Tuesday, February 27, 2018

விமானங்கள் எப்படி காணாமல் போகின்றன

எந்த ஒரு விமானமாக இருந்தாலும் அதற்கு அலைவரிசை (frequency) இருக்கும். ராடார் அதை கண்காணிக்கும். அந்த ராடாரிலிருந்து பாதை மாறிப் போவதைத்தான்  விமானம் தொலைந்து விட்டது என அறிவிக்கிறார்கள்.
 பொதுவாக ராடாரிலிருந்து விலகுவதற்கு விமானியின் கவனக்குறைவு, கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்களின் தவறுகள், விமான கோளாறு, அதி வேகமாக மாறும் தட்ப வெப்பம் என பல காரணங்கள் உள்ளன. 

பெரும்பாலான விமான பாதைகள் கடல் வழியே மேலே போவது போன்றே அமைக்கப்பட்டிருக்கும்.

 மலேசியா போன்ற விமானங்களை ஏன் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், விமான கோளாறு ஏற்பட்டு தரையில் விழுந்தால் அதை கண்டுபிடிப்பது எளிது, ஆனால் அதுவே கடலில் விழுகையில் 400 கிமீ வேகத்தில் சென்று கடலுக்குள் பாய்கிறது... 

2 கிமீட்டருக்கு மேல் ஆழத்தில் சென்று விழுகிறது. மிக சக்தி வாய்ந்த நீர்மூழ்கி கப்பல் கூட ஒரு கிலோ மீட்டர் ஆழத்திற்கு மேல் செல்ல இயலாது. இதனால் தான் தொலைந்து போன விமானங்களின் பாகங்களை கூட  கண்டுபிடிக்க இயலவில்லை.

இதை தாண்டி இந்த பெர்முடா முக்கோணத்தில் காணாமல் போன விமானங்கள் எல்லாம் துருவி துருவி காரணம் கண்டுபிடித்துவிடும் அறிவியலுக்கே   பெருங்குழப்பம்

