Wednesday, January 27, 2021

உலகின் அழகான பாடம்

 ஆறு வயது சிறுவன் ஒருவன், தன் நான்கு வயது சகோதரியுடன் சந்தைக்குள் நுழைந்தான், அங்கே ஒரு பொம்மைகள் விற்கும் கடையின் முன் நின்ற அவனது சகோதரி ஒரு அழகான பொம்மையை ஏக்கமாக  பார்த்துவிட்டு அங்கேயே நின்றாள். 

சிறுவன்  "உனக்கு அந்த பொம்மை வேண்டுமா?"

சகோதரி, "ஆம்" 

சிறிதும் யோசிக்காமல் அந்த சிறுவன் தன் சகோதரியை அக்கடைக்குள் கூட்டி சென்று, அந்த பொம்மையை கையில் எடுத்துக்கொண்டு, இருவரின் அனைத்து நடவடிக்கைகளையும் புன் சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்த அந்த கடை முதலாளியிடம் சென்றான். 

வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என தெரிந்த தெளிவான கடை முதலாளியிடம் சிறுவன், "இந்த பொம்மை என்ன விலை?" என விசாரித்தான், 

அவர் மிகுந்த பிரியத்துடன், "நீ எவ்வளவு கொடுக்க விரும்புகிறாய்?" என கேட்டார். சிறுவன் தனது கால் சட்டை பையில் கைவிட்டு, தான் கடற்கரையில் சேமித்து வைத்திருந்த அனைத்து சிப்பிகளையும் அவரிடம் கொடுத்தான், அவர் மிக கவனமாக பணம் எண்ணுவது போல் அவற்றை எண்ணினார். சிறுவன் கவலையுடன் அவரை பார்த்து, "இது குறைவாக இருக்கிறதா?" என கேட்க, "இல்லையில்லை, மிக அதிகமாக இருக்கிறது என கூறி நான்கு சிப்பிகளை மட்டுமே வைத்துக்கொண்டு, மீதியை அவனிடமே திருப்பி கொடுத்தார். 

சிறுவன் மீதமிருந்த சிப்பிகளை திரும்ப எடுத்துக்கொண்டு, சகோதரிக்கு பொம்மை வாங்கி கொடுத்த பெருமிதத்தில் வெளியேறினான். சிறுமியின் முகத்தில் அளவில்லாத சந்தோசம். 

அந்தக் கடையில் இருந்த ஒரு வேலைக்காரன் இதையெல்லாம் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டான். அவன்  தனது முதலாளியிடம், "ஐயா! இதுபோன்ற விலையுயர்ந்த பொம்மையை ஏன் வெறும் நான்கு சிப்பிகளுக்கு கொடுத்தீர்கள்?" என்றான். 

கடைக்காரர் புன்னகையுடன் "நமக்கு இவை வெறும் சிப்பிகள். ஆனால் அந்த பையனுக்கு, இவை மிகவும் விலைமதிப்பற்றவை. இந்த வயதில் அவனுக்கு பணம் என்னவென்று புரியவில்லை, ஆனால் அவன் வளருவான், பணத்திற்கு பதிலாக சிப்பிகள் கொடுத்து ஒரு பொம்மையை வாங்கினான்  என்பதை அவன் நினைவில் கொள்ளும்போது, ​​என் நினைவு வரும், வாழ்க்கை அவனுக்கு பல பாடங்களை கற்று கொடுத்தாலும், உலகம் நல்ல மனிதர்களாலும் நிறைந்தது என்று நினைப்பான். இது அவனுக்கு ஒரு நேர்மறையான அணுகுமுறையை வளர்க்க உதவும், மேலும் அவனும் நல்லவனாக இருக்க பேராசைப்படுவான்" என்றார் 


உலகம் அழகானது. Life is beautiful.


Translated 

 

Thursday, November 12, 2020

பவாவின் மேய்ப்பர்கள்

 பவாவின் மேய்ப்பர்கள் முடித்திருக்கிறேன், "வாழ்க்கைன்னா என்னன்னு தெரியுமா? எப்படி வாழணும்ன்னு தெரியுமா? " என என்னை கைப்பிடித்து கூட்டிப் போய் அவர் சுட்டிக் காட்டுகிற மனிதர்கள் முன் கூசிப் போய் நிற்கிறேன். காற்றுக்காய் பாடும் இசைக் கலைஞனுக்காக தானாய் வழியுது கண்ணீர், தனிமையில் எப்போதோ வரும் ரயிலுக்காக தனிமையில் புத்தகங்களுடன் தவம் கிடந்தவர் பிரமிக்க வைக்கிறார். நாடகமென்றால் என்னவென்றே தெரியாத என் தலைமுறைக்கு நாடகங்களுக்காக அனைத்தையும் உதறியவரை வியப்போடு பார்க்கிறேன், ஒரு ஓவியத்தை தானே உருவாக்கி அதில் நெக்குருகி தெய்வ தன்மையை காணும் மனிதரும் இருக்கிறார். வாழ்க்கையில் எல்லா புயல்களையும் சந்தித்தும் ஓயாமல், அன்பு என் பெயரல்ல, இனி அதுவே வாழ்வு என வேகமாக செயல்புரிகிறார் வீரப்பன் காடுகளில் களப்பணியில் ஈடுபட்டுள்ள ஒருவர். ஆளுமைகள் என அறியப்படுபவர்களின் முன் கம்பீரமாகவும், அவர்களை மதிக்காமலும், சோற்றுக்கு அமர்ந்திருப்பவர்கள் முன்னே தாழ்ந்தும் போகிற மனிதனல்லவா பெருங் கலைஞன்? "பொருளாதார வளம் மயிருக்கு சமானம்" என்று புறந்தள்ளி எளிய மனிதர்களின் நட்புக்காக, அவர்களின் வளர்ச்சிக்காக போராடும் அற மனிதர்கள் கதையில் முக்கால்வாசி நிரம்புகின்றனர்.

