீன் குப்பைகள் நிறைந்து கிட்டத்தட்ட இறக்கும் தருவாயில் இருக்கிறது.

மக்கள் இதை பார்த்தும்சாதாரணமாக கடந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மொத்தம் விளைகிற நெல்லின் அளவு 18ஆயிரம்டன். இதில் 13ஆயிரம் டன் காவிரி பாயும் பூமியான 7மாவட்டங்களில் மட்டுமே நமக்கு கிடைக்கிறது.  இப்பொன்விளையும் பூமிக்கு உயிர் தரும் ஆறுதான் காவிரி. நம் மக்கள் காவிரி ஆற்றையோ, ஆற்று நீரையோ பாதுகாக்க சிறு பங்களிப்பை கூட நிகழ்த்தவில்லை என்பதன் பெரும் வேதனை.

இந்த புகைப்படம்விவசாயத்தை நம்பி வாழ்கிற, அதை உண்ணும் பொருளாக வாழ்க்கை ஆதாரமாக மாற்றுகிற பூமியில் ஆறு சீரழிந்து கிடப்பது வரலாற்றின் மிகமோசமான துயரம்.  ஆற்றுசமவெளி பகுதியால், அவ்விடங்களில்   செழிப்பாக வாழ்ந்தது நம் கலாச்சாரம், எல்லா வளமும் தந்த அதே ஆற்றை சாக்கடையாக்கி, அதன் சாவுக்கும் வழி வகிக்கிறோம் என்பதை நினைக்கையில் நெஞ்சம் நெருப்பாய் எரிகிறது. ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை நீரை பாதுகாத்து தேவைகேற்ப பயன்படுத்த வழிவகை செய்யவே.

காமராஜருக்கு பிறகு தமிழகத்தில் எந்த அணையும் கட்டப்படவில்லை என்பதும், அதற்கான முயற்சிகள் கூட மேற்கொள்ளப்படவில்லை என்பதும் உங்களுக்கு தெரியுமா? நெடும் துயரம் என்னவெனில் கட்டிய அணைகளை கூட பராமரிக்கவில்லை. ஆறு,குளம், ஏரிகண்மாய், வாய்க்கால் என எவையும் சரியாக தூர்வாரப்படவில்லை.  காவிரி ஆற்றில் இருந்து பயன்படுத்தாமல் கடலில் கலக்கும் நீரின் அளவு 155TMC.  நாம் கர்நாடாகாவிடம் கெஞ்சிக்கொண்டிருக்கும் நீரின் அளவு 142TMC.  தடுப்பணைகள் கட்டி நீரை சேமித்திருந்தாலே முப்போகம் விளையும் பூமியாக இருந்திருக்கும். 

சென்னையில் வெள்ளம் வந்த பொழுது ஏற்றப்பட்ட பேரிழப்பிற்கு முக்கிய காரணம் ஆறு, குளங்கள்,ஏரிகள் தூர்வாரப்படாததே என்பது யாவரும் அறிந்ததே. நீரின் முக்கியத்துவத்தையும், மகத்துவத்தையும் நாம் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவே இல்லை. ஆறுகளை பாதுகாப்பதில் உள்ள  பெரிய நன்மையை நாம் வளரும் தலைமுறைக்கு கற்றுக்கொடுக்க தவறிவிட்டோம். 

கர்நாடகம் நிச்சயம் தண்ணீர் தந்தே ஆகவேண்டும். ஆனால் அவர்கள் தரும் நீரை நாம் தலையிலா தூக்கிவரமுடியும்? காற்று கலப்படமாகிவிட்டால் எப்படி சுவாசிப்பது சிரமமோ, அது போல் நீர் கலப்படமாகிவிட்டாலும் விஷமென்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  இனியாவது ஆறுகளை பாதுகாக்கவேண்டும்.


இது அடுத்த தலைமுறைக்கு, நாம் செய்தே தீர வேண்டிய அடிப்படை சூத்திரம்.

@Rajarocketrocky from twitlonger 

Thursday, September 15, 2016

இரத்தம் கலக்காத காவிரியை அனுப்பி வை.

நண்பா! 
ஞாபகமிருக்கிறதா? 
விஜய் மல்லையா 
ஓடிப் போன நாளில் ,
இருவருமே 
கடன் பாக்கிக்காக 
வங்கிக்கு அழைக்கப்பட்டிருந்தோம்

உன் முகத்தை 
இதுவரையில் 
நான் பார்த்ததில்லை 
ஆனால் , 
உனக்கு சேற்றுப் புண்ணிருப்பது 
எனக்குத் தெரியும்.

