Friday, April 9, 2021

பொர்மாநெக்கும் தமிழ்ப் பெண்டிரும்

 ஒரு வெள்ளைக்காரனுடன் ஒரே வீட்டில் குடியிருந்த அனுபவம் எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கும்? எனக்குக் கிடைத்தது. 25 வருடங்களுக்கு முந்தைய கதையைச் சொல்கிறேன்.

தஞ்சாவூர் மேல வீதியில் பாலோபா சந்தில் குடியிருந்தோம். தஞ்சாவூர் சந்துகள் பிரசித்தி பெற்றவை. புராதனத் தன்மைகொண்டவை. விசித்திரமான மராட்டியப் பெயர்களுடன் கூடிய தஞ்சாவூர் சந்துகளில், தலைமுறை தலைமுறையாக மனிதர்களும் மாடுகளும் வசித்து வருகிறார்கள். அழகான பெண்களும், அசிங்கமான சாக்கடைகளும், தண்ணென்ற குளிர்ச்சியும்கொண்ட எந்தச் சந்தில் நுழைந்தாலும் ஒரே மாதிரி தோற்றத்துடன் திகைப்பை உண்டு பண்ணும்.

வேடிக்கையாக ஒரு கதை சொல்வது உண்டு; சந்துக்கு வெளியே தெருவில் ஒரு மாமி கோலம் போட்டுக்கொண்டு இருந்தார். அந்த வழியே ஓர் ஆசாமி கையில் ஒரு துண்டுப் பேப்பருடன் முகவரி விசாரித்து இருக்கிறார். மாமி கோலம் போடுவதை நிறுத்திவிட்டு அவருக்கு வழி சொல்லி அனுப்பியிருக்கிறார். அடுத்த வருடம். அதே தெரு. அதே சந்து. அதே மாமி கோலம் போடுகிறார். ஓர் ஆள் முகவரி கேட்டு துண்டுச் சீட்டை நீட்டினாராம். மாமி அமைதியாகக் கேட்டாராம்: ‘இன்னுமா அந்தச் சந்தைக் கண்டுபிடிக்க முடியல?’

அதற்காக, தஞ்சாவூர்ச் சந்துகளை இளக்காரமாக நினைத்துவிடாதீர்கள். பெரிய எழுத்தாளர்கள், சங்கீத வித்வான்கள், பண்டிதர்கள், கலைஞர்கள் எல்லாம் இங்கே வந்திருக்கிறார்கள். அதுசரி. வெள்ளைக்காரன் விஷயம் என்ன என்றுதானே கேட்கி றீர்கள்? கொஞ்சம் இருங்கள். ஒரு வாய் வெற்றிலை போட்டுக்கொண்டு வந்துவிடுகிறேன். வெற்றிலை போடாமல் கதை சொல்வதாவது?

அப்போது பல்கலைக்கழகத்தில் நான் ஒரு பொறுப்பான பதவியில் இருந்தேன். வெளிநாடுகளில் இருந்து ஆய்வின் நிமித்தமும், தமிழ் படிக்கவும், வெள்ளைக்காரர்கள் நிறையப் பேர் வருவார்கள். அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்துகொடுக்கும் பொறுப்பைத் துணைவேந்தர் (வாட் எ நேம்!) என்னிடம் ஒப்படைத்துவிடுவார்.

ஒருநாள். நல்ல வெயில். செக்கோஸ்லோவேகியாவில் இருந்து ஓர் இளைஞன் வந்து சேர்ந்தான். பால் வடியும் முகம். அப்படியே தக்காளிபோல் கன்றிப்போய் இருந்தது. துணைவேந்தரிடம் என்ன சொன்னான் என்று தெரியவில்லை.

“அவன் பெயர் யரசலாவ் பொர்மானெக். அவனுக்கு விடுதி வாழ்க்கை வேண்டாமாம். ஏதாவது ஒரு தமிழ்க் குடும்பத்துடன் வாடகை விருந்தாளியாகத் தங்கிக்கொள்ள விரும்புகிறான். பேசாமல் ஒரு பெரிய வீடாகப் பார்த்து, அவனை உன் வீட்டிலேயே தங்கவைத்துக்கொள்ளேன். ஒரு வருஷம்தானே…”

நான் தலையாட்டினேன். என் மனைவிக்கு இந்த ஏற்பாடு பிடித்திருந்தது. அய்யங் கடைத் தெரு அருகிலேயே ஒரு தனி வீடு கிடைத்தது. 500 ரூபாய் வாடகை. திண்ணை. திண்ணையை ஒட்டி ஒரு தனி அறை. பெரிய கூடம். இரண்டு படுக்கை அறைகள். ஸ்டோர் ரூம். பூஜை அறை. பின்புறம் கிணறு. திண்ணையை ஒட்டிய தனி அறையை பொர்மானெக் குக்கு ஒதுக்கிவிட்டோம்.

“ஒண்டிக்கட்டைதானே. அந்த ரூம் போதுங்க அவனுக்கு. அவன் 300 ரூபா கொடுக்கட்டும். நாம் 200 கொடுப்போம்” என்றாள் என் மனைவி.


“இது அநியாயம்” என்றேன். ஆனால், இதற்கு பொர்மானெக் மறு பேச்சு இன்றி ஒப்புக்கொண்டான். மீந்துபோன குழம்பு, சட்னி வகையறாக்கள், ஆறிய சாதம், கூட்டு எல்லாம் எடுத்துவைத்து பொர்மானெக் குக்குப் பரிமாறினாள்.

“எப்படி இருக்கு எங்கள் வீட்டுச் சமையல்?” என்று கேட்டாள் என் மனைவி. பொர்மானெக் படுகூர்மையானவன். என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியபடி, “நான் ஒங்க வீட்டு தோத்தோ!” என்றானே பார்க்கலாம். என் மனைவி முகம் போன போக்கு!

பொர்மானெக்கின் அறை புத்தகங்களாலும் இசை ஆல்பங்களாலும் நிரம்பி வழிந்தது. அலுவலகத்தில் இருந்து வந்ததும் அவன் அறைக்குள் போய்விடுவான். அகநானூறு, புறநானூறு போன்ற பழைய தமிழ் இலக்கியங்களில் இருந்து பெண் களைப்பற்றிய குறிப்புகள் சேகரிப்பான்.

“காக்கை பாடினியார் ஆணா, பெண்ணா?” என்று கேட்டான் ஒருநாள். காக்கையாவது… பாடுவ தாவது? எனக்கு என்ன தெரியும்?