நீங்கள் எங்கோ இருந்து என்னை அன்பெனும் பெருங்கருணையால் தீண்டுகிறீர்கள் பவா, அதற்கு என்னிடம் தகுதியில்லை என தெரிந்தும்.
"மலர்கள் கேட்டேன், வனமே தந்தனை"
புத்தகத்தின் கடைசி அறிவுரைக்கு நன்றி, படிக்கிறேன் பவா, இந்த ஜென்ம இறுதி வரை.

Monday, August 24, 2020

சோளகர் தொட்டி புத்தக விமர்சனம்

 மிக எளிமையான மொழியில் எழுதியதாலோ என்னவோ முதல் பத்து பதினைந்து பக்கங்களுக்கு இந்த நாவல் மீது ஈர்ப்பே வரவில்லை, அதாவது முன்பெல்லாம் மரண மொக்கை படத்துக்கு தேசிய விருது கொடுப்பார்கள் அல்லவா அப்படி,  அத்துடன் நிறுத்திவிட்டு இந்த நாவலை குறித்தும் அதன் ஆசிரியர் குறித்தும் இணையத்தில் தேடி பார்த்தேன். பவானியை சேர்ந்த வழக்கறிஞர் பாலமுருகன், பி.யூ.சி.எல். என்னும் மனித உரிமை அமைப்பின் மாநிலச் செயலாளராகவும் இருக்கிறார். இந்த புத்தகத்தை தமிழகத்தில் வெளியிட்டால் பிரச்சனை உருவாகும் என கருதி மலேசியாவில் வெளியிட்டிருக்கிறார் என படித்தேன். 


தொடர்ந்து தேடியதில் முக்கியமான செய்தி ஒன்று கண்ணில் பட்டது, வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது சதாசிவம் கமிஷன் முன்பு பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களை கூட்டிச் சென்று சாட்சி சொல்ல வைத்திருக்கிறார். அவர்களுக்கு நேர்ந்த அவலங்களை கேட்கையில் நடுங்கி போய் அதை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் இதை எழுதி இருக்கிறேன் என்றார். 


அதற்கு பின் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன், அந்த எழுத்துக்களை மீண்டும் படிக்கையில் ஈர்ப்பாக மாறியதை மறுக்க முடியாது. இரண்டு பாகமாக நாவலை பிரித்திருக்கிறார். முதல் பாதி  அழகியல், அவர்களின் கொண்டாட்டம், வழிபாடு, எளிய அழகான வாழ்க்கை முறை, வன விலங்குகள், வேட்டை, அரிசியை எப்போதாவது ஒருமுறை மட்டுமே உண்ண கிடைக்கும் சந்தர்ப்பங்கள் என அந்த மலையோர வாழ்க்கைக்கு நம்மை பழக்கப்படுத்திவிடுகிறார். இதில் ஆச்சர்யப்படும் தகவல்கள் என்னவெனில் பெண்ணுரிமை, பகுத்தறிவு என்றெல்லாம் என்னவென்றே தெரியாத, விளக்கினாலும் புரிந்து கொள்ள இயலாத ஒரு இனத்திலிருந்து   பெண்ணின் மறுமணம், திருமணமானமாகி கணவன் இறந்த பெண் தன்னைவிட வயது குறைந்த ஆணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொள்வது என மலைவாழ் மக்களின் வாழ்க்கை ஆச்சர்யப்படுத்துகிறது. இருநூறு பக்கங்கள் தாண்டி வீரப்பனையும் சட்டென நாவலில் கொண்டுவருகிறார்

இரண்டாம் பாகம் லாக்கப் எனும் திரைப்படத்தில் வரும் மனிதத்தன்மையற்ற தாக்குதலை விட நூறு மடங்கு வீரியம் மிக்க தாக்குதல்களை அவர் விவரிக்கும் போது அந்த வலி நம்மையும் தொற்றிக்கொள்கிறது. 

"அன்புராஜ், ,தங்கராஜ், அப்பர்சாமி மற்றும் துப்பாக்கி சித்தன் ஆகியோர் 18 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு, இந்தியாவின் 70வது சுதந்திரத்தினத்தை யொட்டி விடுதலை செய்யப்பட்டனர்" என்றொரு சிறிய செய்தியை கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சாதாரணமாக கடந்து சென்றிருப்போம், அன்புராஜை பற்றி பவா செல்லதுரை youtubeல் பேசியிருப்பார் தேடி பாருங்கள், தனது வாழ்க்கையை ஏறக்குறைய தொலைத்துவிட்டு புதிதாக உருவமைத்துக்கொண்டவர் அன்பு, அவர் சோளகர் தொட்டி பற்றி சொல்கையில் பாலமுருகன் எழுதியது மிக சொற்பம் என்கிறார். 

விடுதலையான நான்கு பேரில் துப்பாக்கி சித்தன் என்பவர் தான் இந்த நாவலின் நாயகன் சிவண்ணா, கொஞ்சம் தேடி பார்த்தீர்கள் எனில் அவர் வீரபனுடன் இருந்த புகைப்படம் முதற்கொண்டு, தற்போது தனது நிலங்களை வீட்டையெல்லாம் இழந்துவிட்ட நிலையில் அரசின் உதவியை எதிர்பார்க்கும் செய்திகளையும் காணலாம். பாலமுருகன் சமீபமாக ஒப்புக்கொண்ட வேதனைக்குரிய விஷயம் என்னவெனில் இன்னமும் கூட பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு எந்த வித நியாயமும் கிடைக்கவில்லை என்பதே. 

அந்த சாதாரண எழுத்துக்களின் வலிமை இரண்டாம் பாகத்தில் உலுக்கி எடுத்துவிடுகிறது, படிக்கையில் குமட்டிக்கொண்டு வாந்தி வருவது போல நிகழ்வை நமக்கு கடத்துகிறது. 

ஆறுமாத கர்ப்பிணியை வன்புணர்ச்சி செய்வது, நிர்வாணமாக்கி பிறப்புறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சுவது, பிறந்த குழந்தையை ஈவு இரக்கமின்றி கொன்று தாயிடம் தகவல் மட்டும் தருவது, உடலுறுப்புகளை அடித்து ஊனப்படுத்துவது என ஆதிரைக்கு பிறகு வாசிக்க சிரமப்பட்ட நாவல் என இதை கூறுவேன். 