Friday, February 23, 2018

ஹரிசுதன்

''இது ரொம்ப ஹிஸ்டாரிக்கல் கோயில். சாமி கும்பிடுமா, கடவுள் நம்பிக்கை உண்டோ?' என்றார் கூடவந்த இன்னொரு தோழர் ஹரிசுதன்.
''நம்பிக்கை உண்டு... மூடநம்பிக்கை இல்லை'' என்றேன்.
''என்னண்ணே திடீர்னு கமல் மாதிரி பேசுறீங்க'' என கமென்ட் போட்டான் அலெக்ஸ்.
''கடவுளே மூடநம்பிக்கைதானே குட்டா...'' எனச் சிரித்த தோழர் ஹரிசுதனை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.
வேளாண் வளர்ச்சிக்காகவும் இயற்கை வளங்களின் சுரண்டல்களுக்கு எதிராகவும் நடக்கும் அத்தனை போராட்டங்களிலும் தன்னை இணைத்துக்கொள்பவர் ஹரிசுதன். ஒடிஸா மலைக் கிராமங்களை வேதாந்தா நிறுவனம் ஆக்கிரமித்த பிரச்னையில் இருந்து, காவிரி டெல்டாவை விழுங்கும் மீத்தேன் திட்டம் வரை இந்தியா முழுவதும் பயணப்பட்டு போராட்டங்களில் பங்களிப்பவர். ஆறு மாதங்களுக்கு மேலாக சட்டீஸ்கர், ஜார்கண்ட், மேற்குவங்கக் காடுகளில் அலைந்து, அந்த மக்களோடு வாழ்ந்து, அவர்களின் வாழ்நிலையை ஆவணப்படுத்தியவர்.
''மார்க்ஸையும் மசானா ஃபுகோவையும் படிச்சிக் கிழிச்சு வளர்ந்தோமே குட்டா... அதான் மிஸ்டேக். மத்த ஆளுக மாதிரி வேடிக்கை பார்த்துட்டு வீட்டுக்குப் போய் மேட்ச் பார்க்க முடியல. தூக்கம் பிடிக்கல. ஊர் ஊராப் போய் தொண்டை கிழியக் கத்துறோம்... கொடி பிடிக்கிறோம். இதோ பாருங்க... லெஃப்ட் ஷோல்டர்ல, முதுகெல்லாம் பார்த்தீங்களா..! இதே ஊர்லதான்... தாலுக்கா ஆபீஸ் முன்னாடி பைக்ல வந்தவனை இழுத்துப்போட்டு வெட்டினாங்க ஒரு அரசியல் கட்சி ஆளுங்க. நாலைஞ்சு வெட்டு... வெறி புடிச்ச மாதிரி ஓடித் தப்பிச்சேன். ஒரு வெட்டு கழுத்துல விழுந்திருந்தாலும் அவுட்டு. நம்மளால இன்னும் சில காரியங்கள் நடக்கணும் இந்த உலகத்துக்கு. அதான் பொழச்சுவந்திருக்கேன்'' எனச் சிரித்தவரைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. 
'இதுல ரொம்பப் பெரிய துயரம் என்னன்னா குட்டா... நாம யாருக்காகப் போராடுறமோ, அவங்களே நம்மளை காமெடியனாப் பார்த்துட்டுக் கடந்து போறதுதான். இந்தச் சனம் இப்படித்தான். தீயதுக பின்னாடிதான் போவும்; அபத்தங்களைத்தான் கொண்டாடும்; கெட்டவனைத்தான் ஜெயிக்கவைக்கும். அதுக்காக நாமளும் வேஷம் கட்டிட்டு பவருக்கும் ஷோக்குக்கும் அடிமையாக முடியுமா? அதுக்கு, பீயைத் தின்னுப் பொழைக்கலாம்; இந்த பஜார் பக்கம் ஒரு ஹோம் பிடிச்சு பிராத்தல் பண்ணலாம்; ட்ரக்ஸ் வித்து, ஃபோர்ஜரி, கரப்ஷன் பண்ணி காசு சம்பாதிக்கலாம். அதுக்கா நாம வந்தோம் குட்டா? வாள சொழட்டிட்டே இருக்கவேண்டியதுதான்; போராடிட்டே சாக வேண்டியதுதான்... நம்ம சே மாதிரி, உங்க பிரபாகரன் மாதிரி, கம்பீரமா கண்ணைத் தொறந்துவெச்சுட்டே சாவோம். பெரியார் மாதிரி மூத்திரப்பை சுமந்துக்கிட்டே வில்லன்களை அடிச்சு நொறுக்குவோம். ஏ.கே.ஜி இருந்தார்ல. தோத்தா என்ன? ராஜதந்திரம்னு மக்கள் அரசியலை அடகுவைக்காம, செங்கொடியைப் போத்திக்கிட்டுச் செத்துப்போவோமே? புதிய அரசியல் அதிகாரத்துக்கான அரசியலை முன்னெடுக்கணும். அன்னிக்கு எங்க கட்சி ஆபீஸ்லயே ஒருத்தன் 'அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போவணுங்கிறான். காலம் மாறிருச்சுங்கிறான்.’ அறத்துக்கு அட்ஜஸ்மென்ட்டே கிடையாதுடா முட்டாள்'' - சட்டென மௌனமாகித் தீவிர யோசனையில் ஆழ்ந்து திரும்புகிறார்.
''முடியல குட்டா... சுயநலமான தனிமனித வளர்ச்சி, பெருமுதலாளிகள் வளர்ச்சி, அதிகாரக் குவியல் எல்லாம் இந்த நாட்டையும் நம்ம இயற்கை வளங்களையும் தின்னுட்டு இருக்கு. இப்பிடியே கோடுபோட்ட மாதிரி இந்தியா முழுக்கப் போனேன். இங்க காசர்கோட்டுல எண்டோசல்ஃபான். தெரியும்ல... இப்பவும் தலை வீங்கி, குச்சிக்குச்சியா புள்ளைக அலையுதுக. உ.பி மெஹ்ந்திகாஞ்ச்ல எட்டு கிராமங்களை மொத்தமா உறிஞ்சு எடுத்துட்டுப் போயிட்டான் கூல்டிரிங்ஸ் கம்பெனிக்காரன். போராட்டம், பேரணினு அங்கேயே கெடந்தோம். மொத்தத்தையும் உறிஞ்சு ட்ரை ஆக்கிட்டு அப்புறம்தான் விட்டுட்டுப் போனானுங்க. இங்க கேரளா பலாச்சிமடாலேருந்து திருச்சி சூரியூர் வரை அதான் நடக்குது. சோன்பத்ரால தெர்மல் பவர் ப்ளான்ட் போட்டு என்ன பண்ணானுங்க? இப்பவும் அங்கே பொறக்குற புள்ளைக கை கால் வளைஞ்சு பொறக்குதுக. வாத நோய், மென்டல் டிஸ்ஸார்டர், பல்லு பூரா கறைனு மனுஷங்க அவ்வளவு கொடுமையா அலையுறாங்க. ஒடிஸா ஜகத்சிங்பூர்ல கொரியாக்காரன் இரும்பு உருக்கு ஆலை வைக்கிறேன்னு இருபத்தோராயிரம் மக்களை வெளியேத்தினான். அதிகாரத்துல இருக்கிற எவன் கேட்டான், எங்க போய் நின்னுச்சுங்க அந்தச் சனம்? போய் பார்த்தா வயிறு எரியுது. இந்தக் காயல்பட்டினத்துல கெமிக்கல் கம்பெனி வெச்சு, ஊர் மொத்தமும் சுவாசப் பிரச்னை வந்திருக்கு. இப்பவும் போராடிட்டுத்தான் இருக்கோம். என்ன தேசம்டா இது? இந்த ஊர்ல ஒரு அரசியல்வாதி, ஒரு பணக்காரன், ஒரு தொழிலதிபர் பாதிக்கப்பட்டிருக்கானா? ஏழைங்க மட்டும் என்ன எலிங்களா? விடக் கூடாது குட்டா. அடிச்சு இவனுங்களைக் காலி பண்ணிரணும்.'' 