வாசல் பக்கம் ஜன்னலைச் சாத்தியே வைத்திருந்தான். “குழந்தைகள் மட்டுமல்லாமல் சில சமயம் பெரியவர்கள்கூட அதன் வழியே எட்டிப் பார்க்கிறார்கள். எனக்குச் சங்கோஜமாக இருக்கிறது” என்றான். பிறருடைய அந்தரங்கத்தைத் திருட்டுத்தனமாகப் பார்ப்பது எங்களுடைய பிறவிக் குணம் என்று அவனிடம் எப்படிச் சொல்வது?

பொர்மானெக் வந்துவிட்டால், திண்ணைகளில் உட்கார்ந்து இருக்கும் பெண்கள் பேச்சை நிறுத்தி விட்டு, அவனையே பார்த்துக் குசுகுசுவென்றுபேசிக் கொள்வார்கள். பொர்மானெக் யாரையும் ஏறிட்டுக்கூடப் பார்க்க மாட்டான். முகத்தில் நாணம் கலந்த சிரிப்புடன் தன் அறைக்குள் புகுந்து கொள்வான். அங்கே அவனுக்காக பழந்தமிழ்ப் பெண்டிர் கூட்டம் காத்திருக்கும்.

“பழங்காலத்துத் தமிழ்ப் பெண் ஒருத்தி முறத்தால் புலியை விரட்டினாளாமே… முறம் எப்படி இருக்கும்? அது பயங்கரமான ஆயுதமா?” என்று கேட்டான். முறத்தைக் கொண்டுவந்து காட்டினேன். ஏகத்துக்கும் சந்தோஷப்பட்டான்.

“அடடே! இதைவைத்துப் புலியை எப்படி விரட்டி இருப்பாள்?”

“விரட்டியது முறம் அல்ல; அவள் வீரம்!” என்றேன்.

என் மனைவிக்குத்தான் கோபம். “ஐயோ! அது அழுக்கு முறம் ஆச்சே. அதைக் கொண்டுபோய் அவனிடம் காட்டினீர்களாக்கும். என்னைப்பற்றி என்ன நினைப்பான்?”

பீத்தோவனின் இசை சிம்பொனியை பொர்மானெக் எனக்கு, அறிமுகப்படுத்திவைத்தான். தியாகய்யரின் கீர்த்தனைகளைக் கேட்கும்போது ஏற்படும் அதே பரவசம் எனக்கு பீத்தோவனிடமும் கிடைத்தது. பொர்மானெக்கின் அறை எனக்குப் பொழுதுபோக்கு மட்டுமின்றி, மனைவியிடம் இருந்து தப்பிக்கும் உபாயமாகவும் மாறியது.

“எப்பப் பார்த்தாலும் என்ன அவன் ரூமிலேயே பழியாக் கிடக்கறீங்க? மியூஸிக் வால்யூமைக் குறைச்சுவெக்கச் சொல்லுங்க. ஒரே இரைச்சல்!”

இசை என்னை வேறு ஓர் உலகுக்கு இழுத்துச் சென்றது. அந்த உலகத்தில் ரேஷன் கடை இல்லை. அலுவலகம் இல்லை. சின்னக் கவலைகள் இல்லை. மனைவி இல்லை. ஒரே சமயத்தில் ஆயிரம் வயலின்கள் உச்சத்தைத் தொட்டன. பொர்மானெக் ஆட ஆரம்பித்து விட்டான். நானும் ஆட ஆரம்பித்திருந்தேன்.

திடீரென்று கதவை யாரோ இடிக்கும் சத்தம். கோபத்துடன் திறந்தேன். என் மனைவியின் கண்களில் பொறி பறந்தது.

“மணி என்ன தெரியுமா?” – அவள்.

“தெரியவேண்டியது இல்லை!” – நான்.

“உங்களுக்கு வேண்டாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் தூங்க வேண்டாமா? ராத்திரி ஒரு மணிக்கு இப்படி அவனோடு சேர்ந்துகொண்டு கூத்தடிக்கிறீர்களே. இது நியாயமா?”

சாதுவான நாய்க்குட்டி மாதிரி போய்ப் படுத்துக்கொண்டேன். பூட்டப்பட்ட அறைக்குள் இருந்து பூம் பூம் என்று இசையின் நீர்வீழ்ச்சி இடுக்கு வழியே கசிந்து வந்து என்னை நனைத்தது. என் மனைவிக்கு அவன் மீது எரிச்சல் அதிகமாகிக்கொண்டே வந்தது.

பொர்மானெக்குக்குப் புரிந்தது. ஆனால், ஏதோ பரீட்சைக்குப் படிப்பவன்போல் தமிழ்ப் புத்தகங்களை விழுந்து விழுந்து வாசித்துக்கொண்டு இருந்தான்.

“இவ்வளவு தூரம் கடல் கடந்து வந்து தமிழ் படிக் கறதுல உனக்கு என்ன பிரயோஜனம்?” என ஒருநாள் கேட்டேன்.

“உங்கள் நாட்டில்தான் படிப்புக்கும் வேலைக்கும் முடிச்சுப் போட்டுவைத்திருக்கிறீர்கள். எங்கள் ஊரில் மனசுக்குப் பிடிக்கிறதைப் படிப்போம். ஏதோ ஒரு வேலை. கொஞ்சம் பணம். கொஞ்சம் புத்தகம். நிறையப் பயணம். பணம் சேர்ந்ததும் மறுபடி ஊர் சுற்றக் கிளம்பிடுவோம்!”

ஒருநாள் சாயங்காலம். எங்கள் வீட்டில் எரிமலை வெடித்தது. “உங்க ஃப்ரெண்டால எனக்கு இன்னிக்கு மானம் போச்சு!” என்று குதித்தாள் என் மனைவி.

“என்னாச்சு சொல்லு?”

“பொர்மானெக் மத்தியானம் வீட்டுக்கு வரும்போது கூடவே ஒரு காதல் ஜோடியைக் கூட்டிக்கிட்டு வந்துட் டான். ரெண்டும் ஒண்ணோடு ஒண்ணா ஒட்டிக்கிட்டே வருதுங்க. அதுங்க ரெண்டும் நம்ம வீட்டுக்கு முன்னாடியே ஒருத்தரை ஒருத்தர் கட்டிப்பிடிச்சு வாயைக் கவ்விட்டு அப்டியே… சீச்சீ… எவ்வளவு நேரம். சரிதான் விலகிடுச் சுங்கன்னு பார்த்தா, மறுபடியும் கட்டிப்பிடிச்சு… கண்றாவி. தெருவே வேடிக்கை பார்க்குது. வாயைப் பொத்திட்டுச் சிரிக்குதுங்க!”

