Monday, May 25, 2020

மதுரை உணவுக்கடைகள் -ஜீவன்

மதுரைல குட்டிக்குட்டித் தெருக்கள்ல கூட சுவை மிக்க கடைகள் இருக்கு... அதனால நான் மிஸ் பண்ணீட்டா உங்க வீட்டுப் பிள்ளையா நினைச்சு மன்னிச்சிருங்க...
வாங்க போவோம்
முதல்ல மங்களகரமா ஸ்வீட்லருந்து ஆரம்பிப்போம்..
ஸ்வீட்னா இது நம்ம பாரம்பர்ய ஸ்வீட்டு... "அதிரசம்" தானப்ப முதலிதெருவுலருந்து வடக்கு ஆவணி மூலவீதி தொடங்குர முக்குல ஒரு கடை இருக்கு அந்தக்கடையில அதிரசம் திங்கனும்... சும்மா டரியலா இருக்கும்.. அந்த வெளிப்புற மொறுமொறுப்பு... கடிச்சதும் உள்ள அம்புட்டு மிருதுவா இருக்கும்... ஒன்ன எடுத்து திங்க ஆரம்பிச்சா அங்கயே நின்னு நாலஞ்ச திண்ணாத்தான் மனசு ஆறும்...
காலை டிபனுக்கு, காளவாசல் தேவகி ஸ்கேனுக்கு எதிர் சந்துல நேரா போய் SS காலனில SBI பேங்க்குக்கு சைடு ரோட்டுல போனா கெளரின்னு ஒரு கடை இருக்கு. பைபாஸ் ரோடு கெளரிகிருஷ்ணா இல்ல... இது குட்டிக்கடை... இட்லி,தோசை,பூரி, பொங்கல்னு எல்லாமே நல்லாருக்கும்... அங்க என்ன ஸ்பெசல்னா... அந்த சாம்பார்ர்ர்ர்ர்ர்... செம்மையா இருக்கும் கைல வாங்கி குடிக்கலாம்... அதோட டெய்லி ஒரு ஸ்பெசல் சட்னி அரைப்பாங்க... எல்லாமே கெத்து காட்டும்
பெரும்பாலும் மதுரைல காலை நேர டிபன கடைல சாப்பிடுர பழக்கம் மக்களுக்கு குறைவு , பெரும்பாலும் சைவக்கடைகள்தான் இருக்கும்... 11 மணிக்கெல்லாம் மத்தியாணச் சோத்த ரெடி பண்ணீருவாய்ங்க... மதியத்த இங்க ஒவ்வொரு மாதிரி கொண்டாடலாம்
அறுமுகம் மெஸ்னு ஒரு கடை தல்லாகுளம் பெருமாள் கோவில் கிரவுண்டுல ஓரமா இருக்கு... முன்னல்லாம் ரோட்டுக்கடையா இருந்தது இப்போ பக்கத்துலயே நல்ல ஹோட்டலா பெரிசாக்கி நடத்துராங்க.. அங்க மட்டன் பிரியாணி நல்லாருக்கும்.. இடிச்ச நாடுக்கோழி யோட சேத்து சொலட்டிக்கிட்டு அடிக்கலாம்
பக்கத்துலயே அம்மா மெஸ், குமார் மெஸ்லாம் இருக்கு ஆனா அதெல்லாம் பேருக்காக வெளியூர்காரங்க வந்து சாப்பிடுர இடமா மாறிப்போச்சு... அடுத்து கீழ்வெளிவீதி அம்சவள்ளி பிரியாணி... பிரியாணி கொஞ்சம் குழைவா இருக்கும்... அங்க விற்கிர கோழிச்சில்லரைன்னு ஒரு குழம்பு ஐட்டத்துக்கு 20 பேர் எப்பவும் வரிசைல நிப்பாய்ங்க... பிரியாணி மதியம் 2.30 க்கெல்லாம் காலியாகிடும்... அங்க ஒரு புரூட் மிக்சர் விப்பாய்ங்க பிரியாணிய ஒரு ஏத்து ஏத்திட்டு ஒரு மிக்சர போட்டம்னா ஒரு பினிஷிங்குக்கு வந்துரும்.
அப்புறம் காமராஜர் சாலைல கிருஷ்ணன் மெஸ்னு ஒரு கடை இருக்கு அங்க நல்லி பிரியாணி மெரட்டலா இருக்கும்... அப்பிடியே அந்த நல்லி எலும்புல கொத்தா ஒட்டி இருக்க கறி நல்லி எலும்ப பிடிச்சு ரெண்டு ஆட்டு ஆட்டுனா அப்பிடியே பூவா உதிரும் பாத்துக்கங்க... அங்க புறா, காடை, முயல்னு எல்லா சைடீஸும் பட்டயக்கெளப்பும்.. நான் சொன்னா எல்லாக்கடைலயுமே சீரகச்சம்பா பிரியாணிதான்... இங்க பாஸ்மதி பிரியாணிய பெரும்பாலும் யாரும் விரும்ப மாட்டாய்ங்க... ராவுத்தர் கடைல மட்டும் கிடைக்கும்.
