Thursday, April 20, 2023

கன்றுக்குட்டி

 ஆறோ ஏழோ படித்துக்கொண்டிருந்தேன், இது போல் ஒரு கோடை விடுமுறை, மணி என்றொரு நாய் வீட்டில் இருக்கும், பயங்கரமாக குரைத்தது. அப்பாரு வெளியே வந்து, "இங்க வாடி" என கத்தினார், நானும் ஆயாவும் வெளியே இருக்கும் தொண்டுபட்டிக்கு ஓடி வந்தோம், "கண்ணு போடுற மாதிரி இருக்கு, பாத்துக்க. நா போயி மாட்டு டாக்டர கூட்டிட்டு வரேன்" என்று சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாக போனார்.

போகிற வழியில் எல்லாம் சொல்லிக்கொண்டே போயிருக்கிறார், மாக்காலுர் அண்ணன், விஜயாக்கா, எதிர் வீட்டில் பிட்டர் ஒருவர் இருந்தார் அவர் என ஒரு சின்ன கும்பல் கூடியிருந்தது.
மணி முனகிக்கொண்டே எருமையை சுற்றி சுற்றி வந்தது. ஆயா எருமையை தடவி கொடுத்தபடியே இருந்தாள், அவளது புடவையை பிடித்தபடியே நின்றிருந்தேன். மணி எருமையின் பின்புறம் பார்த்து குரைக்க ஆரம்பித்தது
நான் ஓடி போய் பின்னால் பார்த்தேன், சின்ன கால் தெரிந்தது, "அம்மா அம்மா கால் தெரியுது" என்றேன், "மாரியாயி நல்லபடியா கண்ணு வந்தா காசு போடுறேன்" என்று சத்தமாகவே வேண்டினாள்.
எருமை கத்த ஆரம்பித்து தரையில் கொம்பை முட்டியது. வலி தாங்க முடியாமல் "ம்மேமேமேமேமே" என கத்தியது.
வெட்னரி டிவிஎஸ் 50யில் வந்து சேர்ந்தார். கால்களால் தரையை வேகமாக தட்டிக்கொண்டே இருந்தது எருமை .டாக்டர் ஏதோ செய்த சிறுது நேரத்தில் கொழகொழவென நீர் பின்னால் இருந்து வந்து விழுந்தது. மணி என்னருகே வந்து நின்றுகொண்டது. "எருமை குட்டி வரப்போகுது" என்றேன், வாலை ஆட்டியது.
கன்றின் தலை தெரிந்தது, மணி சுற்றி சுற்றி வேகமாக ஓடி கொண்டிருந்தது.
அப்பாரு வைக்க பில்லயும் சாக்கையும் கொண்டு வந்து போட்டார். "பாவாயி சுடுதண்ணி வையி, ஈன போகுது" என்றார் டாக்டர். சிறிது நேரத்தில் பாதி உடல் வெளியே வந்தது,
"குட்டி வருது குட்டி வருது" என்று கத்தினேன் நான், மணி பயங்கரமாக குரைக்க ஆரம்பித்தது, "சும்மா இருங்கடா" எங்கள் இருவரையும் பார்த்து கத்தினார் அப்பாரு.
"பிடிங்க" என சொல்லி, "அதுவா வெளியே கொஞ்சம் கொஞ்சமா வரும் இழுக்க கூடாது" என்றார் டாக்டர்,
மூட்டை போல ரத்தம் திரவம் கலந்து குட்டி வெளியே வந்து விழுந்தது, நல்ல நிறம், சுடு தண்ணி கொண்டு வந்தாள் ஆயா..
சாக்கை அதில் போட்டு எருமையின் மேல் போட்டார் டாக்டர். கன்றை நக்கி சுத்தம் செய்தது மாடு, கன்று தள்ளாட்டமாக இரண்டு மூன்று முறை எழுந்து நிற்க முயற்சி செய்து விழுந்து விழுந்து எழுந்தது. பின்னர் கால்களை நக்கி, வாலை நக்கி முகர்ந்து முகர்ந்து மடியை கண்டு கொண்டது. வாயில் நுரை வழியும் வரை முட்டி முட்டி பால் குடித்துக்கொண்டிருந்தது. எருமை அதை நக்கி நக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தது. மணி அமைதியாக பார்த்து கொண்டிருந்தது.
நான் " தொட்டு பார்க்கட்டுமா?" என்று கேட்டேன், பாவாயி பக்கத்தில் கூட்டி சென்று தொட வைத்தாள். தொடும்போது எனக்கு வாயெல்லாம் பல்லாகி இருந்தது.
அப்பாரு டாக்டருக்கு அண்டர்வேரிலிருந்து அம்பது ரூபாய் எடுத்து கொடுத்தார்.

Tuesday, November 22, 2022

ஜென்ம தினம் - வைக்கம் முகம்மது பஷீர்

ஜென்ம தினம் என்றொரு சிறுகதையை பஷீர் எழுதியிருக்கிறார், மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய கதை. 

தமிழில்: குளச்சல் மு. யூசுப்

மகர1 மாதம் 8ஆம் தேதி. இன்று எனது பிறந்த நாள். வழக்கத்துக்கு மாறாக அதிகாலையிலேயே எழுந்து, குளிப்பது போன்ற காலைக் கடன்களை முடித்தேன். இன்று அணிவதற்காகவென்று ஒதுக்கிவைத்திருந்த வெள்ளைக் கதர்ச் சட்டையையும்  வெள்ளைக் கதர் வேட்டியையும் வெள்ளை கேன்வாஸ் ஷ¨வையும் அணிந்து எனது அறையில் சாய்வு நாற்காலியில் கொந்தளிக்கும் மனதுடன் மல்லாந்து படுத்திருந்தேன். என்னை அதிகாலையிலேயே பார்த்தது, பக்கத்தில் ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் பி.ஏ. மாணவனாகிய மாத்யூவுக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. அவன் புன்சிரிப்புடன் எனக்குக் காலை வணக்கம் தெரிவித்தான். 

ஹலோ, குட்மார்னிங்."

நான் சொன்னேன்:

"எஸ். குட்மார்னிங்."

மாத்யூ கேட்டான்:

"என்னா, இன்னைக்கு என்ன விசேஷம், காலையிலேயே? எங்கியாவது போகப்போறீங்களா?"

"சே . . . அதெல்லாம் ஒண்ணுமில்லெ." நான் சொன்னேன், "இன்னைக்கு என்னோட பிறந்த நாள்."

"யுவர் பர்த் டே?"

"எஸ்."

"ஓ . . . ஐ விஷ் யூ மெனி ஹாப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே."

"தாங்க் யூ."

மாத்யூ கையிலிருந்த பிரஷைக் கடித்துப் பிடித்தபடி குளியலறைக்குள் சென்றான். கட்டடத்திற்குள், ஆங்காங்கே கூச்சல்கள், ஆரவாரம், இடையிடையே சிருங்காரப் பாடல்கள். மாணவர்களும் குமாஸ்தாக்களும்தான். யாருக்கும் எந்த அல்லல்களுமில்லை. உல்லாசமான வாழ்க்கை. நான் ஒரு சிங்கிள் சாயா குடிக்க என்ன வழியென்று யோசித்துக்கொண்டிருந்தேன். மத்தியானச் சாப்பாட்டுக்கான மார்க்கம் உறுதிசெய்யப்பட்டுவிட்டது. நேற்று பஜார் வழியாகப் போகும்போது ஹமீது என்னை இன்று சாப்பிட வரச்சொல்லி அழைத்திருந்தான். இந்த ஆள், சிறு தோதுவிலான ஒரு கவிஞரும் பெரிய பணக்காரனுமாவார். இருந்தாலும் மத்தியானம்வரை சாயா குடிக்காமலிருக்க முடியாது. சூடான ஒரு சாயாவுக்கு என்ன வழி? மாத்யூவின் வயதான வேலைக்காரன் சாயா போடும் பணியில் சிரமத்துடன் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் விஷயத்தை நான் என் அறையிலிருந்தே கிரகித்தேன். அதற்கான காரணம், நான் தங்கியிருந்த அறை மாத்யூவின் சமையலறையின் ஸ்டோர் ரூம்தான். மாதம் ஒன்றுக்கு எட்டணா2 வாடகைக்குக் கட்டட உரிமையாளர் எனக்குத் தந்திருந்தார். அந்தக் கட்டடத்தின் மிகவும் மோசமானதும் சின்ன அறையும் இதுதான். இதற்குள், என் சாய்வு நாற்காலி, மேஜை, செல்ஃப், படுக்கை – இவ்வளவையும் வைத்தது போக சுவாசம் விடுவதற்கும் இடமில்லை. பெரிய மதில் கட்டினுள்ளிருக்கும் இந்த மூன்று கட்டடங்களின் மாடியிலும் கீழேயும் உள்ள எல்லா அறைகளிலும் மாணவர்களும் குமாஸ்தாக்களும்தான் தங்கியிருந்தார்கள். கட்டடத்தின் உரிமையாளருக்குக் கொஞ்சமும் பிடிக்காத ஒரேயரு நபர், நான் மட்டும்தான். என்னுடனான இந்த விருப்பமின்மைக்கு ஒரே ஒரு காரணம், நான் சரியான வாடகை கொடுப்பதில்லை, அவ்வளவுதான். என்னைப் பிடிக்காத வேறு இரண்டு பிரிவினரும் இங்கே இருக்கிறார்கள், ஓட்டல்காரனும் அரசாங்கமும். ஓட்டல்காரனுக்கு நான் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டியதிருக்கிறது. அரசாங்கத்திற்கு அப்படியான பாக்கி எதுவுமில்லை. இருந்தாலும் என்னைப் பிடிக்கவே பிடிக்காது. அப்படி உணவு, உறைவிடம், தேசம் . . . மூன்றிலும் பிரச்சினைகள் இருந்தன. அடுத்த பிரச்சினைகள்: என் உடைகள், ஷ¨, விளக்கு. (விஷயங்களை எல்லாம் எழுதுவதற்கு முன் ஒன்றை மட்டும் தெளிவுபடுத்த வேண்டியதிருக்கிறது. இப்போது நடுஜாமம் கடந்துவிட்டது. காகிதத்தையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு அறையிலிருந்து வெளியே வந்து நீண்ட நேரமாக இந்த நகரத்திலேயே சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறேன். வேறு விசேஷமான எந்தக் காரணமோ, நோக்கமோ இல்லை. இந்த ஒரு நாளைய நாட்குறிப்பை ஆரம்பம் முதல் இறுதிவரை எழுத வேண்டும். சுமாரான அளவில் ஒரு சிறுகதைக்கான வாய்ப்புகள் இதில் உண்டு. ஆனால், என் அறையிலிருக்கும் விளக்கில் எண்ணெய் இல்லை. நிறைய எழுத வேண்டியதுமிருக்கிறது. ஆகவே தூக்கப் பாயிலிருந்து எழுந்துவந்து இந்த நதியோரத்தின் விளக்குத் தூணில் சாய்ந்தமர்ந்து சம்பவங்களின் சூடு ஆறிப்போவதற்குள் எழுதத் தொடங்கினேன்.) சூல் கொண்ட கார்மேகங்கள் போல், இந்நாளில் சம்பவங்கள் எல்லாம் என் அக மனத்தை வெடிக்கச் செய்துவிடுவதுபோல் நெருக்கியடித்து நிற்கின்றன. பெரிய அளவில் ஒன்றுமில்லைதான். ஆனால், இன்று எனது பிறந்த நாள். நான் சொந்த ஊரிலிருந்து நீண்ட தூரத்தில், அன்னிய தேசத்திலிருக்கிறேன். கையில் காசில்லை. கடன் கிடைப்பதற்கான வழிகளுமில்லை. உடுத்திருப்பதும் மற்றுள்ளவைகளுமெல்லாம் நண்பர்களுடையவை. எனக்கானவை என்று சொல்லிக்கொள்ள எதுவுமில்லை. இந்த நிலைமையிலான ஒரு பிறந்த நாள் மீண்டும் மீண்டும் வரவேண்டுமென்று மாத்யூ வாழ்த்தியபோது என் மனதிற்குள் ஏதோ ஒரு அகக்குருத்து வலித்தது.

நினைத்துப் பார்த்தேன்.

மணி ஏழு: நான் சாய்வு நாற்காலியில் படுத்தபடியே நினைத்துக்கொண்டேன். இந்த ஒரு நாளையாவது களங்கமேதுமில்லாமல் பாதுகாக்க வேண்டும். யாரிடமிருந்தும் இன்று கடன் வாங்கக் கூடாது. எந்தப் பிரச்சினைக்கும் இன்று இடந்தரக் கூடாது. இன்றைய தினம் மங்களகரமாகவே முடிய வேண்டும். கடந்து போன நாட்களின் கறுப்பும் வெள்ளையுமான சங்கிலித் தொடர் களில் இருக்கும் அந்தப் பல நூறு நான்களாக இருக்கக் கூடாது, இன்றைய தினத்தின் நான். இன்று எனக்கு என்ன வயது? சென்ற வருடத்தைவிட ஒரு வயது அதிகமாகி இருக்கிறது. சென்ற வருடத்தில் . . .? இருபத்தாறு. இல்லை முப்பத்தி இரண்டு, ஒருவேளை நாற்பத்தி ஏழோ?

என் மனதில் தாங்க முடியாத வேதனை. எழுந்து சென்று முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்துப் பார்த்தேன். மோசமில்லை. சுமாரான, பரவாயில்லாத முகம். நல்ல அகன்ற முழுமையான நெற்றி. அசைவற்ற கண்கள். வளைந்த, வாள் போன்ற மெல்லிய மீசை. மொத்தத்தில் குறை சொல்ல முடியாது – என்றெல்லாம் யோசித்துக்கொண்டே நிற்கும்போது ஒரு காட்சி கண்ணில் பட்டது. மனதில் கடினமான வலியேற்பட்டது. ஒரு நரைமுடி. என் காதின் மேல் பாகத்தில் கறுத்த முடிகளினூடே ஒரு வெளுத்த அடையாளம். நான் மிகுந்த சிரமத்துடன் அதைப் பிடுங்கியெறிந்தேன். பிறகு தலையைத் தடவிக்கொண்டிருந்தேன். பின்புறம் நல்ல பளபளப்பு. கசண்டி4தான். தடவிக்கொண்டிருக்கும்போது தலை வலிப்பதுபோன்ற சிறு உணர்வு ஏற்பட்டது. சூடு சாயா குடிக்காததால் இருக்குமோ?

மணி ஒன்பது: என்னைக் கண்டதுமே ஓட்டல்காரன் முகத்தைக் கறுவிக்கொண்டு உள்ளே போய்விட்டான். சாயா போடும் அந்த அழுக்குப் பிடித்த பையன் பாக்கியைக் கேட்டான்.

நான் சொன்னேன்:

"சரி . . . அதெ நாளைக்குத் தந்திடுறேன்."

அவனுக்கு நம்பிக்கை வரவில்லை.

"நேற்றைக்கும் இதத்தானே சொன்னீங்க."

"நான் இன்னைக்குக் கெடெச் சுடும்னு நெனச்சிருந்தேன்."

"பழைய பாக்கியெத் தராம உங்களுக்கு சாயா கொடுக்க வேண்டாம்னு மொதலாளி சொல்லிட்டார்."

"செரி."

மணி பத்து: காய்ந்து சுருங்கிப்போய்விட்டேன். வாயில் உமிழ் நீர் சுரக்கவில்லை. மத்தியான நேரத்தின் கடும் வெப்பம். சோர்வின் பெரும் பாரம் என்மீது கவியத் தொடங்கிவிட்டது. அப்போது புதிய மிதியடி விற்பதற்காக வெளுத்து, மெலிந்த எட்டும் பத்தும் வயதுள்ள இரண்டு கிறிஸ்தவப் பையன்மார் என் அறை வாசலுக்கு வந்தார்கள். நான் இரண்டு மிதியடிகள் வாங்க வேண்டுமாம். ஜோடி ஒன்றுக்கு மூன்று அணாதான் விலையாம். மூன்று அணா.

"வேணாம், குழந்தைகளே."

"சாரைப்போல உள்ளவங்க வாங்கலேன்னா வேற யார் சார் வாங்குவாங்க?"

