Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

Thursday, July 5, 2018

அன்புள்ள மிஷ்கின் அவர்களுக்கு

வணக்கம்.

இப்போதுதான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை ஹாட் ஸ்டாரில் பார்த்தேன். இந்த கடிதம் வணிக சம்மந்தமானதல்ல, அது சம்மந்தமாக எழுதினாலும் யாருக்கும் உபயோகமும் இல்லை.

தவிர இந்த படத்தையும் நீங்கள் வணிக ரீதியில் சமரசம் செய்ய முற்படவில்லை என்பது வேறு விஷயம். "ஏன் முன்பு தியேட்டரில் பார்க்கவில்லை?" என்ற கேள்விக்கு நிச்சயம் என்னிடம் பதிலில்லை, ஏனெனில் படம் வந்ததே தெரியாத அளவிற்கு எனக்கு ஏற்பட்ட விபத்தோ, மகனின் பிறப்பில் ஏற்பட்ட கோளாறால் மருத்துவமனையிலோ அல்லது வேறு ஏதாவது பண தேவை சம்மந்தப்பட்ட பைத்தியமாகவோ நான் இருந்திருக்க கூடும்.

நிற்க,

படத்தின் கதாநாயகன் சர்வ நிச்சயமாக இளையராஜா தான், இந்த படத்தின் காட்சிகளை பார்வையாளர்களுக்கு வசனம் எழுதி புரிய வைக்க வேண்டிய தேவையை ஏறக்குறைய விலக்கியே வைத்து விட்டார். படத்தை பதைபதைப்பாய் கொண்டு சென்றதில் அவர்தான் போர் வீரன்.

ஓநாய் நீங்கள் தான். உடல் மொழியில் அப்படியே கொண்டுவந்திருக்கிறீர்கள், உடல் முழுவதும் காயம்பட்டு கிடந்தாலும் கொஞ்சம் கூட குறையாத  வேட்டையாடும் துடிப்பும், இழப்பின் ஊமை தவிப்பும், அதுவும் ஒவ்வொரு இழப்பின்போதும் மெளனமாக தலை குனியுமிடம் உச்சம். திருநங்கை ஏஞ்சல் கிளாடியா தலை நிமிர்ந்து உங்களை பார்க்கையில், காப்பாற்ற இயலாமல் தரை நோக்கும் காட்சி உச்சமய்யா. என்னால் இன்னமும் அதிலிருந்து மீண்டு வர இயலவில்லை. படத்தில் உங்களுக்கு வசனமே இல்லையோ என நினைத்திருந்த நேரத்தில் அந்த "எட்வினண்ணா நீங்களாவது கதை சொல்லக் கூடாதா" என குட்டி இளவரசி கேட்கையில் ஆரம்பித்தீர்களே? கண்கள் நிரம்பி வழிந்து கொண்டே இருந்தது.

ஸ்ரீ எனும் ஆட்டு குட்டியின் உடலில் ஒரு டன் சுமையை வைத்து சுமக்க சொல்லி விட்டீர்கள், அற்புதம் அந்த குட்டி எந்த வித யோசனையுமில்லாமல் உங்களின் உடலைக் கூட சேர்த்தே சுமந்து வந்தது.

 இதை தாண்டிய வசீகரிப்பை சொல்லிக்கொண்டே போகலாம்

"நீ டாக்டர், நீ டாக்டர்" என கையில் கொடுத்த பணத்தை வீசி எறிந்து விட்டு குதூகலிக்கும் மனநிலை தவறியவர்.

"அவனை அரெஸ்ட் பண்ணது தப்புதான் சார், நியாயமா உங்களை முதல்ல பிடிச்சிருக்கணும்" வெறியோடு குற்றவாளியை தேடி தொலைத்துக்கொண்டே இருப்பவனின் கோபம்.


"பணமெல்லாம் தேவைப்படாது, நான் சாகப்போறேன் அதுக்கு முன்னாடி எட்வினை கொல்லனும்" முதன்மை தொழில்முறை வேலைக்காரனின் கூரிய வசனம்.

"மூத்திர பையோட அலைஞ்சிட்டிருக்கேன், அவனை உயிரோடவும், உயிரில்லாதவும் பார்க்கணும்" கடிபட்ட கரடியின் வெறி.


"கொல்லப்பட்டு சாவும் போலீஸ்காரர்கள் வித விதமான குரலெழுப்பி சாவது,
அதிலும் அந்த "ஐயா", பதவியை அந்த வார்த்தையாலே தக்கவைத்து, சாகும் போதும் அது தவிர வேறு எண்ணமே வராத எழுபது விழுக்காடு காவலர்களின் நிலைமை.

