Thursday, November 3, 2022

சுஜாதா - ஒரு கேள்வி பதில்

"ஒரு புலி நம்மை திங்காம அமைதியா பார்த்தால் என்ன அர்த்தம்?"


 "அது புலி இல்லைன்னு அர்த்தம்"

சில நகைச்சுவை ட்வீட்கள்

 இந்த குழந்தைக, பிடிச்ச பலகாரத்தை சாப்பிடும்போது எழுந்து போக வேண்டி வந்தா, தட்டையும் சேர்த்து தூக்கிட்டு போகுதுங்க... நம்ம மேல அவ்ளோ நம்பிக்கை

urs_priya

மனைவியின் மௌனத்தில் உள்ள கோபத்தை, ஊர்கூட அறியும். ஆனால், கணவனின் மௌனத்தில் உள்ள திருட்டுத்தனத்தை, மனைவி மட்டுமே அறிவாள் amuduarattai

மச்சினிச்சி வாட்சப் டீபி பார்த்து "சூப்பர்"ன்னு அனுப்பினா, "செருப்பு"ன்னு ரிப்ளை வருது. போன் அவங்க அக்காட்ட இருக்கும் போல -SriLiro

வாழ்க்கையில பழம்தின்னு கொட்டையைப் போடலாம்னு பார்த்தா, வாழைப்பழத்தைக் கையில குடுத்துட்டுப் போயிடுறாரு கடவுள் -sudhansts

இந்த வெள்ளைக்காரன்கிட்ட வேலை பார்க்கிறதுக்கு பதிலா ஊர்ல பன்னி மேய்க்கலாம். ஏதோ சொல்றானேன்னு நினைச்சிட்டு இருந்தா, அஞ்சு நிமிசமா என்னை திட்டிட்டு இருக்கான் -kattathora

திங்கள்கிழமை ஆபீஸுக்கு லீவ் போட்டுட்டு பஸ்டாண்ட்ல நின்னு ஆபீஸ் போறவங்களை வேடிக்கை பாக்குற சுகம் இருக்கே... From fb

``டேய், நிமிர்ந்து ஒக்காரு!” ஏதோ என்னாலான குழந்தை வளர்ப்பு. ThePayon

எப்பொழுதும் ஆர்ப்பாட்டமாய் ஆடிக்கொண்டிருக்கும் குழந்தை, அமைதியாய் வந்து உங்கள் அருகில் அமர்கிறது என்றால், அடுத்த ஐந்து நிமிடத்தில் வீடே ஆர்ப்பாட்டமாய் ஆகும் அளவுக்கு ஏதோ வேலையை செய்திருக்கிறான் என அர்த்தம் ItsJokker

"காதலித்து பார்" "பார்லதான்டா உட்கார்ந்திருக்கேன்" -BulletJackie

அப்பா ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல பையனை அடிக்கிறதை நிறுத்திட்டு... கல்யாணம் பண்ணிவெச்சுடுவார் -tamilhumourjoke

மனைவி: "உங்களுக்கு காபி வேணுமா?" நான்: "இல்லம்மா... வேணாம்" ம: "ஏன்?" நான்: "நீ டயர்டா இருப்பேன்னு சொன்னேன். போட்டுக் கொடுத்தா குடிப்பேன்" ம: "பால் கொஞ்சம் மிச்சம் இருக்கு. எப்படியும் கீழேதான் ஊத்தணும், அதான் கேட்டேன்" சற்றுமுன் நடந்த அசம்பாவிதம் fb/NaveenKumar Nadarajah

"டேய் குடிகாரப்பயலே" எனப் பொத்தாம்பொதுவாகக் கூவினால், பத்தில் எட்டு பேர் திரும்பிப் பார்க்கும் நிலையில் இருக்கிறது நம் தமிழ்நாடு! -killer