"எனக்கு வேணாம், குழந்தைகளே . . . எங்கிட்டே காசு இல்லெ."

"செரி." நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய சிறு முகங்கள். எதையும் உட்புகுந்து அறிந்துகொள்ளவியலாத சுத்த இதயங்கள். இந்த வேஷமும் சாய்வு நாற்காலியில் கிடக்கும் இந்தத் தோரணையும். நான் ஒரு சாராம் . . .! சாய்வு நாற்காலியும் சட்டையும் வேட்டியும் ஷ¨வும். எதுவும் என்னுடையதல்ல குழந்தைகளே. எனக்கென்று இந்த உலகத்தில் சொந்தமாக எதுவுமே இல்லை. வெறும் நிர்வாணமான இந்த நான்கூட என்னுடையதுதானா? பாரதத்தின் ஒவ்வொரு நகரங்களிலும் எத்தனையெத்தனை ஆண்டு காலங்கள் சுற்றித் திரிந்து ஏதேதோ ஜாதி மக்களுடன் எங்கெங்கெல்லாமோ தங்கியிருக்கிறேன். யாருடைய ஆகாரங்கள் எல்லாம் சேர்ந்தது இந்த நான். எனது இரத்தமும் எனது மாமிசமும் எனது எலும்பும் இந்த பாரதத்திற்குரியது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும் கராச்சி4 முதல் கல்கத்தா வரையிலும் – அப்படி பாரதத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். பெண்களும் ஆண்களுமான அந்த அத்தனை நண்பர்களையும் நான் இன்று நினைவுகூர்கிறேன். நினைவு . . . ஒவ்வொருவரையும் தழுவியபடியே என் அன்பு அப்படியே வியாபித்துப் பறக்கட்டும். பாரதத்தைக் கடந்தும் . . . உலகைக் கடந்தும் . . . சுகந்தம் வீசும் வெண்நிலவுபோல் . . . அன்பு, என்னையறிந்து அன்பு காட்டுபவர்கள் யாராவது இருக்கிறார்களா? அறிதல், எனக்குத் தோன்றுவது . . . ரகசியங்களின். . . அந்தத் திரையை விலக்குவதுதான். குறைகளையும் பலவீனங்களையும் களைந்து பார்த்தால் என்ன மிச்சமிருக்கப் போகிறது? வசீகரமான ஏதாவது ஒன்று மனிதனுக்குத் தேவைப்படுகிறது. அன்புகாட்டவும் அன்புகாட்டப்படவும். ஹோ . . . காலந்தான் எத்தனை துரிதமாக இயங்குகிறது. தகப்பனின் சுட்டு விரலை இறுகப் பற்றிக் கொஞ்சி விளையாடித் திரிந்த நான் "உம்மா பசிக்குது" என்று தாயின் உடுமுண்டின் தலைப்பை இழுத்துக் கேட்ட நான், இன்று? ஹோ, காலத்தின் உக்கிரமான பாய்ச்சல். சித்தாந்தங்களின் எத்தனையெத்தனை வெடிகுண்டுகள் என் அகத்தளங்களில் விழுந்து வெடித்துச் சிதறியிருக்கின்றன. பயங்கரமான போர்க்களமாக இருந்தது என் மனது. இன்று நான் யார்? புரட்சிக்காரன், ராஜத் துரோகி, இறை எதிரி, கம்யூனிஸ்ட் – மற்றும் என்னவெல்லாமோ. உண்மையில் இதில் ஏதாவது ஒன்றா நான்? ஹ§ம். என்னென்ன மனச் சஞ்சலங்கள். தெய்வமே? மூளைக்குள் சுள்சுள்ளென்று குத்துகிறது. சாயா குடிக்காததாலிருக்குமோ? தலை நேராக நிற்கவில்லை. போய், சாப்பிட்டுவிட வேண்டியதுதான். இந்தத் தலைவேதனையுடன் ஒரு மைல் தூரம் நடக்க வேண்டும். இருந்தாலும் வயிறு நிறையச் சாப்பிடலாமல்லவா?

மணி பதினொன்று: ஹமீது கடையில் இல்லை. வீட்டிலிருப்பாரோ? என்னையும் அவர் கூடவே அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அதுதான் முறை. ஒருவேளை, மறந்து போயிருக்கலாம். வீட்டுக்கே போய்விடலாமா? சரி.

மணி பதினொன்றரை: ஹமீதின் மாடி வீட்டின் கீழ் இரும்புக் கதவு அடைக்கப்பட்டிருந்தது. நான் அதைத் தட்டினேன்.

"மிஸ்டர் ஹமீது."

பதில் இல்லை.

"மிஸ்டர் ஹமீ. . .து."

மிகுந்த கோபத்துடனிருந்த ஒரு பெண்ணின் உரத்த குரல் மட்டும்.

"இங்கெ இல்லை."

"எங்கே போயிருக்காரு?"

மௌனம். நான் திரும்பவும் கதவைத் தட்டினேன். மனம் மிகுந்த சோர்வடைந்தது. திரும்பி நடக்கப் போகும்போது பக்கத்தில் யாரோ வருவது போன்ற காலடிச் சத்தம். கூடவே வளை கிலுக்கமும். வாசல் கதவு இலேசாகத் திறந்தது – ஒரு இளவயதுப் பெண்.

நான் கேட்டேன்: "ஹமீது எங்கே போயிருக்காரு?"

"அவசரமா ஒரு எடத்துக்கு." மிகுந்த பொறுமையுடன்தான் பதில்.

"எப்போ வருவாரு?"

"சாயுங்காலத்துக்குப் பிறகு ஆயிடும்."

சாயுங்காலத்துப் பிறகு?

"வந்தா நான் வந்து தேடுனதாகச் சொல்லுங்க."

"நீங்க யாரு?"

நான் யார்?

"நான் . . . ஓ . . . யாருமில்லெ. எதுவும் சொல்ல வேண்டாம்."

நான் திரும்பி நடந்தேன். அனல் தகிக்கும், கால் புதையும் வெள்ளை மணல் பரப்பு. அதைத் தாண்டினால் கண்ணாடிச் சில்லுபோல் பளபளக்கும் கால்வாய். கண்களும் மூளையும் இருண்டு போயின. மிகுந்த மன அங்கலாய்ப்பு. எலும்புகள் சூடேறிக்கொண்டிருந்தன. தாகம், பசி, ஆவேசம். உலகத்தையே விழுங்கிவைக்கும் ஆவேசம். கிடைப்பதற்கான வழியில்லையென்பதுதான் ஆவேசம் அதிகரிப்பதற்கான காரணம். கிடைப்பதற்கான உத்தரவாதமேதுமற்ற நிலையில் எண்ணற்ற பகல் இரவுகள் என் முன். நான் தளர்ந்து விழுந்துவிடுவேனா? தளர்ந்து போய்விடக் கூடாது. நடக்க வேண்டும் . . . நடக்க வேண்டும்.

மணி பன்னிரண்டரை: பரிச்சயமானவர்கள் அனைவரும் பார்த்ததாகவே காட்டிக்கொள்ளாமல் கடந்து போய்க்கொண்டிருந்தார்கள். "தோழர்களே, இன்று எனது பிறந்த நாள். எனக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டுப் போங்கள்" என்று என் மனம் உச்சரித்தது. நிழல் தடங்கள் என்னைத் தாண்டிப் போய்க்கொண்டிருந்தன. நண்பர்கள் ஏன் என்னைக் கண்டு பேசாமல் போகிறார்கள்? அது சரி!

என் பின்னால் ஒரு சி.ஐ.டி.

மணி ஒன்று: ஒரு காலத்தில் பத்திரிகை அதிபரும் இப்போது வியாபாரியாகவுமிருக்கும் மி.பியைப் பார்க்கச் சென்றேன். கண்பார்வை தெளிவுடன் இல்லை. பதற்றமாக இருந்தது.

பி, கேட்டார். "புரட்சிகளெல்லாம் எந்த இடம்வரை வந்திருக்கு?"

நான் சொன்னேன்: "பக்கத்துலெ வந்துட்டு."

"ம்ஹ§ம்! எங்கிருந்து வாறீங்க? பார்த்தே கொஞ்ச காலம் ஆயிட்டுதே?"

"ஹா . . ."

"அப்புறம், என்ன விசேஷம்?"

"சே . . . ஒண்ணுமில்லெ. சும்மா."

நான் அவரது பக்கத்திலிருந்த செயரில் அமர்ந்தேன். எனது கட்டுரைகளில் பலவற்றை நான் அவரது பெயரில் எழுதிப் பிரசுரம் செய்திருந்தேன். பண்டைப் பெருமை பேசுவதற்காக அவர் அந்தப் பழைய பத்திரிகைகளை அட்டையிட்டுவைத்திருந்தார். நான் அதையெடுத்துத் தலைச்சுற்றலோடு அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன். "எனக்குச் சூடா ஒரு சாயா வேணும். நான் ரொம்பத் தளந்து போயிருக்கேன்" என்று என் மனம் வேகமாகச் சொல்லிக்கொண்டிருந்தது. பி, ஏன் என்னிடம் எதுவுமே கேட்காமலிருக்கிறார்? நான் சோர்ந்து போயிருப்பதை அவர் கவனிக்கவில்லையா? அவர் கல்லாப் பெட்டியின் பக்கத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். நான் மௌனமாகத் தெருவைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். துண்டு தோசைக்காக இரண்டு தெருக்குழந்தைகள் சண்டையிடுகிறார்கள். "ஒரு சூடு சாயா." நான் கேட்கவில்லை. என் சர்வ நாடிகளும் இரந்துகொண்டிருந்தன. பி, பெட்டியைத் திறந்து நோட்டுகளின், சில்லறைகளினிடையிலிருந்து ஒரு அணாவை எடுத்து ஒரு பையனிடம் கொடுத்தார்.

"சாயா கொண்டு வாடா."

பையன் ஓடிச் சென்றான். என் மனம் குளிர்ந்தது. எவ்வளவு நல்ல மனிதன் . . . பையன் கொண்டுவந்த சாயாவை பி. வாங்கிவிட்டு என்னைப் பார்த்துத் திரும்பினார்.

"உங்களுக்குச் சாயா வேணுமா?"

நான் சொன்னேன், "வேண்டாம்."

ஷ¨வின் லேசை இறுக்குவது போன்ற பாவனையுடன் குனிந்து கொண்டேன். முகத்தை அவர் பார்த்துவிடக் கூடாது. என் மன விகாரத்தை அது காட்டிக் கொடுத்துவிடக் கூடும்.

பி, வருத்தத்துடன் சொன்னார், "உங்களோட புத்தகங்கள் எதையும் எனக்குத் தரலியே?"

நான் சொன்னேன்: "தர்றேன்."

"அதெப் பற்றியதான பத்திரிகை விமர்சனங்கள் எல்லாத்தையும் நான் வாசிப்பதுண்டு."

நான் சொன்னேன்: "நல்ல விஷயம்."

சொல்லிவிட்டுக் கொஞ்சம் சிரித்துவிட முயற்சி செய்தேன். மனத்தில் பிரகாசம் வற்றிப்போன முகம், எப்படிச் சிரிக்கும்?

நான் விடைபெற்றுத் தெருவிலிறங்கி நடந்தேன்.

என் பின்னால் அந்த சி.ஐ.டி.

மணி இரண்டு: நான் தளர்ந்து, மிகவும் சோர்ந்துபோய் அறையில் நாற்காலியில் சாய்ந்து கிடந்தேன். நல்ல ஆடைகள் உடுத்தி, வாசனைத் திரவியம் பூசிய ஏதோ ஒரு பெண் எனது அறை வாசலில் வந்தாள். எங்கோ தொலைதூரத்திலுள்ளவள். தண்ணீர் பிரளயத்தால் நாடே அழிந்துபோய்விட்டது; ஏதாவது உதவிசெய்ய வேண்டும். மெல்லிய புன்சிரிப்புடன் அவள் என்னைப் பார்த்தாள். மார்பகங்களை வாசல் கதவின் சட்டத்தில் இறுக அமர்த்தியபடியே பார்த்தாள். என் மனதிற்குள்ளிருந்து சூடான விகாரம் எழுந்தது. அது படர்ந்து நாடி நரம்புகளெங்கும் பரவியது. என் இதயம் அடித்துக் கொள்வது எனக்குக் கேட்பதுபோல் தோன்றியது. பயங்கரமும் சிக்கலும் மிகுந்தது அந்த நிமிடம்.

"சகோதரி, எங்கிட்டே எதுவுமே இல்லை. நீங்க வேறெ எங்கயாவது போய்க் கேளுங்க – எங்கிட்டே எதுவுமே இல்லை."

"எதுவுமே இல்லியா?"

"இல்லே."

அதன் பிறகும் அவள் போகாமல் நின்றாள். நான் சத்தமாகச் சொன்னேன்.

"போயிரு, ஒண்ணுமில்லே."

"சரி." அவள் வருத்தத்தோடு குலுங்கி அசைந்து நடந்து போனாள். அப்போதும் அவளிடமிருந்து பரிமள வாசம் வந்துகொண்டிருந்தது.

மணி மூன்று: யாரிடமிருந்தாவது கடன் வாங்கினால் என்ன? பயங்கரமான சோர்வு. மிகவும் இயலாத ஒரு கட்டம். யாரிடம் கேட்பது? பல பெயர்கள் நினைவுக்கு வந்தன. ஆனால், கடன் வாங்குவது நட்பின் அந்தஸ்தைக் குறையச் செய்கிற ஒரு ஏற்பாடு. செத்துவிடலாமா என்று யோசனை செய்தேன். எப்படியான சாவாக இருக்க வேண்டும்?

மணி மூன்றரை: நாக்கு உள்ளே இழுத்துக் கொண்டிருந்தது. கொஞ்சமும் முடியவில்லை. குளிர்ந்த நீரில் அப்படியே மூழ்கிக் கிடந்தால். உடல் முழுவதையும் கொஞ்சம் குளிரவைத்தால். அப்படியே படுத்திருக்கும்போது சில பத்திரிகை அதிபர்களின் கடிதங்கள் வந்தன. கதைகளை உடனே அனுப்பிவைக்க வேண்டும். திருப்பியனுப்பும் வசதியுடன். கடிதங்களை அப்படியே போட்டுவிட்டு நான் இயலாமல் படுத்திருந்தேன். வங்கிக் குமாஸ்தா கிருஷ்ணபிள்ளையின் வேலைக்காரப் பையன் ஒரு தீக்குச்சிக் கேட்டு வந்தான். அவனிடம் சொல்லி ஒரு தம்ளர் தண்ணீர் கொண்டுவரச்செய்து குடித்தேன்.

"சாருக்கு உடம்புக்குச் சொகமில்லையா?" பதினொரு வயதான அந்தப் பையனுக்குச் சோர்வுக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நான் சொன்னேன், "சுகக்கேடு எதுவுமில்லை."

"பெறகு . . .? சார், சாப்பிடலியா?"

"இல்லெ ."

"அய்யோ, ஏன் சாப்பிடலெ?"

அந்தச் சிறுமுகமும் கறுத்த கண்களும் உடுத்திருக்கும் கரிபுரண்ட ஒரு துண்டும்.

அவன் அதிர்ச்சியுடன் நின்றுகொண்டிருந்தான்.

நான் கண்களை மூடிக்கொண்டேன்.

அவன் மெதுவாகக் கூப்பிட்டான்.

"சாரே."

"உம்?"

நான் கண்களைத் திறந்தேன்.

அவன் சொன்னான்: "எங்கிட்டே ரெண்டணா இருக்கு."

"செரி?"

"நான் அடுத்த மாசம் வீட்டுக்குப் போவும்போது சார் தந்தாப் போதும்."

என் மனம் வெதும்பியது. அல்லாஹ§ . . .

"கொண்டு வா."

முழுசாக இதைக் காதில் வாங்குவதற்கு முன் அவன் ஓடினான்.

அப்போது, தோழர் கங்காதரன் வந்தார். வெள்ளைக் கதர் வேட்டி, வெள்ளைக் கதர் ஜிப்பா, அதன்மீது நீளச் சால்வை போர்த்தியிருந்தார். . . கறுத்து, நீண்ட முகமும் விஷய பாவமுள்ள பார்வையும்.