வயசுக்கு வந்த மகள்களை 
கவலையோடு
வெறித்து விட்டு 
நட்சத்திரங்களை 
சாட்சியாக்கி அழும் 
பின்னிரவுப் பொழுதுகள் 
இருவருக்கும் ஒன்றுதான்.

விளைநெல் வாசம் 
களைகளின் கடைசி நிமிடம் 
விரால் மீன்களின் கொஞ்சல் 
சாரைப் பாம்பின் சரசரப்பு 
இவற்றை உணர்வதற்கு 
தமிழோ, கன்னடமோ 
தேவையற்ற ஒன்றுதான்.

உன்னோடு 
வயலுக்கு வராத 
உன் பிள்ளைகள் 
பேருந்துகளை 
எரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

என் வயல்களை 
அழித்துக் கட்டப்பட்ட 
வீட்டுக்குள் இருந்தபடி ,
என் பிள்ளைகள் 
கலவரங்களின் சோழிகளை
முகநூலில் 
உருட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

தொலைக்காட்சி 
பார்த்துக் கொண்டிருக்கும் 
இரண்டு முதல்வர்களும் ,
வீதிகளில் 
கொடும்பாவியாக்கிக் 
கொளுத்தப்பட்டாலும்
வீடுகளுக்கு வாய்த்திருக்கிறது 
Z பிளஸ் பாதுகாப்பு

நம் பிரதமர் ,
ஏதாவது ஒரு நாட்டின் 
தண்ணீர்ச் சுவையில் 
தற்காலிகமாய் 
மறந்திருக்கக் கூடும் 
காவிரியை.

டி. எம். சி கணக்குகளை 
பிறகு 
பார்த்துக் கொள்வோம்.

மேகதாதுவோ 
மேட்டூரோ 
பின்னர் 
தீர்த்துக் கொள்வோம்.

நாளைக்கு 
சமைப்பதற்காக 
மீதம் வைத்திருந்த 
விதை நெல்லைக் கூட 
உன் வீட்டுக் கலயத்தில் 
கொட்டி விடுகிறேன்.

உன் 
எல்லா கோபங்களும் 
தீர்ந்த பிறகு 
இரத்தம் கலக்காத 
காவிரியை 
அனுப்பி வை.

எங்கள் 
கண்ணீர் கதைகளை 
நாங்கள் 
தலைமுழுகியபடி 
அந்த நதியோடு 
பேசிக் கொள்கிறோம்.

$மானசீகன் $

Tuesday, September 13, 2016

தேசாந்திரி புத்தக விமர்சனம்

உலகம் எனக்கு என் வீட்டு  ஜன்னல் வழியாகத்தான் ஆரம்பமானது என தொடங்கும் இப்புத்தகம், எஸ் ராமகிருஷ்ணனின் முடிவில்லாத பயணங்கள் வழியாக, தெளிந்த அருவி போல (கவனிக்க, நீர்வீழ்ச்சி அல்ல) சென்று கொண்டே இருக்கிறது.

ஏழு வயதில் ஆரம்பமாகும் ஜன்னல் வழி பார்வை பயணம், ஏறக்குறைய இந்தியாவின் முக்கியமான பகுதிகள் சென்று சேர்க்கிறது. கன்னியாகுமரியின்  கடற்கரையில் கடலை புரிந்து கொள்ளும் அவர், வெயிலோடு கொண்ட உறவுகள் பற்றியும் சிலாகிக்கிறார்.

சாரநாத்தின் பௌத்த ஸ்தலதில் புகை போன்ற பனியை, பனிக்குள் நடக்கும் பிரார்த்தனைகளை, அம்மக்களின் பரவசத்தை, அமைதியை, கண்களால் விழுங்க முடியாத ஸ்தூபியை, சிறிய புத்தர் சிலை விற்கும் சிறுமியை காட்சி பூர்வமாகவே கண் முன்நிறுத்தும் கலை எஸ் ரா விற்கு இயல்பாகவே இருக்கிறது.

 கதை வழியாக மட்டுமே கேட்டு, மறந்தும் போய் விட்ட நல்லதங்காளை, அவள் வாழ்ந்த வாழ்க்கையை, அந்த கிணறை மறக்க முடியாதபடி படைத்திருக்கிறார்.