"நல்லவேளை அதில ஒருத்தன் மார்ல உதைச்சான், மயக்கமாகி விழிச்சு பார்க்கிறேன், இங்கே இருக்கேன்" எனது நெஞ்சிற்கு கடத்தப்பட்ட வலி.

சாவின் விளிம்பிலும் யாரும் துப்பாக்கியால் சாக கூடாது என மேல் நோக்கி சுடும் அப்பா.

ஒரு பெரும் கொலைகாரன் கதவை திறந்து விடச்சொல்லி பார்வையால் காவலாளியை கெஞ்சும் இடம்

"அம்மாக்கு என்னாச்சு எட்வின் அண்ணா?" என்ற பதில் சொல்லவே இயலாத கேள்விக்கு,
"செத்துட்டாங்க" ஒரே வார்த்தையில் அதை முடித்த விதம்.

 ஒரு திரில்லர் படத்தில் மனித நேயத்தை விதைக்கும் வித்தை எப்படி கை வந்தது?

இந்த அரைகுறை எழுத்தை வைத்துக்கொண்டு என்னால் இதற்கு மேல் எழுத தெரியவில்லை

வேறென்ன....
உங்களுக்கும், பவாவிற்கும் நன்றி மிஷ்கின், ஏனெனில் உங்களை ஒரு இயக்குனராக இல்லாமல் "இந்த ஜோயல் இருக்கானே இவன்தான் என் தாய், தகப்பன், நண்பன் எல்லாம்... மத்தியானம் அவன் பட்டினி கிடந்தது எனக்கு பத்து ரூபாய்க்கு சோறு வாங்கி போட்ருக்கான், அவன் கணக்கையே அடைக்க முடியல பவா" என வேறு ஒரு கோணத்தில் எல்லா நாளும் கார்த்திகையில் அறிமுகம் செய்ததே அவர்தான். புத்தகங்களை அடுத்தநாளே அனுப்பிய என் அக்கா சைலஜாவிற்கும் அன்பு.

உங்கள் காட்டின் இந்த இலை, இனி ஒநாயையும் ஆட்டுக்குட்டியையும் அதன் உள்ரேகை போல சுமந்து கொண்டே திரியும்.