பிடித்த சில கவிதைகள்

 குளக்கரையில் நின்று

ரசித்துக்கொண்டிருந்தேன் இடமும் வலமுமாய் அலைகளையெழுப்பிய மீன்களை பசிக்கிறதென சைகை காட்டி நடுவில் வந்த சிறுமி பெற்றுக்கொண்ட காசில் பொரி வாங்கித் தூவுகிறாள் குளத்தில் ஆர்வமாய்க் கொறிக்கத் தொடங்குகின்றன மீன்கள். - கீர்த்தி

சரியாக முத்தமிட்டு விடாதே; அடுத்த வாய்ப்பு தவறிவிடும் -DeepaVaru

இத்தனை அழகாக கண்களில் ஒற்றிக்கொள்ளும்படி விழும் அந்திமழைக்கு ஒரு குறையும் இல்லை கொஞ்சிக் கிள்ளிட ஒரு கன்னம் இல்லையென்பதைத் தவிர. - ந.சிவநேசன்

குழந்தையை ஏமாற்றி வேலைக்கு போய்விட்டாள் அவள் அவளின் சுரிதார் ஷாலைக் கட்டிக்கொண்டு கேட்டுக்கும் வீட்டுக்குமாய் நடந்து அழுகிறது குழந்தை ‘தெரிஞ்சா வேலைக்கே போகமாட்டா’’ என்று மனதை ஆற்றிக்கொள்கிறாள் அப்பத்தா எல்லோருக்கும் கருணை இருக்கிறது அதைவிட பெரிதாய் இருக்கிறது வயிறு -சாய்மீரா

கடைசிச் சந்திப்பை முடித்துத் திரும்புமொருவனின் வெடித்து அழும் கண்ணீரை மறைக்கப் பொழிகிறது பேய்மழை எல்லாருக்கும் பெய்யும் மழைதானென்றாலும் எல்லாருக்கும் ஒன்றுபோலில்லை! - வெள்ளூர் ராஜா

பிடித்திருக்கிறது -ரிஸ்கா முக்தார்

பிடித்திருக்கிறது
கோபத்தில் கத்திப்பேசாதவனை
ஆத்திரத்தில் வார்த்தைகளை விடாதவனை
கண்ணீரை அவமானமெனக் கருதாதவனை
சமைக்கத்தெரிந்தவனை
சமையலைக் குறை கூறாதவனை
சாப்பிட்டத்தட்டை தானேக் கழுவி வைப்பவனை
நட்பினை மதிக்கத்தெரிந்தவனை
யாரையும் மட்டந்தட்டாதவனை
தன் தவறுகளைத் தவறென ஒப்புக்கொள்பவனை
போலியாய் நடிக்காதவனை
பிறர் வயிற்றில் அடித்து உண்ணாதவனை
தன் கொள்கைகளில் உறுதியோடிருப்பவனை
கனவுகளைப் பின் தொடர்பவனை
நேர்த்தியாக உடை அணிபவனை
தன் உடைகளைத் தானே தெரிவு செய்பவனை
காதலுக்காகப் பெற்றோரை நோகடிக்காதவனை
பாதியில் காதலைக் கைவிடாதவனை
பிரிவுக்குப் பின்பும் இரகசியம் காப்பவனை
பயணங்களில் அதீத ஈடுபாடுடையவனை
தனிமையில் மகிழ்ந்திருப்பவனை
எப்போதும் புன்னகையோடிருப்பவனை
அரசியல் அறிவோடிருப்பவனை
கவிதைகள் எழுதாதவனை
கலகலப்பாகப் பேசுபவனை
சமயங்களில் அமைதியாகி விடுபவனை
தோல்வியில் நிலைகுலையாதவனை
வாழ்வோடு போரிட்டு வெல்பவனை
எல்லோரையும் போல
எனக்கும்
பிடித்துதான் இருக்கிறது
இருந்தும்
ஏனோ
பெண்மையின் பலவீனங்களை
பயன்படுத்திக்கொள்ளாத
ஆண்மையின்
தாய்மையைத்தான்
எனக்கு
அவ்வளவு
பிடித்திருக்கிறது
-ரிஸ்கா முக்தார்-