சாய்வு நாற்காலியில் நான் மிடுக்காகப் படுத்திருப்பதைக் கண்டதும் அந்தத் தலைவன் கேட்டான்: "நீ ஒரு பெரிய பூர்ஷ§வா ஆயிட்டே போலிருக்கு?"

எனக்குத் தலைச்சுற்றல் இருந்துகொண்டிருந்தாலும் சிரிப்பு வந்தது. தலைவனின் உடைகளின் உரிமையாளர்யாராக இருக்குமென்ற யோசனை என்னுள் உதித்தது. எனக்குப் பரிச்சயமுள்ள ஒவ்வொரு அரசியல்வாதிகளின் உருவமும் என் கற்பனையில் ஓடியது. இழப்பதற்கு என்ன இருக்கிறது?

கங்காதரன் கேட்டான்: "நீ எதுக்குச் சிரிக்கிறே?"

நான் சொன்னேன்: "ஒண்ணுமில்லை மக்களே, நம்ம இந்த வேஷங்களை நினைச்சதும் சிரிப்பு வந்தது."

"உன் பரிகாசத்தை விட்டுட்டு விஷயத்தைக் கேளு. பெரிய பிரச்சினை நடந்துட்டிருக்கு. லத்தி சார்ஜும் டீயர்கேசும் துப்பாக்கிச் சூடும் நடக்கும் போலிருக்கு. பத்து மூவாயிரம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்காங்க. ஒண்ணரை வாரமாக அவங்க பட்டினி கிடக்கிறாங்க. பெரிய கலவரம் ஏற்படலாம். மனுசன் பட்டினி கிடந்தா என்ன நடக்கும்?"

"இந்த விவரங்கள் எதையும் நான் பத்திரிகைகள்லே வாசிக்கலியே?"

"பத்திரிகைகள்லே போடக் கூடாதுன்னு எச்சரிக்கை விடப்பட்டிருக்கு."

"அது செரி. நான் இப்போ என்ன செய்யணும்?"

"அவங்க பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்திருக்காங்க. நான்தான் தலைமை. நான் அங்கே போய்ச் சேர, படகுக் கூலி ஓரணா வேணும். அப்புறம், இன்னைக்கு நான் எதுவும் சாப்பிடவுமில்லை. நீயும் கூட்டத்துக்கு வா."

"மக்களே, எல்லாமே செரிதான். ஆனா, எங்கிட்டெ காசெதுவும் இல்லே. கொஞ்ச நாளாயிட்டுது, நானும் ஏதாவது சாப்பிட்டு. நேரம் வெளுத்த பெறகு இதுவரை நானும் ஒண்ணுமே சாப்பிடல்லை. போதாத குறைக்கு இன்னைக்கு என்னோட பிறந்த நாள் வேறே."

"பிறந்த நாளா? நமக்கெல்லாம் ஏது பிறந்த நாள்?"

"பிரபஞ்சத்திலெ உள்ள எல்லாவற்றுக்குமே பிறந்த நாள்னு ஒண்ணு இருக்கு."

அப்படியாக, பேச்சு பல திசைகளிலும் சென்றது. கங்காதரன் தொழிலாளர்களைப் பற்றியும் அரசியல்வாதிகளைப் பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும் பேசினான். நான் வாழ்க்கையைப் பற்றியும் பத்திரிகை அதிபர்களைப் பற்றியும் இலக்கியவாதிகளைப் பற்றியும் பேசினேன். அதற்கிடையில் பையன் வந்தான். அவனிடமிருந்து நான் ஒரு அணாவை வாங்கினேன். பாக்கி ஒரு அணாவுக்குச் சாயாவும் பீடியும் தோசையும் கொண்டு வரச் சொன்னேன். சாயா காலணா. தோசை அரையணா. பீடி காலணா.

தோசையை பார்சல் செய்திருந்த அமெரிக்கப் பத்திரிகைக் காகிதத்துண்டில் ஒரு படமிருந்தது. அது என்னை ரொம்பவும் கவர்ந்தது. நானும் கங்காதரனும் தோசை தின்றோம். ஒவ்வொரு தம்ளர் தண்ணீரும் குடித்துவிட்டுக் கூடவே ஆளுக்குக் கொஞ்சம் சாயா. பிறகு ஒரு பீடியைப் பற்றவைத்துப் புகை விட்டபடியே கங்காதரனிடம் ஒரு அணாவைக் கொடுத்தேன். போகும்போது கங்காதரன் விளையாட்டாகக் கேட்டான்: "இன்னைக்கு உன் பிறந்த நாளில்லியா? நீ இந்த உலகத்துக்கு ஏதாவது செய்தி சொல்ல விரும்புறியா?"

நான் சொன்னேன்: "ஆமா, மக்களே. புரட்சி சம்பந்தமான ஒரு செய்தி."

"சொல்லு, கேட்போம்."

"புரட்சியின் அக்னி ஜுவாலைகள் படர்ந்து உலகெங்கும் கொளுந்துவிட்டெரியட்டும். இன்றைய சமூக அமைப்புகள் அனைத்துமே எரிந்து சாம்பலாகி, பூரணமான மகிழ்ச்சியும் அழகும் சமத்துவமும் நிரம்பிய புது உலகம் அமையட்டும்."

"பேஷ். நான் இன்னைக்கு இதைத் தொழிலாளர் கூட்டத்திலெ சொல்லிர்றேன்." என்று சொல்லிவிட்டுக் கங்காதரன் வேகமாக இறங்கிச் சென்றான். நான் ஒவ்வொரு அரசியல்வாதிகளைப் பற்றியும் ஒவ்வொரு எழுத்தாளர்களைப் பற்றியும் எல்லா வகையான ஆண் பெண்களைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்கினேன். இவர்களெல்லாம் எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்? தோசை பொதிந்துவந்த அந்தக் காகிதத் துண்டைப் படுத்திருந்தபடியே எடுத்தேன். அப்போது வாசலைக் கடந்து, முகத்தை இறுக்கிப் பிடித்து, வீட்டின் உரிமையாளர் வருவதைக் கண்டேன். இவரிடம் இன்று என்ன பதில் சொல்லலாம் என்று நினைத்தவாறே காகிதத்தைப் பார்த்தேன். வானத்தை முத்தமிட்டு நிற்கும் உயர்ந்த மணிக்கூண்டுகள் நிறைந்த பெரு நகரம். அதன் நடுவே, தலை உயர்த்தி நிற்கும் ஒரு மனிதன். இரும்புச் சங்கிலிகளால் அவன் வரிந்து கட்டப்பட்டுப் பூமியோடு பிணைக்கப்பட்டிருந்தான். ஆனாலும், அவனது பார்வை சங்கிலியிலோ பூமியிலோ அல்ல. தொலைவில், பிரபஞ்சங்களுக்குமப்பால், முடிவற்ற நெடுந்தொலைவில், ஒளிக்கதிர் விதைக்கும் மாபெரும் ஒளியான அந்தக் குவிமையத்தில். அவனது கால்களின் அருகில் ஒரு திறந்த புத்தகமிருந்தது. அதன் இரண்டு பக்கங்களிலுமாக அந்த மனிதனுடையது மட்டுமல்ல, எல்லா மனிதர்களுடையதுமான வரலாறு. அதாவது: ‘விலங்குகளால் மண்ணோடு சேர்த்துப் பிணைக்கப்பட்டி ருந்தாலும் அவன் காண்பது, காலங்களைக் கடந்த, அதி மனோகரமான மற்றொரு நாளை.’

"நாளை . . . அது எங்கே இருக்கிறது?"

"என்னா, மிஸ்டர்?" வீட்டுக்காரரின் எகத்தாளமான கேள்வி. "இன்னைக்காவது தந்துருவீங்களா?"

நான் சொன்னேன், "பணமெதுவும் கையிலெ வந்து சேரல்லெ. அடுத்த ஒண்ணுரெண்டு நாள்லெ தந்திடறேன்." ஆனால், இனி அவர் தவணையை ஏற்றுக் கொள்வதுபோல் தெரியவில்லை.

"இப்படியெல்லாம் எதுக்கு வாழணும்?" அவரது கேள்வி. நியாயமான விஷயம். இப்படியெல்லாம் எதுக்கு வாழணும்? நான் இந்தக் கட்டடத்தில் வந்து மூன்று வருடம் ஆகப் போகிறது. மூணு சமையலறைகளை நான்தான் சரியாக்கிக் கொடுத்தேன். அதற்கு இப்போது நல்ல வாடகை கிடைக்கிறது. இந்த நான்காவது ஸ்டோர் ரூமையும் மனிதன் வாழ்வதுபோல் நான் ஆக்கிக் கொடுத்த பிறகு அதிக வாடகைக்கு இதை எடுக்க வேறு ஆள் இருக்கிறதாம். அந்த வாடகையை நானே தந்து விடுகிறேன் என்று ஒத்துக்கொண்டாலும் போதாது – காலிசெய்து கொடுத்துவிட வேண்டுமாம்.

இல்லெ. முடியாது. காலிசெய்ய விருப்பமில்லெ. என்னவேணா செய்துக்கிடுங்க.

மணி நான்கு: எனக்கு இந்த ஊரே அலுத்துப்போய்விட்டது. என்னைக் கவர்வதற்கான எதுவுமே இந்த நகரில் இல்லை. தினமும் சஞ்சரிக்கும் ரோடுகள். நித்தமும் பார்க்கும் கடைகளும் முகங்களும். பார்த்தவைகளையே பார்க்க வேண்டும். கேட்டதையே கேட்க வேண்டும். பயங்கரமான மன அலுப்பு . . . எதுவுமே எழுதவும் தோன்றவில்லை. இல்லையென்றாலும் எழுதுவதற்குத் தான் என்ன இருக்கிறது?

மணி ஆறு: மகிழ்ச்சியான மாலைப் பொழுது. கடல் விழுங்கிக்கொண்டிருக்கும், வட்ட வடிவமாக ஜொலிக்கும், இரத்த நிற அஸ்தமன சூரியன். பொன்னிற மேகங்கள் நிறைந்த மேற்கு அடிவானம். கரை காண முடியாத பெருங்கடல். அருகே, சிற்றலைகளைப் பரப்பும் கால்வாயின் ஓரத்தில் கரைபுரண்டோடியது மகிழ்ச்சி. ஆடையலங்காரங்களுடன் சிகரெட் புகைத்தபடி சஞ்சரிக்கும் இளைஞர்கள். துடிக்கும் கண்களுடன் வண்ணச் சேலைகளைக் காற்றில் அலையவிட்டுப் புன்னகை தூவும் முகங்களுடன் உலாவும் இளம் பெண்கள். காதல் நாடகங்களின் பின்னணிக் காட்சிபோல், மனதைக் குளிர்விக்கும் பூங்காவனத்தில் வானொலிப் பாடல்களும், இடையே மலர்களைத் தழுவி வாசனைகளுடன் கடந்து செல்லும் இளங் காற்றும் . . . ஆனால், நான் தளர்ந்து விழுந்துவிடுவேன் போலிருக்கிறது.

மணி ஏழு: ஒரு போலீஸ்காரர் நான் தங்கியிருந்த இடத்திற்கு வந்து இன்றும் என்னைக் கூட்டிக்கொண்டு போனார். கண்களைக் கூச வைக்கும் பெட்ரோமாக்ஸ் விளக்கினெதிரில் என்னை உட்காரவைத்தார். கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது என் முகத்தில் தென்படும் பாவமாற்றங்களை நுட்பமாகக் கவனித்தவாறே கைகளைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டு போலீஸ் டெபுடி கமிஷனர் அங்குமிங்குமாக உலாத்திக் கொண்டிருந்தார். அவரது பார்வை, எப்போதுமே என் முகத்தில்தான் படிந்திருந்தது. என்ன ஒரு பாவனை! எவ்வளவு கம்பீரம்! நான் ஏதோ ஒரு பெரிய குற்றம் செய்துவிட்டுத் தலைமறைவாகிவிட்டதுபோல். ஒரு மணிநேரக் கேள்விக்கணைகள். என்னுடைய நண்பர்கள் யார், யார்? எங்கிருந்தெல்லாம் எனக்குக் கடிதங்கள் வருகின்றன? அரசாங்கத்தைக் கவிழ்க்க நினைக்கும் ரகசிய இயக்கத்தின் உறுப்பினன்தானே நீ? புதிதாக இப்போது என்னென்ன எழுதிக்கொண்டிருக்கிறாய்? எல்லாவற்றிற்கும் உண்மையான பதிலைத்தான் சொல்ல வேண்டும். அப்புறம் . . .

"உங்களை இங்கிருந்து நாடு கடத்த என்னாலெ முடியுங்கிறது உங்களுக்குத் தெரியும்தானே?"

"தெரியும். நான் எந்த ஆதரவுமில்லாதவன். ஒரு சாதாரண போலீஸ்காரர் நெனைச்சாகூட என்னெ அரெஸ்ட் செய்து லாக்கப்பிலே போட்டு . . ."

மணி ஏழரை: நான் அறைக்குத் திரும்பிவந்து இருட்டில் அமர்ந்திருந்தேன். நன்றாக வேர்த்தது. இன்று என் பிறந்த நாள். நான் தங்குமிடத்தில் வெளிச்சமில்லை. மண்ணெண்ணெய்க்கு என்ன வழி? பசியடங்க ஏதாவது சாப்பிடவும் வேண்டும். ஆண்டவா, யார் தருவார்கள்? யாரிடமும் கடன் கேட்கவும் மனமில்லை. மாத்யூவிடம் கேட்டுப் பார்ப்போமா? வேண்டாம். அடுத்த கட்டடத்தில் வசிக்கும் கண்ணாடிபோட்ட அந்த மாணவனிடம் ஒரு ரூபாய் கேட்டுப் பார்ப்போம். அவன் ஒரு பெரிய வியாதிக்கு நிறையப் பணத்தை ஊசிக்கும் மருந்துக்குமென்று செலவு செய்துகொண்டிருந்தான். கடைசியில் எனது நாலணா மருந்தில் அது குணமாகிவிட்டது. அதற்கான பிரதிபலனாக என்னை ஒரு தடவை சினிமாப் பார்க்கக் கூட்டிக்கொண்டு போனான். அவனிடம் போய் ஒரு ரூபாய் கேட்டால் தராமலிருப்பானா?

மணி எட்டேமுக்கால்: வழியில் மாத்யூ எங்கே என்று விசாரித்தேன். அவன் சினிமா பார்க்கப் போயிருக்கிறானாம். பேச்சுச் சத்தமும் உரத்த சிரிப்பும் கேட்டுக் கொண்டிருந்த அடுத்த கட்டடத்தின் மேல்மாடிக்குச் சென்றேன். புகைந்துகொண்டிருக்கும் சிகரெட்டின் வாசம். மேஜையின் மீது எரியும் சரராந்தலின் ஒளிபட்டுப் பிரகாசிக்கும் பற்கள், ரிஸ்ட் வாட்சுகள், தங்கப் பொத்தான்கள்.

இயலாமையின் பிரதிபிம்பமான நான் செயரில் அமர்ந்தேன். அவர்கள் பேச்சைத் தொடர்ந்தார்கள். அரசியல் விஷயங்கள், சினிமா, கல்லூரி மாணவிகளின் உடல் வர்ணனைகள், தினமும் இரண்டு முறை சேலை மாற்றும் மாணவிகளின் பெயர்கள் . . . இப்படிப் பல விஷயங்கள் . . . எல்லாவற்றிலும் நான் என் கருத்துகளைச் சொன்னேன். இடையே துண்டுக் காகிதத்தில் ஒரு குறிப்பெழுதினேன். ‘ஒரு ரூபாய் வேண்டும். மிக அவசியமான ஒரு தேவை. இரண்டு மூன்று நாளில் திருப்பித் தந்துவிடுகிறேன்.’

அப்போது கண்ணாடிக்காரன் சிரித்தான்.

"என்னா, ஏதாவது சிறுகதைக்கு பிளாட் எழுதுறீங்களா?"

நான் சொன்னேன்.

"இல்லை."

அதைத் தொடர்ந்து விஷயம் சிறுகதை இலக்கியத்திற்கு வந்தது.