Friday, June 1, 2018

இளையராஜா 75

இளையராஜாவை பற்றியோ அவர் பிறப்பு மற்றும் நுண் தகவல்களை பற்றியோ நான் சொல்ல வேண்டியதில்லை. ஏனெனில் கூகுள் என்னை விட அதிகமான விபரங்களை வைத்திருக்கும்.
எனக்குள்ளும் என்னை சுற்றிய மனிதர்களுக்குள்ளும் ராஜா எனும் இசை பெருங்கடல் ஏற்படுத்திய தாக்கங்களை சொல்வதே என் விருப்பம். ராஜா தன் இசை மூலம் என் சோர்ந்த தருணங்களில் மீட்டெடுத்து, மகிழ்ச்சியான தருணங்களை தந்து, ஏதாவது ஒரு பாடல் மூலமாக பல நினைவுகளை கிளறி விடும் அந்த அற்புதத்தை தான் நினைவு கூற விரும்புகிறேன்.
கால் நூற்றாண்டை கடந்து விட்ட நிலையிலும் "இளமை இதோ இதோ" என்று என்றோ இசையமைத்த அந்த பாடல் தான் இன்றைக்கும் புத்தாண்டு பாடல்.  எல்லா மதமும் போற்றும்படியான, காலத்தால் அழிக்க இயலா பாடல்களை படைத்திருக்கிறார் ராஜா.
எண்பதுகளின் மத்தியில் வந்த மோகன் படங்கள், இளையராஜாவின் பாடல்களுக்காகவே சூப்பர் ஹிட் அடித்துக் கொண்டிருந்தன என்பதிலிருந்தே அவரின் இசை ஆளுமையை புரிந்து கொள்ளலாம்.
தொண்ணூறுகள் இளையராஜாவின் காலம். அவர் அந்த சமயங்களில் இசையமைக்காத படங்கள் வெகு குறைவே எனலாம். கதாநாயகர்கள் படத்தைவிட  இளையராஜாவின் படத்தை பத்திரிகைகளில் முன்னிருத்தி விளம்பரம் செய்யப்பட்டன.
எனக்கு முந்தைய தலைமுறைகளான  எனது மாமா, அத்தை, அக்கா, சித்தி போன்றவர்களுடைய ரத்தத்தில் இளையராஜா கலந்திருப்பார். அவர்கள் பாடும் பாடலில் ஒரு வரி கூட பிசகாமல், தாளம் கூட மாறாமல் அப்படியே பாடும் வல்லமை அவர்கள் பெற்றிருந்தார்கள்.
நம்மைச் சூழ்ந்து நிற்கும் துன்பங்களை கூட மாற்றி அதை துடைத்து தூர எறியும் வல்லமை இளையராஜாவின் இசைக்கு உண்டு.
இளையராஜாவின் திருவாசகம் கேட்டு நெகிழ்ந்து கண்ணீர் வடித்த ஒரு நாத்திக நண்பனை எனக்குத் தெரியும்.
எனது காரில் இளையராஜாவின் இசையின் துணைகொண்டு எவ்வளவு தூரமானாலும், தனிமையிலும் அழகாக மகிழ்ச்சியாக கடக்க முடியும்.
ராஜாவின் பாடல்களை ஒலிக்கவிடும் பஸ் டிரைவர்கள் பயணிக்கும் பயணிகளை சுகமான உலகத்திற்கு கூட்டிச் செல்கிறார்கள்.
வெறும் இசை என்று தவறாக நினைக்காதீர்கள் நம் இறந்தகால நினைவுகளை மீட்டித்தரும் டைம் மெஷின்.
"கண்ணே கலைமானே", "காதலின் தீபம் ஒன்று", "என்ன சத்தம் இந்த நேரம்", "மண்ணில் இந்த காதலன்றி", "ஓ பட்டர்பிளை", "கேளடி கண்மணி", "தாலாட்டும் பூங்காற்று நானல்லவா?", "மாலையில் யாரோ மனதோடு பேச", "வலையோசை கலகலவென", "ராஜராஜ சோழன் நான்" என  குறைந்தது 50 மெல்லிசை பாடல்களையாவது நான் உங்களுக்குச் சொல்ல முடியும். அவை மயிலிறகால் வருடும் சுகம் என்ன என்பதை நேரடியாக உணர்த்துபவை.
இந்த பரபரப்பான வாழ்க்கையில் இருந்து என்னை தப்புவிக்க மொட்டை மாடியும், இளையராஜாவும் கிடைத்தது எனக்கான முந்தைய ஜென்ம வரங்கள். இந்த ஜென்மம் எனக்கு ராஜாவின் இசையின் ரசிப்பிற்காக படைக்க பட்டிருக்கிறது
நன்றி ராஜா சார். 
இன்னும் பல வருடங்கள் நலமுடன் வாழ்க. 

Saturday, April 16, 2016

இரவிற்கான இளையராஜாவின் உறக்க மாத்திரைகள் சில

இளையராஜாவை வெறும் இசை கலைஞன் என்பதை நான் எற்றுகொள்வதாய் இல்லை,

நம்மை கடந்த காலத்திற்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் டைம் மெசின் இவரின் இசை...
இரவுக்கென சில பிரத்யோக பாடல்கள் உண்டு. அவற்றில் சில.

கேட்க அமைதியான சூழலை தேர்ந்தெடுங்கள், மொட்டை மாடி, குளிர் காற்று, ஹெட் போன், தனிமை வாய்க்குமாறு பார்த்து கொள்ளுங்கள், மெல்ல கண்மூடி அனுபவித்தபடி கேட்கையில், உங்களுக்குள் வேறொரு உலகம் திறக்கும்.
பத்து பாடல்களை வரிசை படுத்தி இருக்கிறேன், மேலும் நேரம் கிடைக்கையில் இன்னும் முயற்சிக்கிறேன்.

"நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான், நாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான்"
என்று இடையில் வரும் இந்த வரிகள் ஈர்த்தாலும் மொத்த பாடலும் சுகமான தெளிந்த நீரோடை

1. மறுபடியும்: எல்லோரும் சொல்லும் பாட்டு
----------------------------------------------------------------------
"நேற்று போல் இன்று இல்லை, இன்று போல் நாளை இல்லை"
மென்மையான ரஜினியும், spbயின் மாய குரலும் கட்டி போடும், காதலின் வழியே கசியும் ரகசியங்களை பாடலாக, இசையாக மொழி பெயர்த்து கொடுத்திருப்பார் ராஜா

2.தம்பிக்கு எந்த ஊரு: காதலின் தீபம் ஒன்று
-----------------------------------------------------------------------
"கலந்தாட கைகோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம்"
இது, நீண்ட இடைவேளைக்கு பிறகு சுசீலா பாடிய, மகளுக்கான தாயின் முழு பிரியம் கலந்து கண்ணோரம் நீரை துளிர்க்க வைக்கும் மற்றொரு அற்புதம் இது.

