Sunday, May 10, 2020

ரத்தம் ஒரே நிறம் -சுஜாதா புத்தக விமர்சனம்

இதுதான் சுஜாதாவோட பெஸ்ட்ன்னு நண்பன் சொன்னதால வாங்கி, தலைப்பை பார்த்துட்டு கொலைக்கள அல்லது கணேஷ், வசந்த் வச்சு ஏதோ துப்பறியும் நாவல்னு நினைச்சு ரொம்ப காலம் படிக்காம வச்சிருந்தேன்.  முன்பொரு காலத்திலே ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், சாண்டில்யன், புஸ்பா தங்கதுரை, கோட்டயம் புஸ்பநாத், தபூ சங்கர், வைரமுத்து, வாலி விஜய் மில்டன்னு எது கிடைச்சாலும் ஆதரவு கொடுத்து படிச்சு முடிப்பேன். நாவலை தோட்டப்புறம் தான் தெரிஞ்சுது இது கிரைம் நாவல் இல்ல, சரித்திர நாவல். சரித்திர நாவல் வகைன்னாவே இப்பெல்லாம் ஏனோ ஜெர்க்கடிக்குது, பொன்னியின் செல்வனை உலகமே புகழ்ந்து தள்ளிட்டு இருந்தப்போ கொஞ்சம் பக்கம் படிச்சிட்டு தெறிச்சு வந்தவன் நான். அந்த சூடு கொஞ்சம் ஆறின பின்னாடி, பாலகுமாரனை மட்டுமே ஒரு காலத்துல படிச்சிட்டு இருந்த எனக்கு,  உடையார்  ஒரு பாகம் முடிக்கிறதுக்கே நாக்கு தள்ளிடுச்சு. அதனால இப்போ நமக்கு ஜெமோ, சாரு, வண்ணதாசன், எஸ் ரா.,  தான் சரிவரும்னு சமாதான படுத்திக்கிட்டேன். என்ன இருந்தாலும் தினமும் நாற்பது பக்கம் படிக்கிற பழக்கம் விட்டு போகல. இல்லைன்னா இருக்கவே இருக்கார் YouTubeல கதை சொல்ல பவான்னு காலம் அமைதியா போயிட்டு இருந்தது. 

கொரோனா காலங்கள் ஏகப்பட்ட நேரத்தை கையில் கொடுத்திருக்கு.  படிக்காம ஸ்டாக் வச்சிருந்த அத்தனை புத்தகங்களையும், பார்க்காம டிஸ்க்ல வச்சிருந்த அத்தனை படங்களையும் பார்க்க வச்சதால, குறைஞ்சது நாலு சேப்டராவது படிப்போம்னு, ரத்தம் ஒரே நிறம் முன்னுரை படிச்சா "அட" ன்னு ஆச்சர்யமா இருந்தது. இதை குமுத்துல தொடரா எழுத ஆரம்பிச்சப்போ சுஜாதாக்கு கொலை மிரட்டல் வரை வந்திருக்கு, எழுதுற கையை வெட்டிடுவோம்னு லட்டர், குமுதம் அலுவலகத்தை தாக்கிருக்காங்க, குமுதம் புத்தகத்தை ஒரு கூட்டமா சேர்ந்து எரிச்சிருக்காங்கன்னு ஏகப்பட்ட அதிர்ச்சி. சுஜாதா எழுத்துலக வாழ்க்கையில இப்படி ஒரு சம்பவமான்னு இருந்திச்சு. மத்தவங்களா இருந்தா அதையே ஒரு விளம்பரமா எடுத்திட்டு காசு பார்த்திருப்பாங்க, ஆனா சுஜாதா, "முழுசா நான் எழுதி இதை அவங்க படிச்சா புரிஞ்சுக்குவாங்க, ஆனா விளக்கம் கொடுக்க இது சரியான  நேரமில்லை, தவிர வலது கையை வெட்றோம்கிறங்க, இடது கையால எழுத வேற தெரியாதே?"ன்னு ஜஸ்ட் லைக் தட் கடந்து போனார். பேர் மாற்றி புத்தகமா வந்த பின்னாடி ஏன் இப்போ ஒருத்தர் கூட எதிர்க்கலை? ஏன்னா அதில எதிர்க்கிறதுக்கான காரணமே அதில் இல்லைன்னு எழுதிருக்கார்.