நன்றி: ராஜு முருகனின் ஜிப்ஸி

Tuesday, February 13, 2018

பரிச்சியம் - கல்லை. சிறி.ப.வில்லியம்ஸ்

முரட்டு மீசையுடன்
முறைத்துக்கொண்டிருந்த
முண்டாசு நபரின்
கறுப்பு-வெள்ளைப்
புகைப்படம் காட்டியபோது
நீண்ட யோசனைக்குப் பின்
பாரதிதாசன் என்றான்
என் முகக் குறிப்பு உணர்ந்து
இல்லையில்லை
பகத்சிங் என்று
திருவாய் மலர்ந்தான்
உ.வே.சா-வை
வ.உ.சி. என்றோ
மா.பொ.சி-யை
கி.வா.ஜா. என்றோ
துணிச்சலாய்
அடையாளப்படுத்துவான்.
கம்பராமாயணம் படைத்தது
கண்ணதாசன் என்றும்
சிலப்பதிகாரம் எழுதியது
காளிதாசன் என்றும்
சந்தேகமின்றிச் சாற்றுவான்.
ஒருமுறை
ராமகிருஷ்ண பரமஹம்சரை
திருவள்ளுவரென்று சொல்லி
மிரள வைத்தான்.
இதனால் உண்டாகும்
மன உளைச்சல்கள் தவிர்த்து
சின்னத்திரை நடிகன்
முதற்கொண்டு
குத்துப்பாட்டு நடிகை வரை
அத்தனை பேர்களும்
என் பிள்ளைக்கு அத்துபடி!