நிச்சயம் உங்களை இது தூங்கவிடாது பாதிக்கும். 

கட்டாயம் வாசிக்கவேண்டிய நாவல்... அல்ல, உண்மையில் நடந்த நிகழ்வு  

Tuesday, August 18, 2020

சாந்தாக்காவும், சரஸ்வதியம்மாவும்

கடந்த ஆகஸ்ட் 12 வீட்டுக்காரியோட பிறந்தநாள், கொரானாவால பெரிய கொண்டாட்டம் எல்லாம் இல்லை, வழக்கமாக அப்பா, மாமா, அத்தை, நண்பர்கள் என சிறிய கூட்டம் கொள்ளும் வீடு, இந்தமுறை யாரும் இல்லாததால், நாங்கள் மூன்று பேர் மட்டுமே கொண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டோம்.  வெள்ளி கொலுசு, ஒரு புடவை, ஒரு சுடிதார், ஒருகிலோ அளவு பர்த் டே கேக் வாங்கியிருந்தேன். 

சரியாக கேக் வெட்டும் சமயத்தில் காலிங் பெல் சப்தம் கேட்டு போய் பார்த்தால் சாந்தாமணி அக்காவும், சரஸ்வதியம்மாவும் நின்றிந்தார்கள்.  (ஏரியா துப்புரவு பணியாளர்கள்) உள்ளே அழைத்தால் வருவதற்கு தயக்கம் காட்டினார்கள், "யாருமே இல்லை, நீங்களாவது  வரப்போறீங்களா? இல்லையா?" என கேட்ட  பின் தயங்கி தயங்கி உள்ளே வந்தார்கள். கேக் கொடுத்ததில் சரஸ்வதியம்மா சாப்பிட ஆரம்பித்தார், சாந்தாமணி கையில் வைத்தபடியே நின்றிந்தார். "ஏன்?" என்றேன் "பேரனுக்கு கொண்டு போலாம்ன்னு" என்றவரை சாப்பிடச்சொல்லிவிட்டு அரைகிலோவை இரண்டாக பிரித்து தனித்தனியாக இரண்டு டிபன் பாக்ஸில் போட்டு என்னவள் அவர்கள் இருவரின் கையிலும் கொடுத்துவிட்டாள். 

இன்று இரண்டு டிபன் பாக்ஸ்களும் திரும்ப வந்திருந்தது, அட்டகாசமான சூடான சிக்கன்  பிரியாணியுடனும் முட்டையுடனும். 

அதில் அளவுக்கு அதிகமாக பிரியமும் அன்பும் கலந்திருந்தது  


அன்பொன்றே வாழ்வின் இழை, அதனால்தான் பெய்கிறது மழை

 

Tuesday, July 21, 2020

மூணார் சுற்றுலா


  1. மூணாரை விவரிக்க சொர்க்கம் என்று வார்த்தை நிஜமாகவே போதாது. கோவையில் இருந்து சுமார் நாலரை மணி நேரத்தில் உடுமலைப்பேட்டை வழியாக மூணாரை அடைந்து விடலாம். ஆனால் ஜூன் ஜூலையில் மழை பெய்வதால் உருவாகும் குட்டி குட்டி அருவிகளை நின்று ரசித்து கொண்டே போனால் ஏழு எட்டு மணிநேரம் கூட போதாது.
  2. உடுமலை செக் போஸ்ட் காரை திறந்து வைத்திருந்தால் யோசிக்காமல் உள்ளே நுழைந்து தின்பது கிடைத்தால் ஆட்டையை போட நமது பங்காளிகளாக குரங்குகள் தேடுவார்கள், எனது காரில் சறுக்கி விளையாடிய குரங்கு வழுக்கிக்கொண்டு வந்த போது கீச் என்று வந்த சப்தம் இன்னமும் நினைவிருக்கிறது.
  3. உடுமலை தாண்டி செக் போஸ்ட், அன்பின் தமிழ்காவலர்கள் மூன்றுமுறை சோதனை என்ற பெயரில் ஒவ்வொன்றிலும் 30ரூபாய் வாங்கிக்கொண்டு எதையும் சோதனை செய்யாமல் கேரளாவிற்குள் விடுவார்கள். கேரள செக் போஸ்டில் காசு கொடுத்தால் காறி உமிழ்ந்து வாகனத்தை முழு சோதனையிட்டு பிளாஸ்டிக் அகற்றி அனுமதிப்பார்கள்
  4. உள்ளே நுழைய ஆரம்பிக்க வேண்டியதுதான்.  அதன்பின் சாலை ஒற்றை ரோடும் மழையும் இருப்பதால் மிக பாதுகாப்பாக ஓட்ட வேண்டியது அவசியம்.
  5. முதல்நாளுக்கு தேவையான உணவை வீட்டிலிருந்தே எடுத்து செல்வது பழக்கம். நல்ல உணவென்பது மூணாரில் கிடைக்கும்,
  6. வழியில் மற்ற உணவகங்கள் மிக மோசமாக இருக்கிறது. பிரட் ஆம்லெட் நம்பி உண்ணலாம்  நாங்கள் கொண்டு சென்ற உணவை அருவியில் கால் நனைத்துக்கொண்டே சாப்பிட்டது அழகான அனுபவம்.
  7. அடுத்தது லேக்கம் என்ற சிறிய அருவி வருகிறது. ஒரு மணி நேரம் சிறுவர்கள் மற்றும் நாம் நீரில் விளையாடலாம். பக்கத்தில் சிறிய கடைகள் இருக்கும், டீ காப்பி கூட சாப்பிட தகுதியில்லாதவை. ரிஸ்க் வேண்டாம்.
  8. அடுத்தது இரவிகுளம் பார்க்கை தவறவிடாதீர்கள், டிக்கெட் வாங்கி விட்டால், அவர்களே வனத்திற்குள் அழைத்து செல்வார்கள், வெகு உயரத்தில் இருந்து அருவி பேருந்தின் மேல் விழும் அழகு கண் நிறையும். படபட வென நீர் பேருந்தின் மேலும் நம் மேலும் அடிக்கும்போது நம் குழந்தை பருவம் திரும்பும்
  9. 97 கி.மீ. பூங்கா, அரிய பட்டாம்பூச்சிகள், விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்விடம். நீலக்குறிஞ்சிகள் ஆண்டு முழுவதும் பூத்திருக்கும். அழிந்து வரும் அரிய வகை உயிரினமான வரையாடு இங்கே காணலாம்.
  10. மூணாறுல நாங்க ஒரு நெஸ்ட்ன்னு ஒரு பட்ஜெட்  ரிசார்ட்ல தங்கிருந்தோம், இது மூணார் சிட்டில இல்ல, ஏழு எட்டு கிலோ மீட்டர் தள்ளி இருந்தது 
  11. அப்போ எனக்கு அங்கே தங்க Gift Card, make my trip30% offer + break fast complimentary. Room and food is OK. ஆனா அதோட பால்கனி வியூ செம்ம சூப்பர்
  12. அப்புறம் Tour Placeன்னு சொன்னாவே நான் ஜெர்க் ஆகிடுவேன், அதெல்லாம் பயணிக்கு செட்டாகாதுங்கிற மனநிலைதான். இருந்தாலும் இதெல்லாம் நல்லாவே இருக்கும். மற்ற Tour இடமெல்லாம் கோவாலு (Google) கிட்ட கேளுங்க
  13. Top Point மிஸ் பண்ணிடாதீங்க, காலையிலேயே போய்டுங்க, மேகம் காலுக்கு கீழே இருக்கும். கண்டீப்பா பார்க்க வேண்டிய இடம்.
  14. பொதுவா கேரளால எனக்கு ரொம்ப பிடிச்சது என்னன்னா, சுத்தம். சின்ன பேப்பர் கீழ கிடந்தாலும் உடனே சுத்தம் பண்ணிடறாங்க, இயற்கையை அழகா வச்சிக்கிறாங்க, பாதுகாக்கறாங்க...
  15. வேதனை என்னென்னா நம்ம ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு சுற்றுலா வன பாதுகாப்பு, பராமரிப்பு கூட்டம் எதுக்கு இருக்குன்னே...
  16. அவ்ளோதான் டீ முடிஞ்சு போச்சு...
  17. நன்றி வணக்கம் 