இந்தியாவின் சிரபுஞ்சிக்கு அடுத்ததாக மழை பொழியும் இடமான லோனாவாலாவின் அறிமுகத்தை அவர் எழுத்தின் வடிவிலேயே தருகிறேன்

"நான் அங்கு சென்று இறங்கிய போதே சாரல், சாலைகள் ஈரத்தில் ஊறி இருந்தன, கட்டடங்கள், வாகனங்கள், தனியே வாலாட்டியபடி நிற்கும் குதிரைகள் என யாவிலும் மழையின் சுவடுகள்...."

"மழையோடு நட்பு கொள்ளாதவர்கள் எவர் இருக்க கூடும் சொல்லுங்கள்?"

இன்னொருமுறை மணியாச்சி ரயில் நிலையம் வழியே நீங்கள் பயணித்தீர்கள் எனில் இந்திய சுதந்திர போரின் முதல் வெடிச்சப்தம் நடந்த பகுதியை நீங்கள் உணர கூடும்.

சென்னையில் உள்ள புனித தாமஸ் மலைக்கும், எவரெஸ்ட்க்கும் என்ன தொடர்பு? 40 வருடங்களாக தொடர்ந்த பணி என்ன? அவற்றால் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகள் என்ன என்பதை படித்து முடித்த பிரமிப்பு இன்னும் அடங்கவே இல்லை.

சங்க இலக்கியம் போற்றி புகழ்ந்த காந்தள் மலர்,  குக்குருவான் பறவை, சாரலின் நெருக்கம், அருவிகளிடம் எப்படி நம்மை ஒப்படைப்பது, கஜிராகோவின் அலைந்து கொண்டே இருக்கும் குளிர், சத்னாவின் அந்த சிறிய வீடு, குஜராத்தின் சபர்மதி ஆசிரமம், கொடைக்கானலில் சாலையோரம் வாலாட்டியபடி நடக்கும் குதிரைகள், சென்னையின் உண்மையான அடையாளம், தவளைகளின் திருமணம் என சிலாகித்து சொல்லிக்கொண்டே போகலாம். வாசகனை கை பிடித்து, தான் உணர்ந்த அழகியலை அப்படியே நூலிருக்குள் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் எஸ் ரா.,

 பகுதியின் ஆரம்பத்தில் அழகான கவிதைகள் அதற்க்கு அழகு சேர்க்கின்றன, எடுத்துக்காட்டாக "மழையின் பெரிய புத்தகத்தை யார் பிரித்து படித்து கொண்டிருக்கிறார்கள்,  படிக்கட்டில் நீர் வழிந்து கொண்டிருக்கிறது" என்ற தேவ தச்சன் கவிதையில் ஆரம்பித்து மழையின் முழு சுகத்தை அக் கட்டுரை கொண்டு நிரப்புகிறார், முழுதும் நனைந்து கரைய வேண்டி இருக்கிறது.

மிக பெரிய வெல்ல கட்டியை இழுத்து வந்து இப்புத்தகத்தில் நிறைத்து விட்டீர்கள் எஸ் ரா... மிகுந்த நன்றி...

கட்டாயம் வாசிக்க வேண்டிய சிறந்த புத்தகம் தேசாந்திரி  
       

இந்த விமர்சனத்திற்கு எஸ் ராவின் பதில் மின் அஞ்சல்... மகிழ்ச்சியும், நன்றிகளும்... 




Monday, September 12, 2016

ஜெயமோகனின் காடு

யானை டாக்டர், ஊமை செந்நாய், இரவு என்று இயற்கை சார் கதைகள் எனில் எங்கிருந்துதான் இந்த ஜெமோவிற்கு இத்தனை அழகியல் வந்து விடுகிறதோ.  ஆனால் அவை அத்தனையையும் தூக்கி சாப்பிட்டு விட்டது காடு.