வந்த நாள் முதல்... செழியன்

ஞாபகம் எனும் சிரபுஞ்சியில் மழை பொழிந்து கொண்டே இருக்கிறது

 எனது பாட புத்தகத்தில் தன் பெயரை யாரும் பார்க்காத நேரத்தில் எழுதி வைத்த, எதிர்பாரா முதல் விரல் தீண்டலில் தனது நாணத்தை முழுதும் கொட்டிப் போன ஒருத்தி,

 பாசமெனும் வர்ணங்களை பூசி விட்டு , என் பின்னாலேயே சுற்றி திரிந்த சிறு கருங்குயில் ,

  வாழ்த்து அட்டைகள் மூலம் முதல் காதல் கிறுக்கு பிடிக்க வைத்த சைக்கிள் பெண்ணொருத்தி,

 "அவனைத்தான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறோம்" என்று அத்தை சொல்ல, பார்க்குமிடமெல்லாம்  நாணி புன்னகை செய்து, தனிமையில் வம்பிழுக்கும் மாமன் மகள்,

 தனது தாயும், எனது பாட்டியும் புற்று நோய் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டிருந்த நேரத்தில் புத்தகங்கள் மூலம் ஸ்நேகமான தோழி,

  சாளுக்கியரை "சளுக்கியர்" என கூறி உதடு கடிப்பவளின் கத்தி போன்றதொரு பார்வை

 முதல் குளிர் மலை சுற்றுலாவில் அழகில் மயங்கி விழுந்த ஒரு கவிதையானவள்,

  தன் குளிரை பொருட்படுத்தாது தனது போர்வை தந்து தாயாய் மாற முயற்சித்த தேவதை,

 பொது குடிநீர் தொட்டியில் இருள் கவியும் பொழுதுகளில் ரோஜா நிற பிராக் அணிந்து "குஞ்சூ" என்ற மெல்லிய குரலுக்கு சிலிர்த்து பின் கோப பார்வை வீசும் ஒரு மெல்லிடையாள்.

 "அன்புள்ள மாமாவுக்கு" என கடிதம் வழியே பிரியம் காட்டி "கர்சீப், பேனால்லாம் தந்தா உறவு போயிரும் மாமா" என்ற கடைசி வார்த்தை பேசி விட்டு காணாமல் போன தூரத்து சொந்தக்காரி

 வேற்று மாநிலத்தில் பாஷை தெரியாது அமர்த்தும் பைப்பில் நீர் பிடிக்க போன இடத்தில் சிறுவர்கள் எனது தமிழை கிண்டல் செய்ய,  என் சார்பாக அவர்களிடம் பரிந்து பேசி சினேகமான கன்னடத்து பைங்கிளி.

வெளியூர் என். எஸ். எஸ்., காம்பில் பார்வை தீண்டலில் ஆரம்பித்து, நிறைவு நாளில் கண்ணீர் நிரம்பிய முகத்துடன் நெற்றியில் சந்தனம் வைத்து, "உன் வாழ்க்கை இனி எப்பவும் சந்தோஷமாவே இருக்கும், நல்லா இரு " என கூறி விட்டு, என்ன நடக்கிறது என நான் உணரும் முன்  வேகமாக தன்  வீட்டிற்குள் ஓடிப் போன தந்தையுமானவள்...

ஆற்று பெருக்காய் நிரம்பி வழியும் அன்பு எனும் பெரு வெள்ளத்தை எந்த தடுப்பணையாலும் நிறுத்தவே இயலவில்லை.

அத்தனை நினைவலைகளையும் கிளறி விட்டுக் கொண்டே செல்கிறார் செழியன்...

ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கிறது காதலும், பிரியமும், பிரிவின் வலியும்.

திரும்பவும் உங்கள் வாழ்க்கையை முதலில் இருந்து வாழ்ந்து விட்டு வர வேண்டும் எனில் "வந்த நாள் முதலை" வாசியுங்கள்.

ஒரு கவிதையை மட்டும் சுவைக்க தருகிறேன், மற்றவற்றை புத்தகம் வாங்கி பத்திரப்படுத்தி கொள்ளுங்கள்

----------------------------------------------------

வெற்றுக் காகிதத்தின் முன்
சொல்லுக்காகக் காத்திருக்கும்

கவிஞனைப் போல...
அந்த மைதானத்தின் முன்
உனக்காகக் காத்திருக்கிறேன்.