 
 
 
 
 
 




Monday, May 25, 2020

மதுரை உணவுக்கடைகள் -ஜீவன்

மதுரைல குட்டிக்குட்டித் தெருக்கள்ல கூட சுவை மிக்க கடைகள் இருக்கு... அதனால நான் மிஸ் பண்ணீட்டா உங்க வீட்டுப் பிள்ளையா நினைச்சு மன்னிச்சிருங்க...
வாங்க போவோம்
முதல்ல மங்களகரமா ஸ்வீட்லருந்து ஆரம்பிப்போம்..
ஸ்வீட்னா இது நம்ம பாரம்பர்ய ஸ்வீட்டு... "அதிரசம்" தானப்ப முதலிதெருவுலருந்து வடக்கு ஆவணி மூலவீதி தொடங்குர முக்குல ஒரு கடை இருக்கு அந்தக்கடையில அதிரசம் திங்கனும்... சும்மா டரியலா இருக்கும்.. அந்த வெளிப்புற மொறுமொறுப்பு... கடிச்சதும் உள்ள அம்புட்டு மிருதுவா இருக்கும்... ஒன்ன எடுத்து திங்க ஆரம்பிச்சா அங்கயே நின்னு நாலஞ்ச திண்ணாத்தான் மனசு ஆறும்...
காலை டிபனுக்கு, காளவாசல் தேவகி ஸ்கேனுக்கு எதிர் சந்துல நேரா போய் SS காலனில SBI பேங்க்குக்கு சைடு ரோட்டுல போனா கெளரின்னு ஒரு கடை இருக்கு. பைபாஸ் ரோடு கெளரிகிருஷ்ணா இல்ல... இது குட்டிக்கடை... இட்லி,தோசை,பூரி, பொங்கல்னு எல்லாமே நல்லாருக்கும்... அங்க என்ன ஸ்பெசல்னா... அந்த சாம்பார்ர்ர்ர்ர்ர்... செம்மையா இருக்கும் கைல வாங்கி குடிக்கலாம்... அதோட டெய்லி ஒரு ஸ்பெசல் சட்னி அரைப்பாங்க... எல்லாமே கெத்து காட்டும்
பெரும்பாலும் மதுரைல காலை நேர டிபன கடைல சாப்பிடுர பழக்கம் மக்களுக்கு குறைவு , பெரும்பாலும் சைவக்கடைகள்தான் இருக்கும்... 11 மணிக்கெல்லாம் மத்தியாணச் சோத்த ரெடி பண்ணீருவாய்ங்க... மதியத்த இங்க ஒவ்வொரு மாதிரி கொண்டாடலாம்
அறுமுகம் மெஸ்னு ஒரு கடை தல்லாகுளம் பெருமாள் கோவில் கிரவுண்டுல ஓரமா இருக்கு... முன்னல்லாம் ரோட்டுக்கடையா இருந்தது இப்போ பக்கத்துலயே நல்ல ஹோட்டலா பெரிசாக்கி நடத்துராங்க.. அங்க மட்டன் பிரியாணி நல்லாருக்கும்.. இடிச்ச நாடுக்கோழி யோட சேத்து சொலட்டிக்கிட்டு அடிக்கலாம்
பக்கத்துலயே அம்மா மெஸ், குமார் மெஸ்லாம் இருக்கு ஆனா அதெல்லாம் பேருக்காக வெளியூர்காரங்க வந்து சாப்பிடுர இடமா மாறிப்போச்சு... அடுத்து கீழ்வெளிவீதி அம்சவள்ளி பிரியாணி... பிரியாணி கொஞ்சம் குழைவா இருக்கும்... அங்க விற்கிர கோழிச்சில்லரைன்னு ஒரு குழம்பு ஐட்டத்துக்கு 20 பேர் எப்பவும் வரிசைல நிப்பாய்ங்க... பிரியாணி மதியம் 2.30 க்கெல்லாம் காலியாகிடும்... அங்க ஒரு புரூட் மிக்சர் விப்பாய்ங்க பிரியாணிய ஒரு ஏத்து ஏத்திட்டு ஒரு மிக்சர போட்டம்னா ஒரு பினிஷிங்குக்கு வந்துரும்.
அப்புறம் காமராஜர் சாலைல கிருஷ்ணன் மெஸ்னு ஒரு கடை இருக்கு அங்க நல்லி பிரியாணி மெரட்டலா இருக்கும்... அப்பிடியே அந்த நல்லி எலும்புல கொத்தா ஒட்டி இருக்க கறி நல்லி எலும்ப பிடிச்சு ரெண்டு ஆட்டு ஆட்டுனா அப்பிடியே பூவா உதிரும் பாத்துக்கங்க... அங்க புறா, காடை, முயல்னு எல்லா சைடீஸும் பட்டயக்கெளப்பும்.. நான் சொன்னா எல்லாக்கடைலயுமே சீரகச்சம்பா பிரியாணிதான்... இங்க பாஸ்மதி பிரியாணிய பெரும்பாலும் யாரும் விரும்ப மாட்டாய்ங்க... ராவுத்தர் கடைல மட்டும் கிடைக்கும்.
மதியச்சாப்பாட்டுக்குன்னே சில கடைகள் இருக்கு... தமிழ்சங்கம் ரோடு ஜானகிராம்ல அயிரமீன் குழம்பு வாங்கி சோத்துல குலைச்சு அடிச்சோம்னா எம்புட்டு திங்கிறோம்னே தெரியாம உள்ள இறங்கும்...3 தடவ கொழம்ப ஊத்தி திண்ணுபுட்டு மறுக்கா சோத்த வாங்கி அந்த எலும்பு ரசத்த ஊத்தி பிசைஞ்சு கரண்டி ஆம்லேட்டோட வச்சு இழுத்தோம்னா... எப்டி இருக்கும்.... ஆங் அப்டி இருக்கும் இதெல்லாம் மக்களுக்கு தெரிஞ்ச கடைகள்தான்... சில கடைகள் சிலருக்கு மட்டுமே தெரிஞ்சது.. அதுல ஒன்னுதான் காளவாசல் தேவகி ஸ்கேனுக்கு பக்கத்துலயே வெளிய தெரியாத அளவுக்கு அடக்கமா ஒரு குட்டிக்கடை லெட்சுமி மெஸ்னு ஒரு பழைய ஸ்டேண்டிங் போர்டு இருக்கும்.. அங்க சோத்துக்கு