கதை சுஜாதா பாணியிலேயே சொல்லனும்னா சொகுசு கார் அதி விரைவில் சாலையில் செல்வது போல்  வழுக்கிக்கொண்டு செல்கிறது.
கதை கிட்டத்தட்ட நூத்தம்பது வருஷம் முன்னாடி நடக்கிறதால, வரலாற்று நாவல்கன்னாவே, சங்க தமிழ்ல எழுதி வாசகனை சாகடிக்காம, நாயகன் வீரத்தை,  நாயகி அழகை ஏழு எட்டு பக்கம் விவரிக்காம சட்டுன்னு கதைக்குள்ள போய்டறார். ஆரம்ப பக்கங்கள்ல இருந்தே கதை சூடு பிடிக்குது. அந்த வேகத்தை கொஞ்சம் கூட குறைக்காம ஜெட் வேகத்துல கடைசி வரை நம்மை கொண்டுபோறார்.


தந்தையை கொன்ற இரக்கமில்லாத ஒரு கிறுக்குத்தனமான அதிகாரியான எட்வார்டை எப்படியாவது கொல்ல வேண்டும் அதுதான் தன் வாழ்க்கையின் ஒரே லட்சியம் என முடிவெடுத்து எட்வார்டை தேடி செல்கிறான் முத்துக் குமரன். அவனை பழி தீர்த்தானா என்பதுதான் ஒரு வரிக் கதை, ஆனால் நாமெல்லாம் பள்ளியில் படித்த சிப்பாய் கலகம் என தவறாக புரிந்துகொள்ளப்பட்ட இந்தியாவின் முதல் சுதந்திர போரே இந்த கதையின் அடிநாதம். ஆஸ்லி போன்று மனசாட்சி உள்ள வெள்ளைக்காரனையும் படைத்திருக்கிறார், எனக்கு மிகவும் பிடித்துப்போன பாத்திரம் அது. 1857ல் சிப்பாய் கலகம் என்ற முதல் இந்திய சுதந்திர போர், அதை அடக்க கர்னல் நீலின் தலைமையில் சென்னையில் இருந்து ராணுவம் கல்கத்தா சென்றது, அங்கிருந்து லக்னோ கான்பூர் சென்றது, பீகாரில் இந்தியர்கள் வெள்ளைக்காரர்களை சித்திரவதை செய்தது, நாநாவின் ஆதரவு, முடிவு என  இந்த கதையில் வரும் பெரும்பாலான சம்பவங்கள் உண்மையானவை

உடன்கட்டை ஏறும் காட்சியை சுஜாதா விவரிக்கையில் நேரில் நின்று பார்த்து பதைபதைத்த உணர்வு. சுதந்திர போராட்ட மத்திய காலம் என்பதால் தூய தமிழிற்கு அதிகம் வேலை இல்லை அதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு தனக்கே உரிய பாணியில் ஏராளமான சுவாரஸ்யம் கலந்தது அங்கங்கே நகைச்சுவை வசனங்கள் தூவி விளையாடி இருக்கிறார். வழக்கமான சரித்திர கதைகளில் முக்கியத்துவம் பெரும் வித்தை சாமியார்கள் போன்றவர்களின் பாரம்பரியத்தை சிதைக்காமல் பைராகியை உலாவ விட்டிருக்கிறார்.
பூஞ்சோலையும்  எமிலி அட்கின்சனும் மறக்க முடியாத பாத்திரங்கள். சில நாவல்கள் படிக்கையில் நம் கண் முன்னே காட்சிகளாக விரிந்து விஸ்வரூபம் கொள்ளும், அதாவது பாகுபலி பார்த்திருக்கிறோமல்லவா அதுபோல. இது அந்தவகை நாவல். சுஜாதாவின் மாஸ்டர் பீஸ் இதுதான், ஜெயமோகனும் எஸ் ராமகிருஷ்ணனும் நூறு சிறந்த நாவல்களில் ஒன்றாக இதை தேர்ந்தெடுத்ததில் ஆச்சர்யம் இல்லை.
தவற விடாதீர்கள் 


No comments:

Post a Comment