 நீண்ட மண்பாதை.
இலை உதிர்ந்த வாகை மரங்கள்.
கூடு திரும்பும் பறவையென மரங்களில்
அடைந்துகொண்டு இருந்தது இருள்.

உனக்கு மட்டும் கேட்கும் கொலுசொலி
எனக்கும் கேட்க நீ வருகிறாய்,
தூக்கத்தில் நடந்து வருவதைப் போல
கவிழ்ந்த இமைகளுடன்!

என்னருகில் விழிக்கிறாய்.
முகம் தெரியும் இருளில்
பார்த்துக்கொள்கிறோம்.

திறந்த நம் விழிகளை
இமையென மூடும் இருள்.
கனவுடன் பிரிந்து
எதிரெதிர் திசையில் நடக்கிறோம்.

யாரும் அறியாத இரவில்
நாம் சந்தித்த இடத்திலிருந்து
இணையாகத் தொடர்கின்றன
நம் சுவடுகள்.

கல்லூரி முதல் வருடம்.
நாட்டு நலப்பணித் திட்டத்துக்காக
ஒரு சிற்றூரில் பயிற்சி முகாம்.
சாலைகள் சீரமைக்கவும்...
நீர்க்குளத்தை சுத்தம் செய்யவும்...
அந்த ஊருக்கு வரும் குழுவில்
நான் இருக்கிறேன்.

கற்படிகளால் ஆன குளம்.
பாழடைந்த கோயில்.
உயர்ந்த மாடங்கள்கொண்ட
தொன்மையான தெருக்கள்.
இரவெல்லாம் மயில்கள் அகவும்
அந்த ஊர் உன்னுடையது.

எரியும் வெயிலில்
குடிநீர்க் குளத்தின் ஓரமிருந்த
எருக்கஞ் செடிகள், முட்புதர்கள் ஒழித்து
ஓய்ந்த மாலைப் பொழுது.
சக மாணவர்கள் ஊர் சுற்றக் கிளம்ப
குளக்கரையில் தனித்திருக்கிறேன்.

வாழ்த்தட்டை ஓவியம் போல
அந்திவெயிலில் போயின
மாட்டு வண்டிகள்.
ஆல மர நிறுத்தத்திலிருந்து கிளம்பும்
நகரப் பேருந்து
புழுதி கிளப்பிச் செல்கிறது.
சூரிய ஒளியில் மைதானத்தில் நகர்ந்தன
செம்மண் மேகங்கள்.

பானைகளில் நீரெடுத்துத் திரும்பும்
பெண்கள் மறையும்
நிலக் காட்சியிலிருந்து
நீ வெண்கலக் குடத்துடன் வருகிறாய்.
உதிர்ந்த சருகுகள் உன்னுடன்
கூடவே வருகின்றன.

நான் எதிர்க் கரையிலிருந்து வருகிறேன்.
ஒவ்வொரு படியாக இறங்குகிறாய்.
ஒரு நிலையில் அந்திச் சூரியன்
உனது ஒளிவட்டம் போல
மிளிர்ந்து மறைகிறது.

நீரில் எனது உருவமும்
கரையில் நானுமாக
உன்னைப் பார்க்க வருகிறோம்.
மேகங்கள் மிதக்கும் குளத்தில்
நீ கால் வைக்கிறாய்.
கொலுசெனப் பெருகின
நீர் வளையங்கள்.
உன் உருவம் வீழ்ந்ததும்
மேகங்கள் கலைந்து அதிர்வுகொள்ளாது
திசையெங்கும் விரைந்தன சிற்றலைகள்.
உன் குடத்தில் நிரம்புகிறது வானம்.
நெளிந்து வளரும் உன் உருவத்துடன்...
நீ அனுப்பிய அலைகள் தொட்டு
கலங்குகிறது என் உருவம்.
நாம் பார்த்துக்கொண்ட அப்பொழுதில்
நெளிந்தன நம் உருவங்கள்.

