காட்சிக்கு காட்சி சுவாரஸ்யம், மசாலா படம், நாலு சண்டை மூணு பாட்டு, வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள் பார்ப்பவர்கள் நீங்கள் எனில் இது உங்களுக்கானதல்ல.
ஒரு திரைப்படத்தை பத்து வருடங்கள் செலவிட்டு அங்கேயே வாழ்ந்து அந்த மக்களை மலையை புரிந்து கொண்டு தவம் போல இதை கொடுத்த இயக்குனர் லெனின் பாரதிக்கு அன்பு
இயற்கையை ரசிக்கும், வாழ்க்கையை புரிந்து கொள்ளும், புத்தகங்களை விரும்பி படிக்கும், நல்ல படம் வந்தால் மட்டுமே பார்ப்பேன் என பிடிவாதம் கொள்ளும் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.
ரங்கசாமியை மீறியும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ஒவ்வொரு கதை புதைந்து கிடக்கிறது, கம்யூனிஸ்ட் சாக்கோ, மலை ஏற்றத்தில் ரத்த வாந்தி எடுக்கும் பெரியவர், தனது மகனையும் பொருளையும் தொலைத்து விட்டு, அதே மலையில் தேடும் மனநிலை பாதிக்க பட்ட மூதாட்டி (எல்லாத்தையும் கொல்ல போறேன்), கணவன் பெயரை சொல்ல நானும் பெண்மணி, கண்ணீர் வழியும் கண்களால் விடுப்பா பாத்துக்கலாம் என ஆறுதல் சொல்லும் ரங்கசாமியின் அம்மா, நிலத்தின் பத்திரத்தையும், கல்யாண பத்திரிக்கையும் தரும் அந்த தாய், என நெஞ்சம் நிறையும் வாழ்வு கொண்ட படைப்பு.
வணிக ரீதியில் ஆயிரம் படங்கள் வரட்டுமே, ஆனால் இது குறிஞ்சி, வணிகத்துக்கான எந்த சமரசத்தையும் செய்யா வீரம். சாதாரண காட்சிகள்தான், அழகியலும், ஆறாத ரணமும் புதைந்து கிடக்கும் தன்மையை வெளிக்கொணர இளையராஜாவை தவிர யாரால் இயலும்.
தயாரித்த விஜய் சேதுபதிக்கு நன்றி.
எளிய மனிதர்களின் வாழ்வை, எதிர்பாராமல் தரப்படும் அன்பை, தன்னிடம் இருப்பதை பகிர்ந்து கொள்ளும் ஈர மனதை, அந்த நெடும் மலையை நிச்சயம் நல்ல சினிமா ரசிகர்கள் தவற விடாதீர்கள்.
தியேட்டரில் காணுங்கள், அப்போதுதான் சற்றே மேம்பட்ட ரசனையுடன் கூடிய நல்ல படங்கள் வெளிவரும்