தட்டுவடை

 கொஞ்ச நாள் முன்பு பிரியாவின் ஆபீஸ் எதிரே தட்டுவடையை பார்த்த உடன் சாப்பிட தோன்றியது, ஆர்வமாக வாங்கி ஒன்றே ஒன்றை சாப்பிட்டேன் கடிக்கவே முடியாத படி படு ஸ்ட்ராங்காக இருந்தது, மாங்காயெல்லாம் வெட்டி போட்டு..... என்ன கொடுமைசார் இது என்று தோன்றி பிரியாவிடம் சாப்பிட சொல்லி கொடுத்துவிட்டேன்.

தட்டுவடையை பார்த்த உடனே வாங்கும் ஆசை ஏன் வந்தது என்றால், கோபியில் தேர்முட்டி வீதியில் எங்களுக்கு பிடித்தமான தட்டுவடை கடை ஒன்று இருந்தது. இப்போதும் இருக்கும் என்று நினைக்கிறன். சரியாக ஐந்து மணிக்கு வருவார். வைரவிழாவில் படிக்கும் போது அவருக்காக காத்திருந்து சாப்பிடுவோம். சைக்கிளில் மூன்று பாத்திரங்களை கட்டி கொண்டு வருவார். குறைந்தது பத்து பேர்களாவது காத்திருப்போம். திண்ணையில் உட்கார்ந்து கொண்டு தருவார். வாயில் வைத்து கடித்தால் சப்தம் வரும் ஆனால் கரைந்து போகும் தன்மையில் இருக்கும். இனிப்பு காரம் ஸ்பெஷல் என மூன்றும் வெவ்வேறு சுவைகளில்
அருமையாக
இருக்கும் சில நேரங்களில் லைனில் நின்று வாங்கியிருக்கிறோம் எதிரே ஒரு பழைய படிக்கட்டில் உட்கார்ந்து சாப்பிடுவோம் . காப்பியான் ஒன்றுடன் எப்போதும் நிறுத்தியதே இல்லை, அவன் சாப்பிட வேண்டி எனக்கும் இன்னொன்று சேர்த்து வாங்கி வருவான். "ஏண்டா" என்றால், "என்னோடது எடுத்து தின்னுட்டீன்னா" என்பான். உண்மையில் அந்த இரண்டாவது சாப்பிட்டும் மேலும் வாங்கலாம் என்றே மனது சொல்லும். அப்போது.ஐந்து ரூபாய் என்று நினைக்கிறன் திரும்ப ஊருக்கு வருகையில் அவர் இருக்கிறாரா என்று தேடிப்போய் சாப்பிட வேண்டும்.
சுவாரஸ்யத்திற்காக இன்னொன்று பிரெஞ் ப்ரைஸ் (உருளைக்கிழங்கு வறுவல் தான்) சிவாவிற்கு மிகவும் பிடிக்கும். நல்ல உருளைக்கிழங்கு வறுவல் என்பது வெளியே மொறுமொறுவெனவும் உள்ளே மிருதுவாகவும் இருக்க வேண்டும். கெட்ஸப்புடன் சாப்பிட நன்றாகவே இருக்கிறது
கூடுதல் தகவல் பிரெஞ் ப்ரைஸுக்கும் பிரான்ஸுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
ஏன் பிரெஞ் பெயர் வைத்தார்கள் என தெரியவில்லை
பிரெஞ் ப்ரைஸ் பெல்ஜியத்தில் இருந்து வந்தது

காபி பத்து ரூபாயா?