குடல் குழம்பு, கறிக்குழம்பு, மீன் குழம்பு , நாட்டுக்கோழிக் குழம்புன்னு ஒவ்வொன்னும் பெருமாள் கோயில் தீர்த்தம் மாதிரி கைய குழிவா வச்சு வாங்கிக் குடிக்கலாம் போல இருக்கும்... சோறுகள்ல குழம்புகள குதூகலமா வெளாட விட்டு எடுத்து செங்கச்சூளைல மண்ண அப்புன மாதிரி ஒரு கட்டு கட்டலாம் ... சைட் டிஷ்லாம் தரம்ம்ம்மா இருக்கும்... வக்காளி ஒரு ஊறுகா வைப்பாய்ங்க.... அதுல என்ன மாயம் செய்வாங்களோ... அம்புட்டுப்பயலும் கறிக்கொழம்புக்கே ஊறுகாயத்தொடு வெளுப்பாய்ங்க வெத்தலப்பேட்ட பக்கத்துல நூரி மெஸ்னு ஒரு பாய் கடை... நெய் சோறும் குடல் குழம்பும் அந்தரா இருக்கும். வடக்கு ஆவணி மூலவீதிலருந்து மீனாட்சியம்மன் கோவிலுக்கு போற சந்துகள்ல ரெண்டாவது சந்துல ஒரு செட்டியார் கடை இருக்கு... செட்டிநாட்டு ஸ்டைல்ல பயமுறுத்திவிடுவாய்ங்க... அங்க புறா சாப்பிட்டு பாருங்க.... கீழவாசல் அருளானந்தம்னு ஒரு கடை இருக்கு... சோத்துச் சொர்க்கம்யா... திண்ணுட்டு அங்கனயே ஓரமா எடம் கிடைச்சா தூங்கீரலாம்னிருக்கும்.... சைட்டிஷ்லாம் மயக்குவாளுக.. இன்னும் இருக்கு கொஞ்ச நேரத்துல கண்டினியூ பண்றேன்
சைவ சாப்பாட்டுக்கு பைபாஸ் ரோடு லட்சுமி மெஸ், டவுன்ஹால் ரோடுப்பக்கத்துல சபரீஸ்.. காமராஜர்சாலை சபரீஸ்னு.. பெரிய கடைகளும்...சைவச்சாப்பாட்டோட வெங்காய பக்கோடா வச்சு சாப்பிடுரது மதுரைக்காரனுக வழக்கம்... மத்தியானத்துலயே பெரும்பாலான ஹோட்டல்ல புரோட்டாவும் குஸ்காவும் கிடைக்கும். இருந்தாலும் அது டின்னர் ஸ்பெசல்ல அத தனியா சொல்றேன்.இப்ப சிறு தீனி மற்றும் டீ காபி கூல்ட்ரிங் பக்கம் போவோம் தல்லாகுளம் விசாலம் காபி சாப்பிட்டுப் பாருங்க... சாப்டு அரைமணிநேரமானாலும் அந்த காபி கசப்பு தொண்டைல நிக்கும் அப்பிடி ஒரு டேஸ்ட்டு... அடுத்து தண்ணி குடிக்கக் கூட மனசு வராது
ரயில்வே ஸ்டேசனுக்கு எதிர்ல ப்ரேமவிலாஸ்னு ஒரு மிட்டாய் கடை... ஸ்வீட் கடைதான் அந்தக்காலத்துலருந்து இருக்கதால மிட்டாய்க்கடைன்னே வழக்காகிடுச்சு... தாமரை இலைல அப்டியே பொசுக்கப் பொசுக்க (சுடச்சுட) அல்வா எடுத்து போட்டு குடுப்பாய்ங்க...ரெண்டா பிச்சு வாய்ல போட்டா....அப்டியே கரையும்யா அங்க விக்கிர ஸ்பெசல் மிச்சர்தான் இங்க பாதி பேர் வீட்ல சோத்துக்கு வெஞ்சணம் (சைட்டிஷ்). அந்த அல்வாவ அங்கனயே நின்னு திங்கிர கூட்டமே எப்பயும் பத்துப் பேர் இருப்பாய்ங்க... அல்வா கடை வாசல்லயெட் மல்லியப்பூ வச்சு நாலஞ்சு அக்காக்க விக்கும்ங்க... எம்புட்டு நேக்கா யாவாரம் பண்ணுவாய்ங்க
தெரியுமா... ஏப்பா தம்பி அல்வா மட்டுமா வாங்கிட்டுப்போற... வீட்டுக்காரப்புள்ளைக்கி பூ வாங்கிட்டுப்போய்யான்னு அங்கயே நம்மள வாடிவாசல்ல நிக்கிர காளை மாதிரி உசுப்பேத்தி விட்டுருவாய்ங்க... நேதாஜி ரோட்டுல தங்கமயில் ஜுவல்லரிக்கு பின்னாடி நர்சிங்னு ஒரு ஸ்வீட் கடை இருக்கு நார்த் இந்தியன் ஸ்வீட்டுகள் அங்க மட்டுந்தான் திங்குரது... கச்சோரி அங்க நல்லாருக்கும்... மசால்பூரி பாணிப்பூரியும் அங்க நல்லாருக்கும். சாயங்காலத்துல கோவில சுத்தி நிறைய ஸ்னாக்ஸ் விப்பாய்ங்க ஷப்னம் வாசல்ல விக்கிர காரப்பொரிக்கு காத்துக்கெடக்கலாம்யா பருப்பு போளி,பச்சப்பயிறு, காரப்போளி,சுண்டலு, உளுந்தம்பருப்புன்னு எல்லாத்தையும் அவிச்சு விப்பாய்ங்க... தள்ளுவண்டிகள்ல முள்ளுமுருங்கக்கீர வடை அப்பப்ப போட்டுத்தருவாய்ங்க ரெண்டுரூவா வடைக்கெல்லாம் சொத்தெழுதி வைக்கலாம்யா