“இலவசமா ஒரு சினிமா!” – நான் பாடினேன்.

“ஏங்க உங்களுக்கு வெட்கம், மானமே கிடையாதா?”

“பப்ளிக்ல சண்டை போடலாம். முத்தம் கொடுக்கக் கூடாதா? நாம வெளியில போகும்போது சில சமயம் நீ ரொம்ப அழகா இருப்பே. மஞ்சள் வெயில் காயும். எனக்கு உன்னை அப்படியே கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கணும்னு தோணும்!”

“சீ! வெட்கம் கெட்ட மனுஷன்.”

நினைத்தபோது எல்லாம் பறவைகள் முத்தம் கொடுத் துக்கொள்வது இல்லையா? மனிதர்களுக்கு மட்டும் ஏன் இந்த ஹிப்பக்கிரஸி? முத்தத்தைப் பாலியல் சமா சாரத்தோடு முடிச்சுப் போடுவது முட்டாள்தனம் அல்லவோ? ஒருத்தரை ஒருத்தர் நேசிக்கும் ஆணும் பெண்ணும் தங்களைக் கௌரவித்துக்கொள்ளும் உயர்ந்த செயல் அல்லவா அது?

“என்ன யோசனை?” என்று கேட்டான் பொர்மானெக். நடந்ததைச் சொன்னேன்.

“முத்தம் என்பது ஒரு மொழி. அதை எங்கு பேசினால் என்ன?” என்றான் சுருக்கமாக.

“கோபால்! உடுக்கை எங்கே கிடைக்கும்?” – என்று கேட்டான் ஒருநாள் பொர்மானெக். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.

“என்னது… உடுக்கையா?”

“அதான்… உங்க சிவபெருமான் கையில் வைத்திருக்கிறாரே. அது அந்தக் கால இசைக் கருவியாம். நான் பார்க்க வேண்டும் அதை” அவன் கண்களில் ஆர்வம் பளபளத்தது.

“ரொம்பப் பழங்காலத்து இசைக் கருவி ஆச்சே அது. இப்ப கிடைப்பது கஷ்டம்” என்று மழுப்பி தட்டிக் கழித்துவிட்டேன்.

ஒரு வாரம் கழிந்திருக்கும். கூடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன்.

“கோபால்!” உற்சாகமாகக் கூவியபடியே உள்ளே நுழைந்தான் பொர்மானெக். நேராக நான் சாப்பிடும் இடத்துக்கே வந்துவிட்டான். என் மனைவி முகம் சுழித்தாள்.

“கோபால், இதோ பார்!” தன் கைப்பையில் இருந்து எதையோ வெளியே எடுத்தான்.

உடுக்கை. நிஜமான உடுக்கை!

“சாப்பிட்டுட்டு என் அறைக்கு வா.”

“கர்மம்! யாரோ பேய் விரட்டும் பூசாரிகிட்டேர்ந்து வாங்கி வந்திருப்பான்போல!” என்றாள் என் மனைவி.

நான் பொர்மானெக் அறைக்குள் நுழைந்தேன். அங்கே செக்கச் செவேல் என்று வெற்று உடம்போடு நின்றுகொண்டு இருந்தான் பொர்மானெக். இடுப்பில் புலித் தோல் மாதிரி வண்ணம் தீட்டிய துண்டு. காலில் சலங்கை. கையில் உடுக்கை.

ரெக்கார்ட் பிளேயரில் இருந்து பீத்தோவனின் அற்புதமான இசை பீறிடுகிறது.

“கோபால்! கவனி. எங்கள் இசையோடு உடுக்கை ஓசையும் சேர்ந்தால் எப்படி இருக்கும் என்று சோதனை செய்யப் போகிறேன்.”

உடுக்கை ஒலித்தது. வயலின்கள் வீறிட்டன. கால் சலங்கை ஒலிக்க… பொர்மானெக் ஆடலானான். மெள்ள மெள்ள இசையின் ஸ்தாயி உயர உயர… அவன் ஆட்டத்தின் வேகம் கூடிக்கொண்டே போயிற்று. அவனுடைய தலைமுடி சுழன்றது. சிவனின் ஊழித் தாண்டவம்!

“தென்னாடுடைய சிவனே போற்றி!

என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!” கை கூப்பி வணங்கினேன்.

கதவு இடிபடும் ஓசை. திறந்தேன். பத்ரகாளியாக என் மனைவி. அவளுக்குப் பின்னால் எதிர் வீட்டு, பக்கத்து வீட்டு மனிதர்கள்.

“குழந்தைகள் பரீட்சைக்குப் படிக்கிறாங்க. இங்கே என்ன கூத்தடிக்கிறீங்க. ஒண்ணு இந்த வீட்டுல அவன் இருக்கணும். இல்லேன்னா நான் இருக்கணும். சார், நீங்கள்லாம் போங்க… நான் கவனிச்சுக்கிறேன்!”

அவர்கள் வெளியேறினார்கள். என்ன நடந்திருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தது. என்ன உலகமடா இது. தினசரி ராத்திரி குடித்துவிட்டு வந்து பெண்டாட்டியை உதை உதை என்று உதைக்கிறான் ஒருத்தன். இந்தத் தெருவில் ஒரு பயல் அவனைக் கேட்டது கிடையாது. நாங்கள் இசை கேட்பது இடைஞ்சலாகப் போய்விட்டதா?

பொர்மானெக் பிடிவாதம் பிடித்தான். விடுதி வேண்டாமாம். நல்ல வேளை. அரண்மனையின் ஒரு பகுதியில் சிதிலம் அடைந்த பழைய கட்டடத்தில் ஓர் அறை இருந்தது. அது மன்னர் பரம்பரையின் நிர்வாகத்தில் இருந்தது. கேட்டதும் கொடுத்துவிட்டார்கள். பகலில்கூட இருட்டாக இருந்த அந்த அறைக்குக் குடிபெயர்ந்தான் பொர்மானெக். உடைந்த பல்லக்குகள். நூலாம்படை தொங்கும் பழங் கால ஓவியங்கள் மாட்டிய சுவர்கள். அங்கே நிலவிய அமைதியில் காலம் நகராமல் நின்றுபோயிருந்தது.