அழகாகயிருந்த அரும்பு மீசைக்காரன் குறைபட்டுக் கொண்டான்;

"நம்ம மொழியிலெ நல்ல சிறுகதைகள் ஒண்ணுமே இல்லை."

தாய்மொழியிலும் தாய்நாட்டிலும் நல்லதாக என்ன இருக்கப்போகிறது. நல்ல ஆண்களும் பெண்களும்கூடக் கடலுக்கப்பால்தான்.

நான் கேட்டேன்:

"யாருடைய சிறுகதைகளையெல்லாம் வாசிச்சிருக்கிறீங்க?"

"ரொம்ப ஒண்ணும் வாசிச்சதில்லெ. முதல் விஷயம், தாய்மொழியில் ஏதாவது வாசிக்கிறதுகூட ஒரு அந்தஸ்து குறைஞ்ச விஷயம்தான்."

நான் நமது சில சிறுகதை ஆசிரியர்களின் பெயர்களைச் சொன்னேன். இவர்களில் பெரும்பாலானவர்களின் பெயர்களைக்கூட இவர்கள் கேள்விப்பட்டிருக்கவில்லை.

நான் சொன்னேன்:

"ஆங்கிலத்துலெ மட்டுமல்ல, உலகிலுள்ள எல்லா மொழிச் சிறுகதைகளோடும் போட்டிபோடத் தகுந்த சிறுகதைகள் நம்ம மொழியில் இன்னைக்கு உண்டு. நீங்க ஏன் அதையெல்லாம் வாசிக்கிறதில்லெ?"

சிலவற்றை அவர்கள் வாசித்திருக் கிறார்களாம். அதில் பெருமளவும் வறுமையைப் பற்றிய கதைகள் தானாம். எதுக்கு அதையெல்லாம் எழுத வேண்டும்?

நான் எதுவும் பேசவில்லை.

"உங்களோட கதைகளையெல்லாம் வாசிச்சுப் பார்த்தா . . ." தங்கக் கண்ணாடிக்காரன் அறுதியாகச் சொன்னான்: "இந்த உலகத்துலெ என்னமோ ஒரு கோளாறு இருக்குறதெப்போலெ தோணும்."

உலகத்தில் என்ன கோளாறு? அப்பா அம்மாக்கள் கஷ்டப்பட்டு மாதந்தோறும் பணம் அனுப்பிவைக்கிறார்கள். அதைச் செலவுசெய்து கல்வி பயிலுகிறார்கள். சிகரெட், சாயா, காஃபி, ஐஸ்கிரீம், சினிமா, குட்டிக்கூரா பவுடர், வாஷ்லின், ஸ்பிரே, விலையுயர்ந்த ஆடைகள், உயர்தர உணவு வகைகள், மது வகைகள், போதை மருந்து, சிபிலிஸ், கொனேரியா – அப்படிப்போகிறது, கோளாறு இல்லாமல். எதிர்கால யோக்கியர்கள், நாட்டை ஆள வேண்டியவர்கள், சட்டத்தை அமல்படுத்த வேண்டியவர்கள், அறிவுஜீவிகள், பண்பாட்டுக் காவலர்கள், மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள் . . . சித்தாந்தவாதிகள் . . .! உலகத்தில் என்னதான் கோளாறு?

எனக்குப் பயங்கரமாக ஒரு சொற்பொழிவாற்ற வேண்டும்போல் தோன்றியது.

"இன்றைய உலகம் . . ." நான் தொடங்கினேன். அப்போது கீழேயிருந்து தளர்ந்து போன ஒரு சிறு குரல்:

"மிதியடி வேணுமா, மிதியடி?"

"கொண்டுவா" சிரித்தவாறே உத்தரவிட்டான், கண்ணாடிக்காரன். அப்படியாக விஷயம் மாறியது. மேலே ஏறிவந்தவர்கள் காலையில் பார்த்த அதே பிஞ்சு முகங்கள் தான். அவர்கள் மூச்சுவாங்கிக் கொண்டிருந்தார்கள். கண்களை வெறித்தபடி, முகங்கள் வாடித்தளர்ந்து, உதடுகள் வறண்டுபோயிருந்தன. அதில் பெரிய பையன் சொன்னான்:

"சார்மார்களுக்கு வேணும்னா ரெண்டரை அணா."

காலையில் மூன்று அணாவாக இருந்த மிதியடி.

"ரெண்டரை அணாவா?" தங்கக் கண்ணாடிக்காரன் மிதியடியைச் சந்தேகத்துடன் திருப்பித் திருப்பிப் பார்த்தான்.

"இது, கருஈட்டி இல்லியேடா?"

"கருஈட்டிதான் சார்."

"உங்க வீடு எங்கெ குழந்தைகளே?" என் கேள்விக்குப் பெரியவன் பதில் சொன்னான்.

"இங்கிருந்து மூணு மைல் தூரத்துலே உள்ள ஒரு இடம்."

"ரெண்டணா." தங்கக் கண்ணாடிக்காரன் கேட்டான்.

"ரெண்டே காலணா குடுங்க சார்."

"வேண்டாம்."

"ஓ . . ."

அவர்கள் வருத்தத்துடன் படியிறங்கினார்கள். தங்கக் கண்ணாடிக்காரன் திரும்ப அழைத்தான்.

"கொண்டு வாடா."

அவர்கள் திரும்பவும் வந்தார்கள். நல்லதாகப் பார்த்து ஒரு ஜோடி மிதியடியைத் தேர்ந்தெடுத்துவிட்டு ஒரு பத்து ருபாய் நோட்டை நீட்டினான். அந்தக் குழந்தைகளிடம் ஒரு நயா பைசாகூட இல்லை. அவர்கள் இதுவரை எதுவுமே விற்கவில்லை. நேரம் விடிந்தது முதல் அலைந்து திரிகிறார்கள். மூன்று மைல் தொலைவில், ஏதோ ஒரு குடிசையில், அடுப்பில் சூடாறிக் கிடக்கும் தண்ணீருடன் தமது குழந்தைகள் வருவதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெற்றோர்களின் காட்சி என் மனத்தில் ஓடியது.

தங்கக் கண்ணாடிக்காரன் எங்கிருந்தோ தேடியெடுத்து இரண்டணா கொடுத்தான்.

"காலணா, சார்?"

"இவ்வளவுதான் இருக்கு. இல்லேண்ணா இன்னா மிதியடி."

குழந்தைகள் பரஸ்பரம் பார்த்தபின் துட்டை வாங்கிவிட்டுப் பேசாமல் இறங்கிப் போனார்கள். மின்சாரக் கம்பத்தின் கீழ், ரோட்டில் அவர்கள் போவதைப் பார்த்துவிட்டு வந்த தங்கக் கண்ணாடிக்காரன் சிரித்தான்.

"நான் ஒரு வேலை காட்டியிருக்கேன். அதுலெ ஒண்ணு செல்லாத ஒரணாத்துட்டும்."

"ஹ . . . ஹ . . . ஹா . . ." அனைவரும் சிரித்தார்கள். நான் நினைத்துக்கொண்டேன். மாணவர்கள் அல்லவா? சொல்வதற்கு என்ன இருக்கிறது? வறுமையும் கஷ்டங்களும் என்னவென்று இன்னும் அறியவில்லை. நான் எழுதிவைத்திருந்த குறிப்பை மற்றவர்கள் பார்க்காமல் தங்கக் கண்ணாடிக்காரனிடம் கொடுத்தேன். அவன் அதை வாசிக்கும்போது என் கற்பனை ஓட்டலில் பதிந்திருந்தது. ஆவி பறக்கும் சோற்றின் எதிரில் நான் அமர்ந்திருப்பது போன்றெல்லாம். ஆனால், குறிப்பை வாசித்துப் பார்த்துவிட்டுத் தங்கக் கண்ணாடிக்காரன் அனைவரும் கேட்கும்படியாகச் சொன்னான்;

"சாரி, சேஞ்ச் ஒண்ணுமில்லெ."

இதைக் கேட்டதுமே என் உடலிலிருந்து சூடான ஆவி பரந்தது. வேர்வையைத் துடைத்துவிட்டு நான் கீழே இறங்கி அறைக்கு நடந்தேன்.

மணி ஒன்பது: நான் பாயை விரித்துப் படுத்துக்கொண்டேன். ஆனால், இமைகள் மூட மறுத்தன. தலை, பாரமாக இருந்தது. இருந்தாலும் படுத்தே கிடந்தேன். உலகில் வாழும் கதியற்றவர்களைப் பற்றி நான் நினைத்தேனா. . . எங்கெங்கெல்லாம் எத்தனையெத்தனை கோடி ஆண் பெண்கள் இந்த அழகான பூலோகத்தில் பட்டினி கிடக்கிறார்கள. அதில் நானும் ஒருவன். எனக்கு மட்டும் என்ன விசேஷ அம்சம்? நானும் ஒரு ஏழை அவ்வளவுதான். இப்படி நினைத்துக் கொண்டே படுத்திருக்கும்போது – எனது வாயில் நீரூறியது. மாத்யூவின் சமையலறையில் கடுகு தாளிக்கும் சத்தம் . . . வெந்த சாதத்தின் வாசமும்.

மணி ஒன்பதரை: நான் மெதுவாக வெளியில் வந்தேன். இதயம் வெடித்துவிடுவதுபோல் . . . யாராவது பார்த்துவிட்டால். . . ? எனக்கு வேர்த்துக் கொட்டியது. . . வந்து முற்றத்தில் காத்து நின்றேன். அதிர்ஷ்டம், முதியவர் விளக்கையெடுத்துக்கொண்டு குடத்துடன் வெளியில் வந்து, சமையலறைக் கதவை மெதுவாக அடைத்துவிட்டுக் குழாயடிக்குச் சென்றார். குறைந்தது பத்து நிமிடமாவது பிடிக்கும், திரும்பிவர. சத்தமில்லாமல் படபடக்கும் இதயத்துடன் மெதுவாகக் கதவைத் திறந்து சமையலறைக்குள் நுழைந்தேன்.

மணி பத்து: நிறைந்த வயிறுமாகத் திருப்தியுடன் வேர்த்துக் குளித்து வெளியே வந்தேன். முதியவர் திரும்பியதும் நான் குழாயடிக்குச் சென்று தண்ணீர் குடித்து, கைகால் முகம் அலம்பிவிட்டுத் திரும்ப என் அறைக்குள் வந்து ஒரு பீடியைப் பற்றவைத்து இழுத்தேன். முழுதிருப்தி. சுகமாக இருந்தது. இருந்தாலும் ஏதோ ஒரு மனப்பதற்றம். உடல் சோர்வுமிருந்தது. படுத்துக் கொண்டேன். தூக்கம் வருவதற்கு முன் சிறிது யோசனையிலாழ்ந்தேன். பெரியவருக்குத் தெரிந்திருக்குமோ? அப்படியென்றால் மாத்யூவும் அறிந்துவிடுவான். மற்ற மாணவர்களும் குமாஸ்தாக்களும் அறிந்துகொள்வார்கள். அவமானமாகப் போய்விடும். எதுவானாலும் சரி, வருவது வரட்டும். பிறந்த நாளும் அதுவுமாக, சுகமாகத் தூங்கலாம். எல்லோருடையவும் எல்லாப் பிறந்த நாட்களும். . . மனிதன் . . . பாவப்பட்ட உயிர். நான் அப்படியே தூக்கத்திலாழ்ந்துகொண்டிருந்தேன். . . அப்போது என் அறைக்குப் பக்கத்தில் யாரோ வருகிறார்கள்.

"ஹலோ மிஸ்டர்." மாத்யூவின் குரல். எனக்கு வேர்க்கத் தொடங்கியது. தூக்கம் கடல் கடந்தது. சாப்பிட்டதனைத்தும் ஜீரணமாயின. எனக்குப் புரிந்துவிட்டது. மாத்யூ அறிந்துவிட்டான். பெரியவர் கண்டுபிடித்துவிட்டார் போலிருக்கிறது. நான் கதவைத் திறந்தேன். இருளின் இதயத்திலிருந்து வருவதுபோல் சக்திவாய்ந்த வெளிச்சத்தின் நீள ஈட்டிபோல் ஒரு டார்ச் வெளிச்சம். நான் அதனுள். மாத்யூ என்ன கேட்கப் போகிறான்? பதற்றத்தால் என் இதயம் துண்டு துண்டுகளாக உடைந்து சிதறிவிடும் போலிருந்தது.

மாத்யூ சொன்னான்,

"ஐ ஸே . . சினிமாவுக்குப்போயிருந்தோம். விக்டர் ஹ்யூகோவின் ‘பாவங்கள்.’ நீங்க பார்க்க வேண்டிய ஒரு ஃபர்ஸ்ட்கிளாஸ் ஃபிலிம்."

"ஓஹோ. . ."

"நீங்க சாப்டீங்களா? எனக்குப் பசிக்கலெ. சோறு வேஸ்டாயிடும். வந்து சாப்பிடுங்களேன். வர்ற வழியிலெ நாங்க ‘மாடர்ன் ஹோட்டல்’லெ ஏறினோம்."

"தாங்க்ஸ். நான் சாப்பிட்டாச்சு."

"அப்படியா? சரி தூங்குங்க, குட்நைட்."

"எஸ். குட் நைட் . . ." 


நாக்பூரில் கடும் மழை நாட்களில் ஒரு சிறிய வீட்டில் சிக்கி மூன்று நாட்கள் கடும் பசியை அனுபவித்திருக்கிறேன். ஏறக்குறைய பஷீரை விட கடுமையானதொரு நிலைக்கு தள்ளப்பட்டு பின்னர் ஒரு முதியவரின் உதவியால் உயிர் பிழைத்து வந்திருக்கிறேன், பல வருடங்கள் கழிந்த பின்னர் அதன் தாக்கத்தையும் அந்த ஞாபகங்களையும் அப்படியே மீட்டு கொடுத்தார் பஷீர். 

நன்றி : அழியா சுடர்கள்


Thursday, November 3, 2022

ஜெயமோகன் எனும் படைப்புக் கடவுள் அட்டகாசமான சிறுகதை

 லாக் டௌன் சமயத்தில் நிறைய கதைகளை அவர்  இணையத்தில் எழுதினார், அதில் இந்த சிறுகதை நிறைய பாதிப்பை உண்டாக்கியது.   

இது அவரது வலைதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது 

சிவம்

அன்பென்பதே இல்லையா என்று கேட்டான்” என்றார்.

நான் தலைகுனிந்து அமர்ந்திருந்தேன். அனைவரும் என்னைப் பார்த்தனர்.

“இங்கே, பதினெட்டு ஆண்டுகள் இருந்த லக்ஷ்மணன் வலியங்காடி செத்துப்போன செய்தி வந்தது. நான் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தேன். செய்தியை கேள்விப்பட்டதும் குருகுலம் மாத இதழுக்கான அஞ்சலிக் குறிப்பைச் சொல்லிவிட்டு வகுப்பை தொடர்ந்தேன். இவன் அதிர்ச்சி அடைந்துவிட்டான்”.

“நேற்று இரவு என் அறைக்குள் வந்து கண்ணீருடன் இவன் கேட்டான், ‘குரு, நாளை நான் செத்துப்போன செய்தி வந்தாலும் அப்படித்தான் இருப்பீர்களா?’ என்று.  ‘ஆமாம், அதிலென்ன சந்தேகம்/’ என்று நான் சொன்னேன். அப்படியே திரும்பி சென்றுவிட்டான். காலையில் வந்தபோது முகம் வீங்கியிருந்தது. என்ன என்று கேட்டேன். அப்போதுதான் கேட்டான், உங்களுக்கு அன்பே இல்லையா என்று”.

