Tuesday, December 31, 2019

மெல்பர்ன் உலாத்தல் அழகான வாழ்க்கை கதை

ட்விட்டரில் இருந்து கானா பிரபா

25 வருடங்களுக்கு முன் மெல்பர்னில் நான் வேலை பார்த்த எரிபொருள் நிரப்பு நிலையம். (அதன் படம் கீழே) 
அப்போது அதன் பெயர் Liberty Oil.
AVI என்ற இஸ்ரேலியர் தான் அதன் உரிமையாளர். 


திங்கள், புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவு எட்டு மணி முதல் காலை எட்டு மணி வரை வேலை பார்ப்பேன். பின்னர் வீட்டுக்கு வந்து குளித்து விட்டுப் பல்கலைக்கழகம் போக வேண்டும். இப்படியாக நான்கு ஆண்டுகள் தூக்கமில்லா இரவுகள் வேலையோடு கழிந்தது இங்கே தான்.

ஒரேயொரு பீட்சா போன்ற உணவுவகை (meat pie) மட்டும் தான் வயிறை நிரப்பும். தேநீர் குடிப்பதற்குக் கூட சரியான நேரமிருக்காது. வாடிக்கையாளர்கள் வந்து விடுவார்கள். தனியனாகத் தான் இந்த நிலையத்தைப் பார்த்துக்கொண்டேன். பேச்சு துணைக்கு என்று கூட  யாருமில்லை.

நான் இங்கே  பணியிலிருக்கும் போது கூட எதிர்த்திசையில் இருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டு முறை துப்பாக்கி முனையில் களவு போனது,

அந்தக் கடையில் வேலை செய்த சகோதரர்கள் கொள்ளையர் போன கையோடு எனக்கு அழைத்துப் பேசியதும், என் நெஞ்சம் படபடவென்று அடித்ததும் இப்பவும் நினைப்பிருக்கு.

கடவுள் புண்ணியத்தில் இங்கே வேலை பார்த்த அந்த நான்கு ஆண்டுகளும் இரவுக் கொள்ளையர்கள் யாரும் வரவில்லை

அதிகாலை இரண்டு மணிக்கு கண்ணைச் சுழற்றும். நித்திரை வரக்கூடாது என்பதற்காகவே வெளியில் அந்தக் கடும் குளிரில் நடுங்கிக் கொண்டே அனைத்து பெட்ரோல் பம்புகளையும் எண்ணெய் போக அழுத்தி அழுத்தித் துடைப்பேன்.

அதிகாலை ஐந்து மணிக்கு உள்ளே வந்து குளிர் பதன அறைக்குள் நின்று சோடாப் பாட்டில்களை அடுக்குவேன். பிறகு கடைக்குள் தரையைச் சுத்தம் செய்து நுரை கொண்டு கழுவித் துடைத்து விட்டு, தின்பண்டப் பெட்டிகளை அழகாக அடுக்கி வைப்பேன்.

வெளியிலே இருக்கும், பொது கழிவறையையும் அழுக்குப் போகக் கழுவி வைப்பேன். சில நேரம் மலக் கழிவுகள் வெளியே நிறைந்து கிடக்கும், மாதவிடாய் இரத்தம் ஊறிய கூடமாக இருக்கும். நீர் பாய்ச்சும் கருவியைக் கொண்டு கழுவி, மெல்லிய கையுறையை கைகளில் போட்டுக் கொண்டு அசுத்தம் போக முழுவதும் கழுவிப் பளீர் வெண்மை ஆக்கி விடுவேன்

இடைக்கிடை கார்ச் சத்தம் கேட்டால் போட்டது போட்டபடி போட்டு 
விட்டுக் கடைக்குள் போய்காசை வாங்கிப் பெட்டியில் போடுவேன்
பல சமயம் சில கார்க்காரர்கள் காசு கொடுக்காமல் ஓடி அநீதி செய்திருக்கிறார்கள்.

அந்த இளம் வயதில் எனக்கு இந்த வேலை போய் விடுமோ என்ற 
பயத்தில் என் சட்டைப்பையில் இருந்த காசைப் பணப் பெட்டியில் 
என்னை ஏமாற்றி ஓடிப்போன கார்க்காரர்களின்  கணக்காக வரவில் 
வைத்த சந்தர்ப்பங்கள் பல உண்டுஅதாவது எட்டு மணி நேர 
வேலையை இலவசமாகச் செய்து விட்டு  வருவேன்
இதெல்லாம் முதலாளிக்குத் தெரியாது.

பார்த்தீர்களா பிரபா எவ்வளவு அழகாகக் கடையைச் சுத்தம் செய்திருக்கிறார் 
நீங்களும் இருக்கிறீர்களே?” என்று என்னை பற்றி நான் அங்கு இல்லாத நேரம் கடையில் பணிபுரிந்த சக நண்பர்கள் முதலாளி சொன்னதாகச் 
சொல்லி என்னைத் திட்டியிருக்கிறார்கள். 

ஆனால் அந்தக் கஷ்டத்திலும் படித்து முடிக்க வேண்டும் என்ற 
வீறாப்போடு பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர்ந்து 
கற்று முடித்தேன்.

இன்று 21 வருடங்கள் கழித்து முதன் முறையாக அந்தப் 
பழைய நிலையம் இருந்த இடத்துக்குப் போய்உள்ளே 
சிறிது நேரம் நின்றேன்

புதுப் பெயர்புது உரிமையாளர்புது வேலையாட்கள் 
ஒன்றுக்கு மூன்றாக

ஏனோ அவர்களிடம் எதுவும் பேசத் தோன்றவில்லை.




 

நான் முன்னர் சென்ற அதே பேருந்திற்க்கு காத்திருந்து, அதில் அமர்ந்து கொண்டே இவற்றை அசை போடுகிறேன். #மெல்பர்ன்_உலாத்தல்

By @kanapraba



No comments:

Post a Comment