“ஆஹா… பிரமாதம்!” என்றான் பொர்மானெக்.

அங்கே இருந்த வாட்ச்மேன் என் காதில் கிசுகிசுத்தான். “சார்! செத்துப்போன ராஜா, ராணிகளோட ஆவிங்க எல்லாம் இங்கேதான் அலையுது!” நான் பொர்மானெக்கைப் பார்க்கப் போவதைக் குறைத்துக் கொண்டேன்.

பொர்மானெக்கைப் பார்த்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. நானும் என் மனைவியும் ஷாப்பிங் போய்விட்டு கீழ ராஜ வீதியில் இருந்த டாக்டர் நரேந்திரன் கிளினிக் நோக்கிச் சென்றுகொண்டு இருந்தோம்.

போகிற வழியில் தஞ்சை பிரகாஷ் கடையில் ஒரே சிரிப்பு. கூத்து. சுந்தர்ஜி, முத்து, விச்சு, செல்லத்துரை, கவிஜீவன்… நடுநாயகமாக பொர்மானெக்.

எங்களைப் பார்த்து எழுந்து வந்தான்.

“எப்படி இருக்கீங்க?” – என் மனைவியைப் பார்த்து மழலைக் குரலில் கேட்டான்.

என் மனைவி அவனைப் பார்த்துச் சிநேகிதமாகச் சிரித்தாள்.

“நீங்க எப்படி இருக்கீங்க பொர்மானெக்? ஒருநாள் எங்க வீட்டுக்கு வாங்க!” என்றாள்.

அவள் கண்கள் கலங்கிவிட்டன.

பொர்மானெக்கின் விழிகள் வியப்பால் விரிந்தன. துரத்தாத குறையாக பொர்மானெக்கை வீட்டைவிட்டு அனுப்பிவிட்டு என்ன உருக்கம்!

என்னை நெருங்கிக் காது அருகே கிசுகிசுத்தான்.

“இந்திய மனைவிகள்பற்றிய ஆய்வுக்கு எனக்கு விஷயம் கிடைத்துவிட்டது!” 


-தஞ்சாவூர்க்கவிராயர் 

Wednesday, March 17, 2021

கயிற்றரவம் -போகன் சங்கர்

 