மதியச்சாப்பாட்டுக்குன்னே சில கடைகள் இருக்கு... தமிழ்சங்கம் ரோடு ஜானகிராம்ல அயிரமீன் குழம்பு வாங்கி சோத்துல குலைச்சு அடிச்சோம்னா எம்புட்டு திங்கிறோம்னே தெரியாம உள்ள இறங்கும்...3 தடவ கொழம்ப ஊத்தி திண்ணுபுட்டு மறுக்கா சோத்த வாங்கி அந்த எலும்பு ரசத்த ஊத்தி பிசைஞ்சு கரண்டி ஆம்லேட்டோட வச்சு இழுத்தோம்னா... எப்டி இருக்கும்.... ஆங் அப்டி இருக்கும் இதெல்லாம் மக்களுக்கு தெரிஞ்ச கடைகள்தான்... சில கடைகள் சிலருக்கு மட்டுமே தெரிஞ்சது.. அதுல ஒன்னுதான் காளவாசல் தேவகி ஸ்கேனுக்கு பக்கத்துலயே வெளிய தெரியாத அளவுக்கு அடக்கமா ஒரு குட்டிக்கடை லெட்சுமி மெஸ்னு ஒரு பழைய ஸ்டேண்டிங் போர்டு இருக்கும்.. அங்க சோத்துக்கு குடல் குழம்பு, கறிக்குழம்பு, மீன் குழம்பு , நாட்டுக்கோழிக் குழம்புன்னு ஒவ்வொன்னும் பெருமாள் கோயில் தீர்த்தம் மாதிரி கைய குழிவா வச்சு வாங்கிக் குடிக்கலாம் போல இருக்கும்... சோறுகள்ல குழம்புகள குதூகலமா வெளாட விட்டு எடுத்து செங்கச்சூளைல மண்ண அப்புன மாதிரி ஒரு கட்டு கட்டலாம் ... சைட் டிஷ்லாம் தரம்ம்ம்மா இருக்கும்... வக்காளி ஒரு ஊறுகா வைப்பாய்ங்க.... அதுல என்ன மாயம் செய்வாங்களோ... அம்புட்டுப்பயலும் கறிக்கொழம்புக்கே ஊறுகாயத்தொடு வெளுப்பாய்ங்க வெத்தலப்பேட்ட பக்கத்துல நூரி மெஸ்னு ஒரு பாய் கடை... நெய் சோறும் குடல் குழம்பும் அந்தரா இருக்கும். வடக்கு ஆவணி மூலவீதிலருந்து மீனாட்சியம்மன் கோவிலுக்கு போற சந்துகள்ல ரெண்டாவது சந்துல ஒரு செட்டியார் கடை இருக்கு... செட்டிநாட்டு ஸ்டைல்ல பயமுறுத்திவிடுவாய்ங்க... அங்க புறா சாப்பிட்டு பாருங்க.... கீழவாசல் அருளானந்தம்னு ஒரு கடை இருக்கு... சோத்துச் சொர்க்கம்யா... திண்ணுட்டு அங்கனயே ஓரமா எடம் கிடைச்சா தூங்கீரலாம்னிருக்கும்.... சைட்டிஷ்லாம் மயக்குவாளுக.. இன்னும் இருக்கு கொஞ்ச நேரத்துல கண்டினியூ பண்றேன்
சைவ சாப்பாட்டுக்கு பைபாஸ் ரோடு லட்சுமி மெஸ், டவுன்ஹால் ரோடுப்பக்கத்துல சபரீஸ்.. காமராஜர்சாலை சபரீஸ்னு.. பெரிய கடைகளும்...சைவச்சாப்பாட்டோட வெங்காய பக்கோடா வச்சு சாப்பிடுரது மதுரைக்காரனுக வழக்கம்... மத்தியானத்துலயே பெரும்பாலான ஹோட்டல்ல புரோட்டாவும் குஸ்காவும் கிடைக்கும். இருந்தாலும் அது டின்னர் ஸ்பெசல்ல அத தனியா சொல்றேன்.இப்ப சிறு தீனி மற்றும் டீ காபி கூல்ட்ரிங் பக்கம் போவோம் தல்லாகுளம் விசாலம் காபி சாப்பிட்டுப் பாருங்க... சாப்டு அரைமணிநேரமானாலும் அந்த காபி கசப்பு தொண்டைல நிக்கும் அப்பிடி ஒரு டேஸ்ட்டு... அடுத்து தண்ணி குடிக்கக் கூட மனசு வராது
