Wednesday, March 17, 2021

கயிற்றரவம் -போகன் சங்கர்

 

எனக்கு நண்பர்களே இல்லை.அதற்காக ஒரே ஒரு ஆழ்ந்த நட்புக்காக நான் முயற்சிக்காமல் இல்லை.அப்படிப்பட்ட ஒரு உறவுக்காக நான் ஏங்காமல் இருந்த நாளே இல்லை,நினைவு தெரிந்த நாள் முதல் என்னால் எங்கேயும் என்னை பொருத்திப் போக முடியவில்லை. மூன்று பேர் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தால் நான் போன உடன் மவுனமாகிவிடுவார்கள்.மவுனம் கனத்து மூச்சுத் திணறி நீ போகிறாயா அல்லது நாங்கள் போகட்டுமா?என்பது போல் ஒரு பார்வை என் மேல் விழும்.தயவு செய்து போய்விடேன் என்று கண்கள் கெஞ்சும்.பெரும்பாலும் நானே வந்துவிடுவேன்.விடாப்பிடியாக அமர்ந்திருந்தால் ரத்தக் கோரை வருகிற அளவுக்குச் சண்டை வந்துவிடும்.வெளியில் மட்டுமல்லாமல் வீட்டிலும் அப்படித்தான்.நான் போகிற வரை சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிற வீடு என் செருப்பு சத்தம் கேட்டதும் உறைந்து போய்விடுவதை என்னால் உணர முடியும்.என் செய்கையில் உடல் மொழியில் முக பாவனையில் ஏதோ ஒன்று மனிதர்களை விலக்கி வைத்துக்கொண்டே இருந்தது.இவ்வளவுக்கும் பேச்சில் நான் மிகக் கவனமாக இருப்பேன்.ஆனால் ஒருவர் பேச்சில் கவனமாக இருக்க முயற்சிக்கும்போது பேசவே முடிவதில்லை. அவர் வெறுமனே முகமன்கள் சொல்லும் ஒரு பொம்மையாகிவிடுகிறார் ஆண்கள், பெண்கள், ஏழைகள்,பணக்காரர்கள் யாருடனும் என்னால் பொருந்திப் போகமுடியவில்லை.ஒருமுறை திருவண்ணாமலைக்கு ஓடிப் போய் இருந்தேன்.அங்கிருந்த பிச்சைக்காரர்கள், சாமியார்கள் ,போலீஸ் காரர்கள் எல்லோரும் போ போ என்று என்னை விரட்டினார்கள்.வழக்கமாக இதுபோன்று ஓடிவந்துவிடுகிற பரதேசிகளிடம் கனிவுடன் நடந்துகொள்ளும் ரமணாஸ்ரமத்தில் கூட என்னிடம் கடுமையாக பாரா முகமாக நடந்துகொண்டார்கள்.நான் இருந்ததையே கவனிக்காதவர்களாக கவனிக்க விரும்பாதவர்களாக இருந்தார்கள்.சாலையில் ஒரு பூனையோ நாயோ அடிபட்டு இறந்து கிடக்கும்போது நாம் கவனிக்காது போல் போவோம் இல்லையா?அல்லது கை கால் விரல்கள் முற்றிலும் உதிர்ந்துபோன ஒரு தொழு நோய்ப் பிச்சைக்காரன் அல்லது முகமெல்லாம் கொழுப்புக் கட்டிகள் தொங்கும் ஒரு குரூரனைக் காணும்போது ஏற்படும் சிறிய அசூயையோடு அவர்கள் என்னைக் கடந்துபோனார்கள்.
திருவண்ணாமலையில் ஒரு சாமியார் ஒருவர் "உன்னுடைய ஜன்ம நக்‌ஷத்திரம் என்ன? ஆயில்யமோ?"என்றார்.