எனக்கு நண்பர்களே இல்லை.அதற்காக ஒரே ஒரு ஆழ்ந்த நட்புக்காக நான் முயற்சிக்காமல் இல்லை.அப்படிப்பட்ட ஒரு உறவுக்காக நான் ஏங்காமல் இருந்த நாளே இல்லை,நினைவு தெரிந்த நாள் முதல் என்னால் எங்கேயும் என்னை பொருத்திப் போக முடியவில்லை. மூன்று பேர் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தால் நான் போன உடன் மவுனமாகிவிடுவார்கள்.மவுனம் கனத்து மூச்சுத் திணறி நீ போகிறாயா அல்லது நாங்கள் போகட்டுமா?என்பது போல் ஒரு பார்வை என் மேல் விழும்.தயவு செய்து போய்விடேன் என்று கண்கள் கெஞ்சும்.பெரும்பாலும் நானே வந்துவிடுவேன்.விடாப்பிடியாக அமர்ந்திருந்தால் ரத்தக் கோரை வருகிற அளவுக்குச் சண்டை வந்துவிடும்.வெளியில் மட்டுமல்லாமல் வீட்டிலும் அப்படித்தான்.நான் போகிற வரை சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிற வீடு என் செருப்பு சத்தம் கேட்டதும் உறைந்து போய்விடுவதை என்னால் உணர முடியும்.என் செய்கையில் உடல் மொழியில் முக பாவனையில் ஏதோ ஒன்று மனிதர்களை விலக்கி வைத்துக்கொண்டே இருந்தது.இவ்வளவுக்கும் பேச்சில் நான் மிகக் கவனமாக இருப்பேன்.ஆனால் ஒருவர் பேச்சில் கவனமாக இருக்க முயற்சிக்கும்போது பேசவே முடிவதில்லை. அவர் வெறுமனே முகமன்கள் சொல்லும் ஒரு பொம்மையாகிவிடுகிறார் ஆண்கள், பெண்கள், ஏழைகள்,பணக்காரர்கள் யாருடனும் என்னால் பொருந்திப் போகமுடியவில்லை.ஒருமுறை திருவண்ணாமலைக்கு ஓடிப் போய் இருந்தேன்.அங்கிருந்த பிச்சைக்காரர்கள், சாமியார்கள் ,போலீஸ் காரர்கள் எல்லோரும் போ போ என்று என்னை விரட்டினார்கள்.வழக்கமாக இதுபோன்று ஓடிவந்துவிடுகிற பரதேசிகளிடம் கனிவுடன் நடந்துகொள்ளும் ரமணாஸ்ரமத்தில் கூட என்னிடம் கடுமையாக பாரா முகமாக நடந்துகொண்டார்கள்.நான் இருந்ததையே கவனிக்காதவர்களாக கவனிக்க விரும்பாதவர்களாக இருந்தார்கள்.சாலையில் ஒரு பூனையோ நாயோ அடிபட்டு இறந்து கிடக்கும்போது நாம் கவனிக்காது போல் போவோம் இல்லையா?அல்லது கை கால் விரல்கள் முற்றிலும் உதிர்ந்துபோன ஒரு தொழு நோய்ப் பிச்சைக்காரன் அல்லது முகமெல்லாம் கொழுப்புக் கட்டிகள் தொங்கும் ஒரு குரூரனைக் காணும்போது ஏற்படும் சிறிய அசூயையோடு அவர்கள் என்னைக் கடந்துபோனார்கள்.
திருவண்ணாமலையில் ஒரு சாமியார் ஒருவர் "உன்னுடைய ஜன்ம நக்‌ஷத்திரம் என்ன? ஆயில்யமோ?"என்றார்.
நான் வியந்து " ஆமாம்.எப்படி சரியாகச் சொன்னீர்கள்?"என்றேன்.
"பாம்பு படம் எடுத்து பார்ப்பது போல் கழுத்தை நீட்டி நீ பார்ப்பது.ஆதிசேஷனின் நட்சத்திரம்.தர்மரின் நட்சத்திரம் என்றும் சிலர் சொல்வதுண்டு.கேட்டை என்பதும் உண்டு.எப்படியானாலும் ஆயில்யம்,கேட்டை,ரேவதி மூன்றும் ஒரே இனம் தான்.தர்மராஜா பாரதத்தில் பாண்டவர்களில் நட்பையோ காதலையோ பெறாது கடைசி வரை வாழ்ந்து மறைந்தவர்.கர்ணனைக் கூட நேசிப்பவர்கள் இருந்தார்கள்"
நான் "அது ஏனப்படி?" என்றேன்.
அவர் "அது அப்படித்தான்.உனது ஆழத்தில் நெளிகிற எண்ணங்களை பார்க்கக்கூடிய ஒருவர் முன்னால் உன்னால் இயல்பாக இருக்க முடியுமா என்ன?"
நான் "இந்தப் பிறவி முழுவதும் இப்படித்தானா?" என்றேன்.
"இனம் இனத்தோடு போகவேண்டும்.இது ஆநிரைகளின் நிலம்.பசுக்கூட்டம் நடுவே ஒரு சர்ப்பம் வந்தால் அவை எப்படி இயல்பாக இருக்கும்?நீ உன் நிலத்துக்குப் போ."
"என் நிலம்?"
"நாகர்கள் வசிக்கும் நிலம்.கேரளம்"
என்னால் கேரளத்துக்குப் போகமுடியவில்லை.என் விதி அதற்கு அனுமதிக்கவில்லை. ஆனால் அதன் எல்லையைத் தொட்டு வசிக்கும் நிலை வந்தது.பணி நிமித்தம்.ஆனால் இங்கு வந்தும் என் ஜாதகம் பெரிதாக மாறியது போல் தெரியவில்லை. நான் மாலைகளில் அதிகம் ஆள் வராத கோவில்களில் சென்று அமர்ந்திருப்பேன்.பெரும்பாலும் நாகர்காவுகளில்.அது எனக்கொரு அமைதியை அளித்தது.சிறிதும் பெரிதுமாய் வைக்கப்பட்டிருக்கும் நாகர் சிலைகளைப் பார்த்தால் ஒரு நிம்மதி.சீராக வரத்தொடங்கும் மூச்சு.அப்போது அது ஒரு பாம்பின் சீறல் போல இருப்பதாக எனக்கு தோன்றியது.அப்படியொரு மாலையில் அந்தி தன் கடைசிச் சிகப்பையும் மேற்கில் கரைத்துக்கொண்டிருந்த வேளையில் கையில் ஒரு நடுங்கும் தீபத்தோடு அவள் வந்தாள்.நாகர் சிலைகளின் முன் ஏற்றிவிட்டு "நீங்கள் மார்த்தாண்டம் மருத்துவமனையில் வேலை பார்க்கிறீர்கள்.இல்லையா?நான் பார்த்திருக்கிறேன்"
நான் அந்த குறைந்த வெளிச்சத்தில் அவளைப் பார்க்க முயன்றேன்.
"இங்கே அடிக்கடி வந்து அமர்ந்திருப்பதையும் பார்த்திருக்கிறேன்"
நான் பேசவில்லை.ஒரு நிழலுடன் என்ன பேசுவது?
"நாளை மருத்துவமனை வருவேன்."
நான் அப்போதும் பேசவில்லை.இப்போது நிழல் கூட இல்லை.அகல் கூட அணைந்து தூய இருள்.சுவர்க்கோழிகளின் கீறல் ஒலிகள் மட்டும்
மறு நாள் அவள் மருத்துவமனைக்கு வந்தபோது சரியாகப் பார்க்கமுடிந்தது.ஆனால் எதற்காக வந்தாள் என்பது அதிர்ச்சியை அளித்தது.
"மூணு மாசத்துக்கு ஒருமுறை ஒரு செக்கப் வருவது" என்று அவள் சிரித்தாள்."தினமொரு பாம்பு என்னைத் தீண்டுகிறது.அதன் விஷம் இறங்கியிருக்கிறதா? என்று பார்க்கவருவது.என்ன?என் மேலிருந்த மரியாதை போய்விட்டதோ?"அவள் சிரித்தாள்.நான் பதில் பேசவில்லை.
ஆனாலும் அடுத்து ஒவ்வொரு முறை மருத்துவமனை வரும்போதும் கோயிலில் சந்திக்கும்போதும் அவள் என்னிடம் ஐந்து நிமிடமாவது பேசாமல் போக மாட்டாள்.
முதலில் தொந்திரவாக இருந்தது.பிறகு வியப்பாக மாறிற்று.நான் அவளது இந்த சம்பாஷணைகளுக்காக மனதுக்குள் காத்திருக்கவும் ஆரம்பித்தேன்.இவள் மட்டும் ஏன் இப்படி வித்தியாசமாக இருக்கிறாள்?என் மீது பிறர்க்கு ஏற்படும் விலகல் உணர்ச்சி இவளுக்கு ஏன் ஏற்படவில்லை?
ஒரு நாள் அதற்கு விடை கிடைத்தது.
ஒரு நாள் மாலை அந்தியில் வழக்கமாக சென்று அமர்ந்திருக்கும் கோயிலில் சென்று அமர்ந்திருந்தேன்.உட்கார்ந்தவாறே தூங்கிவிட்டேனா என்னவோ திடீரென்று தோன்றி விழித்தேன்.காலை யாரோ குளிர்ந்த விரலால் தொடுவது போன்ற ஒரு உணர்ச்சி.சுதாரித்துக் கொள்வதற்குள் அது என் இடையைச் சுற்றி விட்டது.சுற்றியபடியே சாவதானமாக படம் எடுத்து சுற்றிலும் பார்த்தது.படத்தைத் திருப்பி ஒரு குழந்தை போல் நாய்க்குட்டி போல் என் முகத்தையும் பார்த்தது.நான் உறைந்து போய் அமர்ந்திருந்தேன்.
அப்போது ஒரு சிரிப்பொலி கேட்டது.
"நல்லாருக்கே.ஆச்சியும் ஐய்யரும் ஆலிங்கனம்"
நான் அதிகம் அசைக்காமல் தலையைத் திருப்பி "பாரு",என்றேன்.
அவள் " ஒன்றுமில்லை.இனம் இனம் தேடி வந்தது"என்றாள்.பிறகு என் இடுப்பைச் சுற்றிக்கொண்டிருக்கும் அதை நோக்கி "போ" என்றாள்."அதுதான் நான் வந்துவிட்டேன் அல்லவா?"
அதைக் கேட்டதும் உடையவர் உத்தரவைக் கேட்ட ஒரு பணியாள் போல அது சரசரவென்று தன் பூட்டை விலக்கிக்கொண்டு கீழே இறங்கி மறைந்தது.
நான் விழித்து "நான் கண்டது நிஜமா?" என்றேன்.
அவள் "என்ன சந்தேகம்? கண்டது கயிறோ பாம்போ என்றா?"என்றாள்.
பிறகு தன் குளிர்ந்த கரங்களால் என் நெற்றியில் சந்தனக்குறியை இட்டாள்." உஷ்ணம் உஷ்ணேனு சாந்தி.விஷம் விஷத்தால் தீரும்"என்றாள்.என்னைக் கைகோர்த்து எழுப்பி
"போகலாம்.நானும் ஆயில்யம்தான்"என்றாள்.