ரயில்வே ஸ்டேசனுக்கு எதிர்ல ப்ரேமவிலாஸ்னு ஒரு மிட்டாய் கடை... ஸ்வீட் கடைதான் அந்தக்காலத்துலருந்து இருக்கதால மிட்டாய்க்கடைன்னே வழக்காகிடுச்சு... தாமரை இலைல அப்டியே பொசுக்கப் பொசுக்க (சுடச்சுட) அல்வா எடுத்து போட்டு குடுப்பாய்ங்க...ரெண்டா பிச்சு வாய்ல போட்டா....அப்டியே கரையும்யா அங்க விக்கிர ஸ்பெசல் மிச்சர்தான் இங்க பாதி பேர் வீட்ல சோத்துக்கு வெஞ்சணம் (சைட்டிஷ்). அந்த அல்வாவ அங்கனயே நின்னு திங்கிர கூட்டமே எப்பயும் பத்துப் பேர் இருப்பாய்ங்க... அல்வா கடை வாசல்லயெட் மல்லியப்பூ வச்சு நாலஞ்சு அக்காக்க விக்கும்ங்க... எம்புட்டு நேக்கா யாவாரம் பண்ணுவாய்ங்க
தெரியுமா... ஏப்பா தம்பி அல்வா மட்டுமா வாங்கிட்டுப்போற... வீட்டுக்காரப்புள்ளைக்கி பூ வாங்கிட்டுப்போய்யான்னு அங்கயே நம்மள வாடிவாசல்ல நிக்கிர காளை மாதிரி உசுப்பேத்தி விட்டுருவாய்ங்க... நேதாஜி ரோட்டுல தங்கமயில் ஜுவல்லரிக்கு பின்னாடி நர்சிங்னு ஒரு ஸ்வீட் கடை இருக்கு நார்த் இந்தியன் ஸ்வீட்டுகள் அங்க மட்டுந்தான் திங்குரது... கச்சோரி அங்க நல்லாருக்கும்... மசால்பூரி பாணிப்பூரியும் அங்க நல்லாருக்கும். சாயங்காலத்துல கோவில சுத்தி நிறைய ஸ்னாக்ஸ் விப்பாய்ங்க ஷப்னம் வாசல்ல விக்கிர காரப்பொரிக்கு காத்துக்கெடக்கலாம்யா பருப்பு போளி,பச்சப்பயிறு, காரப்போளி,சுண்டலு, உளுந்தம்பருப்புன்னு எல்லாத்தையும் அவிச்சு விப்பாய்ங்க... தள்ளுவண்டிகள்ல முள்ளுமுருங்கக்கீர வடை அப்பப்ப போட்டுத்தருவாய்ங்க ரெண்டுரூவா வடைக்கெல்லாம் சொத்தெழுதி வைக்கலாம்யா
ஜிகர்தண்டா... மதுரையோட அடையாளமாவே மாறிப்போச்சு ... விளக்குத்தூண் பேமஸ் ஜிகர்தண்டா கடை ஒன்னுதான் இருக்கும் அப்பல்லாம் இப்ப அவங்க நிறைய ப்ரான்சஸி குடுத்து அங்கங்க இருக்கு.. வெளியூர்கள்லயும் இருக்கு... ஆனா நாங்க பெரும்பாலும் ஜிகர்தண்டாவ மஞ்சணக்காரத்தெரு முக்குல ஒரு பாய் விக்கிராப்புள அங்கதான் சாப்பிடுரது.... டேஸ்ட்டு நம்மள திண்னுரும்... முனிச்சாலைலருந்து செயிண்ட்ஜோசப் கேர்ள்ஸ் ஸ்கூல் போற வழில போஸ்ட்டாபீஸு பக்கத்துல பத்திரீசியார் ஸ்கூலுக்கு முன்னாடி ஒரு பொட்டிக்கடைல க்ரேப்ன்னு கேட்டீங்கன்னா ஒரு ஜூஸ டம்ளர்ல மோந்து குடுப்பாய்ங்க யோவ்வ்வ்வ் அதெல்லாம் குடிச்சுப்பாக்கனும்யா... முனிச்சாலைல சிக்னல் பக்கத்துலயே புகழ்பெற்ற கோவிந்தராஜ் பருத்திப்பால் கடை ஒன்னு இருக்கு ஒரு டம்ளர் குடிச்சா பசியாரிடும் டின்னர மதுரைல கொண்டாடலாம்யா... புரோட்டா மதுரயோட ஊர் உணவு. கொத்து புரோட்டாவ ம்யூசிக்கோட கொத்துரது எங்கூர்ல ஆரம்பிச்சகுதான்... பெஸ்ட் புரோட்டான்னா அண்ணாநகர் நியூமாஸ் ஓட்டல் புரோட்டாதான் அங்க போடுர மடக்கு புரோட்டா பிச்சம்னா அப்பிடியே பூவா பிரியும் பாத்குக்கங்க சால்னா அங்க சுமாராத்தான் இருக்கும்... அண்ணா ப்ம்ஸ்டாண்ட்லருந்து ஆவின் போற வழியில இருக்க கூரைக்கடை... உக்காந்து சாப்பிட ரெண்டு டேபிள்தான் நைட்டு கடை கூட்டம் அம்மும்... சுக்கா, குடலு , ரத்தப்பொரியலு, நாட்டுக்கோழி சாப்ஸு, நெஞ்சு சாப்ஸுன்னு அத்தனையுமே கெரங்கடிக்கும்