நான் வியந்து " ஆமாம்.எப்படி சரியாகச் சொன்னீர்கள்?"என்றேன்.
"பாம்பு படம் எடுத்து பார்ப்பது போல் கழுத்தை நீட்டி நீ பார்ப்பது.ஆதிசேஷனின் நட்சத்திரம்.தர்மரின் நட்சத்திரம் என்றும் சிலர் சொல்வதுண்டு.கேட்டை என்பதும் உண்டு.எப்படியானாலும் ஆயில்யம்,கேட்டை,ரேவதி மூன்றும் ஒரே இனம் தான்.தர்மராஜா பாரதத்தில் பாண்டவர்களில் நட்பையோ காதலையோ பெறாது கடைசி வரை வாழ்ந்து மறைந்தவர்.கர்ணனைக் கூட நேசிப்பவர்கள் இருந்தார்கள்"
நான் "அது ஏனப்படி?" என்றேன்.
அவர் "அது அப்படித்தான்.உனது ஆழத்தில் நெளிகிற எண்ணங்களை பார்க்கக்கூடிய ஒருவர் முன்னால் உன்னால் இயல்பாக இருக்க முடியுமா என்ன?"
நான் "இந்தப் பிறவி முழுவதும் இப்படித்தானா?" என்றேன்.
"இனம் இனத்தோடு போகவேண்டும்.இது ஆநிரைகளின் நிலம்.பசுக்கூட்டம் நடுவே ஒரு சர்ப்பம் வந்தால் அவை எப்படி இயல்பாக இருக்கும்?நீ உன் நிலத்துக்குப் போ."
"என் நிலம்?"
"நாகர்கள் வசிக்கும் நிலம்.கேரளம்"
என்னால் கேரளத்துக்குப் போகமுடியவில்லை.என் விதி அதற்கு அனுமதிக்கவில்லை. ஆனால் அதன் எல்லையைத் தொட்டு வசிக்கும் நிலை வந்தது.பணி நிமித்தம்.ஆனால் இங்கு வந்தும் என் ஜாதகம் பெரிதாக மாறியது போல் தெரியவில்லை. நான் மாலைகளில் அதிகம் ஆள் வராத கோவில்களில் சென்று அமர்ந்திருப்பேன்.பெரும்பாலும் நாகர்காவுகளில்.அது எனக்கொரு அமைதியை அளித்தது.சிறிதும் பெரிதுமாய் வைக்கப்பட்டிருக்கும் நாகர் சிலைகளைப் பார்த்தால் ஒரு நிம்மதி.சீராக வரத்தொடங்கும் மூச்சு.அப்போது அது ஒரு பாம்பின் சீறல் போல இருப்பதாக எனக்கு தோன்றியது.அப்படியொரு மாலையில் அந்தி தன் கடைசிச் சிகப்பையும் மேற்கில் கரைத்துக்கொண்டிருந்த வேளையில் கையில் ஒரு நடுங்கும் தீபத்தோடு அவள் வந்தாள்.நாகர் சிலைகளின் முன் ஏற்றிவிட்டு "நீங்கள் மார்த்தாண்டம் மருத்துவமனையில் வேலை பார்க்கிறீர்கள்.இல்லையா?நான் பார்த்திருக்கிறேன்"
நான் அந்த குறைந்த வெளிச்சத்தில் அவளைப் பார்க்க முயன்றேன்.
"இங்கே அடிக்கடி வந்து அமர்ந்திருப்பதையும் பார்த்திருக்கிறேன்"
நான் பேசவில்லை.ஒரு நிழலுடன் என்ன பேசுவது?
"நாளை மருத்துவமனை வருவேன்."
நான் அப்போதும் பேசவில்லை.இப்போது நிழல் கூட இல்லை.அகல் கூட அணைந்து தூய இருள்.சுவர்க்கோழிகளின் கீறல் ஒலிகள் மட்டும்
