Wednesday, April 28, 2021

மை நேம் ஈஸ் பஷீர் (My Name Is Basheer) ஆவண படம் பற்றிய விமர்சனம்

 மை நேம் ஈஸ் பஷீர் (My Name Is Basheer) என்ற வைக்கம் முகமது பஷீரின் ஆவணப்படம் யூடுப்பில் காண கிடைக்கிறது. இந்த ஆவணப்படம் மலைவாழ் கிராமமொன்றில் ஆனந்தமாக சாரல் மழையில் நனைந்து செல்லும் சுகம் தருகிறது. ஆறுகளின் வழியே இயற்கை காட்சிகளுடன் பறவைகள் சப்தமெழுப்ப, சாதாரண மனிதர்களின் படகுகள் அந்த காட்சிகளின் நீட்சியாக அந்த இயற்கை சூழலிலேயே படகில் சென்றபடி பேட்டி தரும் பஷீரின் சகோதரர் அபு பெக்கர் என கண்களுக்கு விருந்து படைக்கவும் இது தவறவில்லை.

 2007ல் அனுஷ்கா மீனாட்சியும் அவரது படப்பிடிப்பு குழுவும் சென்னையிலிருந்து கோழிக்கோட்டிற்கு சென்று வைக்கம் முகமது பஷீரின் வாழ்க்கையை ஆவண பட வடிவில் திரும்ப கொண்டு வந்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் பார்த்த இரண்டு நாடகங்கள் இதை எடுக்க தூண்டியதாக இந்த ஆவண பட இயக்குனர் சொல்கிறார். பஷீரின் புத்தகத்தை பற்றி பெட்டிக்கடைக்காரர், சமையல் கலைஞர், புத்தக விற்பனர், மாணவிகள் என பலதரப்பட்ட மக்கள் பேசுவதிலிருந்து ஆரம்பமாகிறது இந்த ஆவணப்படம். முழுவதும் ஆங்கிலத்தில் இருப்பதும் subtitle வைத்திருப்பதும் புரிந்து கொள்ள எளிதாக இருக்கின்றது. காலம் தாண்டி அவரது கதைகளில் இன்னமும் புத்துணர்ச்சி இருக்கிறதென கூறுகிறார்கள் அவரை இப்போதும் வாசிப்பவர்கள்.

இடையிடையே அவரது புத்தகங்களின் கதைகளை காட்சிகளாக இந்த படமெடுக்க தூண்டியவரின் நாடகங்கள் வருகின்றன,  அதில் நண்பனை கொலை செய்யும் காட்சிகளில் நடிப்பு திரைப்படங்களில் கிளைமாக்ஸ் காட்சிகளை மிஞ்சுமளவு பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். மற்றொரு நாடகத்தில் காதல் காட்சிகளில் நகைச்சுவை பொங்கி வழிகிறது,

குறிப்பாக, வேறுவேறு மதத்தை கொண்ட காதலனும் காதலியும் பேசிக்கொள்ளும் வசனங்கள்,

 "நமக்கு குழந்தை பிறந்தால் எந்த மதத்தில் வளர்ப்பது?"

"மதமே இல்லாமல் வளரட்டுமே?"

"மிருகங்கள் மாதிரியா?" …

 "அவர் எல்லாத்தையும் பார்த்திருக்கார், காதல்கள் கூட உண்டு, நாமொரு புத்தகம் எழுதணும்னா அதில இதெல்லாம் முழுசா வெளிய கொண்டு வரணும், அதில நகைச்சுவை, சந்தோசம், அனுபவம் இதெல்லாம் அடுத்தவங்களுக்கு கொடுக்கிற மாதிரி எழுதணும், இதையெல்லாம் உருவகப்படுத்தினா அதுதான் பஷீர்" அவரது மனைவி பாத்திமா (பாபி).

எனக்கும் பஷீருக்கும் பதினெட்டு வயசு வித்யாசம், அவர் பள்ளி படிப்பு முடிந்ததும் இங்கிருந்து 18ஆவது வயசுல ஓடி போய்ட்டார், பத்து வருஷம் இந்தியால நிறைய இடங்களும், தென் ஆப்ரிக்கா, அரேபியாவெல்லம் போய் அப்புறம் திரும்ப வந்தார், திரும்ப வந்த அவர் பழைய பஷீரல்ல என புரிந்து கொண்டோம், அவர் வேறு மனிதராக இருந்தார், அவரது மீசை, தொப்பி, உடைகள் பகத்சிங்கை ஞாபக படுத்தின, ஒரு புரட்சிக்காரனை போலத்தான் அப்போது வாழ்ந்தார், அவருக்கு எழுத்தின் மீது தீவிர காதல் உண்டுஎன்கிறார் அவரது சகோதரர் அபு பெக்கர்.