ஆவின் பக்கத்துலருக்க பன் பரோட்டா கடைல 3 புரோட்டா வயிறு ரொம்பீரும்... தலைக்கறி ரோஸ்ட்லாம் தெறிக்கவிடும்...குழம்பெல்லாமே அடிச்சுத்தூக்கும் தெற்குவாசல் சுகன்யால புரோட்டாவ வீசி வெளாடுவாய்ங்க டேஸ்ட்டும் அந்தல சிந்தலயா இருக்கும்
க்ராஸ்ரோடு கீர்த்தனா ஓட்டல்லாம் வெரட்டி வெரட்டி திங்கலாம்... கரிமேடு மீன் மார்கெட் பக்கத்துல ஒரு குட்டிக்கடைல விருதுநகர் பொறிச்ச புரோட்டா கிடைக்கும்.. நொறுக்கிப்போட்டு கொழம்புகள கொலச்சு அடிச்சோம்னா விருதுநகர்லயே போய் தின்னுட்டு வந்த மாதிரி இருக்கும்
சைவக்கடைகளும் நைட்ல கலைகட்டும்.... கீழவாசல் நாகலெச்சுமி அனெக்ஸ்... ரேவதி டிபன் செண்டர்லயெல்லாம்... வெண்பொங்கல், தக்காளிப்பொங்கல்( வெரைய்ட்டி ரைஸ செள்ராஸ்ட்ரா கடைகள்ல அப்பிடித்தான் சொல்லுவாய்ங்க), புளியோதர, லெமன்சாதம்னு எல்லா சாதமும் டின்னருக்கு கிடைக்கும்...
இந்த ஐட்டங்கள் ல செளராஸ்ட்ரா கட்சிகள அடிச்சுக்க முடியாது... அங்கயெல்லாம் போனா மிலிட்ரி முறைதான் எல்லா வெரெய்ட்டியும் ஒவ்வொரு வாய் சாப்பிட்டாலே போதும்னு எல்லாத்தையும் ஆர்டர் பண்ணி சுத்துல விட்டு சாப்பிடுவோம்.. பில்ல சரியா பங்கு போட்டுக்குவோம்
மதுரையின் ரோட்டுக்கடைகள என்னவே முடியாது அதுல ஒன்னு ரெண்ட சொல்றேன்... அண்ணா நகர் அக்கா கடைன்னு ஒரு கடை 40 வருசமா இருக்கு... ஒரு மரத்தடில ஆரம்பிச்சது... இப்பவும் அதே மரத்தடில ஒரு வீட்டயே ஓட்டலா மாத்தி நடக்குது ... அங்க முட்ட சப்பாத்திக்கொத்து ஒன்னு போடுவாய்ங்க.... ருசி அள்ளும்
பைபாஸ் ரோட்ல கேஎப்சி இருக்கு அது நமக்கு வேணாம் அதுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு அக்கா கடை போட்டிருக்கு... முட்டதோசயெல்லாம் பத்துக்கும் மேல தின்னுட்டு அடுத்த தோசைக்கு தட்ட நீட்டீட்டே நிப்போம்... அந்தக்கா போதும் போடான்னு வைய்யும்
யானைக்கல்தான் மதுரைக்கு தூங்கா நகர்னு பேர் வாங்கிக்கொடுத்த இடம், அங்க பரமேஸ்வரி , ராஜேஸ்வரின்னு ரெண்டு கடை எதிரெதிரா இருக்கு... சோறு சாம்பார் ரசம் மோர் பாயசம்னு நைட்டு 3 மணிக்கும் சாப்பிடலாம்... வெங்காயக்குடல் அங்க ரொம்ப நல்லாருக்கும். அடுத்து சுல்த்தான் கடை
நைட்டு 3 மணி வரை பிரியாணி புரோட்டா சைட்டிஷ்னு எல்லாம் கிடைக்கும்... வெளியூர்லருந்து சாப்பிடாம லேட்டா வரவங்களுக்கு அதுதான் புகழிடம்.
நிறைய சொல்லாம விட்டது போலத்தான் இருக்கு... இன்னொரு நாள்ல விட்டத லிஸ்ட் பண்ணி சொல்றேன். கொரொனா லாக்டவும் முடிஞ்சு உலகம் நார்மல் மோடுக்கு வந்ததும் மதுரைக்கு வந்து சாப்பிட்டு பாருங்க மக்களே