ஜிகர்தண்டா... மதுரையோட அடையாளமாவே மாறிப்போச்சு ... விளக்குத்தூண் பேமஸ் ஜிகர்தண்டா கடை ஒன்னுதான் இருக்கும் அப்பல்லாம் இப்ப அவங்க நிறைய ப்ரான்சஸி குடுத்து அங்கங்க இருக்கு.. வெளியூர்கள்லயும் இருக்கு... ஆனா நாங்க பெரும்பாலும் ஜிகர்தண்டாவ மஞ்சணக்காரத்தெரு முக்குல ஒரு பாய் விக்கிராப்புள அங்கதான் சாப்பிடுரது.... டேஸ்ட்டு நம்மள திண்னுரும்... முனிச்சாலைலருந்து செயிண்ட்ஜோசப் கேர்ள்ஸ் ஸ்கூல் போற வழில போஸ்ட்டாபீஸு பக்கத்துல பத்திரீசியார் ஸ்கூலுக்கு முன்னாடி ஒரு பொட்டிக்கடைல க்ரேப்ன்னு கேட்டீங்கன்னா ஒரு ஜூஸ டம்ளர்ல மோந்து குடுப்பாய்ங்க யோவ்வ்வ்வ் அதெல்லாம் குடிச்சுப்பாக்கனும்யா... முனிச்சாலைல சிக்னல் பக்கத்துலயே புகழ்பெற்ற கோவிந்தராஜ் பருத்திப்பால் கடை ஒன்னு இருக்கு ஒரு டம்ளர் குடிச்சா பசியாரிடும் டின்னர மதுரைல கொண்டாடலாம்யா... புரோட்டா மதுரயோட ஊர் உணவு. கொத்து புரோட்டாவ ம்யூசிக்கோட கொத்துரது எங்கூர்ல ஆரம்பிச்சகுதான்... பெஸ்ட் புரோட்டான்னா அண்ணாநகர் நியூமாஸ் ஓட்டல் புரோட்டாதான் அங்க போடுர மடக்கு புரோட்டா பிச்சம்னா அப்பிடியே பூவா பிரியும் பாத்குக்கங்க சால்னா அங்க சுமாராத்தான் இருக்கும்... அண்ணா ப்ம்ஸ்டாண்ட்லருந்து ஆவின் போற வழியில இருக்க கூரைக்கடை... உக்காந்து சாப்பிட ரெண்டு டேபிள்தான் நைட்டு கடை கூட்டம் அம்மும்... சுக்கா, குடலு , ரத்தப்பொரியலு, நாட்டுக்கோழி சாப்ஸு, நெஞ்சு சாப்ஸுன்னு அத்தனையுமே கெரங்கடிக்கும்
ஆவின் பக்கத்துலருக்க பன் பரோட்டா கடைல 3 புரோட்டா வயிறு ரொம்பீரும்... தலைக்கறி ரோஸ்ட்லாம் தெறிக்கவிடும்...குழம்பெல்லாமே அடிச்சுத்தூக்கும் தெற்குவாசல் சுகன்யால புரோட்டாவ வீசி வெளாடுவாய்ங்க டேஸ்ட்டும் அந்தல சிந்தலயா இருக்கும்
க்ராஸ்ரோடு கீர்த்தனா ஓட்டல்லாம் வெரட்டி வெரட்டி திங்கலாம்... கரிமேடு மீன் மார்கெட் பக்கத்துல ஒரு குட்டிக்கடைல விருதுநகர் பொறிச்ச புரோட்டா கிடைக்கும்.. நொறுக்கிப்போட்டு கொழம்புகள கொலச்சு அடிச்சோம்னா விருதுநகர்லயே போய் தின்னுட்டு வந்த மாதிரி இருக்கும்
சைவக்கடைகளும் நைட்ல கலைகட்டும்.... கீழவாசல் நாகலெச்சுமி அனெக்ஸ்... ரேவதி டிபன் செண்டர்லயெல்லாம்... வெண்பொங்கல், தக்காளிப்பொங்கல்( வெரைய்ட்டி ரைஸ செள்ராஸ்ட்ரா கடைகள்ல அப்பிடித்தான் சொல்லுவாய்ங்க), புளியோதர, லெமன்சாதம்னு எல்லா சாதமும் டின்னருக்கு கிடைக்கும்...
இந்த ஐட்டங்கள் ல செளராஸ்ட்ரா கட்சிகள அடிச்சுக்க முடியாது... அங்கயெல்லாம் போனா மிலிட்ரி முறைதான் எல்லா வெரெய்ட்டியும் ஒவ்வொரு வாய் சாப்பிட்டாலே போதும்னு எல்லாத்தையும் ஆர்டர் பண்ணி சுத்துல விட்டு சாப்பிடுவோம்.. பில்ல சரியா பங்கு போட்டுக்குவோம்
மதுரையின் ரோட்டுக்கடைகள என்னவே முடியாது அதுல ஒன்னு ரெண்ட சொல்றேன்... அண்ணா நகர் அக்கா கடைன்னு ஒரு கடை 40 வருசமா இருக்கு... ஒரு மரத்தடில ஆரம்பிச்சது... இப்பவும் அதே மரத்தடில ஒரு வீட்டயே ஓட்டலா மாத்தி நடக்குது ... அங்க முட்ட சப்பாத்திக்கொத்து ஒன்னு போடுவாய்ங்க.... ருசி அள்ளும்
பைபாஸ் ரோட்ல கேஎப்சி இருக்கு அது நமக்கு வேணாம் அதுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு அக்கா கடை போட்டிருக்கு... முட்டதோசயெல்லாம் பத்துக்கும் மேல தின்னுட்டு அடுத்த தோசைக்கு தட்ட நீட்டீட்டே நிப்போம்... அந்தக்கா போதும் போடான்னு வைய்யும்
யானைக்கல்தான் மதுரைக்கு தூங்கா நகர்னு பேர் வாங்கிக்கொடுத்த இடம், அங்க பரமேஸ்வரி , ராஜேஸ்வரின்னு ரெண்டு கடை எதிரெதிரா இருக்கு... சோறு சாம்பார் ரசம் மோர் பாயசம்னு நைட்டு 3 மணிக்கும் சாப்பிடலாம்... வெங்காயக்குடல் அங்க ரொம்ப நல்லாருக்கும். அடுத்து சுல்த்தான் கடை
நைட்டு 3 மணி வரை பிரியாணி புரோட்டா சைட்டிஷ்னு எல்லாம் கிடைக்கும்... வெளியூர்லருந்து சாப்பிடாம லேட்டா வரவங்களுக்கு அதுதான் புகழிடம்.
நிறைய சொல்லாம விட்டது போலத்தான் இருக்கு... இன்னொரு நாள்ல விட்டத லிஸ்ட் பண்ணி சொல்றேன். கொரொனா லாக்டவும் முடிஞ்சு உலகம் நார்மல் மோடுக்கு வந்ததும் மதுரைக்கு வந்து சாப்பிட்டு பாருங்க மக்களே