படிகளில் ஏறுகிறேன்.
நீயும் காலெடுத்துப் படியில் வைக்கிறாய்.
உதிர்ந்த கொலுசின் மணியென
ஒரு நுரை.

குனிந்து ஒவ்வொரு படியாக
குடம் தூக்கிவைத்து மேல் படியில்
நிற்கிறாய்.
சுற்றிலும் பார்க்கிறாய்.
தூரத்தில் சைக்கிளில் போகும்
ஓரிருவர் தவிர
நாம் மட்டும் இருந்தோம்.

ஒருவரையருவர் பார்த்துக் குனிய
உன் படித்துறை கடந்து நடக்கிறேன்.
தூரத்திலிருக்கும் டூரிங் டாக்கீஸின்
மாலைக் காட்சிக்கான திரைப்பாடல்
காற்றில் அருகில் வந்து
தொலைவுகொள்கிறது.
திரும்பிப் பார்க்கிறேன்.
நான் பார்த்ததும்
பார்வை விலக்குகிறாய்.
உன் காத்திருப்பின் குறிப்பறிந்து
நலப்பணி மாணவனாக
உன் அருகில் வருகிறேன்.

நமக்கிடையில் நீர் நிரம்பிய குடம்.
தொட்டுத் தூக்கக் குனிகிறேன்.
நிரம்பிய நீர் வட்டத்தில் என் முகம்.
குடத்தின் எதிர்ப்பக்கம் நீ தொடுகிறாய்.
மெல்லிய அலைகள்
முகத்தில் படர்கின்றன.

இருவரும் தூக்கிய குடத்தை
குழந்தை போல் ஏந்திக்கொள்கிறாய்.
குனிந்த தலை நிமிராமல்
நன்றி என்கிறாய்.
காற்று இருவருக்காகவும்
வீசியது அப்போது.

முன் நடந்து பக்கமாகத் திரும்புகிறாய்.
குடத்தின் விளிம்புக்கு மேல்
இரண்டு விழிகள்.
பார்க்க மறந்ததை முழுதாகப்
பார்ப்பது போல...
திரும்பி நடக்கிறாய்.
நிறை குடத்தில் என் முகம்
எடுத்துச் செல்கிறாய்.
உன் முகத்துடன் நான் நிற்கிறேன்.
மெல்ல இருள் வரத்
துவங்குகிறது நம் நிலாக் காலம்.

மறுநாள்
வெயில் கனிந்து இனிப்பாகும்
மாலைப் பொழுது.
சூரிய ஒளி நிரம்பிய குடத்துடன்
நீ மேற்கிலிருந்து வருகிறாய்.
உன் வருகையை அலைகளாய்
உணர்கிறது குளம்.
அகத்தியர் கவிழ்த்த
கமண்டலத்திலிருந்து
நதி துவங்குவது போல...
கவிழ்த்த குடத்திலிருந்து குளம்
துவங்குவதாகத் தெரிகிறது
நீ நீர் அள்ளும் சித்திரம்.
நிரம்பிய குடத்துடன்
மேல் படிக்கு வருகிறாய்.
காத்திருக்கிறாய்.
நான் நெருங்கி வருமுன்...
தமக்கையைப் போல ஒருத்தி
உனக்கு உதவ
ஏதுமறியாத வழிப்போக்கன் போல
நான் உன்னைக் கடக்க முயல்கிறேன்.
சந்தித்து மீள்கிறது நம் பார்வை.
நீ அடக்கிய புன்னகையின் நீட்சியென
தளும்பி வழிகிறது குடத்து நீர்.
மாலைக் காட்சியின் இசைப்பாடல்
காற்றில் மிதக்க
பார்த்துக்கொண்டே நடந்து செல்கிறாய்.