-ஜீவன்

ட்விட்டரில் இவரை பின் தொடர: @jeevanlancer

Sunday, May 10, 2020

ரத்தம் ஒரே நிறம் -சுஜாதா புத்தக விமர்சனம்

இதுதான் சுஜாதாவோட பெஸ்ட்ன்னு நண்பன் சொன்னதால வாங்கி, தலைப்பை பார்த்துட்டு கொலைக்கள அல்லது கணேஷ், வசந்த் வச்சு ஏதோ துப்பறியும் நாவல்னு நினைச்சு ரொம்ப காலம் படிக்காம வச்சிருந்தேன்.  முன்பொரு காலத்திலே ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், சாண்டில்யன், புஸ்பா தங்கதுரை, கோட்டயம் புஸ்பநாத், தபூ சங்கர், வைரமுத்து, வாலி விஜய் மில்டன்னு எது கிடைச்சாலும் ஆதரவு கொடுத்து படிச்சு முடிப்பேன். நாவலை தோட்டப்புறம் தான் தெரிஞ்சுது இது கிரைம் நாவல் இல்ல, சரித்திர நாவல். சரித்திர நாவல் வகைன்னாவே இப்பெல்லாம் ஏனோ ஜெர்க்கடிக்குது, பொன்னியின் செல்வனை உலகமே புகழ்ந்து தள்ளிட்டு இருந்தப்போ கொஞ்சம் பக்கம் படிச்சிட்டு தெறிச்சு வந்தவன் நான். அந்த சூடு கொஞ்சம் ஆறின பின்னாடி, பாலகுமாரனை மட்டுமே ஒரு காலத்துல படிச்சிட்டு இருந்த எனக்கு,  உடையார்  ஒரு பாகம் முடிக்கிறதுக்கே நாக்கு தள்ளிடுச்சு. அதனால இப்போ நமக்கு ஜெமோ, சாரு, வண்ணதாசன், எஸ் ரா.,  தான் சரிவரும்னு சமாதான படுத்திக்கிட்டேன். என்ன இருந்தாலும் தினமும் நாற்பது பக்கம் படிக்கிற பழக்கம் விட்டு போகல. இல்லைன்னா இருக்கவே இருக்கார் YouTubeல கதை சொல்ல பவான்னு காலம் அமைதியா போயிட்டு இருந்தது. 

கொரோனா காலங்கள் ஏகப்பட்ட நேரத்தை கையில் கொடுத்திருக்கு.  படிக்காம ஸ்டாக் வச்சிருந்த அத்தனை புத்தகங்களையும், பார்க்காம டிஸ்க்ல வச்சிருந்த அத்தனை படங்களையும் பார்க்க வச்சதால, குறைஞ்சது நாலு சேப்டராவது படிப்போம்னு, ரத்தம் ஒரே நிறம் முன்னுரை படிச்சா "அட" ன்னு ஆச்சர்யமா இருந்தது. இதை குமுத்துல தொடரா எழுத ஆரம்பிச்சப்போ சுஜாதாக்கு கொலை மிரட்டல் வரை வந்திருக்கு, எழுதுற கையை வெட்டிடுவோம்னு லட்டர், குமுதம் அலுவலகத்தை தாக்கிருக்காங்க, குமுதம் புத்தகத்தை ஒரு கூட்டமா சேர்ந்து எரிச்சிருக்காங்கன்னு ஏகப்பட்ட அதிர்ச்சி. சுஜாதா எழுத்துலக வாழ்க்கையில இப்படி ஒரு சம்பவமான்னு இருந்திச்சு. மத்தவங்களா இருந்தா அதையே ஒரு விளம்பரமா எடுத்திட்டு காசு பார்த்திருப்பாங்க, ஆனா சுஜாதா, "முழுசா நான் எழுதி இதை அவங்க படிச்சா புரிஞ்சுக்குவாங்க, ஆனா விளக்கம் கொடுக்க இது சரியான  நேரமில்லை, தவிர வலது கையை வெட்றோம்கிறங்க, இடது கையால எழுத வேற தெரியாதே?"ன்னு ஜஸ்ட் லைக் தட் கடந்து போனார். பேர் மாற்றி புத்தகமா வந்த பின்னாடி ஏன் இப்போ ஒருத்தர் கூட எதிர்க்கலை? ஏன்னா அதில எதிர்க்கிறதுக்கான காரணமே அதில் இல்லைன்னு எழுதிருக்கார்.