-ஜீவன்

ட்விட்டரில் இவரை பின் தொடர: @jeevanlancer

Sunday, May 10, 2020

ரத்தம் ஒரே நிறம் -சுஜாதா புத்தக விமர்சனம்

இதுதான் சுஜாதாவோட பெஸ்ட்ன்னு நண்பன் சொன்னதால வாங்கி, தலைப்பை பார்த்துட்டு கொலைக்கள அல்லது கணேஷ், வசந்த் வச்சு ஏதோ துப்பறியும் நாவல்னு நினைச்சு ரொம்ப காலம் படிக்காம வச்சிருந்தேன்.  முன்பொரு காலத்திலே ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், சாண்டில்யன், புஸ்பா தங்கதுரை, கோட்டயம் புஸ்பநாத், தபூ சங்கர், வைரமுத்து, வாலி விஜய் மில்டன்னு எது கிடைச்சாலும் ஆதரவு கொடுத்து படிச்சு முடிப்பேன். நாவலை தோட்டப்புறம் தான் தெரிஞ்சுது இது கிரைம் நாவல் இல்ல, சரித்திர நாவல். சரித்திர நாவல் வகைன்னாவே இப்பெல்லாம் ஏனோ ஜெர்க்கடிக்குது, பொன்னியின் செல்வனை உலகமே புகழ்ந்து தள்ளிட்டு இருந்தப்போ கொஞ்சம் பக்கம் படிச்சிட்டு தெறிச்சு வந்தவன் நான். அந்த சூடு கொஞ்சம் ஆறின பின்னாடி, பாலகுமாரனை மட்டுமே ஒரு காலத்துல படிச்சிட்டு இருந்த எனக்கு,  உடையார்  ஒரு பாகம் முடிக்கிறதுக்கே நாக்கு தள்ளிடுச்சு. அதனால இப்போ நமக்கு ஜெமோ, சாரு, வண்ணதாசன், எஸ் ரா.,  தான் சரிவரும்னு சமாதான படுத்திக்கிட்டேன். என்ன இருந்தாலும் தினமும் நாற்பது பக்கம் படிக்கிற பழக்கம் விட்டு போகல. இல்லைன்னா இருக்கவே இருக்கார் YouTubeல கதை சொல்ல பவான்னு காலம் அமைதியா போயிட்டு இருந்தது. 