“நான்  ‘இல்லை, அப்படி எதையும் நான் உணரவில்லை’ என்றேன். உணர்ந்திருந்தால் அதை வெளிப்படுத்தியிருப்பேனே. இவன் ஆவேசமாக ‘ஸ்னேகமாணு அகிலசாரம் ஊழியில் என்று குமாரன் ஆசான் சொன்னது பொய்யா ?’ என்றான்.  ‘அன்பே சிவம் என்று திருமூலர் வேறு சொல்லியிருக்கிறார்’ என்றான்” என்றார் நித்யா

கண்களில் சிரிப்புடன் “நான் சொன்னேன்.‘இல்லையே, நான் அன்பென்ற சிவத்தை அறியவே இல்லையே’ என்று.  நான் கண்டதெல்லாம் ஆவுடை மேல் அபிஷேகம் செய்து செய்து எண்ணைப் பளபளப்புடன் மொழமொழவென்று அமர்ந்திருக்கும் சிவம். அதுதான் அன்பு என்றால் நல்ல உறுதியானது அது. நம்பி யார் தலைமேல் வேண்டுமென்றாலும் எடுத்துப் போடலாம்”.

நான் எழுந்துவிட்டேன்.

நித்யா “என்ன?” என்றார்.

“நான் போகிறேன்”.

“எங்கே?”

”வீட்டுக்கு”.

“எப்படியும் வீட்டுக்குத்தான் போகப்போகிறாய்… உட்கார்” என்றார் நித்யா.

நான் அமர்ந்துகொண்டேன்.

“வீடுபேறுக்கு என்ன அவசரம்?”

நான் தலைகுனிந்து அமர்ந்திருந்தேன்.

“நான் காசியில் கண்ட ஒரு சம்பவம் இது. ஒரு ஐம்பதாண்டுகளுக்கு முன்பு. அன்று நான் குருவிடமிருந்து அனுமதி பெற்று கிளம்பி நாடோடியாக அலைந்துகொண்டிருந்தேன்” என்று நித்யா சொன்னார்.

இந்தியா அலைந்து திரிபவர்களுக்கு மிக வசதியான நாடு, ஒரே இடத்தில் வாழ்பவர்களுக்கு மிகமிக வசதிக்குறைவான நாடு. இந்த நாடே ஒவ்வொருவரிடமும் எதற்கு இங்கே இருக்கிறாய், கிளம்பு என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. துறவியாக போகவேண்டும் என்ற ஆசை இல்லாத ஓரிருவர் கூட இங்கே இருக்கமாட்டார்கள். அவ்வாறு இருந்தால் அவர்களுக்கு பொதுவாக எந்த ஆசைகளும் இருக்காது.

இங்கே ஓரிடத்தில் வாழ்வது கடினம். முதலில் இடமே இல்லை. கேரளத்தில் ஐந்துசெண்ட் நிலமிருந்தால் அவன் நிலக்கிழார். பத்துசெண்ட் நிலமிருந்தால் அவன் சிற்றரசன். ஒரு ஏக்கர் நிலமிருப்பவன் என்ன செய்வது என்று தெரியாமல் பக்கத்து நிலம் மீது படையெடுப்பான். எங்கே போனாலும் கூட்டம். கும்பல். அடிதடி. இந்தியர்களாகிய நாம் சக இந்தியர்களை இரு தோள்களால்தான் அதிகமாக அறிந்திருக்கிறோம்.

அந்த சின்ன இடத்தில்கூட நிம்மதியாக இருக்கமுடிகிறதா? பக்கத்து வீட்டுக்காரன் எட்டிப் பார்க்கிறான். “அதென்ன, உன் மூக்குக்குக் கீழே?” என்று விசாரிக்கிறான். இங்கே முன்பு முகுந்ததாஸ் என்று ஒருவர் வந்தார். அவருக்கு சன்யாசம் வேண்டும். ஏனென்றால் பக்கத்து வீட்டுக்காரனின் தொல்லை. இவர் மனைவியிடம் பேசுவதுகூட அவனுக்கு கேட்கிறது. அப்படியே முற்றிமுற்றி இவர் கனவில் கண்டதெல்லாம்கூட அவனுக்கு தெரிய ஆரம்பித்ததும் இங்கே வந்துவிட்டார்.

இங்கே ஆறுமாதம் இருந்தார். இங்கே பக்கத்துவீடே இல்லை. சுற்றிலும் மலைகள். காற்றும் குளிரும். மனிதனை ஒரு பொருட்டாக மதிக்காத யூகலிப்டஸ் மரங்கள். என்ன செய்வார்? உண்மையில் அவர் யூகலிப்டஸ் மரங்களைப் பற்றி ஆத்திரத்துடன் என்னிடம் கேட்டார். ‘‘குரு ,கேவலம் ஒரு மரத்திற்கு ஏன் இத்தனை உயரம்?” ஆறுமாதம் வரை தாக்குப்பிடித்தார். அதன்பின் மேலே மேட்டிலேறி நின்றுகொண்டு உலகைப் பார்த்து தன்னுடைய மனதில் உள்ள நினைப்புகளை கூவி அறிவிக்கத் தொடங்கினார்.

அதன்பின் இங்கிருந்து கிளம்பிச்சென்றார். என்ன நடக்கும் என்று எனக்கு தெரிந்திருந்தது. ஆறுமாதம் கழித்து ஃபாதர் தாமஸ் கோலஞ்சேரியைப் பார்க்கச் சென்றபோது அங்கே ஒருவரைப் பார்த்தேன். அவர் அங்கே கரிஷ்மாட்டிக் பிரேயருக்கு வந்திருந்தார். பக்கத்து வீட்டுக்காரர்தான் அவருக்குப் பிரச்சினை. அவர் தன் மனதிலுள்ள எல்லாவற்றையும் இவரிடம் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார். கனவுக்குள்கூட புகுந்து சொல்ல ஆரம்பித்ததும் இவர் ஓடி தொடுபுழையில் ஃபாதரின் ஆசிரமத்திற்கு வந்துவிட்டார்.

என்ன சொன்னேன்? இந்தியா அலைந்து திரிபவர்களுக்கு உகந்த நாடு. முதல்விஷயம் இமையமலை தவிர எங்கும் பெரிய குளிர் கிடையாது. தார்ப்பாலை தவிர எங்கும் குடிநீர் இல்லாத நிலையும் கிடையாது. எங்கே சென்றாலும் எவராவது சோறு போடுவார்கள். காலில் விழுவார்கள்.காணிக்கை தருவார்கள். நாம்  உளறுவதை பக்தியுடன் கேட்டுக்கொள்ளவும் செய்வார்கள்.ஒரு காவி மட்டும் போட்டுக்கொள்ளவேண்டும், அவ்வளவுதான்.

அதைவிட முக்கியமானது இங்கே நமக்கு சலிப்பே கிடையாது என்பது. ஐம்பது கிலோமீட்டருக்கு நிலம் மாறிவிடும். மக்களின் முகங்களும் வீடுகளும் மாறிவிடும். நூறுகிலோமீட்டர் போனால் மொழி மாறிவிடும். இருநூறு கிலோமீட்டர் போனால் மத ஆசாரங்களே மாறிவிடும். மத்தியப்பிரதேசம் சந்தால் பகுதியில் ஒரு கோயில். இடிந்த பழைய கோயில். பக்தர்கள் நிறைய வந்து வழிபடுகிறார்கள். சாமி சுவரில் ஒரு சிறிய புடைப்புச் சிற்பமாக உள்ளது. அதன்மேல் செந்தூரம் பூசி வணங்குகிறார்கள்.

பூசாரி ஒரு கல்லின்மேல் ஏறி அதற்கு தீபம் காட்டுவதைக் கண்டேன். அந்தக்கல் என்ன என்று பார்த்தேன். அன்பு! நல்ல கருமையான வழவழப்பான அன்பு. மிகமிகத் தொன்மையானது. அந்த புடைப்புச் சிற்பம் என்ன என்று பார்த்தேன். ஒரு பல்லி.

நாம் நிரந்தரமாக தங்கினால் நம் ஐந்து செண்ட்டில் வாழ்கிறோம். அதை விட்டுவிட்டு “ஹரிஓம்! சிவோகம்!  சோறு போடுங்கள்!” என்று கோவணத்தை இறுக்கிக்கொண்டு கிளம்பினால் இந்தியா நம் வீடு ஆகிவிடுகிறது. ஏகப்பட்ட அறைகள், ஏகப்பட்ட பாதைகள். என்னென்னவோ நடக்கும் மறைவிடங்கள், வெட்டவெளிகள். அதன்பின் நாம் திறந்தவெளியில் தூங்கவே விரும்புவோம்.! இந்தியாவின் துறவிகளில் மிகச்சிலர்தான் அறைகளுக்குள் வாழ்பவர்கள். அறைகளுக்குள் வாழும் துறவிகள் கொஞ்சம் கொஞ்சமாக சம்சாரிகள் ஆகிவிடுகிறார்கள். வெளியே எது கிடைத்தாலும் அறைக்குள் கொண்டு வைத்துவிடுவார்கள். அறைக்குள் இருந்தாக வேண்டியவற்றை வெளியே கொண்டு வைப்பார்கள். அது சம்சாரிகளின் குணம்.

ஆகவே நான் ஊரைவிட்டு கிளம்பி பல ஆண்டுகள் திரும்ப வரவில்லை. ரிஷிகேசம், ஹரித்வார், மேலே கேதார்நாத்தில்கூட ஆறுமாதம் இருந்திருக்கிறேன். காசியில்தான் நீண்டநாள் இருந்தேன். ஒன்றரை ஆண்டுக்காலம். ஏனென்றால் இந்தியா அலைந்து திரிபவர்களின் நிலம் என்றால் காசி அதன் தலைநகரம்.

நீ காசி போயிருக்கிறாய் அல்லவா? இங்கே எல்லாருமே காசியை பார்த்திருப்போம். அது ஒரு மாபெரும் சாக்கடை முகப்பு. பனாரஸ் என்ற மாநகர் அங்கே இருக்கிறது. பட்டுப்புடவைகள், பித்தளைப் பாத்திரங்கள், தோல்பொருட்கள் ஆகியவற்றுக்கு புகழ்பெற்றது. பல்லாயிரம் தொழிற்சாலைகள். அவை வெளியேற்றும் சாக்கடைகள் வந்து கங்கையில் கலக்கும் இடமே நாம் பேசிக்கொண்டிருக்கும் காசி.

வரணா, அசி என்னும் இரண்டு ஓடைகள். அவை மிகப் புனிதமானவை என்று கவிஞர்கள் பாடியிருக்கிறார்கள். அந்த இரு ஓடைகளுக்கு நடுவே உள்ள நிலம் வரணாசி. நிகழ்காலத்தின் அழுக்குகளை நாம் மண்ணுக்குள் புகுத்திவிடுகிறோம். காசி மண்ணுக்குள் புதைந்ததுபோல் தோன்றும். பனாரஸ் அதன் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்கள் தியேட்டர்கள் ஆஸ்பத்திரிகளுடன் தலைக்குமேல் இருக்கும்.

அந்த புதைவில் வளைகள் போல சிறுசிறு சந்துகள். அவற்றில் எலிகள் போல ஊடுருவி அலையும் மனிதர்கள். எலிகளின் சுறுசுறுப்பை அனைவரிலும் பார்க்கலாம். கண்ணுக்குப்படும் பெரும்பாலானவர்கள் கடந்த காலத்தைச் சேர்ந்தவர்கள். அவர் சென்ற நூற்றாண்டிலோ பத்தாம் நூற்றாண்டிலோ வேதகாலத்திலோ எப்போது வேண்டுமென்றாலும் வாழ வாய்ப்புள்ளவர்கள்.

என்னென்ன முகங்கள்! காசியின் அழகே அந்த முகங்கள்தான். பழுத்த வைதிகர்கள். பழுக்கவைக்கப்பட்ட முதியவர்கள்.பழுக்க முயலும் சிறியவர்கள். பித்ரு கடன்களுக்காக வந்த தற்காலிக வைதிகர்கள் மிகத்தீவிரமான முகத்துடன் இருப்பார்கள். அவர்களில் வசதியான விடுதிகளில் தங்குபவர்கள் உண்டு. சத்திரங்களில் தங்குபவர்கள் உண்டு. சத்திரங்கள் பெரும்பாலும் இருநூறாண்டுக் காலம் பழைமையானவை.

பலநூறு மைல் தொலைவில் வரண்ட நிலங்களில் இருந்து அழுக்கு உடைகளும் மூட்டைகளுமாக வருபவர்கள் பல்லாயிரம்பேர். அவர்கள் தெருக்களிலும் படிகளிலும் தங்கிக் கொள்வார்கள். கிழவர்களை மூங்கில்களில் துணித் தொட்டில் கட்டி தூக்கி வருவார்கள். கங்கையில் நீராடாமல் சாகக்கூடாது என்பதற்காக.

காசியின் காலம் எருமைகளில் திகழ்கிறது. மிகமிக மெல்ல அவை நடந்துசெல்கின்றன. வேதகாலத்தை, அல்லது அதற்கும் முந்தைய காலத்தை அசைபோடுகின்றன. ஓங்கார ஒலியெழுப்புகின்றன. அவற்றின்மேல் அமர்ந்து காகங்கள் செல்கின்றன. எந்த சாக்கடையை தொடர்ந்து சென்றாலும் கங்கையை அடைந்துவிடலாம்.

காசி சாவின் நகரம். தலைக்கு மேலிருக்கும் நகரங்களில் இருந்து சாவுநோக்கி வருபவர்கள், செத்தவர்கள் காலத்தில் மூழ்கி மூழ்கி காசிக்கு வருகிறார்கள். சைக்கிள்களில் நெடுக்குவாட்டில் பிணத்தை கட்டிவைத்து தள்ளியே கொண்டுவருவார்கள். ஒற்றைமூங்கிலில் கட்டி இருவர் தூக்கி சந்துகள் வழியாக கொண்டு வருவார்கள். சாய்த்து நிறுத்திவிட்டு டீ குடிப்பார்கள்

இரண்டு சுடுகாடுகள். ஹரிச்சந்திர கட்டம், மணிகர்ணிகா கட்டம். இரண்டிலும் சிதைகள் எரிந்துகொண்டே இருக்கும். அணையவே அணையாது. நம்மூர் சிதைகள் போல அல்ல. நான்கடி நீளம் மட்டுமே கொண்டவை. பிணத்தின் தலையும் முழங்காலுக்கு கீழும் வெளியே நீட்டியிருக்கும். தீ ஏற்கனவே எரிந்துகொண்டிருக்கும். வயிறு வெந்து உள்ளிருந்து நீர் விழுந்து பொசுங்கி அனலால் உறிஞ்சப்படும். அப்படியே பிணத்தை மடிப்பார்கள். எந்த யோகாசன நிபுணரும் அந்த ஆசனத்தை செய்யமுடியாது. வயிறு மார்பின் மேல் படியும் கால் அதற்குமேல் வந்து அமையும். அப்படியே அனல்விட்டு கொழுந்தாட வேண்டியதுதான்.

சொல்லே உடலில் வாழும் அனல் என்பது வேதாந்த மரபு. சொல்லப்படாத சொற்களெல்லாம் அனலாக எரியும். காதலில் உறவில் அன்பில் பகைமையில் சொல்லப்படாத சொற்கள். எத்தருணத்திலும் சொன்ன சொற்களைவிட சொல்லப்படாதவையே மிகுதி. அவை மானுடனின் உள்ளே நிறைந்துள்ளன. மானுடன் சொல்நிரம்பிய கலம். அது உடைந்து தழலாக எழுவதை அங்கே காணலாம்.

வரணாவுக்கும் அசிக்கும் நடுவே உள்ள படிக்கட்டுகள் பண்டாக்களும் குகாக்களும் சேர்ந்து கைவசப்படுத்தியவை. அங்கே எந்நேரமும் சந்தடி. செத்தவர்களை கொண்டுவருபவர்கள் மண்ணிலிருந்து விண்ணை நோக்கி கூவிக்கொண்டே இருக்கிறார்கள்.  “எடுத்துக்கொள்க!, எடுத்துக்கொள்க!’. இன்னொரு சாரார் அங்கே வந்து விண்ணை நோக்கி  “மைந்தரைக் கொடு , மைந்தரைக் கொடு” என்று யாசிக்கிறார்கள்.உண்மையில் மானுடர் விண்ணில் இருந்து பிற மானுடரால் கறந்து எடுக்கப்பட்டு புளித்தபின் திரிந்தபின் திருப்பி அனுப்பபடுகிறார்கள்.