கதை சுஜாதா பாணியிலேயே சொல்லனும்னா சொகுசு கார் அதி விரைவில் சாலையில் செல்வது போல்  வழுக்கிக்கொண்டு செல்கிறது.
கதை கிட்டத்தட்ட நூத்தம்பது வருஷம் முன்னாடி நடக்கிறதால, வரலாற்று நாவல்கன்னாவே, சங்க தமிழ்ல எழுதி வாசகனை சாகடிக்காம, நாயகன் வீரத்தை,  நாயகி அழகை ஏழு எட்டு பக்கம் விவரிக்காம சட்டுன்னு கதைக்குள்ள போய்டறார். ஆரம்ப பக்கங்கள்ல இருந்தே கதை சூடு பிடிக்குது. அந்த வேகத்தை கொஞ்சம் கூட குறைக்காம ஜெட் வேகத்துல கடைசி வரை நம்மை கொண்டுபோறார்.


தந்தையை கொன்ற இரக்கமில்லாத ஒரு கிறுக்குத்தனமான அதிகாரியான எட்வார்டை எப்படியாவது கொல்ல வேண்டும் அதுதான் தன் வாழ்க்கையின் ஒரே லட்சியம் என முடிவெடுத்து எட்வார்டை தேடி செல்கிறான் முத்துக் குமரன். அவனை பழி தீர்த்தானா என்பதுதான் ஒரு வரிக் கதை, ஆனால் நாமெல்லாம் பள்ளியில் படித்த சிப்பாய் கலகம் என தவறாக புரிந்துகொள்ளப்பட்ட இந்தியாவின் முதல் சுதந்திர போரே இந்த கதையின் அடிநாதம். ஆஸ்லி போன்று மனசாட்சி உள்ள வெள்ளைக்காரனையும் படைத்திருக்கிறார், எனக்கு மிகவும் பிடித்துப்போன பாத்திரம் அது. 1857ல் சிப்பாய் கலகம் என்ற முதல் இந்திய சுதந்திர போர், அதை அடக்க கர்னல் நீலின் தலைமையில் சென்னையில் இருந்து ராணுவம் கல்கத்தா சென்றது, அங்கிருந்து லக்னோ கான்பூர் சென்றது, பீகாரில் இந்தியர்கள் வெள்ளைக்காரர்களை சித்திரவதை செய்தது, நாநாவின் ஆதரவு, முடிவு என  இந்த கதையில் வரும் பெரும்பாலான சம்பவங்கள் உண்மையானவை

உடன்கட்டை ஏறும் காட்சியை சுஜாதா விவரிக்கையில் நேரில் நின்று பார்த்து பதைபதைத்த உணர்வு. சுதந்திர போராட்ட மத்திய காலம் என்பதால் தூய தமிழிற்கு அதிகம் வேலை இல்லை அதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு தனக்கே உரிய பாணியில் ஏராளமான சுவாரஸ்யம் கலந்தது அங்கங்கே நகைச்சுவை வசனங்கள் தூவி விளையாடி இருக்கிறார். வழக்கமான சரித்திர கதைகளில் முக்கியத்துவம் பெரும் வித்தை சாமியார்கள் போன்றவர்களின் பாரம்பரியத்தை சிதைக்காமல் பைராகியை உலாவ விட்டிருக்கிறார்.
பூஞ்சோலையும்  எமிலி அட்கின்சனும் மறக்க முடியாத பாத்திரங்கள். சில நாவல்கள் படிக்கையில் நம் கண் முன்னே காட்சிகளாக விரிந்து விஸ்வரூபம் கொள்ளும், அதாவது பாகுபலி பார்த்திருக்கிறோமல்லவா அதுபோல. இது அந்தவகை நாவல். சுஜாதாவின் மாஸ்டர் பீஸ் இதுதான், ஜெயமோகனும் எஸ் ராமகிருஷ்ணனும் நூறு சிறந்த நாவல்களில் ஒன்றாக இதை தேர்ந்தெடுத்ததில் ஆச்சர்யம் இல்லை.
தவற விடாதீர்கள் 