சூரியன் மறையக் காத்திருக்கிறேன்.
மூன்றாம் நாள்.
காற்றின் கொலுசென...
உதிர்ந்த சருகுகள் உடனழைத்து
வருகிறாய்.
நிறைகுடத்துடன் நீ முன் நடக்க...
உன் வீடறிய
யாருமறியாமல் உன் பின் நடக்கிறேன்.
கல்படிகளில் நீர் மோதும்
அலைச் சத்தம்
குடத்தினுள் மெலிதாகக் கேட்க...
இலைகள் உதிரும் மண் சாலையில்
நாம் நடந்தோம்.
23 என்றெழுதிய நீண்ட மரக் கதவின்
முன் நின்று
ஒரு பார்வை.
ஆளரவம் கேட்க
நான் நிற்காமல் நடக்கிறேன்.
திரும்பி வரும்போது
திறந்த கதவின் அருகே
புன்னகையாய் நிற்கிறாய்.

நான்காம் நாள்
ஐந்தாம் நாள்
ஆறாம் நாளென...
குளத்தின் அலைகளை
எடுத்துச்செல்கிறாய்.
ஏழாம் நாள்.
உனது தெருவின் கடைசியிலிருந்த
சிறிய கற்கோவிலில் செடிகள்
அகற்றும் பணி.
அடிக்கடி வெளியில் வருகிறாய்.
மூன்று முறை ஆடை மாற்றுகிறாய்.
வாசலில் அமர்ந்து
வார இதழ் படிக்கிறாய்.
தாகம் என்பதாகச் சைகையில் காட்ட
நீர் நிறைந்த குவளையை
வாசலில் வைக்கிறாய்.
நண்பனுடன் நான் வந்து பருக...
திறந்த கதவின் பின் நின்று
நகம் கடிக்கிறாய்.
எட்டாம் நாள்.
சாலைகள் ஓரம் மண் வெட்டும் பணி.
முன்னதாகவே குளம் வந்து
திரும்புகிறாய்.
பிறகு பன்னீர் பூக்கள் உதிரும்
மண் சாலையில் நடந்து
வயதில் மூத்த பெண்களுடன்
திரையரங்கம் செல்கிறாய்.
நானும் வருகிறேன்.
சிவாஜிகணேசன் அழுது முடித்த
இடைவேளையில்
பீடிப் புகை மணக்க
மஞ்சள் வெளிச்சத்தில்
பார்த்துக்கொண்டோம்.

ஒன்பதாம் நாள்.
சந்தைக் கிழமை.
நாம் பார்த்துக்கொள்ளவில்லை.

பத்தாம் நாள்.
பயிற்சி முகாம் இன்றுடன் முடிகிறது.
ஊர் மன்ற உறுப்பினர்கள் பாராட்ட
நிகழும் எளிய பிரிவு உபசாரம்.
நீராரும் கடலுடுத்த...’
தமிழ்த் தாய் வாழ்த்து துவங்க
நீ தொலைவில் வருகிறாய்.
தக்க சிறு பிறைநுதலும்
தரித்த நறுந் திலகமுமே...’
பாடலின் அர்த்தம் உனக்குமாக...
அந்தியின் திசையிலிருந்து
முன் வருகிறாய்.
எத்திசையும் புகழ்மணக்க
இருந்தபெருந் தமிழணங்கே...
உன் சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து...’
செய்வதறியாது குனிந்த முகத்துடன்
செல்கிறாய்.
மாணவர் கூட்டத்திலிருந்து
உன்னைப் பார்க்கிறேன்.

