குளக்கரையில் நின்று
ரசித்துக்கொண்டிருந்தேன் இடமும் வலமுமாய் அலைகளையெழுப்பிய மீன்களை பசிக்கிறதென சைகை காட்டி நடுவில் வந்த சிறுமி பெற்றுக்கொண்ட காசில் பொரி வாங்கித் தூவுகிறாள் குளத்தில் ஆர்வமாய்க் கொறிக்கத் தொடங்குகின்றன மீன்கள். - கீர்த்திThursday, November 3, 2022
பிடித்த சில கவிதைகள்
Sunday, May 9, 2021
அன்னியப்படுத்தாதீர், அவளுக்குள்ளும் நேசிப்புகளிருக்கும்
பிரத்யேகமாய்...
வடிவமைக்கப்பட்ட ஒவ்வொன்றிலும்
அவளது அபிப்ராயங்கள் இருக்கத்தான்
செய்கின்றன.
ஏதோவொரு குடியிருப்பின் நுழைவாயினிலோ
பரிச்சயமான பேருந்து நிறுத்தத்திலோ
பழக்கப்பட்ட முகமாகவும், கேட்டறிந்த
குரலாகவும் தானிருக்கிறது.
வொடைந்த தேங்காய் துண்டுகள்
பொறுக்கி...
வயிறு நிறைக்க முயலுமவள்
கற்சிலை பெண்ணின் முலையுறிஞ்சி
பால்குடிக்கும்
வித்தைகள் கற்றிருப்பதாய் சொல்லி கொள்கிறாள்.
எண்ணெய் வீச்சம் சுற்றித்திரியும்
வளாகத்தினுள் வந்தடையும், புறாக்களோடுதான்
உளறிக்கொண்டிருப்பதாய்...
ஒப்பந்தம் செய்துக்கொண்டிருப்பாள்
போலும்
எதிலும் லயிப்புகளற்றவள்.
சிரிப்பினை மட்டுமே பிரதானமாக
கொண்டிருக்கிறாள்.
தனது சதையுறிஞ்சி...
ரணமாக்கிய மனித அருவங்கள் காணப்பொறுக்காது
நகர்ந்துக்கொண்டே இருக்கிறாள்.
கனமான நிகழ்வுகளேதும்
அவளை காயப்படுத்தியிருக்கலாம்
ஆனால் சாட்சியங்களின் பதிவுகளை
மனிதரல்லாத சகலவற்றினுடனும் ...
பகிர்ந்துக்கொள்ள முனைப்போடிருக்குமவள்
கடைக்கு முன்னாடி நின்னு வியாபாரத்தை
கெடுக்காதே மூழி...என
லாவகமாய் வெந்நீர் ஊற்றும்...டீ, கடை பையனின்
வக்கிரத்தை உதாசினப்படுத்தி போகிறாள்
தாயின் பரிவோடு....
ஈஸ்வர சந்தானமூர்த்தி
Tuesday, February 13, 2018
பரிச்சியம் - கல்லை. சிறி.ப.வில்லியம்ஸ்
முறைத்துக்கொண்டிருந்த
முண்டாசு நபரின்
கறுப்பு-வெள்ளைப்
புகைப்படம் காட்டியபோது
நீண்ட யோசனைக்குப் பின்
பாரதிதாசன் என்றான்
என் முகக் குறிப்பு உணர்ந்து
இல்லையில்லை
பகத்சிங் என்று
திருவாய் மலர்ந்தான்
உ.வே.சா-வை
வ.உ.சி. என்றோ
மா.பொ.சி-யை
கி.வா.ஜா. என்றோ
துணிச்சலாய்
அடையாளப்படுத்துவான்.
கம்பராமாயணம் படைத்தது
கண்ணதாசன் என்றும்
சிலப்பதிகாரம் எழுதியது
காளிதாசன் என்றும்
சந்தேகமின்றிச் சாற்றுவான்.
ஒருமுறை
ராமகிருஷ்ண பரமஹம்சரை
திருவள்ளுவரென்று சொல்லி
மிரள வைத்தான்.
இதனால் உண்டாகும்
மன உளைச்சல்கள் தவிர்த்து
சின்னத்திரை நடிகன்
முதற்கொண்டு
குத்துப்பாட்டு நடிகை வரை
அத்தனை பேர்களும்
என் பிள்ளைக்கு அத்துபடி!
வந்த நாள் முதல்... செழியன்
எனது பாட புத்தகத்தில் தன் பெயரை யாரும் பார்க்காத நேரத்தில் எழுதி வைத்த, எதிர்பாரா முதல் விரல் தீண்டலில் தனது நாணத்தை முழுதும் கொட்டிப் போன ஒருத்தி,
பாசமெனும் வர்ணங்களை பூசி விட்டு , என் பின்னாலேயே சுற்றி திரிந்த சிறு கருங்குயில் ,
வாழ்த்து அட்டைகள் மூலம் முதல் காதல் கிறுக்கு பிடிக்க வைத்த சைக்கிள் பெண்ணொருத்தி,
"அவனைத்தான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறோம்" என்று அத்தை சொல்ல, பார்க்குமிடமெல்லாம் நாணி புன்னகை செய்து, தனிமையில் வம்பிழுக்கும் மாமன் மகள்,
தனது தாயும், எனது பாட்டியும் புற்று நோய் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டிருந்த நேரத்தில் புத்தகங்கள் மூலம் ஸ்நேகமான தோழி,
சாளுக்கியரை "சளுக்கியர்" என கூறி உதடு கடிப்பவளின் கத்தி போன்றதொரு பார்வை
முதல் குளிர் மலை சுற்றுலாவில் அழகில் மயங்கி விழுந்த ஒரு கவிதையானவள்,
தன் குளிரை பொருட்படுத்தாது தனது போர்வை தந்து தாயாய் மாற முயற்சித்த தேவதை,
பொது குடிநீர் தொட்டியில் இருள் கவியும் பொழுதுகளில் ரோஜா நிற பிராக் அணிந்து "குஞ்சூ" என்ற மெல்லிய குரலுக்கு சிலிர்த்து பின் கோப பார்வை வீசும் ஒரு மெல்லிடையாள்.
"அன்புள்ள மாமாவுக்கு" என கடிதம் வழியே பிரியம் காட்டி "கர்சீப், பேனால்லாம் தந்தா உறவு போயிரும் மாமா" என்ற கடைசி வார்த்தை பேசி விட்டு காணாமல் போன தூரத்து சொந்தக்காரி
வேற்று மாநிலத்தில் பாஷை தெரியாது அமர்த்தும் பைப்பில் நீர் பிடிக்க போன இடத்தில் சிறுவர்கள் எனது தமிழை கிண்டல் செய்ய, என் சார்பாக அவர்களிடம் பரிந்து பேசி சினேகமான கன்னடத்து பைங்கிளி.
வெளியூர் என். எஸ். எஸ்., காம்பில் பார்வை தீண்டலில் ஆரம்பித்து, நிறைவு நாளில் கண்ணீர் நிரம்பிய முகத்துடன் நெற்றியில் சந்தனம் வைத்து, "உன் வாழ்க்கை இனி எப்பவும் சந்தோஷமாவே இருக்கும், நல்லா இரு " என கூறி விட்டு, என்ன நடக்கிறது என நான் உணரும் முன் வேகமாக தன் வீட்டிற்குள் ஓடிப் போன தந்தையுமானவள்...
ஆற்று பெருக்காய் நிரம்பி வழியும் அன்பு எனும் பெரு வெள்ளத்தை எந்த தடுப்பணையாலும் நிறுத்தவே இயலவில்லை.
அத்தனை நினைவலைகளையும் கிளறி விட்டுக் கொண்டே செல்கிறார் செழியன்...
ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கிறது காதலும், பிரியமும், பிரிவின் வலியும்.
திரும்பவும் உங்கள் வாழ்க்கையை முதலில் இருந்து வாழ்ந்து விட்டு வர வேண்டும் எனில் "வந்த நாள் முதலை" வாசியுங்கள்.
ஒரு கவிதையை மட்டும் சுவைக்க தருகிறேன், மற்றவற்றை புத்தகம் வாங்கி பத்திரப்படுத்தி கொள்ளுங்கள்
----------------------------------------------------
வெற்றுக் காகிதத்தின் முன்
Monday, January 29, 2018
ஊழின் சிக்னல்
ஏற்றிவிட்ட கண்ணாடிசாளரத்தையும்
மீறி என் காலடியில்
வந்து விழுந்தது
அந்த அழுக்கு குழந்தையின்
இரவல் குரல்..
கறுத்த கைகள் நீட்டி
சன்னலைத் திறந்துவிட
முயல்கிறது...தனக்கான உரிமையை
கேட்கும் பாவனையுடன்..!!
சில்லறை தேடி என் கைகள்
துழாவ, அருகிருந்து
பதறுகிறாள் மகள் "அப்பா ..சீக்கிரம்
சிக்னல் போடப்போறாங்க .."
எளிய சிக்னல் நிறுத்தங்கள்
சோதிக்கின்றன...நமது காருண்யத்தை..!!
பச்சை விழ, சாளரத்தை இறக்கி
சிறு பிஸ்கட் நெகிழியையும்,
நீர்ப்போத்தலையும்
தேவதைக்கு அளிக்கும் சாக்கில்
கரிய பாதங்களை வருடி
ஊழின் பொருட்டு மன்னிப்பு
கேட்டுக்கொள்கிறேன்..!!
Sunday, January 28, 2018
பெருந்தேவி
சற்று பொறாமையாக இருந்தது
அது கிளிபோல் பேசுகிறது என்றீர்கள்
சற்று சந்தேகமாக இருந்தது
அதன் பாசிக்கண்ணில் பிரபஞ்சத்தைக்
கண்டதாகக் கூறினீர்கள்
சற்று ஆச்சரியமாக இருந்தது
அதன் பெயர் மிருது என அறிவித்தீர்கள்
தொடவேண்டும் போலிருந்தது
தொட்டும் தொடாமலும் அதைத் தீண்ட
கடவுளால் மட்டுமே முடியும் என்றீர்கள்
கடவுள்மேல் சற்று நம்பிக்கைகூட வந்தது
வெல்வெட் துண்டு அதன் காது என
வர்ணீத்தீர்கள்
வெல்வெட் வெல்வெட் என்று
சொல்லிப் பார்த்துக்கொண்டேன்
அது கேரட்டைக் கடிக்கும் அழகுக்குத்
தலையையே தந்துவிடலாமெனப் பரவசப்பட்டீர்கள்
என் தலையையும் கூடவே தரத்
தயாராக வைத்திருந்தேன்
இன்றுதான் உங்கள் முயலை
முதன்முதலில் பார்த்தேன்
என் வீட்டுச் சுற்றுச் சுவரில்
ஒன்றுக்கடித்துக்கொண்டிருந்தது
என்னவாகவும் இருக்கட்டுமே
உங்கள் வீட்டுக்குள் வைத்துக்கொண்டு
நீங்களே பீற்றிக்கொள்ளுங்கள்