Tuesday, March 16, 2021

வண்ணதாசன் சக மனிதர்களுக்கு அன்பை ஊட்டும் தாய்

 கல்யாண்ஜி என்ற வண்ணதாசனின் மொழி ஒன்றே ஒன்றுதான் அது அன்பு,

ஒவ்வொரு நொடியையும் நேசத்தால் நிரப்பும் எழுத்து அவருடையது,

ஒரு மழலையின் சிரிப்பு போல உடனே ஈர்த்துவிடும் தன்மை கொண்டது அவரது அழகியல்.

இவரின் இயற்பெயர் கல்யாண சுந்தரம், 1947ல் திருநெல்வேலியில் பிறந்தவர். வங்கி பணி செய்து ஓய்வு பெற்றவர். அவரது எழுத்துக்களை போலவே அதிர்ந்து பேசாத, காண எளிதான, தென்றல் போன்ற மிக மென்மையான மனிதர், இவரின் மொழி நடை அபாரமானது. 

உரைநடை எழுத்துக்களை கூட கவிதை போன்றே வெளிப்படுத்தும் தன்மை இவருக்கு உண்டு. கோபமோ, சலிப்போ, எரிச்சலோ இல்லாத, நிகழப்பவைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும் வகை எழுத்துக்கள் இவருடையவை.  

இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப் பட்டிருக்கின்றன. இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். விஷ்ணுபுரம் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் எனும் அமைப்பு தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது, சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதான சாகித்திய அகாதமி விருது போன்றவைகளை பெற்றிருக்கிறார். வண்ணதாசன் எழுத்துக்கள் உங்களை அடிமைப்படுத்தி அமைதியான, நிதானமான உலகத்திற்கு கொண்டு செல்லக்கூடியவை.

 இனி அவர் எழுதியதில் எனக்கு பிடித்த சில வரிகளை காணலாம்

 ஏந்திக் கொள்ளத் தெரிந்த உள்ளங்கைக்கு எல்லாம் பூவே

என்ற அவரது எழுத்துக்களே, அவரது படைப்புகள்.

 வண்ணதாசன் ஒரு ஜென்னும் கூட, தத்துவங்கள் கொட்டி கிடக்கும், உதாரணமாக    

உங்கள் பிடி மண்ணை

நீங்கள் இட்டால் போதும்

மற்றவை அனைத்தையும்

மண்புழுக்கள் பார்த்துக் கொள்ளும்


இன்னொன்றையும் பாருங்கள், அழகியலும் ஜென்னும் இணைந்து பயணிக்கும் வரிகள் இவை

சுள்ளி பொறுக்க வந்த  முதியவர்,

மழை பெய்த ஈரத் தரையில்,

குச்சியால் கீறிக்கொண்டே போகிறார்.

இதை விடச் சரியாக

அவருடைய தன் வரலாறை

அவரால் எழுத முடியாது.

 வாழ்வின் நிகழ்வுகளை ஒரே வரியில் புரியவைக்கும் வல்லமை அவரது எழுத்துக்களுக்கு உண்டு

மகிழ்ச்சியைப் போல, வருத்தமும் ஒரு சம்பாத்தியம் தான் என்கிறார்


அவசர கதியில் இயங்கும் மனிதகுலத்தை பார்த்து அவர் கேட்கும் கேள்வி

மனிதர்கள் தங்கள் மேல் உதிரும் பூக்களையும், பழுப்பு இலைகளையும் ஏன் இவ்வளவு உடனுக்குடன் அப்புறப்படுத்தி விடுகிறார்கள்..?

இப்போது அன்பெனப்படுவது வெறுமனே அன்பல்லவாம், அது இப்படித்தான் இருக்கிறதாம்

அன்பாக இருப்பது மட்டும் போதவில்லை. கொஞ்சம் போலி வார்த்தைகள், கெட்டிக்காரத்தனம், அதிகாரம், கொஞ்சல், கெஞ்சல் இப்படி ஏதாவது ஒன்றுடன் கலந்து காட்ட வேண்டியிருக்கிறது. வெறும் அன்பு சலிப்புத் தட்டி விடுகிறது

 காற்றின் உருவம் உங்களுக்கு புரியவில்லை என்கிறார்

காற்றைப் பார்த்தேன்எனறு சொன்னேன்.

நீங்கள் நம்பவில்லை.

சருகுகள் நகர்ந்தனஎன்று சொன்னேன்.

 நீங்கள்  நம்பினீர்கள்.

எதையும் நம்பும்படியாகச்

சொல்லவேண்டியதிருக்கிறது

உங்களுக்கு

மனித மனதின் ஈரம் பற்றி இப்படி எழுதுகிறார்

மனுஷன் உடம்புல வியர்வையும்,கண்ணுல கண்ணீரும் இருக்குற வரை உலகத்துல எப்படிப்பா ஈரம் வத்திப் போகும்?”

 நெருங்கவும் விலகவும் முடியாத இந்த வாழ்வில்தான் கொட்டி கிடைக்கிறதாம் வழியெங்கும் சுதந்திரம்

யாரிடமும் விலகி விடவும் முடிவதில்லை

நெருங்கி விடவும் கூடுவதில்லை

என்பது தான் துயரமான இன்னொரு நிஜம்.!