"அவர் என்னை மிக சுதந்திரமானவளாக வளர்த்தார், முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த போதும், மத நடவடிக்கைகளை பின்பற்றும் வாழ்க்கை முறை எங்களுடையதில்லை, எப்படி வாழ்க்கை நடத்துவதெனக்கூட அவர் அறிவுரை சொன்னதில்லை. எல்லா மத நண்பர்களும் அப்பாவிற்கு உண்டு, அப்பாவின் வாழ்க்கை முடியும் வரை, அவரை சுற்றிலும் ஒரே சிரிப்பு சப்தமாக இருக்கும், அவர் தனது வாழ்க்கை முழுவதையும் நகைச்சுவையால் நிரப்பிக்கொண்டார்" என்கிறார் பஷீரின் மகள் ஷகீனா.  இந்து மதத்தின் மீது பிடிப்பு கொண்டு சிலகாலம் ஆன்மீக தேடலோடு பஷீர் இருந்திருக்கிறார்

 அவரது நாடகங்களை இயக்கி வரும் ராஜிவ் கிருஷ்ணன் கூறுகையில், "அவர் தனித்துவமான நகைச்சுவை எழுத்துக்களுக்கு மட்டும் சொந்தக்காரர் அல்ல, சோகம், வறுமை, போராட்டம், ஜெயில் வாழ்க்கை என நிறைய அனுபவங்களை எழுத்தில் தந்திருக்கிறார், அதுவும் சாதாரண மனிதர்களை கதா பாத்திரங்களாக வைத்துக்கொண்டு, அவை நம்மை முழுதாக உள்ளிழுத்துக்கொள்ளும், தவிர அவரது நாடகங்களை இயக்குகையில் அவரது பலவித அனுபவங்கள் எனக்கு மிகுந்த சுவாரஸ்யமாக இருக்கின்றன"  

எஸ் ராமகிருஷ்ணன் தனது வலைதளத்தில் பல வருடங்களுக்கு முன்பு எழுதி இருந்த பஷீர் த மேன் (Basheer the man) என்ற குறும்படத்தை தேடி youtubeல் பார்த்தேன், இரண்டு பாகமாக அதை வெளியிட்டிருக்கிறார்கள், அட்டகாசமாக இருக்கும். Link: https://www.youtube.com/watch?v=8HBlQXzrxEE அதை எடுத்த திரு M A ரஹ்மான், "என்னோட பால்ய வயதில் புத்தகம் படிச்ச உடனே அந்த எழுத்தாளரை பார்க்கணும்னு தோணும், அப்படிதான் அவரை பார்க்கணும்னு தோணிச்சு,  அதுக்கு முக்கிய காரணம் பஷீரோட நகைச்சுவை உணர்வு. நான் M A படிச்சு முடிச்சதும் அவரை பற்றி படமெடுக்கலாம்னு ஆசைப் பட்டேன், குறிப்பா அவரது பால்யம், சுதந்திர போராட்ட காலம், தனிப்பட்ட வாழ்க்கை, அவரது தத்துவங்களில் இருந்த மாற்றங்கள் எல்லாம் எடுக்க சென்றோம்என்று ஆரம்பித்து அவர் பஷீர் பேசிய ஒலிகளை கொண்டு வர பட்ட பாடுகளை விவரிப்பார், அது மிக சுவாரஸ்யமானது.

ஜமீலாவிடம் காதலை சொல்லும் அப்துல் காதர் காட்சிகள் உங்களை நிச்சயம் சிரிக்க வைக்கும், அதன் வழியே பஷீரின் நகைச்சுவை உணர்வை நீங்கள் உணரலாம்.

கோழிக்கோட்டில் மாத்ருபூமி பத்திரிக்கை இந்த நாடகங்களை பஷீரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டமாக நடத்தியிருக்கிறது. அவரது கொண்டாட்டங்களில் ஒன்றாக மாணவர்களை வைத்து ஓவிய போட்டிகள் நடக்கின்றன, அங்கு வரையப்பட்ட பல ஓவியங்கள் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி இருக்கின்றன. உண்மையாகவே கேரளா பூமி எழுத்தாளர்களை கொண்டாடுகிறது.

பஷீரை பல அழகான கோணங்களில், தருணங்களில் எடுத்தவர் புனலூர் ராஜன், இது என்னுடைய முதல் கேமரா என்று ஒன்றை காட்டுகிறார், பார்க்க வித்தியாசமாகவும், போட்டோ எடுக்கும்போது வரும் சப்தம் ஈர்ப்புடனும் இருக்கிறது.