 போன வாரம் கோபி போயிருந்தோம், அரசு மருத்துவமனைக்கு பக்கத்துல இருக்கிற ஒரு கடையில காப்பி மெதுவடை வாங்கினேன், முப்பது ரூபாய் கொடுத்து இங்கே குடிக்கிற எனக்கு காப்பி பத்து ரூபா, மெதுவடை 5 ரூபா... உண்மையாவே நான் எதிர் பார்க்காத விதமா தரமா இருந்துச்சு. ரொம்ப ஆச்சர்யமா காப்பி பத்து ரூபாயான்னு கேட்டேன்.

நான் வெளியே கிளம்பும்போது கடைக்காரர் அவர் பொண்டாட்டி கிட்ட, "காபி பத்து ரூபாயான்னு கேட்கிறான். பத்துரூபாய்க்கு கூட விக்காம பின்ன பிரீயாவா கொடுப்பாங்க" என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
நான் சொல்ல வர விஷயம் வேற,
அரசு சிலிண்டர் விலை ஏத்திட்டு குறைக்கிறதுல என்ன பிரச்சனைன்னா, இந்த ஹோட்டல்காரனுக, பேக்கரிகாரனுக எல்லாம் விலை ஏறும்போது விலையை ஏத்துறானுக, இப்போ ரெண்டு தடவை கமர்சியல் சிலிண்டர் விலை குறைஞ்சிருக்கு,
குறையும் போது விலை ஏறக்கறதில்ல. வடை போன்டால்லாம் இவனுகளே சுட்டு விக்கிறானுகன்னு பத்து ரூபாய்க்கு அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம், ஆனா சமோசால்லாம் மூணு ரூபாய்க்கு வெளியே வாங்கி பத்து ரூபாய்க்கு விக்கிறானுகளே அது வன்கொடுமை

ஏரியா நிகழ்வு

 நேற்று ஏரியாவில் இரண்டு சீர், அதிலும் ஒன்று கறி விருந்து என இவள் சொன்னதால் உற்சாகமாகி விட்டேன். இரண்டு விழாவும் ஒரே சமயத்தில் இருந்தது, வெஜ் இவள் சாப்பிடவும், கறி விருந்தை நான் சாப்பிடவும் திட்டமிட்டுக் கொண்டோம்,

விழாவிற்கு செல்லும் வரை எந்த யோசனையும் இல்லை, ஒரு சிறு கூட்டத்துடன் சென்றதால் வேறு ஏதோ விவாதங்கள் போய் கொண்டிருந்தது. மண்டபம் சென்று சேர்ந்ததும் பயங்கர மேள சப்தம், காதே கிழிந்துவிடும் போல இருந்தது. கிட்டத்தட்ட 700 பேரை அழைத்திருப்பதாக சொன்னார்கள். ஒரு நல்ல விளம்பரம் போலவே இருந்தது.
அடுத்த விழாவில் சடங்குக்காக நிறுத்தப்பட்டிருந்த பெண்ணை பார்த்தேன். கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது
சிறிய குழந்தை, நேற்று தெருவில் தனது தம்பி மற்றும் சில சிறுமிகளுடன் ஓடி விளையாடிக்கொண்டிருந்தது.
1. ஒரு சில பிரிவுகள் தனது பொருளாதார வசதியை காட்ட இதை செய்கிறார்கள்
2 நான் படித்த வரையிலோ கேள்விப்பட்ட வரையிலோ எந்த ஒரு நாட்டிலும் கூட்டமாக வந்து பேனர் வைத்து பெண் வயதுக்கு வந்ததை கொண்டாடும் மக்கள் இருக்கிறார்கள் என்றே கேள்விப்பட்டதில்லை.
3. கறி விருந்து இல்லை, முதலில் செய்வதாக இருந்து பின்னர் சைவத்திற்கு மாற்றி விட்டார்களாம் (எவண்டா மாத்தினது? பாவிப்பயலுகளே)
4. யாரோ யாரையோ "டேய் குடிகாரா" என்று அழைத்தார்கள், கிட்டத்தட்ட 90 சதவீத ஆண்கள் திரும்பி பார்த்தார்கள். அந்த நிலைமையில் இருக்கிறது தமிழகம்