3. கேளடி கண்மணி : கற்பூர பொம்மை ஒன்று
-----------------------------------------------------------------------
எஸ் ஜானகி பாடிய இது காதல் தாலாட்டு பாட்டு, "ஏக்கம் தீயாக ஏதோ நோயாக பார்க்கும் கோலங்கள் யாவும் நீயாக" லயிப்பில் ஆழ்த்திவிடும் ராகம்


4. கோபுர வாசலிலே: தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
-------------------------------------------------------------------------
நம்மை ஒரு அரசனாக உணர செய்ய வேண்டுமெனில் இந்த பாடல் சரியான தேர்வு, "வில்லோடு அம்பு ரெண்டு கொள்ளாமல் கொல்லுதே, பெண்பார்வை கண்கள் என்று பொய் சொல்லுதே" 
என பல்லவியில் ஒரு சொர்க்கத்தை உருவாக்கி தந்திருப்பார் ஜேசுதாஸ்.

5. ரெட்டை வால் குருவி : ராஜராஜ சோழன் நான்
----------------------------------------------------------------------------
"அன்பே நீயே அழகின் அமுதே" என மனோவுடன் ஜானகி இணைந்து பாடிய இது மிக பெரிய வரவேற்பை பெற்ற மீண்டும் கேட்க தூண்டும் பாடல்

6. செம்பருத்தி: நிலா காயும் நேரம் சரணம்
-----------------------------------------------------------------------------
"ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ, ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ"
ஒரு முழு சங்கீத கச்சேரிக்கு உரிய இசை, சாமான்ய மனிதனையும் ஈர்த்து அந்த மெல்லிய சோக உணர்வை கொடுத்து விடக்கூடிய மித்தாலி எனும் அதிகம் அறியப்படாத பெண் பாடகி பாடிய காலத்தை கடந்து நிற்கும் பாடல் இது.

7. தளபதி: யமுனை ஆற்றிலே
---------------------------------------------------------------------------------
"தினம் தினம் உனக்கென உருகிடும் என் இதயமே" 
என விரியும் அற்புதமான கவிதைக்கு அதே கவிதை போல் இசை. ஜானகியின் குரலிலும் இந்த பாடல் இருந்தாலும், ஜேசுதாஸ் குரலில் கேட்கையில் இது உச்ச பரவசம்.

8. கிளிபேச்சு கேட்கவா : அன்பே வா அருகிலே
----------------------------------------------------------------------------------
"சொன்னாலும் இனிக்குது, நெஞ்சில் ஒலிக்குது இன்ப ராகமே" ரஜினியை அமைதியான, நெகிழ்வான மனிதனாக காட்டும் பாடல்களில் இது ஒன்று, அண்ணன் தாயாக மாறும், மிக மிதுவான ஒரு நல்ல மெல்லிசை பாடல் இது 

9. நான் சிகப்பு மனிதன்: வெண்மேகம் விண்ணில் இன்று கண்ணில் இன்று பன்னீர் தூவும் 
------------------------------------------------------------------------------------
முதல் கணினி இசை, முதல் தீம் இசை தமிழில் என்ற பெருமைகள் பல இப்படத்திற்கு உண்டு,
"கிளிகள் முத்தம் தருதா, அதனால் சப்தம் வருதா",
spbயின் உச்சகட்ட சிறப்பான பாடல்களில் இது முக்கியமானது

10. புன்னகை மன்னன் : என்ன சப்தம் இந்த நேரம்
--------------------------------------------------------------------------------------

இது இரவுக்கான நான் பரிந்துரை செய்யும் வெறும் பத்து இசை பாடல்கள் மட்டுமே, இன்னும் இன்னும் எழுதிக்கொண்டே போகலாம். ஆயிரக்கணக்கான நீளும் ராஜாவின் பாடல்களில் எதை எடுப்பது எதை விடுவது என்றே தெரியாத ஒரு குழப்பமே மிஞ்சும். தாங்களுக்கு பிடித்த பாடல்களையும் இயன்றால் பின்னூட்டம் இடுங்கள்