படித்து கொண்டிருக்கும் வாசகன், சர்வ நிச்சயமாய் மலை நோக்கிய சுற்றுலாவை திட்டமிட ஆரம்பித்து, அதை எப்படி ரசிக்க வேண்டும் என சரியான விதத்தில் கணக்கிட ஆரம்பிப்பார், இதுவே நாவலின் வெற்றி,

கிரிதரன் பார்வையில் நாவல் விரிந்தாலும், நாயகன் என்னவோ குட்டப்பன் தான், காட்டின் அத்தனை மாற்றங்களையும், விதிகளையும், செய்ய கூடாதவைகளையும் அவன் குரல் வழியாகவே முழுதும் உணர முடிகிறது.   குருசு, ராசப்பன், சினேகம்மை, ரெஜினாவை விட அந்த தேவாங்கும், அயனி மரமும் முக்கியத்துவம் பெற்று விடுகிறது. மலையாளம் கலந்த தமிழ், படிப்பவர்களை அதிகம் சிரமம் கொள்ள செய்யாமல் படிப்பை தொடர செய்ததில் ஜெமோவின் கையாளல் திறமை அருமை.

மிளாவை என்னை போல பலருக்கும் அறிமுகம்  செய்திருக்கிறார் ஜெமோ, கீறக்காதன் வழியாக ஒற்றை யானையின் பலத்தை, அதன் தவிப்பை, இயல்பை, அது கிரிதரனை உதவி கேட்டு யாசிக்கையில் பரிதாபத்தையும் கொள்ள செய்து விடுகிறது. யானை என்றால் பிரம்மாண்டம்  மட்டுமே என்ற மாயை உடைபடுகிறது.    

நீலியை காமக்கார, வீரியம் மிக்க, ஒரு நகரையே அழிக்க செய்யும் கொடூர காமப் பேயாய் வழிவழியாய் வரும் கதை மூலம்  அறிமுகம் செய்து விட்டு, அதே நினைவுடன் வாசகனை தொடர செய்து,

பின் அவளை மலையத்தியாய் மாற்றி, கிரியின் மூலம் தகிக்கும் அவள் நினைவுகளை சொல்வதிலும், அவளின் அழகை முழுதும் விவரித்து தேவதையாக மாற்றி விட்டத்திலும் ஜெமோ இருவேறு கோணங்களிலும் ஆளுமை காட்டியிருக்கிறார்.

காமம் நாவல் நெடுக வந்தாலும், அதில் வாசகனை இளைப்பாற விடாமல், பட்டென திசை திருப்பி, அதன் உண்மை தன்மையை மட்டுமே புரிந்து கொள்ள வரிகள் அமைத்திருப்பது பெரும் தனித்துவம்.

காலத்தின் மாற்றங்கள் அந்த கதை பாத்திரங்கள் வழியாக உணர்த்தபட்டிருக்கிறது.

அய்யர் பாத்திரம் நொடி நொடியாய் கணங்களை அனுபவித்து வாழ்ந்த மனிதரை பற்றியது. காட்டின் மீது அதிக மோகம் கொண்ட ஒருவர் எடுத்த அழகிய முடிவை பற்றிய வாழ்க்கைப்  பயணம்.  அதை ஒரு தனி நாவல் போலவே எழுதலாம்.

ஏதாவது ஒரு பகுதியில் அவர் உணர்ந்த நெருப்பை வாசகனுக்கு பற்ற வைத்து விடுகிறார் ஜெமோ. நான் அதை கடைசி நாற்பது பக்கங்களில் உணர்ந்தேன்.

சாரலும், பெருமழையும், வன அழகும், அயனி மரமும், நீலியும், உயர மலைகளும், குறுக்கிடும் ஆறுகளும், வெள்ளி நீர் வீழ்ச்சிகளும், மலையத்தியின் வீடும், கடும் காப்பி சுவையும், "மாங்காயை பிளந்து மிளகு உப்பு வைத்து அடுப்பில் கருக்கி கொதிக்கும் மென் குழம்பை இலையில் பிதுக்கி தருகிறான் குட்டப்பன்" என்ற காட்சி சுவை கொண்ட அழகியலுக்காகவும் மீண்டும் மீண்டும் படிக்கலாம்.

காட்டை பற்றிய முழு காட்சி அழகுடன், அறத்தை மீறாத வசனங்களுடனும், காட்டின் இரகசியங்களையும், அதை எப்படி ரசிக்க வேண்டும் என்ற பாடங்களையும் நடத்தும் ஒரு சிறப்பான திரைக்கதை ஜெமோவிடம் எப்போதும் தயாராகவே இருக்கும்,

ஏதாவது நல்ல இயக்குனரும், சரியான ஒளிப்பதிவாளரும் அதை படமாக மாற்றினால் அது நிச்சயம் தமிழின் காலத்தை வெல்லும் படைப்பாய் அமையும்.