பிரார்த்தனைகள், நீர்க்கடன்கள், கூச்சல்கள். தையல் இலைக்கிண்ணங்களில் இட்லி. பூரிக்கிழங்கு. சுருட்டப்பட்ட சப்பாத்திகள். கஞ்சா பிடிக்கும் சம்சாரிகள். பிச்சைக்காரர்களின் அரசத்தோரணை. ஊடே ஹிப்பிகள் அலைகிறார்கள். அவர்கள் கஞ்சாவுக்காக வந்தவர்கள். சிலர் மேலும் சிலவற்றை நம்பி. சிலருக்கு மயக்கங்கள் கலைகின்றன. சிலர் புதிய மயக்கங்களில் விழுகிறார்கள்.

நான் தங்கியிருந்தது. அஸ்ஸி கட்டுக்கு மிகத்தள்ளி. அங்கே பக்தர்கள் வரமாட்டார்கள். கங்கையின் விரிந்த கரை முழுக்க இடிந்த சிறிய கோயில்கள் உண்டு. பல்வேறு பெயரறியா தெய்வங்களின் ஆலயங்கள் அவை. அவற்றிலும் அவற்றைச் சூழ்ந்துள்ள இடங்களிலும் சாமியார்களின் குடிசைகளும் கூடாரங்களும் நிறைந்திருக்கும். ஒரு காவிக்கொடி பறந்தால் அது ஒரு சாமியாரின் குடில் என்று பொருள்.

அன்றெல்லாம் பழைய லாரிகளின் டார்ப்பாய்களைக் கொண்டுதான் கூடாரங்கள் அமைப்பது. சமைப்பது கிடையாது. காலையில் கிளம்பி சென்றால் ஓரிரு மணிநேரத்திலேயே உணவும் கஞ்சாவுமாக திரும்பி விடுவார்கள். பிச்சையெடுத்து கொண்டு வரவேண்டியது இளையவர்களின் வேலை. மூத்த சாமிகள் காலையில் சும்மா அமர்ந்திருக்கும். மாலையில் கஞ்சா புகைத்து சும்மா அமர்ந்திருக்கும். சொன்னேனே, காசி சும்மா அமர்ந்திருப்பதற்கான இடம்.

இரவில் அனல் மூட்டுவார்கள். கங்கை வழியாகப் படகில் சென்றால் கரைமுழுக்க நூற்றுக்கணக்கான செந்தழல்களைக் காணலாம். பாடல்களின் ஒலிகள் கேட்கும். நெருப்பை சுற்றி ஆடும் ஆடல்களின் அசைவுகள் தெரியும். பின்னிரவு வரை ஆட்டம் இருக்கும். கூச்சல்கள் இருக்கும். அதன்பின் எப்போதோ அவை ஓயும், ஆனால் அனல் சுடர்விட்டபடியே இருக்கும்.

நிதம்பசூதனி, வக்ரகாளி, பிரத்யங்காரா, சின்னமஸ்தா போன்ற விபரீதமான தெய்வங்களின் ஆலயங்களின் அருகே மக்கள் நடமாட்டமே இருக்காது. அங்குதான் அகோரிகளின் குடியிருப்புகள். அவை அகாடாக்கள் எனப்படும். அகாரா என்று சொல்வார்கள். ஒரு அகாடா என்பது ஒரு தேன்கூடு. அதில் இன்னொரு தேனீ நுழைய முடியாது. கடுமையான காவல் கொண்டது அது. ஐயம் நிறைந்த கண்களுடன் ஓரிரு அகோரிகள் அவர்களின் முகாமின் தொடக்கத்திலேயே அமர்ந்திருப்பார்கள். அகோரிகளின் உலகம் வேறு. அவர்களை குளவிகள் என்று பிற சாமியார்கள் சொல்வார்கள்.

சாமியார்கள் அங்கே என்ன செய்கிறார்கள்? சில தியானம். சிலர் யோகம். பெரும்பாலானவர்கள் எதையும் செய்வதில்லை. தொழிலென்றோ வணிகமென்றோ எதையாவது செய்பவர்கள் என எவருமில்லை. காசியின் புதையுண்ட உலகில் வாழ்கிறார்கள் அவர்கள். அவர்களின் தலைக்கு மேல் சுல்தான்களின் ஆட்சி வந்துசென்றது. முகலாயர் வந்து சென்றனர். ஆங்கிலேயர் வந்து சென்றனர். தொழில்நுட்ப நாகரீகம் வந்துசென்றது. அவர்கள் அங்கேயே இருக்கிறார்கள், புதைவில்.

ஆனால் இந்த நாட்டின் மதிப்பு மிக்க அனைத்தும் புதைவில்தான் உள்ளனவா? இங்கிருக்கும் ஞானம் இன்றும் புதைவுண்டதே. இதன் வரலாறு இன்னமும் அகழப்படவில்லை. புதைவில் இருப்பவை வெறுமே இருக்கின்றனவா? கிளைகள் வளர்ந்து விரிகின்றன. காற்றில் ஆடுகின்றன. தளிர்த்து பழுத்து உதிர்ந்து தளிர்க்கின்றன. மலர்கின்றன, கனிகின்றன. வேர்கள் வெறுமே புதைந்திருக்கின்றன. பற்றிக்கொண்டு, உறிஞ்சிக்கொண்டு.

ந்நாளில் நான்  காலாபாபா என்ற சாமியாரின் கூட்டத்துடன் ஒரு கூடாரத்தில் தங்கியிருந்தேன். காலையில் எழுந்ததும் அவருடைய உடலை தூக்கி கொண்டுசென்று வெயில் படாத இடமாக படுக்க வைக்கவேண்டும். அவர்மேல் ஒரு துணியை போர்த்திவிடவேண்டும். கூடாரத்தின் உட்பகுதியை தூய்மைசெய்து கஞ்சாக்குழல்களை சீராக எடுத்து அடுக்கி வைக்கவேண்டும்.

அதன்பின் நான் கங்கைக்குச் சென்று குளிப்பேன். ஆடையை துவைத்து கொண்டுசென்று கூடாரத்திற்கு பின்னாலிருக்கும் கொடியில் காயப்போடுவேன். உலர்ந்த ஆடைகளை அணிந்துகொண்டு படித்துறைக்குச் செல்வேன். ஒரே இடம்தான். அந்த படித்துறை மிகப் பரபரப்பானது. அங்கே காலையிலேயே பல்லாயிரம் பேர் நீர்க்கடன் செலுத்தி விட்டிருப்பார்கள். அனைவருமே உயர்ந்த உள்ளத்துடன் உடனே தர்மத்தை பேணியாகவேண்டும் என்ற துடிப்புடன் இருப்பார்கள்.ஒருமணி நேரத்திலேயே நூறு ரூபாய்க்குமேல் கிடைத்துவிடும். கஞ்சா வாங்கிக்கொள்வேன். அவசியமான சிறிய பொருட்கள்.

பத்துப்பதினைந்து கடைகளில் நீர்க்கடன் செலுத்தியவர்கள் அன்னதானம் செய்ய பணம் கொடுத்து வைத்திருப்பார்கள். அங்கே செல்பவர்களுக்கு உணவு கிடைக்கும். என் முகாமில் எவருமே அரிசி சாப்பிடமாட்டார்கள். சப்பாத்தி, பூரி வாங்கிக்கொள்வேன். வெல்லம் நிறையவே தேவைப்படும். பெரும்பாலானவர்கள் ஒருநாளைக்கு அரைக்கிலோ வெல்லம் உண்பார்கள். கஞ்சா வெல்லத்தின் மீதான விருப்பத்தை உருவாக்குவது.

திரும்பி வரும்போது எல்லாரும் எழுந்து கங்கைக் கரையோரமாக அமர்ந்திருப்பார்கள். உணவை நானே பரிமாறுவேன். காலாபாபா ஒருவேளைக்கு நான்கு சப்பாத்தி சாப்பிடுவார். இரவில் கொஞ்சம் வெல்லம். அவ்வளவுதான். அவருக்கு தொண்ணூறு வயதுக்கும் மேல். உடல் நெற்றுபோல இருக்கும். என்ன ஆச்சரியம் என்றால் இருபதாண்டுகள் கழித்து நான் அங்கே போனேன். அவர் அப்படியே அங்கேயே இருந்தார்.

மழைக் காலம் கடினமானது. கூடாரங்கள் மழைக்கு போதாது. கங்கைச் சமவெளியின் மழை ஆக்ரோஷமானது. ஜூனில் தொடங்கி ஆகஸ்ட் வரை வீசி அடிக்கும். ஆனாலும் அத்தனை பேரும் அங்கேயேதான் இருப்பார்கள். மழையில் நனைந்து ஊறி அடுத்து வீசும் காற்றில் உலர்ந்து மீண்டும் நனைந்து. அங்குள்ள மரங்களைப் போல. ஆனால் காசியில் சாப்பாடும் கஞ்சாவும் அடைமழையிலும் குறைவுபடுவதில்லை.

மழை அத்துமீறி கங்கைப் பெருக்கு கரைவிளிம்பு வரை எழுந்துவிட்டால் கூடாரங்களை மேலும் மேலும் மேலேற்றி கொண்டு செல்வோம். சாலையின் ஓரமாகவே கட்டிக்கொள்வோம். அங்கே தூங்குவது கடினம், தலைக்குமேல் வண்டிகள் ஓடிக்கொண்டிருக்கும். காலாபாபா ஒருமுறை எழுந்து சென்று ஒரு போலீஸ் வேனின் கண்ணாடியை கல் எறிந்து உடைத்தார். அதிலிருந்த இன்ஸ்பெக்டர் கீழே வந்து வணங்கி அவருடைய ஆசியைப் பெற்றுக்கொண்டார்.

கங்கையில் மழைக்கால வெள்ளம் சுழித்துச் சுழித்துச் செல்லும். காரணம் கரையிலிருந்து வந்து சேரும் நீர்ப்பெருக்குகளால் மையப்பெருக்கு அலைக்கழிக்கப்படும். அதை கணிக்கவே முடியாது. தேர்ந்த குகர்கள்கூட படகுகளை இறக்க பயப்படுவார்கள். அதைவிட கூடுதலான வெள்ளம் கோடையில் இமையப்பனியுருகி வரும். ஆனால் அது நேர்த்தியான சீரான ஒழுக்கு.

நான் அன்று காலை கிளம்பி என்னுடைய படித்துறைக்குச் சென்றபோது கங்கையோரம் எவருமே இல்லை. படிக்கட்டுக்கள் ஒழிந்து கிடந்தன. பாண்டாக்கள் கூட குடைக்குள் ஒடுங்கி அமர்ந்திருந்தனர். நான் நன்றாகவே நனைந்திருந்தேன். குளிரில் என் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. எப்படியாவது உணவும் பணமும் சேர்த்து திரும்பிச்சென்று தீயின்முன் அமர்ந்துவிட வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.

எனக்கு எதிராக ஒருவன் வந்து கொண்டிருந்தான். கையை வீசி வீசி எவரிடமோ பேசிக்கொண்டிருந்தான். நின்று தலையை ஆட்டி சிரித்தான். கந்தலாடை அவன் உடலில் நார் நாராக தொங்கியது. அழுக்கும் சேறும் படிந்த சடைமுடி.

காசியில் பைத்தியங்களுக்கு குறைவே இல்லை. பைத்தியங்கள் எப்போதுமே கூட்டமான இடங்களை நாடி வருகின்றன. சகமனிதர்களிடம் அவை கொண்ட நம்பிக்கை அது. சாமியார்கள் விலகிச் செல்வதற்கு நேர் எதிர். சில பைத்தியங்கள் காரணமில்லாமலேயே கொந்தளித்து விடுகின்றன. அவன் என்னை அணுகியதும் இந்தியில் ஏதோ சொன்னான். நான் அறிந்த இந்தி அல்ல அது. வேறேதோ வட்டார இந்தி.

ஓங்கி துப்பி கையோங்கி என்னை அச்சுறுத்தினான். நான் அவனை கவனித்தபடி ஆனால் அவனை பார்க்காமல் கடந்து சென்றேன். சட்டென்று அவன் திரும்பி கரையோரமாக நின்றிருந்த ஒரு படகில் ஏறுவதைக் கண்டேன். நீர்ப்பெருக்கில் படகு அலைபாய்ந்து கொண்டிருந்தது. இரவுபெய்த மழையில் அதன் பாதிப்பங்கு நீர் நிறைந்திருந்தது

கங்கையில் படகுகளை சேர்த்துச் சேர்த்து நிறுத்தியிருப்பார்கள். ஒன்றுடன் ஒன்று சேர்த்துக் கட்டப்பட்டு நீரில் நெடுந்தொலைவுக்கு படகுகள் நின்றிருக்கும். கரையொதுங்கிய காட்டுச்செத்தை மரங்களைப்போல. அல்லது மொய்க்கும் மீன்கூட்டங்களைப்போல. நீரின் அலைகளை நாம் படகுகளிலேயே காணமுடியும்.

அந்த பைத்தியம் படகுகள் வழியாக கைவீசியபடி தாவித்தாவி ஓடினான். என்ன செய்கிறான் என்று தெரியவில்லை. கடைசிப் படகை அடைந்ததும் அவன் நின்றான். கைவீசி கங்கையை வசைபாடுகிறான் என்று தெரிந்தது. ஓர் அலை எழ படகுகள் எழுந்தமைந்தன. அவன் நிலைதடுமாறி நீரில் விழுந்தான்.

அங்கே மிக வலுவான நீரோட்டம் இருந்தது. அது அவனை சுண்டி எடுத்து தூக்கிச் சென்றது. அவனுடைய உடல் சென்ற வேகம் எனக்கு திகைப்பை உருவாக்கியது. அவன் கைகால் வீசி நீரில் தத்தளித்தான்.

எனக்குப் பின்னாலிருந்து வெற்றுடல் கொண்ட ஓர் இளைஞன் ஓடிவந்தான். “என்ன? என்ன?” என்றான்.

“பைத்தியம்!” என்றேன்.

அவன் படகுகள் மேல் தாவி ஏறி ஆற்றுக்கு இணையாகவே ஓடினான். பின்னர் நீரில் பாய்ந்து காலால் உந்தி கைகளை வீசி தாவித்தாவி நீந்திச்சென்றான். பைத்தியத்தின் தலை நீரில் மறைந்துவிட்டது. மீண்டும் எழுந்தது. அந்த இளைஞன் ஒழுக்குடன் இணைந்துகொண்டு நீரில் பறந்துசெல்லும் விரைவில் சென்றான். அவன் பைத்தியத்தை பிடித்துவிட்டான்.

பைத்தியம் அவனை இருகைகளாலும் பற்றிக்கொண்டான். இருவரும் நீருக்குள் மறைந்தனர். நான் பதறியபடி படிகளில் வெறியுடன் ஓடினேன். அவர்கள் மேலெழுந்தனர். பைத்தியம் அவனை பற்றிக்கொண்டதனால் அவனால் நீந்தமுடியவில்லை என்று தெரிந்தது. மீண்டும் அவன் மூழ்கினான்.

நான் மூச்சிரைக்க கூச்சலிட்டபடி ஓடினேன், அவன் மீண்டும் மேலே வந்தான். இம்முறை பைத்தியத்தின் இரு கைகளையும் ஒற்றைக் கையால் பிடித்துவிட்டிருந்தான். அதை சேர்த்து பிடித்து பைத்தியத்தை தன் முதுகின்மேல் ஏந்திக்கொண்டு ஒற்றைக்கையை வீசி வீசி நீந்தினான்.

படித்துறை முழுக்க பலர் எழுந்து நின்று அங்கே நிகழ்வதை வேடிக்கை பார்த்தனர்.

“இரு பைத்தியங்கள்!” என்று ஒருவன் சொன்னான்.

“சேர்ந்து கல்கத்தா செல்கிறார்கள்” என்று எவரோ சொல்ல சிரிப்போசை.

ஆனால் அவன் பைத்தியத்தை இழுத்து இழுத்து ஓரமாகக் கொண்டுவந்து விட்டான். மீண்டும் இருவரும் மூழ்கினர். மிக அப்பால் எழுந்தனர். மீண்டும் மூழ்கினர். இறுதியாக அவன் ஒரு படகின் முனையை பற்றிக்கொள்வதை நான் கண்டேன்

நான் ஓடி அங்கே சென்றபோது அவன் பைத்தியத்தை படகுகள் வழியாக கரைக்கு கொண்டுவந்துவிட்டிருந்தான். படித்துறைகளைக் கடந்து மிக அப்பால் சென்றுவிட்டிருந்தான்.