Saturday, May 9, 2020

துர்கா ஸ்டாலின்

முன்னொரு காலத்தில் எனது அப்பா அதிமுகவில் ஏதோ ஒரு மொக்கை போஸ்டில் இருந்தார்,  என் மாமா pvks செல்வராஜ் திமுகவில் இளைஞரணி செயலாளராக இருந்தார். அவர் கட்டுச்செவல் சண்டையில் மிக ஆர்வமாக இருப்பார், பந்தயத்தில் வெற்றி பெற்றால் எதிரணி சேவலை தருவார்கள், தோற்றால் தன் சேவலை காசு கொடுத்து வாங்கி வந்து விடுவார். அதை அவர் தோட்டத்தில் சமைப்பதே ஒரு கலையாக இருக்கும். கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் அதை சிறிது சிறிதாக வெட்டி மசால் பொருட்கள் ஏதும் கலக்காமல் செய்வார். என் அப்பா டவுசர்  பொடியனான என்னையும் கூட்டிகொண்டே சாப்பிட செல்வார்,  அந்த அற்புத சுவை எனக்கு இதுவரை எந்த பெரிய உணவகங்களிலும் கிடைத்ததில்லை. எனது அப்பாவை விட்டுவிட்டு அவர் கட்டுசேவலை சமைத்ததே இல்லை. இதில் எனது சித்தப்பா வைகோவின் மதிமுக கட்சியில் இருந்தார் அவரும் இந்த ஜோதியில் கலந்து கொள்வார் (நம்புங்கள் நண்பர்களே, அரசியல் அப்போது அப்படிதான் இருந்தது)  இது நான் துர்கா ஸ்டாலின் பேட்டியை பார்த்த போது ஏனோ ஞாபகம் வந்தது.

குமுதம் சார்பாக துர்கா ஸ்டாலினை ஒரு பெண்மணி பேட்டி எடுத்தார். பொதுவாக நான் எந்த கட்சி அரசியல் கட்சி தலைவர், குடும்ப உறுப்பினர்,  தொண்டர் என  யாருடைய பேட்டிகளையும் பார்ப்பதில்லை, கடுப்படிக்கும், அரசியல் ரத்த கொதிப்பு வரும்வரை எழுதிக்கொண்டிருந்த நான் இப்போது இந்த இரண்டு திராவிட கட்சிகளையும் சில சமயம் நக்கலடிப்பதோடு நிறுத்திக்கொள்கிறேன். உடனே நீ அந்த கட்சியா இந்த கட்சியா என்ற அனுமானத்திற்கு போகாதீர்கள், தொகுதியில் நல்ல வேட்பாளர்களை பார்த்து ஓட்டு போட்டு ஏமாறும் சாதாரண பொதுஜனம் தான் நான்.

சரி விசயத்திற்கு வருவோம். குமுதத்தில் ஒரு பெண்மணி துர்காவை பேட்டி எடுத்தார், கோவிலுக்கு போகுது என பலரால் நக்கலடிக்கப் படும் அவரின் பேட்டியை ஏனோ பார்க்கலாம் என தோன்றியது. அதில் துளியும் அரசியல் இல்லை. பத்தாவது படித்துக்கொண்டிருந்த ஒரு கிராமத்து சிறுமியை பெண் பார்த்துவிட்டு போகிறார்கள் ஒரு குடும்பத்தினர், அவர்களுக்கு இந்த பெண்ணை பிடித்து போகிறது. மாப்பிள்ளை ஸ்டாலினும் வந்து பார்க்க அவருக்கும் இந்த பெண்ணை பிடித்து போகிறது.    கொஞ்சநாள் கழித்து திருமணம் என்று வருகிறார்கள், படிப்பேன் என்று அழுது அடம்பிடிக்கிறது சிறுவயதில் அம்மாவை இழந்துவிட்ட அந்த பெண், பாட்டியின் வற்புறுத்தலாலும் (பாட்டியை அம்மா என்று அழைக்கிறார், எனக்கும் அம்மா சிறுவயதிலே இறந்துவிட்டார், என் பாட்டியை நானும் அம்மா என்றுதான் அழைத்துக்கொண்டிருந்தேன்)  தந்தையின் வற்புறுத்தலாலும் திருமணம் நடக்கிறது, கட்சி, பிரபலம், இத்யாதி மற்றும் மெட்றாஸ் என்ற நகரை பற்றிய பயத்துடன் இந்த ஊருக்கு வாழ வருகிறது அந்த பெண். மிக கூச்ச சுபாவம் வேறு, எந்த அளவெனில் திருமணமாகி பத்து நாட்களுக்கு பிறகு முதல் வார்த்தை கணவனுடன் பேசும் அளவு. 

இதைவிட கொடுமை ஸ்டாலின் அதைவிட கூச்ச சுபாவமாக இருந்திருக்கிறார். ரெண்டுபேருமே அப்படிதான் இருந்தோம் என்கிறார்.திருமணமாகி மூன்று நான்கு மாதங்களிலேயே கணவனை கைது செய்து அழைத்து கொண்டு போய் விடுகிறார்கள். எதற்கு என்றே தெரியாமல் எப்போது வருவார் என்றும் தெரியாமல் அழுது கொண்டே இருந்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து தான் கணவர் விடுதலையாகி வீட்டிற்கு வந்திருக்கிறார். மாமாவிற்கு என்ன உணவு பிடிக்கும் மற்றவர்களுக்கு என்ன உணவு பிடிக்கும் என தெரிந்து கொள்வதே பிரதான வேலையாக வைத்திருக்கிறார். மாமியாரிடம் சமையல் கற்று கொள்கிறார்.