பெருங்களியாட்டம் இந்த காடு. நிச்சயம் வாசிக்க வேண்டிய ஒரு நல்ல படைப்பு.


காடு -ஒரு பார்வை என தன் வலைதளத்தில் இதை சுட்டி காட்டி இருந்த ஜெமோ அவர்களுக்கு மிக்க நன்றி .

Saturday, September 10, 2016

OLA / UBER நிறுவனத்துடன் இணையும்போது உங்களால் எவ்வளவு சம்பாதிக்க முடியும்?

இந்த கார் நிறுவனங்கள் தங்களுடன் உங்கள் காரை இணைத்து கொள்ளும் போது 1,00,000 ரூபாய் மாதம் சம்பாதிக்கலாம் என்று சொல்கிறார்கள் உண்மையா?

சற்று விரிவாக பார்ப்போம்....

தினமும் இந்த நிறுவனங்களுக்கு கார்கள் புதிது புதிதாய் இணைந்த வண்ணம் இருக்கின்றன, UBER தனது வாடிக்கையாளர்களை உருவாக்க அல்லது தக்க வைக்க விலையை OLA கார்களின் வாடகை விலையை விட குறைத்து போட்டிக்கு நிற்கிறது,

கார்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக வாடகை குறைவாகவே வருகிறது என கார்களின் டிரைவர்கள் சொல்வதை நீங்கள் கேட்டு அறியலாம். அடுத்தது நீங்களே ஓனர் எனும்போது ஓரளவு பணம் கிடைக்கும், இருந்தாலும் அவர்கள் குறிப்பிடும் பெரிய தொகை அல்ல.

அதற்க்கு உங்கள் கார் நல்ல மைலேஜ் கொடுக்க வேண்டும், இரண்டு டிரைவர் வைத்து 24 மணி நேரமும் ஓட்ட வேண்டும், வாடிக்கையாளர்களிடம் நல்ல முறையில் பழக வேண்டும், map, navigation பற்றிய போதுமான அறிவு இருக்க வேண்டும், கவனமாக காரை கையாள வேண்டும், மிக முக்கியமாக டீசல் திருடாமல் இருக்க வேண்டும்.

இவை இருந்தால் ஓரளவு வருமானம் வரும் என்றாலும், செலவுகளை கணக்கில் எடுத்து கொண்டால், நீங்களே ஓனர் மற்றும் டிரைவர் என்றால் சம்பளம் மிச்சம், நல்ல டிரைவர் எனில் மாதம் 15000 தர வேண்டும், 10சதவீத கமிசன் நிறுவனங்களுக்கு போகும், டீசல், பராமரிப்பு செலவு, எதிபாராத விபத்து செலவு, காரின் emi, போன்றவை இருக்கும், அதிக பட்சம் மூன்று வருடங்களுக்கு புதிய வாகனம் எனில் ஓட்ட முடியும், அதற்க்கு பின் நிச்சயம் புது கார் வாங்க வேண்டி வரும். இப்போது வியாபார வாகனங்களுக்கான அரசின் கெடுபிடிகளும் அதிகம், வெளி மாநில பயணம் எனில் பர்மிட் எடுத்திருக்க வேண்டும்.

உங்களுக்கு தெரிந்திருக்கும் கடந்த மாதம் இவர்கள் தங்களது இன்சென்ட்டிவ், போனஸ் சரிவர கிடைப்பதில்லை எனவும், மற்ற பல பிரச்சனைகளை முன் வைத்து போராடினார்கள் எனவும், நல்ல இலாபம் எனில் இது போன்ற சம்பவங்கள் இருக்காதல்லவா?

எனது போனில் இரண்டு appகளுமே உண்டு, நான் அதிக முறை பயணம் செய்பவன், "கடந்த ஆறு மாதத்தில், இப்போது எப்படி உணர்கிறீர்கள்?" என்று அவர்களிடம் கேட்ட போது, ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் ஒருவர் கூட இலாபம் என்றோ  திருப்தி என்றோ சொல்லவில்லை, இவர்களின் தொழில் போட்டியினால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி கொண்டே வருகிறது  என்பதே. அவர்கள் பதில். OLA மற்றும் UBER வாடிக்கையாளர்களை திருப்தி செய்கிறது, தங்களை நம்பி முதலீடு செய்யும் பார்ட்னர்களை அல்ல என்பதே இதன் தெளிவு.