அவனது சண்டைச்சேவல் தோற்றதேயில்லை. அவன் சேவலைச் சண்டைக்குப் பழகுவதற்கு முன்பாக அது ஒரு சேவல் இல்லை என்பதை உணரச் செய்வான். இதற்காக அதிகாலையில் சேவல் தன்னை அறியாமல் கூவும் போது சிறிய மூங்கில் கழியால் அடித்து அது கூவுவதைக் கட்டுப்படுத்துவான். நாட்படச் சேவல் கூவுவதை நிறுத்திக் கொண்டுவிடும். பின்பு சேவலை இன்னொரு சேவலுடன் சண்டைக்குப் பழக்குவதற்குப் பதிலாகத் தண்ணீரை பீய்ச்சியடித்து சேவலை அதோடு சண்டையிடச் செய்வான். தண்ணீர் எந்தத் திசையிலிருந்து பீறிடும் எனத் தெரியாமலும் நனைந்து கண்ணை மறைக்கும் தண்ணீரை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமலும் சேவல் தடுமாறும். பின்பு மெல்லத் தண்ணீரை எதிர்கொள்ளச் சேவல் பழகிவிடும்.
பின்பு சேவலுடன் சண்டையிட பல்வேறு தீப்பந்தங்களை ஏற்பாடு செய்திருப்பான். நெருப்புக் கண் முன்னே சீற்றம் கொள்வதையும் ரெக்கையில் நெருப்பு பற்றிக் கொள்வதையும் கண்டு சேவல் ஆவேசம் கொள்ளும். பின்பு பயந்தெளிந்து நெருப்பைக் கண்டு சேவல் விலகியோடாது. அதன்பிறகு சேவலின் கண்களைக் கறுப்புத் துணியால் கட்டி கிணற்றில் போட்டுவிடுவான். தட்டுத்தடுமாறி அது மேலேறி வர எத்தனிக்கும். ஆனால் சில நாட்களில் கண்களைக் கட்டினாலும் சேவல் திசையறிந்துவிடும்.
அதன்பிறகு சேவலுக்கு உணவு தராமல் பட்டினி போடுவான். அது பசியில் குரல்கொடுத்தபடியே இருக்கும். மண்ணைக் கொத்தித் தின்னும். பின்பு மெல்லச் சேவல் பசியைக் கடந்து போகும். முடிவில் மரத்தில் செய்யப்பட்ட இயந்திர சேவல் ஒன்றை அத்தோடு சண்டையிடச் செய்வான். மரச்சேவலை கொத்தும் நிஜசேவல் ஏன் அச்சேவல் கத்துவதில்லை எனத் திகைத்துப் போகும். பின்பு தானும் அது போலவே கத்தக்கூடாது என்பதை உணர்ந்து கொள்ளும்.
இந்தப் பயிற்சிகள் யாவும் முடிந்தபிறகு அவன் சேவலைச் சண்டைக்குக் கொண்டு வருவான். போட்டியில் அவனது சேவல் எதிராளியின் சேவலை ஒரே அடியில் வீழ்த்திவிடும். ஆனால் வென்ற சேவலுக்கான கொக்கரிப்போ, சிறகடிப்போ எதுவும் இருக்காது. ஒரு துறவி மடாலயம் திரும்புவது போல நிதானமாக அச்சேவல் அவனை நோக்கித் திரும்பிவரும். அவன் சேவற்கட்டில் வென்ற பரிசினை ஒருபோதும் பெற்றுக்கொள்வதில்லை.
வீடு திரும்பும் வழியில் தோளில் சேவலை நிற்கச் செய்தபடியே உற்சாகமாகப் பாடிக் கொண்டு வருவான்.
அவ்வளவு தான் அவனது மகிழ்ச்சி.
From s.raa's website (Sharing from S Ramakrishnan's FB page)
No comments:
Post a Comment