கடவுளின் மீது கடும் பக்தி இருக்கிறது, மாமியாரை போலவே, குங்குமம் வைக்க சொல்லி ஸ்டாலின் சொன்னதால் அதை பின் பற்றி வருகிறாராம். ஸ்டாலின் மேயராகும் வரை கூட்டு குடும்பம்தான் அதன் பின் தனி குடித்தனம் சென்றிருக்கிறார்கள், தினமும் நடைபயிற்சி யோகா என இன்றுவரை கடைபிடிக்கிறார். ஸ்டாலினும் இவரும் முன்பெல்லாம் புதிய படங்கள் ஒன்று விடாமல் இரவு நேரத்தில் தியேட்டர் சென்று பார்த்திருக்கிறார்கள், குறிப்பாக ஸ்டாலின் வற்புறுத்துவாராம், அவ்வளவு சினிமா மோகம். இரவு காட்சி முடிந்த பின் ஸ்டாலின் ஐஸ் கிரீம் பலூடா போன்றவை ஆசையாக வாங்கி கொடுப்பாராம்,  இவரோ எப்போடா வீட்டுக்கு போவோம் என்ற அரை தூக்கத்தில் இருப்பாராம் இதில் சாப்பிட சொல்லி சண்டை வேறு வருமாம். கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் உடைகளை தேர்ந்தெடுத்து வாங்குவார்களாம்.

கணவரை பற்றி மிக பொறுமையானவர் என அபிப்ராயம் வைத்திருக்கிறார். உணவு விஷயமெனில் அவருக்கு வத்த குழம்பு இருந்தால் கூட போதும் திருப்தியாக சாப்பிடுவார் என பெருமிதம் கொள்கிறார்.

எனக்கென்னவோ துர்கா இன்னமும் கிராமத்து மனுஷியாக வாழ்கிறார், இவரை போல நிறைய அத்தைகளை என் கிராமத்தில் பார்த்திருக்கிறேன், கட்சி அரசியல் என எதையும் மனதில் வைத்து கொள்ளாமல், காசிருந்தாலும் தலையில் ஏற்றுக்கொள்ளாமல் அமைதியான முறையில் வாழ்ந்தார்கள். வாழ்கிறார்கள். ஸ்டாலின் ஒருவேளை அரசியலுக்கு வராமல் போயிருந்தாலும் நிம்மதியாக அமைதியாக வாழ்க்கையை கொண்டு போயிருப்பார் என தோன்றுகிறது.

Friday, May 8, 2020

பஸ் கட்டண உயர்வு

பஸ் கட்டண உயர்வுன்னு படிச்சேன், ஆதரவு, எதிர்ப்புல்லாம் கட்சிக்காரங்க பார்த்துக்கட்டும், நான் யோசிச்சது என்னன்னா100பேருக்கு மேல அடைக்கிற தனியார், அரசு பேருந்துல 20 பேர்தான் இனி ஏத்தணும்னு சொல்றாங்க, நம்ம ஜனத்தொகைக்கு அது ஒத்து வருமான்னு தெரியல, தவிர இரண்டு மடங்கு ஏத்தினாலும் அது டீசலுக்கே பத்தாது, அப்புறம் பணியாளர்களுக்கு சம்பளம் ஈ எஸ் ஐ., மத்தது, ரிட்டைர் ஆனவர்களுக்கு பென்ஷன்... தனியார் பேருந்துகள் அதோட முதலாளி பணியாளர்கள் நிலை ரொம்ப சிரமம், கால் டேக்ஸியளவு ரேட் வெச்சா சமாளிக்கலாம். இருக்கிற பொருளாதார நிலையில அது சாத்தியமில்லை. அரசு, தனியார், மக்கள் எல்லா தரப்புக்குமே கஷ்டம்தான். இல்லைன்னா இந்த சுமையை அரசு தான் தங்கணும். சாராயம் விக்கிற காசுல எத்தனைய சமாளிப்பார்னு தெரியல. மத்திய அரசுகிட்ட இருந்தும் காசு வர போறதில்லை. அப்படியே ஆயிரம் ரூபா கேட்டா பத்து ரூபா நோட்டை கொடுத்து பத்திரமா செலவு பண்ணுப்பா ங்கிற வழக்கமான அப்பாவாதான் மோடி இருக்கார். கஷ்டம். மொக்கையா இருந்தாலும் ஒரே வழிதான் இருக்கு. அமெரிக்கா, இத்தாலி கூட சீனாட்ட காசு கேட்குது, நாமும் கல்ல வீச வேண்டியதுதான்.தர வாய்ப்பில்லை, ஒருவேளை தந்தா சமாளிக்கலாம் இல்லைன்னா வழக்கம் போல உலக வங்கி கிட்ட கையை நீட்ட வேண்டியதுதான்.