மறு நாள் அவள் மருத்துவமனைக்கு வந்தபோது சரியாகப் பார்க்கமுடிந்தது.ஆனால் எதற்காக வந்தாள் என்பது அதிர்ச்சியை அளித்தது.
"மூணு மாசத்துக்கு ஒருமுறை ஒரு செக்கப் வருவது" என்று அவள் சிரித்தாள்."தினமொரு பாம்பு என்னைத் தீண்டுகிறது.அதன் விஷம் இறங்கியிருக்கிறதா? என்று பார்க்கவருவது.என்ன?என் மேலிருந்த மரியாதை போய்விட்டதோ?"அவள் சிரித்தாள்.நான் பதில் பேசவில்லை.
ஆனாலும் அடுத்து ஒவ்வொரு முறை மருத்துவமனை வரும்போதும் கோயிலில் சந்திக்கும்போதும் அவள் என்னிடம் ஐந்து நிமிடமாவது பேசாமல் போக மாட்டாள்.
முதலில் தொந்திரவாக இருந்தது.பிறகு வியப்பாக மாறிற்று.நான் அவளது இந்த சம்பாஷணைகளுக்காக மனதுக்குள் காத்திருக்கவும் ஆரம்பித்தேன்.இவள் மட்டும் ஏன் இப்படி வித்தியாசமாக இருக்கிறாள்?என் மீது பிறர்க்கு ஏற்படும் விலகல் உணர்ச்சி இவளுக்கு ஏன் ஏற்படவில்லை?
ஒரு நாள் அதற்கு விடை கிடைத்தது.
ஒரு நாள் மாலை அந்தியில் வழக்கமாக சென்று அமர்ந்திருக்கும் கோயிலில் சென்று அமர்ந்திருந்தேன்.உட்கார்ந்தவாறே தூங்கிவிட்டேனா என்னவோ திடீரென்று தோன்றி விழித்தேன்.காலை யாரோ குளிர்ந்த விரலால் தொடுவது போன்ற ஒரு உணர்ச்சி.சுதாரித்துக் கொள்வதற்குள் அது என் இடையைச் சுற்றி விட்டது.சுற்றியபடியே சாவதானமாக படம் எடுத்து சுற்றிலும் பார்த்தது.படத்தைத் திருப்பி ஒரு குழந்தை போல் நாய்க்குட்டி போல் என் முகத்தையும் பார்த்தது.நான் உறைந்து போய் அமர்ந்திருந்தேன்.
அப்போது ஒரு சிரிப்பொலி கேட்டது.
"நல்லாருக்கே.ஆச்சியும் ஐய்யரும் ஆலிங்கனம்"
நான் அதிகம் அசைக்காமல் தலையைத் திருப்பி "பாரு",என்றேன்.
அவள் " ஒன்றுமில்லை.இனம் இனம் தேடி வந்தது"என்றாள்.பிறகு என் இடுப்பைச் சுற்றிக்கொண்டிருக்கும் அதை நோக்கி "போ" என்றாள்."அதுதான் நான் வந்துவிட்டேன் அல்லவா?"
அதைக் கேட்டதும் உடையவர் உத்தரவைக் கேட்ட ஒரு பணியாள் போல அது சரசரவென்று தன் பூட்டை விலக்கிக்கொண்டு கீழே இறங்கி மறைந்தது.
நான் விழித்து "நான் கண்டது நிஜமா?" என்றேன்.
அவள் "என்ன சந்தேகம்? கண்டது கயிறோ பாம்போ என்றா?"என்றாள்.
பிறகு தன் குளிர்ந்த கரங்களால் என் நெற்றியில் சந்தனக்குறியை இட்டாள்." உஷ்ணம் உஷ்ணேனு சாந்தி.விஷம் விஷத்தால் தீரும்"என்றாள்.என்னைக் கைகோர்த்து எழுப்பி
"போகலாம்.நானும் ஆயில்யம்தான்"என்றாள்.

No comments:

Post a Comment