நான் அருகே சென்றேன். அவன் பைத்தியத்தை தூக்கி கொண்டுவந்து இரு கால்களிலும் பிடித்து தலைகீழாக தூக்கி படிக்கட்டில் நின்றபடி கீழே தொங்கவிட்டு உதறினான். பைத்தியம் விக்கலோசை எடுத்து துடித்து பின்னர் நீரை உமிழ்ந்தது. தூக்கி குப்புற படுக்க வைத்தான். தலை கீழ்ப்படிகளில் இருந்தது. பைத்தியம் இருமி இருமி நீரை உமிழ்ந்தது

நான் அருகே சென்றேன். இளைஞன் என்னை நோக்கிச் சிரித்து “பிழைத்துக்கொள்வான்” என்றான்.

அவனை வெறுமே பார்த்தபடி நின்றேன்.

பைத்தியம் எழுந்து அமர்ந்து நீரை பார்த்துக்கொண்டிருந்தது.

“மிக அபாயமான விஷயம்” என்றேன்.

“ஓர் உயிர் அல்லவா?”என்றான் அவன்.

“ஆம்” என்று நான் சொன்னேன்.

சட்டென்று பைத்தியம் எழுந்து அவனை உதைத்தது. அருகே கிடந்த கற்களை எடுத்து அவனை அடித்தது. அவன் சிரித்தபடி திரும்பி அதை பிடித்து தள்ளினான். அது எழுந்து கூச்சலிட்டபடி ஓடியது.

“பைத்தியம்!” என்றான் என்னிடம். அவன் பற்கள் மிக நேர்த்தியானவை. சிவந்த உதடுகள். நீண்ட தலைமுடி தோளில் படிந்திருந்தது. மென்மையான தாடியும் மீசையும். செம்மண் நிறமான உடல். மெலிந்த உடல், ஆனால் மிக உறுதியானது.

நான் அவனிடம் மேலும் ஏதாவது பேசவிரும்பினேன். ஆனால் அவன் எழுந்து நடந்து சென்றான். இழுத்துக்கட்டிய வில் போல அவன் உடல் அதிர்ந்தது.

அன்று திரும்பிச் செல்லும்போது நான் மணிகர்ணிகா கட்டை அடைந்தேன். அங்கே சிதைகளைச் சூழ்ந்து அமர்ந்து சாமியார்கள் குளிர்காய்ந்துகொண்டிருந்தனர். தூறல்மழை இருந்தாலும் சிதை கனன்று கனன்று எரிந்தது. முதுகில் மழையையும் மார்பில் தீயையும் வாங்கி அமர்ந்திருந்தனர். அனைவருமே கஞ்சாச் சிலும்பிகளுடன் இருந்தார்கள்.

நான் ஒரு சிதையருகே அமர்ந்தேன். அது ஒரு கிழவி. அவள் வெண்ணிற ஆடையுடன் சிதைமேல் வைக்கப்பட்டாள். ஒடுங்கிய முகம், குறுகிய கூன் உடல். அவள் கால்கள் தசையாலான சுள்ளிகள் போலிருந்தன. வாயில் பற்கள் ஏறத்தாழ முழுமையாகவே இருந்தன.. கண்ணிமைகளும் கன்னங்களும் சாவுக்குப் பின் சற்றே உப்பி மெழுகுபோலிருந்தன.

காசியின் சிதைகள் விந்தையானவை. அவற்றில் ஓரளவே விறகு. ஒரு பிணம் எரிந்து முடிவதற்குள்ளாகவே அடுத்த பிணத்தை வைப்பார்கள். முதல் பிணம் நீரை இழந்து தன் உடல்நெய்யில் எரியும்போது அடுத்த பிணம். பிணமே பிணத்தை எரிக்கும்.

இக்கிழவியை எரிக்கும் அந்த முந்தைய மனிதர் வாழ்ந்த போது ஒருமுறையாவது இவளை சந்தித்திருப்பாரா? ஒருவேளை காசியின் தெருக்களில் இருவரும் எதிரெதிரே சென்றிருப்பார்கள். அப்போது கந்தர்வர்களோ தேவர்களோ சிரித்திருப்பார்கள்.

பிணம் எரியத்தொடங்கியது. வயிறு வெடித்து நீலநிறச் சுவாலையுடன் வாயு வெளியே போயிற்று. சலம் விழுந்து தீ கருகிச் சிவந்து குதித்தெழுந்தது. அதன் முகத்தில் தசை வெந்து உருகி பின்னகர எலும்புகள் புடைத்து எழுந்தன.

வெட்டியான் நீண்ட கழியால் அதன் வயிற்றை அறைந்து அதை மடித்தான். சட்டென்று உப் என்ற ஓசையுடன் பிணம் எழுந்து அமர்ந்தது. தலை என்னை நோக்கி திரும்பியது. எலும்புமுகத்தில் பற்களுடன் அது என்னை நோக்கிச் சிரித்தது.

நான் அலறிக்கொண்டு எழுந்துவிட்டேன். வெட்டியான் என்னை நோக்கி கேலியாக ஏதோ சொன்னபடி அதை தட்டி பக்கவாட்டில் விழச்செய்து இரண்டு விறகுக்கட்டைகளை அதன்மேல் வைத்தான்.

ஒரு சாமியார் “அவளுக்கு அடங்கவில்லை. காமமோ, பகையோ, ஆசையோ” என்றார்.

இன்னொரு சாமியார் “போல் சிவ்! போல் சிவ் சம்போ!” என்றார்.

நான் படிகளினூடாக ஓடினேன். என் கூடாரத்தை அணுகி உள்ளே நுழைந்து படுத்துக் கொண்டேன். எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது போல் இருந்தது. உடல் துள்ளித்துள்ளி விழுந்தது. கண்மூடினால் தூக்கமில்லை. விழிப்புகொண்டால் உடல் தன்னுணர்வு கொள்ளவுமில்லை.

சாமியார்கள் எவரையும் கவனிப்பதில்லை. நோயுற்றால் ஒருவரை ஒருவர் பராமரிப்பதுமில்லை. தானாக சரியாக வேண்டும், இல்லாவிட்டால் சாகவேண்டும். நான் மூன்றுநாட்கள் நினைவில்லாமல் படுத்திருந்தேன். எனக்கு எவரும் உணவோ நீரோ அளிக்கவில்லை. நானே தவழ்ந்து சென்று குடத்துநீரை குடித்தேன்.

என் கனவுக்குள் அந்தக் கிழவி வந்தாள். அவள் வங்காளக் கிழவி. பெரும்பாலும் விதவை. தன் சொத்துக்களை பிறருக்கு அளித்தபின் எஞ்சிய சிறு பணத்துடன் காசிக்கு வந்து அங்கே மடங்களில் பிறவிதவைகளுடன் சேர்ந்து சாவுக்காகக் காத்திருந்தவள். சிலசமயம் பத்துப் பதினைந்து ஆண்டுகள்கூட அந்தக் காத்திருப்பு நீள்வதுண்டு. அப்படி அந்த சிதையில் எரிந்து உருகி மறைவதற்கான தவம் அது. அது வென்றெடுக்கவேண்டிய ஒரு சிம்மாசனம். உருகித் தழல்விட்டு ஆடும் பொன்னாலானது.

நான் விரைவிலேயே மீண்டுவிட்டேன். உடல் நன்றாக மெலிந்துவிட்டது, ஆனால் அந்நினைவெல்லாம் மிகமிக பின்னால் எங்கோ சென்றுவிட்டது. எனக்கு ஒன்று அப்போது தெரிந்தது. உடல் காலத்தில் சென்றுகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் என. உள்ளம் அதில் இருந்தாக வேண்டும். ஓடும் படகில் அமரும் காகம்போல. ஆகவே அது எங்கும் தனியாக நின்றுவிடமுடியாது. எழுந்து எப்படிச் சுற்றினாலும் மீண்டும் வந்து அந்தப்படகில் அமர்ந்தாக வேண்டும். அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி உள்ளத்தை நாளும் புதிய சூழலில் ,புதிய வகையில் திகழச்செய்துகொண்டே இருப்பது உடல்தான். நில்லாக்காலம் நிகழும் உடல்.

கோடைகாலத்தில் கங்கையே கொந்தளித்துக் கொண்டிருந்தது. இந்தியாவெங்கிலும் இருந்து பல்லாயிரம்பேர் கங்கை நோக்கி வந்தனர். நீராடினர். பிரபஞ்சத்தை ஆளும் தலைவனையும் அவனுடைய காலவடிவான துணைவனையும் அவர்களை நோக்கி விழிமலர்ந்தவளையும் வணங்கினர். வாத்து நீரில் நீந்தியபடி தலையை ஆழத்தில் முக்கி சேற்றை அளைவதுபோல இந்தியா தன் கடந்த காலத்திற்குள் ஒரு முக்குளி இடும் காலகட்டம் அது.

ஆனால் அத்தனை சந்தடிக்கும் அப்பால் கங்கையின் தொலைதூரக் கரைகள் முற்றிலும் அடங்கியிருக்கும். அங்கே சாமியார்கள் தங்கள் ஒழுகாத காலத்தில் மலைத்த கண்களுடன் அமர்ந்திருப்பார்கள். நான் அவர்களுடன் இருந்தேன். கங்கைப் படித்துறைக்கும் வந்துசென்று கொண்டிருந்தேன்.

ஒருநாள் ஒரு வயதான சாமியார் எங்கள் முகாமுக்கு வந்தார். இடுப்பில் பழைய காவி உடை. சடைமுடித் திரிகளைச் சுற்றிக் கட்டி பெரிய சட்டிபோல தலையில் சூடியிருந்தார். தமிழகத்தில் சில சைவ மடங்களின் தலைவர்கள் அதேபோல சடாமகுடம் அணிவதுண்டு. காதுகளை வடித்து நீட்டி அதில் எலும்பை அணிந்திருந்தார். மூக்கிலும் ஒரு துளையில் சிறிய ஓர் எலும்புத் துண்டு. எருமையின் எலும்புகளால் செதுக்கப்பட்ட சிறிய மண்டையோடுகளை கோத்து உருவாக்கப்பட்ட நீண்ட மாலையை அணிந்திருந்தார்.

அவர் கையில் யோக தண்டு இருந்தது. கங்கையில் நெடுந்தொலைவு மிதந்து வந்து ஒதுங்கி சேற்றில் கிடந்து தசைப்பகுதி மட்கிப்போய் வைரம் மட்டுமே எஞ்சும் கழியை தேடி எடுத்து யோகதண்டமாக கொள்வார்கள். அதை பிரியவே மாட்டார்கள். அது மட்டுமே அவர்களின் துணை. அதை கைவிடும்போது அவர்கள் சமாதியாக வேண்டும். அத்தகைய கழிகள் கையில் எடுத்துப் பார்த்தால்தான் மரம் என்றே தெரியும். கையில் எடுத்த பின்னரும் கூட அவற்றின் எடை இரும்போ என்று தோன்றச் செய்யும்.

அவர் காலா அகாடா என்னும் சைவ மரபைச் சேர்ந்தவர். தொன்மையான காபாலிக, காளாமுக மரபில் இருந்து வந்த சிவவழிபாட்டு முறை அது. அகோரிகளைப் போலவும் நாகா துறவிகளைப் போலவும் நானேசிவம் என்று பொருள்படும் சிவோகம் என்பதே அவர்களுக்கும் முதற்சொல். ஆனால் இவர்கள் கரிய ஆடை அணிவதில்லை. அச்சத்தையும் அருவருப்பையும் கடப்பதற்கு அகோரிகள் மேற்கொள்ளும் கடுமையான நோன்புகள் இல்லை.

அகோரிகள் காலபைரவனை மட்டுமே வழிபடுவார்கள். இவர்களுக்குச் சிவலிங்க வழிபாடு உண்டு. ஒவ்வொரு நாளும் கங்கையில் மூழ்கி ஓர் உருளைக் கல்லை எடுத்து நீரின் அருகிலேயே வைத்து நீரை அள்ளி ஊற்றி அபிஷேகம் செய்து நீரில் ஒழுகிவரும் ஒரு மலரை எடுத்து அணிவித்து கையிலிருக்கும் ஒரு துண்டு சப்பாத்தியையோ பூரியையோ படைத்து தியானம் செய்தபின்பு எழுந்துவிடுவார்கள். அந்த கல்லை பெரும்பாலும் காலால் தட்டி நீருக்குள் போட்டுவிட்டு மேலேறிச் செல்வார்கள். பலமுறை அவர்களை சற்று வடக்காக கங்கையின் முற்றிலும் ஆளோய்ந்த கரையில் கண்டிருக்கிறேன்.

அவர் ஒவ்வொருவரையாக குனிந்து வணங்கி ஓரிரு சொற்கள் சொன்னார். அதன்பின் கடந்து சென்று அப்பாலிருந்த இன்னொரு முகாமை நோக்கிச் சென்றார். அவர் சொன்னதை கேட்டவர்கள் எந்த உணர்வையும் வெளிப்படுத்தவில்லை. வெறுமே தலையை மட்டும் அசைத்தனர்.

நான் “என்ன?” என்று கேட்டேன்.

சந்தித்து ஒன்றரை ஆண்டுகளாகியும் எனக்கு பெயர் தெரியாத என் உடனுறையும் சாமியார் “இன்று இரவு நமக்கெல்லாம் விருந்து” என்றார்.

“யார் தருகிறார்கள்?”

“இவர்தான்”.

“ஏன்?”

“அவர் தர விரும்புகிறார்” என்றார்.

நான் அவரை பார்த்தேன். கேலி செய்கிறார் என்று எரிச்சல் எழுந்தது. ஆனால் உண்மையில் அவர் அப்படித்தான் எப்போதுமே பேசிக்கொண்டிருந்தார். எந்த அணிகளும் இல்லாமல், எந்த ஊகங்களும் தொகுப்புகளும் பொதுமைப்படுத்தல்களும் இல்லாமல், எது நேரடிப்பொருளோ அதை மட்டுமே பேசுவார்.

ஆனால் அது அத்தனை எளிதல்ல. அப்படி பேச ஆரம்பித்தால் நாம் சென்று முட்டிக்கொள்வது மொழி என நாம் உருவாக்கி வைத்திருக்கும் மாபெரும் மலையுடன். அதை நகர்த்தி வழி கண்டுபிடிக்க வேண்டும்.ஏனென்றால் மொழி என நாம் இங்கே புழங்குவதெல்லாம் அணிகளுடன்தான்.

நம்முள் திகழும் மொழியை ரத்து செய்வதற்குத்தான் தியானம். கொஞ்சம் அதை அடங்கவைத்தாலே மாபெரும் வெற்றிதான். அது நெகிழ்ந்து வழிவிடுமென்றால், புகையாக மாறி மறையும் என்றால் அது வீடுபேறுக்கு நிகர்.

அன்று பின்னிரவில் குளிர் எழத்தொடங்கிய பின்னர் நாங்கள் கிளம்பினோம். எங்கள் குழுவின் குள்ளனான ஜாங்கிலிஃபையா என்ற பிரம்மசாரி சோடாமூடிகளை ஆணியில் கோத்து ஒரு மரத்துண்டின்மேல் அறைந்து உருவாக்கிய ஜாலரை எடுத்துக்கொண்டான். சௌம்ய பாபா என்று அழைக்கப்பட்ட இன்னொரு சாமியார் ஒரு காவிகொடியை ஏந்திக்கொண்டார். நான் சைக்கிள் டயர் ஒன்றை பந்தமாக கொளுத்தி கையில் ஏந்தி நடுவே சென்றேன்.

ஜாலரை சீராக தட்டியபடி நாங்கள் கங்கையின் கரையோரமாக சென்றோம். வேறுசிலரும் அவ்வாறு ஜாலர்கள் அல்லது சிறிய உடுக்குகளை முழக்கியபடி பந்தங்களின் வெளிச்சத்தில் வந்துகொண்டிருப்பதைக் கண்டோம். சிறிய துர்க்கை ஆலயத்தின் அருகே ஏற்கனவே இருநூறு பேருக்குமேல் கூடியிருந்தார்கள். சிறுசிறு குழுக்களாக அமர்ந்திருந்தனர்.

பெரும்பாலும் எவரும் பேசிக்கொள்ளவில்லை. சிலர் ஜாலரை அப்போதும் தட்டி மெல்ல பஜனைப் பாடல்களை பாடிக்  கொண்டிருந்தனர். சிலர் ஒருவரோடொருவர் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தனர். அதெல்லாம் அவர்கள் எந்த அகாடாவை சேர்ந்தவர்கள் என்பதைப் பொறுத்தது.

பஜனைச் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிபட்டது. தமிழ்! “நடராஜா நடராஜா நர்த்தன சுந்தர நடராஜா! சிவராஜா சிவராஜா சிவகாமிப் பிரிய சிவராஜா!” அல்லது மலையாளமா? அல்லது சம்ஸ்கிருதமேதானா? ஆனால் பாடியவர்கள் அனைவரும் வெள்ளைக்காரர்கள். ஹிப்பிகள், அல்லது துறவிகள். அவர்களின் மூக்கைப் பார்த்தேன். பெரும்பாலானவர்கள் பிரெஞ்சுக்காரர்கள் என்று தோன்றியது. அவர்கள் அந்த வரிகளை கிட்டத்தட்ட பிரெஞ்சு மொழி உச்சரிப்பாகவே மாற்றிவிட்டிருந்தனர்.

“ஹரஹர சிவ சிவ அம்பலவாணா! அம்பலவாணா பொன்னம்பலவாணா! ஆனந்த தாண்டவ நடராஜா!” தமிழேதான். பிரெஞ்சுக்குள் இருந்து தமிழ் பிதுங்கி நெளிந்து வெளிவந்து உடலை உதறிக்கொண்டு மயிர் சிலிர்த்து மெல்லமெல்ல தமிழாக ஆகியது. “சிவராஜா சிவராஜா சிவகாமிப் ப்ரிய சிவராஜா, சிதம்பரேசா சிவராஜா!”

அந்த மெட்டு அந்த இடத்தை கொஞ்சம் அணுக்கமாக ஆக்கியது. பந்தங்களை கொண்டு வந்தவர்கள் அவற்றை அணைத்து வைத்தனர். இரண்டுபேர் சின்ன அகல்விளக்குகளை ஏற்றி வைத்தனர். அவற்றில் கடுகெண்ணை எரியும் மணம் எழுந்தது.

எங்களை அழைக்க வந்த சாமியார் கைகூப்பியபடி வந்தார். ஒவ்வொருவரையாக அவர் வணங்கி வரவேற்றார். அனைவரிடமும் ஒரே முகமன் சொல்லைச் சொன்னார். “சுகிர்தம்”. அவரை மற்ற முதிய சாமியார்கள் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் கைதூக்கி வாழ்த்துரைத்தனர்.

அங்கே ஒற்றைக் குதிரை இழுக்கும் வண்டிகளில் உணவு வந்திருந்தது. அவற்றை கொண்டு வந்தவர்களே இறக்கி வைத்தனர். பெரிய பித்தளைப் போணிகளில் பூரி, உருளைக் கிழங்கு. சப்பாத்தி டால். அதன்பின் காசியின் புகழ்பெற்ற ஐந்து வகை இனிப்புகள். பால்பேடா, புளிப்பு ஜாங்கிரி, குலாப்ஜாமூன், பாசந்தி, ரசகுல்லா.

நாங்கள் அனைவரும் வரிசையாக அமர்ந்தோம். கங்கையின் நீர்விளிம்புவரை அந்த வரிசைகள் சென்றன. அவர்கள் அனைவருக்கும் அலுமினிய தட்டுகளில் பூரி, சப்பாத்தி, இனிப்புகளை வைத்தனர். பொதுவாக சாமியார்கள் சாப்பாட்டில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் சாப்பிட்டால் திகைக்கவைக்கும் அளவுக்குச் சாப்பிடுவார்கள். கஞ்சாவுக்கும் மனிதர்களை அப்படி ஆக்கும் இயல்பு உண்டு.

சாப்பிட்டபோது சிலர் வேடிக்கையாக பேச தொடங்க சிரிப்பொலிகள் எழுந்தன. சிரிப்பின் ஓசை அனைவரையும் முகம் மலரச் செய்தது. சற்று நேரத்தில் அனைவருமே சிரித்துக் கொண்டிருந்தனர். சாப்பிட்டு முடித்ததும் எங்கள் எச்சில் தட்டுகளை அந்த முதிய சாமியார் எடுத்துச் சென்று அடுக்கினார். எங்கள் கைகளுக்கு நீர்விட்டு கழுவச் செய்தார்.

அதற்குள் விடியத் தொடங்கியது. உணவு வண்டிகள் திரும்பிச் செல்ல நாங்கள் மட்டுமே எஞ்சினோம். கங்கையின் மேல் ஆயிரக்கணக்கான பறவைகள் எழுந்தன. விடியலில் கங்கைதான் முதலில் துலங்கும். நீருக்குள் இருந்து வெளிச்சம் கசிந்து எழுவதுபோல தோன்றும். பறவைகள் நீரை அணுகிப் பறக்கும்போது அவற்றின் அடிப்பக்கம் மிளிரும். பறவைச் சிறகுகளை அத்தனை மென்பட்டுபோல வேறெப்போதும் பார்க்க முடியாது. பறவைகளின் அலகுகள் அப்போது தளிரின் ஒளி கொண்டிருக்கும்.

சின்னஞ்சிறு கோயில்களின் வடிவவிளிம்புகள் வான்பின்னணியில் துலங்கின. காவிநிறம் புலரியில் தீயென்றே தெரியும். தழலென கொடிகள் பறந்தன. தொலைவில் காசியின் நூற்றுக்கணக்கான ஆலயங்களில் மணியோசை எழுந்தது. அவை ஒருவகை பறவைக்கூட்டங்களின் ஒலிகள் போல கலைந்து வானை நிறைத்தன. சங்கொலிகள் உடனெழுந்தன. ஓங்கி எதையோ வானுக்குச் சொல்பவை. அறைகூவல்கள்போல. ”ஆம், இங்கிருக்கிறோம். அறிக தேவர்களே!”

கருவறைக்கு மேலேயே ஒற்றைக் கூம்புக் கோபுரம் கொண்ட சிறிய கோயிலின் முன் அந்த முதிய துறவி வந்து நின்றார். அது தென்னகத்துப் பாணியிலான கோபுரம். மகாபலிபுரம் கோயில்களை நினைவுறுத்துவது. மேலே ஒரு கல்லாலான கலத்தை கவிழ்த்து வைத்தது போன்ற முகடு. அலையலையாக கல் உருகி இறங்கிப் பரவுவது போன்ற கூம்புவடிவம். அப்பால் இன்னொரு கோயில் காலையின் மென்பனிப் படலத்தில் மறைந்து நின்றது.

அந்தச் சாமியார் கைகளை கூப்பி தலைவணங்கினார். அவருடைய மாணவன் ஒருவன் முன்னால் வந்து சங்கோசை எழுப்பினான். இன்னொருவன் ஒரு துணி மூட்டையுடன் அவருக்கு பின்னால் வந்தான். முகங்கள் தெளிவாக இல்லை. முதிய சாமியார் கையில் ஒரு காவிக்கொடியுடன் எங்கள் நடுவே நடந்தார்.புலரிவெளிச்சத்தில் காவிக்கொடி தழலென்றே துலங்குவது.

நாங்கள் கைகளை கூப்பியபடி ஓசையில்லாமல் நின்றிருந்தோம். கங்கை மேல் பறவைகள் பூசலிடும் ஓசை எழுந்து கொண்டிருந்தது. அப்பால் சாலையில் சில வண்டிகள் செல்லும் ஒலி.

முதிய சாமியார் காவிக் கொடியுடன் சென்று கங்கை கரையை அடைந்தார். அங்கே ஒற்றைப் படகு நிறுத்தப்பட்டிருந்தது. அவர் கொடியை படகின்முனையில் நட்டார்.படகின் குறுக்குச் சட்டங்கள் மேல் நெடுக்குவாட்டில் வைக்கப்பட்டிருந்த பலகைமேல் ஏறி படுத்துக்கொண்டு கண்களை மூடினார்

அவருடைய சீடன் அந்த துணிப்பொதியை அவர் காலடியில் வைத்தான். அவருடைய ஆடைகள் மற்றும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் என்று தோன்றியது. அவர்கள் இருவரும் கரை ஏறி நிற்க கோயிலில் இருந்து இன்னொருவன் கையில் ஒரு கயிற்றுச் சுருளுடன் வந்தான்

அவனை நான் அடையாளம் கண்டேன். அந்தப் பைத்தியத்தைக் காப்பாற்றிய இளைஞன். அவன் எவரையும் பார்க்காமல் நடந்து கங்கைக் கரையின் சிமிண்ட் போன்ற மென்மையான புழுதியாலான சரிவில் இறங்கி படகை அடைந்தான்.

படகில் ஏறி படுத்திருந்த முதியவரின் கால்களை தொட்டு வணங்கியபின் அவருடைய கால்களைச் சேர்த்து கயிறால் பிணைத்தான். பின்னர் கைகளை மடிமேல் வைத்து சேர்த்துக் கட்டி கைகளையும் கால்களையும் அந்தக் கயிற்றால் பிணைத்தான்

மிக நிதானமாக, சீராக அச்செயலை அவன் செய்தான். பின்னர் எழுந்து எங்களை நோக்கி தலைவணங்கினான். கரையில் நின்றிருந்தவர்கள். “ஹரஹர மகாதேவ்! ஹரஹரஹரஹர மகாதேவ்! சிவ் சம்போ!” என்று கூவி கைகளை நீட்டினர்.

அவன் படகில் ஏறிக்கொண்டு துடுப்பால் படகை உந்தி கங்கைக்குள் சென்றான். ஒழுக்கையும் பயன்படுத்திக்கொண்டு மிக விரைவாக கங்கைக்குள் சென்றுவிட்டான். அப்போது காலையொளி எழுந்துவிட்டிருந்தது. நீர்ப்பரப்பில் இருந்து ஆவி புகைபோல தயங்கி எழுந்து கொண்டிருந்தது. காலைச் செவ்வொளியில் அது சுடர்கொண்டது.அவன் அனலில் ஊடுருவிச் செல்வது போலிருந்தது. அந்தக் காவிக்கொடி அகல்சுடர் என படகின் முனையில் படபடத்தது.

அவன் கங்கையின் நடுவே சென்றதும் துடுப்பிடுவதை நிறுத்திவிட்டு அமர்ந்தபடியே அந்த பலகையை கவிழ்த்து அவரை நீருக்குள் போட்டான். அவர் கைகளை கூப்பி நெஞ்சில் வைத்தபடி புரண்டு சரிந்து நீரில் விழுந்தார். நீர்ப்பரப்பில் ஒரு வாய் திறந்து அவரை விழுங்கிக் கொண்டது. ஓரிரு கொப்புளங்கள் தெரிந்தன. அவை விலகிச் சென்றன.

கரையில் நின்ற சாமியார்கள் “ஹரஹர மகாதேவ்! ஹரஹரஹரஹர மகாதேவ்! சிவ் சம்போ!” என்று கூவிக்கொண்டே இருந்தனர்.

பின்னர் அவன் படகைத் திருப்பிக்கொண்டு கரைநோக்கி வந்தான். படகை நீர் விளிம்பில் நிறுத்திவிட்டு இறங்கித் திரும்பி கங்கையின் நீரை அள்ளி மும்முறை தன் தலைமேல் விட்டுக்கொண்டான். திரும்பி அனைவரையும் பார்த்து கைகூப்பினான்.

கரையிலிருந்த அத்தனை சாமியார்களும் “ஹரஹர மகாதேவ்! ஹரஹரஹரஹர மகாதேவ்!”  என்று கூவினார்கள். பிறகு வந்ததுபோலவே சிறுசிறு குழுக்களாக பிரிந்து சென்றனர். ஜாலர்களுடன் வந்தவர்கள் அதை முழக்கினர். பிரெஞ்சு சைவர்கள் ‘நேட்ரேழே நேட்ரேழே நேர்டேன் ஷூண்டே நேட்ரேழே!” என்று பாடிக்கொண்டு சென்றனர். சிலர் சிரித்துக்கொண்டும் தங்களுக்குள் பேசிக்கொண்டும் நடந்தனர்.

நான் எங்கள் முகாமை அடைந்தேன். காலபாபா அனல் மூட்ட ஆரம்பித்துவிட்டார். ஜாங்கிலி ஃபையா சிலும்பிகளை எடுத்துவந்தார். நான் கங்கைக் கரைக்குச் சென்று நீரள்ளி முகம் கழுவிவிட்டு வண்டல் விளிம்பு வழியாகவே நடந்தேன்.

மணிகர்ணிகா கட்டம் வரை என்ன நினைக்கிறேன் என்றே தெரியாமல் உடன் வந்துகொண்டிருந்த உள்ளத்துடன் சென்றேன். நான் சொன்னேனே, ஒழுகும்படகில் எழுந்து எழுந்து அமரும் பறவை.

மணிகர்ணிகா கட்டில் ஒரு கிழவர் சிதையின் அருகே தனக்கான வாய்ப்புக்காக காத்து படுத்திருந்தார். சிதையில் ஒரு கிழவி எரிந்து கொண்டிருந்தாள். தலை உள்ளே மடிக்கப்பட்டிருந்தது. அவளுடைய இரு கால்களும் வெளியே நீட்டியிருந்தன. கால் விரல்களில் வெள்ளி மெட்டிகள் அணிந்திருந்தாள்

சிதைகளைச் சுற்றி சாமியார்கள் அமர்ந்திருந்தனர். நான் சென்று அவர்களில் ஒரு சிறுகுழுவுடன் அமர்ந்திருந்தேன். சடைமுடிகள் தோளில் விழுந்துகிடந்த உயரமான சாமியார் என்னைப் பார்த்து கரிய பற்களைக் காட்டி புன்னகைத்தார்.

அவர் ஒரு சிறிய திருவோட்டில் சப்பாத்திமாவை பிசைத்து உருட்டி வைத்திருந்தார். அதை கையால் தட்டிப் பரப்பியபின் ஒரு குடைக்கம்பியில் குத்தி சிதையின் நெருப்பில் நீட்டி திருப்பித்திருப்பி காட்டி வாட்டினார். அது கருகி உப்பியதும் திரும்ப எடுத்து கையால் தட்டி கரியை நீக்கிவிட்டு இரண்டாக கிழித்து அப்பாலிருந்த இன்னொரு சாமியாருக்கு அளித்தார்.

இயல்பாக திரும்பி என்னைப் பார்த்தார். புன்னகையுடன் அந்த துண்டை மீண்டும் இரண்டாகக் கிழித்து என்னை நோக்கி நீட்டினார். அவ்வாறு நிகழ்வது முதல்முறை. ஆனால் நான் எந்த வியப்பும் இல்லாமல் அதை வாங்கிக்கொண்டேன். அதை பிய்த்து உண்டேன்.

நித்யா சொன்னார். “அந்த வெள்ளி மெட்டிகளை ஏன் வெட்டியான் கழற்றவில்லை என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். அது அவனுக்கு மதிப்பு மிக்கதாயிற்றே. ஆனால் கிழவியின் கால்கள் வெந்து உருகத் தொடங்கியதும் அந்த வெள்ளி மெட்டிகள் அப்படியே வழுக்கியவைபோல உருவி கீழே விழுந்தன, அவன் அதை குச்சியால் தள்ளி எடுத்து அங்கிருந்த குவளையின் நீருக்குள் போட்டான்”

அனைவரும் அசைந்து அமர்ந்தோம்.

“எங்கே தொடங்கினேன்?” என்றார் நித்யா.

“அன்பு பற்றி” என்று குஞ்ஞி கிருஷ்ணன் சொன்னார்.

“ஆமாம்” என்று சிரித்து “நீ ஊருக்கு போவதென்றால் போ…. அடுத்தவாரம் வருவாய்தானே?” என்றார் நித்யா