 பிடித்ததை செய்துகொண்டே இருங்கள் என்பதை எப்படி சொல்கிறார் பாருங்கள்

எழுதாவிட்டால் பரவாயில்லை,படியுங்கள். படிக்காவிட்டால் பரவாயில்லை, வரையுங்கள். வரையா விட்டால் பரவாயில்லை,பழகுங்கள்.ஏதோ ஒரு வகையில் மனதின் கதியில் இயங்கிக் கொண்டிருங்கள். அதுவே போதுமானது

ஒரே நொடிதான் அன்பாக, நெகிழ்வாக மாற்ற போதுமானது என்கிறார்

சொற்ப நேரத் தூறல் தான்.

எல்லா இலையும் நனைந்திருந்தது

பாரதிக்கு எதிர்புறமாக நின்று

எல்லாரும் பெரிதினும் பெரிது கேட்டால் சிறிதினும் சிறிதை யார் தான் கேட்பது?  நான் கேட்கிறேன் என்கிறார்

 

கீழ்காணும் வரிகள் தானே தவமும் வரமும்?  

வேப்பம் பூ

ஒன்றே ஒன்று

என் மேல் உதிரத்தானே

இது வரையில் இந்த

மரத்தடியில் நின்றேன்

 

சாதாரணர்கள் சட்டென உரிமைகொண்டாடும் முகமாக தான் இருக்க வேண்டும் என தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார்

ஒரு கை பிடிச்சு தூக்கிவிடுங்க" என்று கனத்த கூடையுடன் சில முகம் அழைக்குமே, அப்படி அழைக்கும்படியாக நான் போய்க் கொண்டிருந்தால் போதும்

பண்டிகைகளை எதற்காக கொண்டாடுகிறோம் என்பதை பற்றி ஒரே வரியில்  

எல்லாவற்றையும் அழித்து விட்டு அதன் தினங்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்

தான் ஏன் எழுதுகிறேன் என்பது பற்றிய சுயவிளக்கம்

 யாராவது எனக்கிருப்பார்கள் என்றும், யாருக்காகவோ நான் இருக்கிறேன் என்றும் நம்பி, எல்லோர்க்கும் அன்புடனே எழுதிக் கொண்டிருக்கவே நான் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறேன்

 

நான்கு வரிகளில் ஒரு வாழ்க்கை வரலாறு

அத்துணை புடைத்த

நரம்புகளோடும்

குப்புறக் கிடந்தது

உதிர் இலை

எனக்கு மிகவும் பிடித்த அழகான கவிதை, ஒரு நல்ல பாடல் வரிபோல, சட்டென இதயத்துள் சென்று தங்கி கொள்ளும்

இக்கரைக்கும், அக்கரைக்கும், 

பரிசல் ஓட்டி, பரிசல் ஓட்டி,

எக்கரை என்கரை மறக்கும்,

இடையோடும் நதி மெல்லச் சிரிக்கும்


நான் என்பது நானல்லவே என்பதை

ஞாபகங்களைத்

திறக்கிற சாவிகளை

மற்றவர்கள் வைத்திருக்கிறார்கள்

எனக்கு எதுவும் தெரியாது நேசிப்பதை தவிர என்பதை  

தயவுசெய்து என்னை மன்னியுங்கள்.

எந்த பூவின் பெயரும் எனக்கு தெரியாது.

எனக்கு தெரிந்தவை எல்லாம் அவை பூ என்பது மட்டுமே.


அவர் துயரமெல்லாம் இந்த வகையே

தன் கனத்தைத்

தானே தூக்கிவரும்

ஒரு மயிலின் ஓட்டம்

ஒரு வகையில்

துயரூட்டுவது

 

காரணமின்றி, சுயலாபமின்றி நேசியுங்களேன் என்ன தவறு என்கிறார்               

எறும்பு வரிசையில் திடீரென்று

முகர்ந்து பார்த்துப் பிரியும்

எறும்பைப் போல

 

சடுதியில் ஒரு மென் முத்தமிட்டு

அவரவர் வழியில்

எதிர்திசையில்

போய்க்கொண்டு இருந்தால் தான்

என்ன...  

பறவைகள் எப்போதுமே நம்மைவிட பல மடங்கு உயர்வானவை தானே

அ முதல் ஃ வரை

எனக்கு தெரியும்.

என் ஜன்னல்

வழியே தெரியும்

குருவிக்கோ

வானம் தெரியும்.

 தன்னை தாழ்த்திக்கொண்டு உயர்ந்து கொள்ளும் நிலை

என்ன செய்ய முடியும் உங்களால்?

ஒதுக்கித் தள்ளுவீர்கள்...

என்ன செய்ய முடியும் என்னால்?

ஒதுங்கிக் கொள்வேன்.

 எந்நிலையிலும்  நிலா பார்த்தல் 

தெரியவில்லை

யாராவது இப்படி அவசரமாகக்

கண்ணீரைத் துடைத்துக்கொண்டு

நிலா பார்ப்பார்களா என்று.  

யாரின் கவனத்தையும் கலைக்காமல் அழகாய் கடந்து போதல்

பெரிய ஆசைகள் ஒன்றுமில்லை

யார் மீதும் பட்டுவிடாமல்

இரு கைகளையும் வீசியபடி

இன்னும் கொஞ்ச தூரம்

போக வேண்டும்

அவ்வளவுதான்..!  

தான் வேறு புத்தர் வேறு என்பதை

 

புத்தரைப் போல

நின்று பார்த்தேன்.

கூடவில்லை .

புத்தரைப்போல

அமர்ந்து பார்த்தேன்.

இயலவில்லை .

சுலபம்தான் என்று

புத்தரைப் போலச்

சிரிக்க முயன்றேன்.

புத்தர் தான் சிரித்துக்

கொண்டிருந்தார்

என்னைப் பார்த்து

இப்போதும்.

செடியை வேண்டுமானால் நடலாம், ஆனால் பூக்களின் வாழ்வை மனிதன் நிர்ணயிக்கமுடியாது அல்லவா

நீ இருக்கும்

திசைக்கு முகம் காட்டி

உன் சதுரமான

எதிர்பார்ப்பின் மேல்

பூக்காது

தொட்டிப்பூ

பூப்பூத்தல் அது இஷ்டம்

போய் பார்த்தல் உன் இஷ்டம்...

 அதெப்படி என்ற வியப்பு

கூண்டுக் கிளியின்

காதலில் பிறந்த

குஞ்சுக் கிளிக்கு

எப்படி எதற்கு

வந்தன சிறகுகள்?  

கீழ்க் கண்ட கவிதை வலி கடத்தி

திருப்பாவைப் பாடல்களின்

கிழிந்த குரல்களை

கழிவுக் காகிதங்களுடன்

பொறுக்குகிறவளுக்கு

வயது பதிமூணு.

வாழ்க்கையை அழகாக மாற்ற யாரோ ஒருவர் கூட போதும்தானே

யாராவது

வழியனுப்பவும்

துணையிருக்கவுமாக

இருந்தால்

இந்த வாழ்க்கை

எவ்வளவு

அடர்த்தியாகி விடுகிறது

மீண்டும் ஒரு ஜென் வரிகள்

 

அர்த்தத்துக்கும் அர்த்தமின்மைக்கும் நடுவே தொங்குகிறது ஆனந்தத்தின் பாலம்

 இழப்பெனப்படுவது யாதெனில்

அடைக்கப் படும் கதவின்

விருப்பமான சத்தத்திற்காக

உள் அறையில் காத்திருக்கிறேன்.

மிகுந்த கவனத்துடன்

சத்தமே கேட்காமல்

சாத்திவிட்டுப் போகிறார்கள்.

இப்படித்தான் ஒரு காரணமுமின்றி

இழந்துவிட நேர்கிறது

இன்னும் சிலவற்றை.

 காலைநேர மேகம் சூழ எடுக்கப்பட்ட அழகான புகைப்படம் போன்ற வரிகள்

கைப்பிள்ளையுடன் பேசிக்கொண்டே

கோலம் போடுகிறாள் அந்தப் பெண்.

நிபந்தனையற்ற அன்பில்

நேர்த்தியாகிக் கொண்டிருக்கிறது

வாசல்.

 இது சட்டென மனதில் ஒரு வசந்தகாலத்தை கூட்டிக்கொண்டு வந்துவிடுகிறதல்லவா?

எனக்கு இருக்கும் இறந்த காலம் போல,

பறவைக்கும் இருக்கும் அல்லவா

ஒரு பறந்த காலம்

 நான் உண்மையாக இருப்பது பட்டமோ புகழோ அடைவதற்கல்ல என் சொந்த விருப்பங்களுக்காக என்பதை

அதிக பட்சம் இந்த வாழ்க்கைக்கும்

மனிதனுக்கும் உண்மையாக

இருக்கவே முயல்கிறேன்.

சிகரங்களை அடைகிற

உந்துதல்கள் இல்லை.

ஆனாலும் போய்க்கொண்டிருக்கத்

தோன்றுகிறது,

தனியாக அல்ல

மிகவும் நட்புணர்வும்

அடிப்படை புரிதல்களும்

உள்ள மனிதர்களுடன்..

 பின் தொடர்ந்து வரும் குரல் ஜென்னன்றி வேறென்ன 

இருந்து...என்ன ஆகப்போகிறது..?

செத்துத் தொலையலாம்.

 

செத்து...என்ன

ஆகப்போகிறது..?

இருந்தே தொலையலாம்.

 உண்மைதானே

உதிர்ந்த இறகுகளில் பறந்த ஆகாயம் இருக்கும்தானே

 மெல்லிசை பாடல் வரிகள் போல மனம் தீண்டிவிட்டு செல்லும் கவிதை

வெயிலில் அலைகிறது

வண்ணத்துப் பூச்சி.

வெயில் அலைகிறது

வண்ணத்துப் பூச்சியோடு.

காற்று அடித்து செல்கின்ற

போகன்வில்லா பூச்சருகுகள்

ஓர் ஆடி மாத தெருவை

அழகாக்குகிறது போல

வைறெதுவும் செய்யமுடியாது

 உணவை உன்னைமட்டுமல்ல, நிதானமாக வாழ்க்கையை வாழவும்தான் அறிவுறுத்துகிறது

ஒரு பழத்தின் உருண்டை வடிவத்தை

எங்கிருந்து கடிக்க துவங்க வேண்டும் என்பதற்கு

 கணிதங்கள் உண்டா , தெரியவில்லை ஒரு அணிலிடமும் பறவையிடமும் கற்றுக்கொள்ள

இருக்கிற விஷயங்களில் பழம் கடித்தலும் அடங்கும்

 வண்ணதாசனின் மிக சிறப்பான கவிதை இது

நிதானமாக குடிக்கத்

தெரியவில்லை .

அவசரப் படாமல்

"அனுபவிக்கத்" தெரியவில்லை .

வேண்டாம் என்பதைச்

சொல்லத் தெரியவில்லை .

சத்தம் போடாமல்

பேசத் தெரியவில்லை .

அவசியத்துக்குக் கூட

கோபப்படத் தெரியவில்லை .

இரண்டாம் மனுஷியை

சிநேகிக்கத் தெரியவில்லை

ஹரிக்கேன் லைட்டைப்

பொருத்தத் தெரியவில்லை .

அடைகிற குருவிகளைப்

பார்க்கத் தெரியவில்லை .

வாழ்வும் கவிதையும்

தெரியுமென்ற

வாய்ச்சவடாலில் மட்டும்

குறைச்சலே இல்லை

இரண்டு வரிகளில் அழகியல்

 சரிந்த பிறகும் அழகாய்ப் பெருக நீராக இருக்க வேண்டும்..

அதுவும் தரையில்

 உடல்கள் விலகினாலும் நிழல்கள் கொண்டாடுகின்றன

ஒரே பாதையில்

ஒரு விளக்கடியில்

அவனும் அவளும்

விலகி நடக்க,

நீளச் சரிந்த நிழல்கள் மட்டும்

கூடிக் கூடிக்

குலவிப் பிரிந்தன

 எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வருகிற மனிதம் பற்றி

எதையும் சொல்லவில்லை

எதையும் கேட்கவில்லை

'சும்மாதான் வந்தேன்' என்று சொல்லிவிட்டு போனான்.

காற்றைப்போல

வெயிலைப்போல

சும்மாதான் வருகிறவர்கள்

முக்கியம் எனக்கு.

 இழப்பின் வலி

முழுதாக இருக்கும்போது கவனத்தில் விழவில்லை,

இடிந்து கிடக்கும்போது

இம்சைப்படுத்துகிறது,

யாருடையாதகவோ இருந்த வீடு.  

 புதிதாக எழுத வருபவர்கள் முதலில் வண்ணதாசன் என்ற கல்யாண்ஜியை படியுங்கள் என மறைந்த எழுத்தாளர் சுஜாதாவே பரிந்துரைக்கிறார், இதற்கு மேல் நான் என்ன சொல்ல?