கொரோனா காலங்கள் ஏகப்பட்ட நேரத்தை கையில் கொடுத்திருக்கு.  படிக்காம ஸ்டாக் வச்சிருந்த அத்தனை புத்தகங்களையும், பார்க்காம டிஸ்க்ல வச்சிருந்த அத்தனை படங்களையும் பார்க்க வச்சதால, குறைஞ்சது நாலு சேப்டராவது படிப்போம்னு, ரத்தம் ஒரே நிறம் முன்னுரை படிச்சா "அட" ன்னு ஆச்சர்யமா இருந்தது. இதை குமுத்துல தொடரா எழுத ஆரம்பிச்சப்போ சுஜாதாக்கு கொலை மிரட்டல் வரை வந்திருக்கு, எழுதுற கையை வெட்டிடுவோம்னு லட்டர், குமுதம் அலுவலகத்தை தாக்கிருக்காங்க, குமுதம் புத்தகத்தை ஒரு கூட்டமா சேர்ந்து எரிச்சிருக்காங்கன்னு ஏகப்பட்ட அதிர்ச்சி. சுஜாதா எழுத்துலக வாழ்க்கையில இப்படி ஒரு சம்பவமான்னு இருந்திச்சு. மத்தவங்களா இருந்தா அதையே ஒரு விளம்பரமா எடுத்திட்டு காசு பார்த்திருப்பாங்க, ஆனா சுஜாதா, "முழுசா நான் எழுதி இதை அவங்க படிச்சா புரிஞ்சுக்குவாங்க, ஆனா விளக்கம் கொடுக்க இது சரியான  நேரமில்லை, தவிர வலது கையை வெட்றோம்கிறங்க, இடது கையால எழுத வேற தெரியாதே?"ன்னு ஜஸ்ட் லைக் தட் கடந்து போனார். பேர் மாற்றி புத்தகமா வந்த பின்னாடி ஏன் இப்போ ஒருத்தர் கூட எதிர்க்கலை? ஏன்னா அதில எதிர்க்கிறதுக்கான காரணமே அதில் இல்லைன்னு எழுதிருக்கார்.

கதை சுஜாதா பாணியிலேயே சொல்லனும்னா சொகுசு கார் அதி விரைவில் சாலையில் செல்வது போல்  வழுக்கிக்கொண்டு செல்கிறது.
கதை கிட்டத்தட்ட நூத்தம்பது வருஷம் முன்னாடி நடக்கிறதால, வரலாற்று நாவல்கன்னாவே, சங்க தமிழ்ல எழுதி வாசகனை சாகடிக்காம, நாயகன் வீரத்தை,  நாயகி அழகை ஏழு எட்டு பக்கம் விவரிக்காம சட்டுன்னு கதைக்குள்ள போய்டறார். ஆரம்ப பக்கங்கள்ல இருந்தே கதை சூடு பிடிக்குது. அந்த வேகத்தை கொஞ்சம் கூட குறைக்காம ஜெட் வேகத்துல கடைசி வரை நம்மை கொண்டுபோறார்.


தந்தையை கொன்ற இரக்கமில்லாத ஒரு கிறுக்குத்தனமான அதிகாரியான எட்வார்டை எப்படியாவது கொல்ல வேண்டும் அதுதான் தன் வாழ்க்கையின் ஒரே லட்சியம் என முடிவெடுத்து எட்வார்டை தேடி செல்கிறான் முத்துக் குமரன். அவனை பழி தீர்த்தானா என்பதுதான் ஒரு வரிக் கதை, ஆனால் நாமெல்லாம் பள்ளியில் படித்த சிப்பாய் கலகம் என தவறாக புரிந்துகொள்ளப்பட்ட இந்தியாவின் முதல் சுதந்திர போரே இந்த கதையின் அடிநாதம். ஆஸ்லி போன்று மனசாட்சி உள்ள வெள்ளைக்காரனையும் படைத்திருக்கிறார், எனக்கு மிகவும் பிடித்துப்போன பாத்திரம் அது. 1857ல் சிப்பாய் கலகம் என்ற முதல் இந்திய சுதந்திர போர், அதை அடக்க கர்னல் நீலின் தலைமையில் சென்னையில் இருந்து ராணுவம் கல்கத்தா சென்றது, அங்கிருந்து லக்னோ கான்பூர் சென்றது, பீகாரில் இந்தியர்கள் வெள்ளைக்காரர்களை சித்திரவதை செய்தது, நாநாவின் ஆதரவு, முடிவு என  இந்த கதையில் வரும் பெரும்பாலான சம்பவங்கள் உண்மையானவை

உடன்கட்டை ஏறும் காட்சியை சுஜாதா விவரிக்கையில் நேரில் நின்று பார்த்து பதைபதைத்த உணர்வு. சுதந்திர போராட்ட மத்திய காலம் என்பதால் தூய தமிழிற்கு அதிகம் வேலை இல்லை அதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு தனக்கே உரிய பாணியில் ஏராளமான சுவாரஸ்யம் கலந்தது அங்கங்கே நகைச்சுவை வசனங்கள் தூவி விளையாடி இருக்கிறார். வழக்கமான சரித்திர கதைகளில் முக்கியத்துவம் பெரும் வித்தை சாமியார்கள் போன்றவர்களின் பாரம்பரியத்தை சிதைக்காமல் பைராகியை உலாவ விட்டிருக்கிறார்.
பூஞ்சோலையும்  எமிலி அட்கின்சனும் மறக்க முடியாத பாத்திரங்கள். சில நாவல்கள் படிக்கையில் நம் கண் முன்னே காட்சிகளாக விரிந்து விஸ்வரூபம் கொள்ளும், அதாவது பாகுபலி பார்த்திருக்கிறோமல்லவா அதுபோல. இது அந்தவகை நாவல். சுஜாதாவின் மாஸ்டர் பீஸ் இதுதான், ஜெயமோகனும் எஸ் ராமகிருஷ்ணனும் நூறு சிறந்த நாவல்களில் ஒன்றாக இதை தேர்ந்தெடுத்ததில் ஆச்சர்யம் இல்லை.
தவற விடாதீர்கள்