அடுத்து வரும் பஷீரால் எழுதப்பட்டு, ஜெயிலில் எடுக்கப்பட்ட மதிலுகள் நாடகம் கண்களை அகலவிடாமல் பார்க்க வைக்கும் தன்மை கொண்டது.

வாரங்கள் நாட்களாகி நாட்கள் மாதங்களாகி மாதங்கள் வருடமாக மாறிய பின்பும் உணவு வைத்துக்கொண்டு ஒவ்வொரு இரவும் தன் மகனுக்காக காத்திருந்த பஷீரின் தாய்டனான நெடுநாள் பிரிவுக்கு பின் வரும் "நான் உன்னை பார்த்தால் போதும்" என்று பேசுகிற வரிகள் நெகிழ்ச்சி.

பஷீரின் மகன் அனீஸ், "அவருக்கு மிகுந்த பிரியம் என்மீது உண்டு, பல சமயங்களில் அதை வெளிக்காட்டியதில்லை, ஒரு சில சமயங்கள் அதைமீறி வந்துவிடும் போது கண்கள் கலங்கியிருக்கிறேன், அப்பா எழுதியதில் முக்கியமானது எங்கள் இனத்தை மோசமான வில்லன்களாக எழுதிக்கொண்டிருந்த சமயத்தில், தன்னை சுற்றியிருந்த தனது சமூக மனிதர்களை பார்த்தார், அப்பா, அம்மா, குழந்தைகள், சொந்தங்கள் என மிக சாதாரணமானவர்கள், அன்பானவர்கள், தீயவர்கள் அல்ல என்பதை புரிந்துகொண்டார், அதை அவர்  பிரச்சாரம் செய்யாமல், இயல்பான வாழ்க்கையை அவர் எழுத்தின் மூலம் கொண்டுவந்தது, அதை மற்ற சமூகத்தினர் ஏற்றுக்கொண்டதும், புரிந்துகொண்டதும், நட்பாக வாழ தொடங்கியதும் அவர் எழுத்திற்கு கிடைத்த வெற்றி"

பஷீரின் சுயசரிதை எழுதிய M K ஷானு, “அவர் நல்ல சமையல்காரர், மீன் கறியும், டீயும் அவ்வளவு சுவையாக செய்து தருவார். அப்படிதான் எங்கள் நட்பு வளர்ந்தது, காந்தியை சந்தித்தது, எடப்பள்ளியில் இருந்து ரயிலேறி காளிகட் போனது, அங்கு உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டது, அவர் ஒரு இடத்தில் நிரந்தரமாக தங்கியதில்லை, ராஜஸ்தான், பம்பாய், காஸ்மீர் பின் கப்பலேறி பெரிசியா என பயணம் செய்துகொண்டே இருந்தார், அவரது அனுபவங்களை விளக்கி சொல்வதை கேட்பது அவ்வளவு அழகாக இருக்கும், அது எப்போதும் என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும், அதுதான் என்னை அவருடைய சுயசரிதை எழுத தூண்டியது, “கதைகள் எனக்கு பிடிக்கும், மனிதர்களை அதைவிட பிடிக்கும் இவர்கள் இருவரையும் இணைக்கும் பாலமே என் எழுத்து என்பார்.”

பஷீர் "எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம், நீங்கள் விரும்பிய நேரத்தில் படிக்கலாம், ஆனால் நீங்கள் (மக்கள்) அப்படி இல்லை, மர்மம் நிறைந்திருக்கிறீர்கள், அதை பற்றி தான் அறிய துடிக்கிறேன், அதை தாண்டி நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது என்னவெனில் நான் உங்களை நேசிக்கிறேன்"

பஷீரின் அளவுகடந்த மனிதநேயம், காதல், வறுமை அனுபவங்கள், அரசியல் மற்றும் போரைப் பற்றிய விமர்சனம், இசையில் அவரது தனிப்பட்ட ரசனை, இயற்கையின் மீதான காதல் மற்றும் அவரைச் சுற்றியுள்ள மக்கள் மற்றும் சமூகம் குறித்த அவரது  நம்பிக்கைகள் என அவரது பல கதைகள் எழுத்தாளரின் ஏதோவொன்றை வெளிப்படுத்துகின்றன. மெல்லிய தென்றலின் சுகமென விரிகிறது இந்த ஆவணப்படம். மலையாள உலகின் மிகப்பெரும் ஆளுமையை முழுமையாக தெரிந்து கொள்ள கண்டீப்பாக இந்த ஆவண படத்தை காணுங்கள்.  

Link: https://www.youtube.com/watch?v=9-Tm24XRRCE

 

Directed By:

Anushka Meenakshi

 

Produced by:

School of Media and Cultural Studies, Tata Institute of Social Sciences, Mumbai.

No comments:

Post a Comment