யாருமற்ற படித்துறை
நிரம்பிய குடத்துடன்
நீ தனியே நிற்கிறாய்.
காயம் போலக் கசிந்தது அந்தி வானம்.
கூட்டத்திலிருந்து விலகி
உன்னை நோக்கி வருகிறேன்.
ஒரு பெண் உதவ,
தூக்கிய குடத்துடன் நடக்கிறாய்.
சுற்றிலும் தேடுகிறாய்.
இலையுதிர்ந்த மரங்களின்
அடியில் நிற்கிறாய்.
நான் வருகிறேன்.
நின்று பேச முடியாது.
ஆட்களின் நடமாட்டம்.
கலங்கிய கண்களுடன் பார்க்கிறோம்.
திரும்பி நீ நடக்க நானும்
உடன் நடக்கிறேன்.
குடத்தினுள் அலைகளின் சப்தம்.
வளைவில் நின்று அழுந்தப் பார்க்கிறாய்.
திரும்பி நடக்கிறாய்.
ததும்பிய குடத்திலிருந்து
வழி நெடுக உதிர்கிறது கண்ணீர்த் துளி.

பேசாது உதிர்ந்த நாவென
காற்றில் அலைகின்றன
ஆலஞ் சருகுகள்.
ஜன கண மன அதி... எனத் துவங்கும்
கீதத்தில் அணைந்தது பொழுது.
நாம் நடந்த பாதைகளிலெல்லாம்
திரும்பி நடக்கிறேன்.

தொலைவில் மயில்கள் அகவ
யாருமில்லாத இருளில்

உதிர்கிறது ஒரு பன்னீர் மலர்.



Saturday, February 10, 2018

கவிதாயினி தாமரை


 ஆண் கவிஞர்கள் கோலோச்சி கொண்டிருந்த தமிழ் சினிமாவில் 1998ல் இனியவளே மூலம் அறிமுகமாகி, "காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே.... வசீகரா என் நெஞ்சினிக்க" என தனது வரிகளில் சிக்ஸர் அடிக்க ஆரம்பித்தார்.

வேறு மொழி கலப்பே இல்லாமல் தமிழில் மட்டுமே எழுதும் கொள்கை கொண்ட ஒரே பாடலாசிரியரும் இவர்தான்.
 இது அவருக்கு திரைத்துறையில் இருபதாம் ஆண்டு தொடக்கம்.  இதுவரை மூன்று பிலிம் பேர் விருதுகளையும், தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை இரண்டு முறையும் பெற்றுள்ளார்.

கெளதம்கெசுதேவ் மேனனின் ஆஸ்தான பாடலாசிரியர் தாமரை தான். "வசீகரா என் நெஞ்சினிக்க, உயிரின் உயிரே, ஒன்றா ரெண்டா ஆசைகள், பார்த்த முதல் நாளே, உன் சிரிப்பினில், நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, முன் தினம் பார்த்தேனே, ஓ சாந்தி சாந்தி, ஓ சாந்தி, உனக்கென்ன வேணும் சொல்லு, பறக்கும் ராஜாளியே, அவளும் நானும்" என உச்ச காதலை அட்டகாசமாக சொல்லும் பாடல்கள் நமக்கு கிடைக்கும்.

இதயத்தை குறிவைத்து அதில் நுழைந்து நிரந்தர இடம் பிடிக்கும் எழுத்துகளுக்கு சொந்தக்காரி தாமரை.

 தற்போது என்னை நோக்கி பாயும் தோட்டாவில் வெளிவந்த "மறுவார்த்தை பேசாதே" பாடல் தற்போதைய வைரல். எனது மிக விருப்ப பாடல் பட்டியலில் முதலிடமும் அதுதான்.

காதலை தொலைக்காத வண்ணம் தன் பாடல்களில் வாழ்க்கையை தொடரும் தாமரைக்கும், அதை அழகாக்கி தரும் கெளதம் வாசுதேவ் மேனனுக்கும் நன்றிகள்.

 தனி வாழ்க்கையின் கடும் பாதிப்புக்கு உள்ளானாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாது மீண்டும் தன் கலை மூலம் விஸ்வரூபம் எடுத்தவர் பாடகி ஸ்வர்ணலதா, அவர் மறைந்து பல ஆண்டுகள் கடந்தாலும், "இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ இருந்திருப்பேன்" போன்ற   உருக்கும் குரலுக்கு நான் எப்போதும் அடிமை.

இப்போது தாமரை அந்த இடத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறார்